இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)


காற்றில் தூசு இல்லாத மேகம் இல்லாத தெளிவான நாளின்  இரவு வானில் நாம் வெறும் கண்களால் சுமார் 5000 முதல் 6000 உடுக்களைக் காண இயலும். பொதுவாக வானில் ஒரே பகுதியில் காணப்படும் உடுக்களுக்கிடையில் எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும், ஒழுங்கின்றி இருப்பவற்றில் ஒரு ஒழுங்கைக் கொண்டு வருவதில் மனிதனுக்கு ஆர்வம் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. எனவேதான் குறிப்பின்றி வானில் தூவப்பட்டது போலிருக்கும் உடுக்களுக்குத் தன் கற்பனை மூலம் வடிவமும் பெயரும் அளித்தான் மனிதன். 

வட அரைக் கோளத்தில் காணப்படும் பல உடுத் தொகுப்புகள் பழைமையான பாரம்பரியமாகப் பெயரிட்டு அழைக்கப்பட்டவையே. எடுத்துக் காட்டாக ஓரியன் (Orion), பெருங்கரடி (Great Bear) போன்றவை. தென் அரைக்கோளத்தில் வானில் காணப்படும் பெயரிடப்படாத பகுதி உடுக்களுக்கு கடந்த நூற்றாண்டில் பெயரிடப்பட்டது. எடுத்துக் காட்டாக டெலிஸ்கோப்பியம் (Telescopium), ஆக்டஸ் (Octus), இண்டஸ் ( Indus) போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதக் கடைசியில் வரும் அட்டவணையைப் பார்த்தாலே புரிந்து கொள்ள இயலும்.

1922 ஆண்டில் ஹென்றி நோரிஸ் ரஸ்ஸல் (Henry Norris Russell) 88 பொதுவான உடுத்தொகுப்புப் பட்டியலையும் அவற்றுக்கான சில பயனுள்ள சுருக்கங்களையும் வெளியிட்டார். இருப்பினும் இந்த உடுத் தொகுதிகளுக்கு சரியான வரையறுக்கப்பட்ட எல்லைகள் இல்லாமல் இருந்தது.



யூஜின் ஜோசப் டெல்போர்ட் (Eugene Joseph Delporte) செங்குத்து மற்றும் கிடைத்தளக் கற்பனைக்கோடுகளான வலது ஏற்றம் (Right Ascension) மற்றும் வான் கோள நேர்வரை (Declination)  என்ற இரு ஆயப் புள்ளிகள் (Coordinates) மூலம் வான் கோளத்தில் ஒரு உடுவின் நிலை காணும் முறை ஒன்றை உருவாக்கினார். 

1928 ஆம் ஆண்டில் IAU என்றழைக்கப்படும் அனைத்துலக வானியல் ஒன்றியம் (International Astronomical Union) இவ்விரண்டையும் ஒன்றிணைத்து வான் கோளம் முழுமைக்குமான 88 புதிய உடுத் தொகுதிகளையும் அவற்றுக்கான தொடர்ச்சியான எல்லைகளையும் முறையாக ஏற்றுக் கொண்டது. இதற்கான பட்டியல் 1930 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

இப்போது இரண்டு ஐயங்கள் மனதில் தோன்றும்.  முதலாவது வலப்பக்க ஏற்றம் (Right Ascension) மற்றும் வான் கோள நேர்வரை (Declination) அப்படி என்றால் என்ன? என்பது. இரண்டாவது 12 இராசிகள் தானே 27 உடுக்கள் தானே? பொசுக்கென்று 88 உடுத்தொகுப்பு என்றால் அவற்றின் பெயர் என்ன? சரியா.


