இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)


காலத்தை அறிந்து கொள்ள இன்றைக்குப் பலவகையான கருவிகள் சந்தையில் கொட்டிக் கிடக்கின்றன. கைக்கடிகாரங்கள் போன்ற எந்தக் கருவியும் இல்லாத அந்தக் காலத்தில் கிராமங்களில் மனிதர்கள் இரவில் உடுக் கூட்டத்தின் நிலையை வைத்துத்தான் தோராயமாகக் நேரத்தை நிர்ணயிப்பார்கள். முதலில் கீழ்க்கண்ட  ஒருவரி வாய்ப்பாட்டைப் பார்ப்போம்.

“அச்சுவனி அறுமீன் குதிரைத்தலைபோல் 
மெச்சிடு கடகத்திரு கடிகையதாம்”


இதனைப் பின்வருமாறு பொருள் கொள்ளலாம். அஸ்வினி உடுத் தொகுப்பில் ஆறு உடுக்கள் உள்ளன. இந்த ஆறு உடுக்களும் சேர்ந்து குதிரையின் தலை போலக் காணப்படும். அஸ்வினி உச்சத்தில் வரும் போது வானில் கடக இராசி உதயமாகி இரண்டு நாழிகைப் பொழுது ஆகி இருக்கும். இதனை எளிதாக விளங்கிக்கொள்ள கீழ்க்கண்ட, நமக்கு முன்னரே இத்தொடரின் முதல் பகுதியில் பரிச்சியமான பழைய படத்தைப் பயன்படுத்துவோம்.





ஐப்பசி மாதம் 15 ஆம் தேதிக்கு ஒருவர் இரவில் தலைக்கு மேல் அஸ்வினி உடுவைக் காண்பதாகக் கொள்வோம். ஐப்பசி மாதம் என்பது ஆங்கிலத்தில் அக்டோபர் - நவம்பர் மாதம். அப்போது சூரியன் விருச்சிகத்துக்கு நேராக இருப்பதாகத் தோற்றமளிக்கும். அல்லும் பகலும் அறுபது நாழிகைகள் அல்லவா. ஆக 12 இராசிகளுக்கு, 12 x 5 = 60 நாழிகைகள். இப்போது ஐப்பசியில் 15 நாட்கள் அதாவது பாதி மாதம் முடிந்து விட்டதால் விருச்சிகத்தில் 2.5 நாழிகைகள் என்று கொள்ளலாம். விருச்சிகத்திலிருந்து இடஞ்சுழியாக கடகத்துக்கு வரலாம். தனுசு, மகரம், கும்பம், மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம் ஆக ஏழு இராசிகளைக் கடக்க இராசி ஒன்றுக்கு ஐந்து நாழிகைகள். ஏழு இராசிகளைக் கடக்க 7x 5 = 35 நாழிகைகள். மொத்தம் 35+ 2.5 = 37.5 நாழிகைகள். கடகம் உதித்து இரண்டு நாழிகை ஆகி இருக்கும் இல்லையா. ஆக 39.5 நாழிகைகள். 30 நாழிகைகள் பகல் கழித்து விட்டால் மீதம் 9.5 நாழிகைகள்.
ஒரு நாழிகை 24 நிமிடங்கள். 9.5 நாழிகைக்கு 228 நிமிடங்கள். அதாவது மூன்று மணி நேரம் நாற்பத்தெட்டு நிமிடங்கள். தோராயமாகச்  சூரிய அஸ்தமனம் மாலை 6.00 மணிக்கு என்று எடுத்துக் கொள்வோம். அப்போது நேரம் இரவு 9 மணி 48 நிமிடம் என்று சொல்லலாம். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது குறிப்பிட்ட சில உடுத் தொகுதிகள் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே தெளிவாகக் கட்புலனாகும் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இதைபோல பரணி உடு உச்சத்தில் வருவதை வைத்தும் நேரம் காண இயலும்.  அதற்கான வாய்ப்பாடு,


“பரணி மும்மீன் அடுப்புப் போல, 
திரண்மிகு கடகத்தொரு நாற்காலாம்”.

