ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (2)

பன்னிரெண்டு ராசி உடுத் தொகுப்பில் ஒன்றான ரிஷபம் (Taurus) மிகப் பழமையான பெரிய உடுத் தொகுப்பு. வானத்தில் காணப்படும் 88 உடுத் தொகுப்புகளில் (Constellations) 17 வது பெரிய உடுக் தொகுப்பு ரிஷப ராசி (Taurus Constellation) ஆகும். இது 797 சதுர பாகைகள் (Sq. Degrees) பரப்பளவு கொண்டது. இதனை வான் கோளத்தில் + 90o முதல் - 65o வரையுள்ள பகுதியில் காணலாம்.

சில விஷயங்களை நான் முன்னரே சொல்லியிருக்கிறேன். அதில் ஒன்று வலப்புற ஏற்றம் (Right ascension - RA) மற்றது வான்கோள நேர்வரை அல்லது சரிவு(Declination - D). இவை இரண்டும் வான் கோளத்தில் ஒரு உடு (Star) அல்லது உடுத் தொகுப்பு (Constellation) வான் கோளத்தில் எங்கு உள்ளது என்ற அறிந்து கொள்ளப் பயன்படுபவை. நமது ரிஷபராசிக்கு வான்கோள நேர்வரை அல்லது சரிவு D + 19o அடுத்து வலப்புற ஏற்றம்
RA 4.9 மணி (RA 6.0 மணியை விடக் குறைவு) என்பதால்  வட வான் கோளத்தில் NQ1 அதாவது முதல் கால் துண்டுப்பகுதியில் உள்ளது என்று நம்மால் எளிதாகச் சொல்ல முடியும்.


மேஷம் (Aries), தேர் (Auriga), சீட்டஸ் (Cetus), எரிடனஸ் (Eridanus), மிதுனம் (Gemini), வேடன் (Orion) மற்றும் பெர்சியஸ் (Perseus) என்று அக்கம்பக்கத்தில் எகப்பட்ட உடுத் தொகுப்புகள். இதனால் கொஞ்சம் வாய்கால் வரப்புத் தகராறும் முன்பு இருந்தது.





இந்த டாரஸ் தொகுதியைச் சேர்ந்தது எல்னாத் (Elnath) என்ற பீட்டா டாவ்ரி
(β - Taurai).  இது ரிஷப ராசித்தொகுப்பின் இரண்டாவது பொலிவான உடு. இது டாரஸ் – ஆரிகா (Taurus – Auriga) உடுத் தொகுதிகளின் எல்லையில் அமைந்துள்ளது. இதனால் பேயர் பெயரிடும் முறையில் (Bayer designation) காமா ஆரிகே (γ - Aurigae) என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவ்வாறு அழைக்கப்படுவதில்லை.





ரிஷபம் ஒரு பரந்த உடுத்தொகுதி. ஒரு பெரிய குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் பல்வேறு ஊர்களில் இருப்பார்கள் அல்லவா. அதில்  குடும்பத்தின் முக்கியமான தலைக்கட்டு (முதல் வரிசை) உறுப்பினர்கள் சிலர் இருப்பார்கள். குடும்பத்தின் வடிவம் அவர்களால் குறிக்கப்படும் இல்லையா. அதுபோல ரிஷபராசித் தொகுப்பில் 2219 உடுக்கள் நண்டும் சிண்டுமாய் இருப்பதாக ஹிப்பார்கோஸ் துணக்கோள் (Hipparcos Satellite) தொகுப்பை கண்ணோட்டமிட்டுத் தகவல் தந்துள்ளது. வானம் தெளிவான நாளில் வெறும் கண்களால் கிட்டத்தட்ட 143 உடுக்களைக் காண முடியும் என்றும் சொல்லப்படுகிறது என்றாலும் ரிஷப ராசியை குறிக்க முக்கியமான 9  எளிதில் கட்புலனாகும் உடுக்கள் , கார்த்திகை உடுக் கொத்து (Pleiades Star Cluster)  மற்றும் நண்டு நெபுலா (Crab Nebula) சுட்டப்படுகின்றன.




இந்திய சோதிடத்திலும் வானியலிலும் ரிஷபராசியைப் பொருத்தவரையில் கார்த்திகை உடுக் கொத்தும், ரோகிணி உடுவுமே பிரதானமாகக் கருதப்படுகிறது. படத்தில் அவை இரண்டும் சிவப்பு நிறமிட்டுக் காட்டப்படுள்ளன.

காளை என்றாலே கொம்புதான் பிரதானம் இல்லையா. அது மட்டும் இல்லாமல் தங்கக் கொம்பு கொண்ட காளை வேறு. அதைக் குறித்த கிரேக்கத் தொன்மக் கதையைப் பின்னால் பார்ப்போம். ஆகவே இந்தக் கொம்பு வடிவத்தைக் குறிக்கும்  உடுக்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. இதன் காரணமாகத்தான் Taurus.svg ரிஷபராசிக்கான குறியீடாகப்  பயன்படுத்தப்படுகிறது.