 GIF animation Courtesy : http://www.opencourse.info/astronomy/introduction/02.motion_stars_sun/



ஒரு திருமண நிகழ்ச்சியில் பால்ய நண்பர் ஒருவரைப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் தற்செயலாகச் சந்திக்கிறோம் என்று வைத்துக் கொள்ளலாம். பரஸ்பர நல விசாரிப்புகள் அரட்டைகளுக்குப் பின் விடை பெறும் சமயம் கைபேசி எண், வீட்டு முகவரிகளைப் பறிமாறிக் கொள்வோம். சரியான விலாசம் இருந்தாலும் கூட அவரவர் வீட்டருகில் உள்ள பலராலும் நன்கு அறியப்பட்ட இடமொன்றிலிருந்து (Land mark) எப்படி அவரவர் இல்லங்களை எளிதாக அடையலாம் என்ற தகவலையும் பறிமாற்றம் செய்து கொள்வது கூடுதல் சிறப்பாக இருக்குமல்லவா. 

எடுத்துக்காட்டாக நண்பர் வீட்டுக்கு வழி சொல்லும் போது விலாசத்துடன் கூடவே, "அண்ணா நகர் ஐயப்பன் கோவில் தாண்டி மூணாவது ரைட் திரும்பி லெஃப்டில் ஐந்தாவது தெருவில் திரும்பினால் தெருவின் நடுவில் ரைட் சைடில் வாசலில் தென்னை மரம் உள்ள வீடு" என்று சொன்னால் அது வீட்டைக் கண்டுபிடிக்கும் சிரமத்தைப் பெருமளவு குறைக்கும் இல்லையா.

அதைப் போல உடு அல்லது உடுக்கூட்டத்தின் நிலையை எளிதில் சுட்டுவதற்கே இந்த இரண்டு வானியல் ஆயப் புள்ளிகள் (Astronomical Coordinates) பயன்படுகின்றன.

முதலில் வான் கோளத்தில் உடுக் கூட்டங்கள் சுற்றி வருவதாகத் நமக்குத் தோன்றுகிறது. உண்மையில் புவிதான் சுற்றி வருகிறது. இந்த வான் கோளத்தின் 360 o கோணத்தை 24 மணிநேரத்திற்குப் பிரிக்கலாம். அப்படிப் பிரித்தால் 1 மணி நேரத்திற்கு 15 o கோணமும், 1 o கோணம் கடக்க 4 நிமிடம் என்ற கணக்கில் சுற்றுவதாகக் கொள்ளலாம். இந்தக் காலக் கோட்டுப்பிரிப்பை தோல்  உரித்த முழு ஆரஞ்சுப் பழத்தைப் போல நினைத்துக் கொள்ளுங்கள். 
சரி, அப்போது பிரிப்பை எந்த இடத்திலிருந்து துவங்குவது? நாம் 0 மணி/ 24 மணியை வசந்த சம இரவு நாளில் (Vernal Equinox) ஞாயிறு இருக்கும் இடம் என எடுத்துக் கொள்கிறோம். இத்தகைய பிரிப்பு வலப்புறமாக அதிகரிப்பதால் வலப்புற ஏற்றம் (Right Ascension) என்று சொல்லப்படுகிறது.

வலது ஏற்றம் (Right Ascension) சுருக்கமாக RA (குறியீடு α ) என்பது, வான் கோளத்தில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட உடுவானது மார்ச் மாத உத்திராயணத்தில் (Vernal Equinox) ஞாயிறின் நிலையிலிருந்து வான் கோள நடுக் கோட்டிலிருந்து கிழக்காக மணிக் கணக்கில் எவ்வளவு தொலைவில் உள்ளது என்று அளக்கப்படுவது. 



வான் கோளத்தை நெடுக்காக 24 மணி நேரமாகப் பிரித்தது போல் குறுக்காக வான் நடுக் கோட்டுக்கு மேலும் கீழுமாகப் பிரிக்கலாம். வட வான் அரைக் கோளத்தை நடுக்கோட்டை 0 o என்று எடுத்துக் கொண்டு வட முனை + 90 o
என்று பிரிக்கலாம். அதேபோல வான் நடுக் கோடு முதல் தெற்கு வான் அரை கோளத்தில் தென் முனையை - 90 o என்றும் பிரிக்கலாம். இது போலப் பிரித்தல் வான் கோள நேர்வரை (Declination) என்று சொல்லப்படுகிறது.

