மரணத்தின் அழகு - பகுதி(2) - கலீல் ஜிப்ரான்
பகுதி (2) மேலெழுதல்
மலையுச்சி ஒன்றை நான் கடந்து விட்டேன்
வான வெளியின் முழுமையான கட்டுப்பாடற்ற சுதந்திரத்தில்
என் ஆன்மா உயரச் செல்கிறது.
நான் வெகுதூரம் சென்று விட்டேன், என் தோழர்களே,
என் கண்களிலிருந்து மலைகளை மேகங்கள் மறைக்கின்றன.
பள்ளத்தாக்குகளில் நிசப்தம்
பெருங்கடல் வெள்ளமாய்ப் பாய,
மறதியின் கரங்கள் சாலைகளையும் வீடுகளையும்
அணைத்துக் கொள்கின்றன.
ஒரு வெண்ணுருத்தோற்றத்தின் பின்னே
மறையும் புல்வெளிகளும், வயல்வெளிகளும்
மெழுகுவர்த்தியின் மஞ்சள் ஒளியாய்,
அந்திப் பொழுதின் சிவப்புமாய்
வசந்தகால மேகம் போலத் தெரிகிறது.
அலைகளின் பாடல்களும்,
நீரோடைகளின் கீர்த்தனங்களும்
சிதறிக் கிடக்கின்றன,
மொய்க்கும் குரல்கள் அடங்கி நிசப்தமாகிறது.
ஆவியின் விருப்பத்திற்கு மிகச்சரியான இசைவுடன்
ஏதுமற்ற இன்மையை ஆனால்
சாசுவதத்தின் இசையை
என்னால் கேட்க முடிகிறது.
முழு வெள்ளங்கி அணிந்துள்ளேன்
நான் சுகமாயிருக்கிறேன்.
நான் அமைதியாக இருக்கிறேன்.
கலீல் ஜிப்ரான்
தமிழாக்கம் : வெ.சுப்ரமணியன்.
Comments
Post a Comment