 வெவ்வேறு உடுக்கள் வெவ்வேறு தொலைவில் இருக்கும். அதனால் உடுத்தொகுதியின் தொலைவை அதிகபட்சத் தொலைவில் உள்ள முக்கியமான உடுவிற்கும், குறைந்தபட்சத் தொலைவில் உள்ள முக்கியமான உடுவிற்குமான சராசரித் தொலைவால் குறிக்கிறோம். இங்கு குறைந்த தொலைவில் இருக்கும் முக்கியமான உடு சுமார் 66.65 ஒளி ஆண்டுகள் தொலைவிலும், மிக அதிகத் தொலைவில் உள்ள உடு 483.92 ஒளி ஆண்டுகள் தொலைவிலும் உள்ளதால் முக்கியமான உடுக்களின் சராசரித் தொலைவாக 217.41 ஒளி ஆண்டுகள் என்று சொல்லப்படுகிறது.


உண்மையில் சொல்லப்போனால் புவியிலிருந்து ராசியின் மிகத் தொலைவான உடு HIP 21533 என்ற அதிக முக்கியத்துவம் அற்ற 108721.1 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஓர் உடு. அதேபோல  மிகக் குறைந்த தொலைவில் உள்ள கிளைசி 176 (Gliese 176) உடுவின் தொலைவு புவியிலிருந்து  30.25 ஒளி ஆண்டுகள். இந்த உடுவுமே அதிக முக்கியத்துவம் இல்லாத உடுதான்.

இப்போது முன்னர் குறிப்பிட்ட ரிஷபராசியின் முக்கியமான ஒன்பது உடுக்களை முதலில் ஒப்பிட்டுக் காண்போம். அதன் பின்னர் கார்த்திகையின் ஒன்பது உடுக்களை ஒப்பிட்டும் கடைசியாக நண்டு நெபுலா குறித்தும் காண்போம்.

இப்போது உங்களுக்கு ஒரு நியாயமான ஐயம் வரும். அதென்ன கார்த்திகை என்பது ஏழு உடுக்கள் என்பது எப்படி ஒன்பதானது என்பது. உண்மையில் சொல்லப் போனால் கார்த்திகை உடுக் கொத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான உடுக்கள் உள்ளன. அவற்றில் வெறும் கண்களால் காணக்கூடியவை ஆறு அல்லது ஏழு என்று கருதப்பட்டது.


கிரேக்கத் தொன்மக் கதைகளின் படி கார்த்திகையின் பிரகாசமான ஒன்பது நட்சத்திரங்கள்  ஏழு சகோதரிகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்குமாகப் பெயரிடப்பட்டுள்ளன. இந்த ஏழு சகோதரிகள் ஸ்டெரோப் (Sterope), மெரோப் (Merope), எலெக்ட்ரா (Electra), மியா (Maia), டெய்கெட்டா (Taygeta), செலினோ (Celaeno), மற்றும் அல்சியோன் (Alcyone). இந்த ஏழு சகோதரிகளின் பெற்றோர்கள் அட்லஸ் (Atlas) மற்றும் பிளேயோன் (Pleione). இந்த அட்லஸ் வேறு யாருமில்லை.  பள்ளிக்கூடத்தில் சிறுவயதில் கேட்ட கதையில் உலகத்தைத் தன் தோளில் தூக்கிச் சுமந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்ட நமக்கு நன்றாக அறிமுகமான அதே ஆசாமிதான்.  அந்தக் கதை பற்றியும் பின்னால் காண்போம்.



அட்லஸிற்கு (Atlas)  ஈத்ரா (Aethra) மூலம் பிறந்த மகள்களான, ஹைடெஸ் (Hyades) பிளேயட்ஸின் ஒருவழிச் சகோதரிகள் (Half Sisters). ரிஷப ராசியில் அமைந்திருக்கும் மற்றொரு திறந்த உடுக் கொத்துதான் ஹைடெஸ். ஹைடெஸ் கொத்தில் உள்ள பொலிவான உடுக்கள் V வடிவத்தை உருவாக்குகின்றன, இது வானத்துக் காளையான ரிஷபத்தின் தலையைக் குறிக்கிறது. ரிஷபத்தின்மிகப் பிரகாசமான உடுவான ரோகிணி (Aldeberan) காணப்படும் அதே வரிசையில் இந்த கொத்தும் அமைந்துள்ளது, ரோகிணி புவிக்கு அருகில் உள்ள பொலிவு மிக்க  இராட்சத உடு. ஆனால் ரோகிணியானது, ஹைடெஸ் உடுக்கொத்தின்  உறுப்பினர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தது ரிஷபராசியின் உடுக்களைக் குறித்த அறிவியல் தகவல்களை மூச்சு விடாமல் வரிந்து கட்டிக் கொண்டு நான் எழுதினால் ஒன்று கட்டையைத் தூக்கிக் கொண்டு அடிக்க வருவீர்கள் அல்லது அடுத்த பகுதியிலிருந்து யாருமே கண்ணால் கூடப் பார்க்க மாட்டீர்கள்.  அதற்காக நீங்கள் தரப் போகும் சாபம் ஏழேழு ஜென்மங்களுக்கும் என்னைத் துரத்தியடிக்கும் என்பதும் எனக்குத் தெரியும். ஆகவே அந்தத் தகவல்களை எல்லாம் இரண்டு அட்டவணையாக்கித் தந்து விடப்போகிறேன். தேவைப்பட்டால்  ஒப்பிட்டுக் கொள்ளப் பயன்படும். மேலும் கட்டுரையில் அந்த விவரங்கள் இல்லாமல் போனால் எனக்கும் பிளாட்பார சோதிடருக்கும் அதிகம் வேறுபாடில்லாமல் போய் விடக் கூடும்.






சந்திப்போம்

Comments

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)