இயக்குநீர்கள் (Hormones), ஏற்பிகள் (Receptors) மற்றும் இலக்கு உயிரணுக்கள் (Target Cells) மனித உடலில் சளி, எச்சில், வியர்வை அட்ரீனலின், பிட்யூட்ரின் போன்ற பலவகையான நீர்மங்கள் உற்பத்தியாகின்றன. இந்த நீர்மங்களை இயக்குநீர் (Hormones) நீர்மங்கள் , இயக்கு நீரல்லாத (non-hormones) நீர்மங்கள் என்று இருவகையாகப் பிரிக்கலாம். அவ்வாறு பிரித்து வகைப்படுத்தும் போது இயக்கு நீர் நீர்மங்கள், இயக்கு நீரல்லாத நீர்மங்களிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றன என்பதை அறிவது மிகவும் முக்கியமானது. இயக்குநீர்கள் (Hormones), குருதி (blood) அல்லது உயிரணுப் புறப் பாய்மம் (extracellular fluid) வழியாக வேதியியல் தூதுவர் (chemical messengers) களாகச் செயலாற்றுகின்றன என்று சொல்லலாம். பெரும்பாலான இயக்குநீர்கள் நம்முடலில் குருதியோட்டத்துடன் சுற்றி வருகின்றன. இருப்பினும் ஒரு குறிப்பிட்ட இயக்குநீர் வரையறுக்கப்பட்ட உயிரணுக்களுடன் மட்டுமே செயல் விளைவை ஏற்படுத்தும். இந்த உயிரணுக்களை நாம் இலக்கு உயிரணுக்கள் (Target cells) என அழைக்கிறோம். இலக்கு உயிரணுக்கள் தம்மிடம் ஒரு குறிப்பிட்ட இயக்குநீருக்குரிய ஏற்பிகளை...