இதனைப் பின்வருமாறு பொருள் கொள்ளலாம். பரணி உடுத் தொகுப்பில் மூன்று உடுக்கள் உள்ளன. இந்த மூன்று உடுக்களும் சேர்ந்து அடுப்புக் கற்கள் போலக் காணப்படும். பரணி உச்சத்தில் வரும் போது வானில் கடக இராசி உதயமாகி நான்கு நாழிகைப் பொழுது ஆகி இருக்கும்.
இங்கு கவனிக்க வேண்டிய வேறுபாடு அஸ்வினி உச்சத்திற்கு வந்தால் கடகம் உதித்தி இரண்டு நாழிகை. அதுவே பரணி உச்சத்திற்கு வந்தால் கடகம் உதித்து நான்கு நாழிகைப் பொழுதாயிருக்கும்.
 எடுத்துக்காட்டாக மார்கழி மாதம்3 ஆம் தேதி ஒருவர் உச்சத்தில் பரணியைப் பார்ப்பதாகக் கொள்வோம்.





இந்தத் தமிழ் மாதமெல்லாம் ஆவின் பால் அட்டை மாதிரி ஒரு ஆங்கில மாதத்தின் நடுலிருந்து அடுத்த மாதத்தின் நடு வரைக்கும் இருக்கும்.
மார்கழி மாதம் என்பது டிசம்பர் நடுவிலிருந்து ஜனவரி நடுவரையில் இருக்கும்.

டிசம்பர் மாதம் சூரியன் தனுசு இராசியில் இருப்பதாகத் தோன்றும்.  மார்கழி 3 ஆம் தேதி என்பதால் ஆகவே தனுசிலிருந்து இடஞ்சுழியாகக் கடகத்திற்கு வரலாம். அதாவது தனுசு(1), மகரம்(2), கும்பம்(3), மீனம் (4) மேஷம்(5), ரிஷபம்(6), மிதுனம்(7)  ஆகக் கடகம் வரையில் 7 மாதங்கள் ஒவ்வொரு மாதத்திற்கும் தலா 5 நாழிகைகள். ஆக 7 x 5 = 35 நாழிகைகள். இத்துடன் கடகத்திற்கான நான்கு நாழிகைகளைக் கூட்ட மொத்தம் 39 நாழிகைகள். இதிலிருந்து பகல் 30 நாழிகைப் பொழுதைக் கழித்தால் மீதம் 9 நாழிகைகள். அதாவது 9 x 24  = 216 நிமிடங்கள். அதாவது 3 மணி 36 நிமிடங்கள். மாலை ஆறு மணிக்கு சூரியன் மறைந்ததாக எடுத்துக் கொண்டால் அப்போது நேரம் இரவு 9.36 மணி என்று தோராயமாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.



மற்றொரு வாய்ப்பாடுப் பாடலில் இவ்வாறு சொல்லப்படுகிறது.



“ சித்திரக்குப் பூசமுதல் சீராவணிக்கனுஷமாம்
அத்தனுசுக்குத்திரட்டாதியாம் நித்த நித்தம்
ஏதுச்சமானாலும் இரண்டேகால் பெருக்கி 
மாதமைந்து தள்ளமதி ”. 



ஒரு குறிப்பிட்ட மாதத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வானத்தை நோக்கும் போது எந்த உடுக் கூட்டம் உச்சத்தில் ( Zenith) என்று காண வேண்டும். அந்த உடு கீழ்ச்சொன்ன வரிசையில் எத்தனாவது என்று எண்ண வேண்டும். அதாவது சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி ஆகிய நான்கு மாதங்கள் சுற்றில் பூசத்திலிருந்தும், அடுத்த ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகையில் அனுஷத்திலிருந்தும், அடுத்த மூன்றாவது மார்கழி, தை, மாசி, பங்குனியில்  உத்திரட்டாதியிலிருந்து எண்ண வேண்டும். குறிப்பிட்ட எந்த உடு உச்சிக்கு அல்லது கிட்டத்தட்ட உச்சிக்கு வருவதைக் கொண்டு அப்போதைய நேரத்தைத் தோராயமாகக் கணக்கிடலாம். எண்ணி வந்த மதிப்பை இரண்டே காலால் (2.25) பெருக்க வேண்டும். குறிப்பிட்ட மாதத்தை ஐந்தால் பெருக்கிக் கழித்துக் கொள்ளவும். வரும் மதிப்பை 24 நிமிடத்தால் பெருக்கினால் கிடைக்கும் காலத்தை ஆறு மணியுடன் கூட்ட அப்போதைய நேரம் கிடைக்கும்.