இந்த அமைப்பு பள்ளியில் புவியியல் பாடத்தில் ஒரு இடத்தைச் சுட்டப் பயன்படுத்தும் அட்ச, தீர்க்கக் கோடுகளை ஒத்தது. வலது ஏற்றம் (Right Ascension)  தீர்க்க ரேகை (Longitude)போன்றதும், வான் கோள நேர்வரை (Declination) அட்சக் கோட்டைப் (Latitude) போன்றதும் என்று சொல்லலாம்.


இப்போது மேல் உள்ள படத்தைப் பார்த்தால் உடுவொன்று சிவப்பு வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இந்த உடுவை (RA 3 h, Dec. +30 o ) வான் கோளத்தில் எளிதாகச் சுட்ட முடியும்.

திரும்பவும் நாம் அண்ணாநகர் எடுத்துக் காட்டுக்கே வருவோம். அண்ணா நகரில் A பிளாக், B பிளாக் என்றும் அசோக் நகர் போன்ற இடங்களில் செக்டார் 1, செக்டார் 2 என்றும் பிரித்திருப்பார்கள்.  ஒரு இடம் எந்த பிளாக்கில் (Block) அல்லது எந்த செக்டாரில் (Sector) எத்தனாவது தெருவில் (Street) எந்தக் குறுக்குத் தெருவில் (Cross Street) உள்ளது என்பதை அங்கங்குள்ள நிழற்சாலைகளில் (Avenue) அறிவிப்பாகப் பலகையில் வரைந்து வைத்திருப்பார்கள். இது தேடலை இன்னுமும் எளிதாக்கும் ஒரு உத்தியின் அடுத்த கட்டம்தான்.  

அது போல இப்போது அடுத்த கட்டமாக ஒரு குறிப்பிட்ட உடு அல்லது உடுத் தொகுதி வட அல்லது தென் அரைக் கோளத்தில் எங்கு அமையும் என்பது அடுத்த வினா நமக்குள் முளைக்கும். இதற்காக வான் அரைக்  கோளத்தின் 360 o  யும் 4 சம பகுதியாக ஒவ்வொரு பகுதியும் 90 o கோணமாகப் பிரித்துக் கொள்ளப்படுகிறது. அதாவது வட வான் அரை கோளம் NQ 1, NQ 2, NQ 3 மற்றும் NQ 4 என்றும், தென் வான் அரைகோளம் SQ 1,SQ 2,SQ 3 மற்றும் SQ 4 என்றும் பிரிக்கப்படுகிறது.

இப்போது இரண்டு எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

பெரு நாய் உடுத்தொகுப்பில் (Canis Major) காணப்படும் சிரியஸ் (Sirius) மிகப் பொலிவான உடுவாகும். 
பெரு நாய் உடுத் தொகுப்பு SQ 2 கால் வட்டத்தில் அமைந்துள்ளது. இதன் ஆயத் தொலைவுகள் (RA 7 h, Dec. - 20 o ). இத் தொகுப்பில் உள்ள சிரியஸ் (Sirius) உடுவிற்கு (RA 6 h 45 m, Dec. -16 o 42 ' ). 

ஓரியன் உடுத்தொகுப்பில் (Orion) காணப்படும் திருவாதிரை (Betelguese)  பொலிவானதோர் உடுவாகும். 
ஓரியன் உடுத்தொகுப்பு NQ 1கால் வட்டத்தில் அமைந்துள்ளது. இதன் ஆயத் தொலைவுகள் (RA 5 h, Dec. - + 5 o ).இத் தொகுப்பில் உள்ள திருவாதிரை (Betelguese) உடுவிற்கு (RA 5 h 55 m, Dec. + 7 o 24 ' ). 