சிறிது தலையைச் சுற்றுகிறதோ. அப்படி ஒன்றும் இந்தக் கணக்கு கஷ்டமானதில்லை. கிராமப்புறங்களில் நம் முன்னோர்களும், பாட்டனும் பூட்டனும் மனக்கணக்காகப் போட்டதுதான். தவிரவும் அவர்களுக்கு மூன்று விஷயங்கள் அத்துபடியாகத் தெரிந்திருந்தது. அவை மாதங்களின் வரிசை, ராசி உடுக்களின் பெயர்கள் மற்றும் உடுக்களை இரவு வானில் அடையாளம் அறிதல் ஆகியன.




எடுத்துக்காட்டாக இந்தக் கட்டுரை எழுதப்படும் இன்று (27.04.2020) இரவு 8.48 க்கு க் கிட்டத்தட்ட தலைக்குமேல் இருப்பது சிம்மராசியில் உத்திரம் உடு (Denebola). படத்தில் காண்க.
நடப்பு மாதம் சித்திரை (1). ஆகவே நம் வாய்ப்பாட்டின்படி எண்ணிக்கையை பூசத்திலிருந்து துவங்க வேண்டும். பூசம்(1), ஆயில்யம்(2), மகம்(3), பூரம்(4), உத்திரம்(5) ஆக ஐந்து. 5 x 2.25 = 11.25.
அடுத்தது (மாதத்தின் எண்) x 5 = 1 x 5 = 5
11.25 – 5 = 6.25 நாழிகைகள். அதாவது 6.25 x 24 = 150 நிமிடங்கள் அதாவது 2மணி முப்பது நிமிடம்.
பொதுவாகவே தோராயமான சூரிய அஸ்தமனம் 6.00 மணி என்றால் தோராயமான நேரம் இரவு 8.30 மணி. எளிதில் விளங்கிக் கொள்ள இந்த எடுத்துக்காட்டு மஞ்சள் நிறமிட்டுக் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.


ஆனால் சூரியன் மறைந்த சரியான நேரம் 6.24 மணி. ஆக 6.24 + 2.30 = 8.54 மணி. இதனை கொடுக்கப்பட்ட படத்தில் சென்னைக்கு மேல் வானத்தின் படம் (27.04.2020 இரவு 8.48க்கு Astroviewer தளத்தின் உதவியுடன் எடுக்கப்பட்டது) மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.

மற்றுமோர் ஒரு எடுத்துக்காட்டைக்  கணக்கைப் புரிந்து கொள்ள வேண்டிக் காண்போம்.
ஒருவர் தை மாதம் 20 ஆம் நாள் தலைக்கு மேல் ( Zenith) அஸ்தம் (α Corvi) உடுவைக் காண்கிறார் என்போம்.
தை மாதத்தின் எண் (2). காரணம் மூன்றாவது சுற்றில் இரண்டாவது மாதம். வாய்ப்பாடுப்படி நாம் எண்ணிக்கையைத் துவங்க வேண்டிய உடு உத்திரட்டாதி. அதாவது உத்திரட்டாதி முதல் அஸ்தம் வரை எண்ணிக்கை 15 உடுக்கள். (உடுக்கள் மனப்பாடம் செய்ய அட்டவணையைப் பயன்படுத்திக் கொள்ளவும்).
15 x 2.25  = 33.75 நாழிகைகள்.  இதிலிருந்து தை மாதத்தின் எண் 2 என்பதால்  2 X 5 = 10 நாழிகைகள். ஆக 33.75 – 10.00 = 23.75 நாழிகைகள். அதாவது 23.75 x 24 = 540 நிமிடங்கள். அதாவது 9 மணி 30 நிமிடங்கள். அன்றைக்குச் சூரிய அஸ்தமனம் 6.00 மணி என்றால் அதிகாலை 3.30 மணி என்று கணக்கிட்டுக் கொள்ளலாம். எளிதில் விளங்கிக் கொள்ள இந்த எடுத்துக்காட்டு சிவப்பு நிறமிட்டுக் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.
நமது முன்னோர்களின் இத்தகைய  இரவுப் பொழுதுகளில் காலம் அறியும் முறைகள் வியப்பூட்டுவதாக இருக்கின்றன.

நிறையவே உங்கள் பொறுமையைச் சோதித்து விட்டேன் என்று நினைக்கிறேன். இந்த ஆறு பதிவுகள் குறித்து நீங்கள் தரும் பின்னூட்டம் கண்டிப்பாக என்னுடைய வெளிப்படுத்துதலை மேம்பாடு அடையச் செய்யும்.
அதைப் பொறுத்து அடுத்த வாரம் ரிஷப ராசி உடுக்களுக்குச் செல்லலாம்.

விரைவில் சந்திப்போம்.








Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)