இப்போது உங்களுக்கு வலது ஏற்றம் (Right Ascension) மற்றும் வான் கோள நேர்வரை (Declination) ஆகியன எளிதில் விளங்கியிருக்கும் என நினைக்கிறேன். இப்போது உங்களுடைய புரிதலுக்கு ஒரு சோதனை.
ஓரியன்  NQ 1 கால் வட்டத்திலும்,  மேஜர் கேனிஸ் SQ 2  இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. அதை எப்படிச் சொல்ல முடிகிறது?
பாருடா இந்த ஆளை. சும்மா பொழுது போக்கப் படிக்க வந்தா கேள்வியெல்லாம் கேட்டு வாத்தியார் வேலையைக் காட்டறான் என்று நினைப்பது புரிகிறது. 
பதில் மிக எளிதுதான்.
ஓரியனுக்கு RA = 5 h Dec.யின் குறி + , 0 - 6 h வரையில் Q 1தான். Dec.யின் குறி + ஆக் இருப்பது வான் வடஅரைக் கோளத்தில் மட்டும் என்பதால் NQ 1.
அதே போல சிரியஸிற்கு RA = 7 h , Dec.யின் குறி - ,என்பதால் SQ 2 .  

என்னடா, படம் பார்க்கத் தியேட்டருக்குப் போனால் சினிமாப் படம் தொடங்காமல் ஒரேயடியாக விளம்பரமாகத் திரையில் ஓடுகிறதே என்ற உங்களின் மன ஓட்டம் எனக்கும் புரிகிறது. நம்ம உடுவைக் குறித்துத் தெரிந்து கொண்டோமா அப்படியே ஜூட் விடலாமா என்று நினைக்கும் எண்ணத்தில் யாராவது இருந்தால் இந்த இடத்திலேயே கழட்டிக் கொள்வது நல்லது. ஆனாலும் அடிப்படையான சிலவற்றைச் சொல்லாமல் உடுக்கள் குறித்துச் சொல்வது எனக்கு எளிதாக இராது. இன்னும் அடிப்படையானவை நிறைய இருக்கின்றன. அவற்றை அவ்வப்போது சொல்வது உங்களுக்கு வசதியாக இருக்கும். 

அடுத்து 88 உடுத் தொகுதிகளை அட்டவணையாகத் தந்துள்ளேன். 
நம் இராசிசக்கரத்தில் வரும் பன்னிரெண்டு உடுத் தொகுதிகளில், வட வான் அரைக்கோளத்தில் ஆறும், தென் வான் அரைகோளத்தில் ஆறுமாக அமைந்துள்ளன.  








மேற்கண்ட அட்டவணைகளிலிருந்து வடக்கு வான் அரைக்கோளத்தில் 37 உடுத் தொகுதிகளும், தெற்கு வான் அரைக்கோளத்தில் 51 உடுத் தொகுதிகளும் இருப்பது தெரிகிறது. இந்த 88 உடுத் தொகுதிகளுக்கும் தமிழில் பெயரிடும் அளவுக்கு தமிழில் நான் புலவனோ, வித்தகனோ இல்லை என்பதால் ஆங்கிலப் பெயர்களையே தமிழ் எழுத்துக்களில் கொடுத்துள்ளேன். இருப்பினும் பழைய சில இராசிக் கட்டத்து உடுத் தொகுப்புகளுக்குத் தமிழில் முன்னரே பெயரிடப்பட்டுள்ளதால் அவற்றை மட்டும் தமிழில் தந்துள்ளேன். இராசிச் சக்கர உடுத் தொகுதிகள் நீல நிறமிடப்பட்டுக் காட்டப்பட்டுள்ளன.

 சந்திப்போம்.


Comments

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)