மரணத்தின் அழகு - பகுதி (1) - கலீல் ஜிப்ரான்
பகுதி (1) - அழைப்பு
நான் உறங்கிக் கொள்ள வேண்டும்,
அன்புப் போதையேறிய என் ஆன்மாவிற்காக.
நான் ஓய்வு எடுக்க வேண்டும்,
என் ஜீவன் பெற்ற அபரிமிதமான பகல் இரவுகளுக்காக.
என் படுக்கையைச் சுற்றி மெழுகுவர்த்தி ஏற்றித் தூபமிடுங்கள்,
உடல் மீது மல்லியையும் ரோஜாவையும் தூவுங்கள்;
என் கேசத்தைச் சாம்பிராணிப்புகையூட்டிப் பதப்படுத்தி,
கால்களில் நறுமணத் திரவியம் தெளித்து,
என் நெற்றியில் மரணம் தன் கரத்தால்
என்ன எழுதியுள்ளதென்பதைப் படியுங்கள்.
நித்திரையின் கரங்களில் நான் ஓய்வெடுக்க வேண்டும்,
சோர்ந்து விட்ட என் திறந்த விழிகளுக்காக.
வெள்ளித் தந்தி யாழ் துடித்து
என் ஆன்மாவை அமைதிப்படுத்தட்டும்.
வீணையும், அறுசரமும் நெய்த முக்காடு இட்டு மூடுங்கள், துவண்டு விட்ட என் இதயத்தை.
நீங்கள் நம்பிக்கையின் விடியலை என் கண்களில் காண, என் இதயம் இளைப்பாறும்
மென் மஞ்சமாம் கடந்த காலத்தை,
அதன் மாயப் பொருளுக்காகப் பாடுங்கள்
என் நண்பர்களே, உங்களது கண்ணீர் காய்ந்து போகட்டும்.
விடியலை வாழ்த்த முடியுயர்த்தும்
மலர்களென உங்கள் சிரமுயர்த்துங்கள்.
மரணம் மணப் பெண் வடிவில்
என் படுக்கைக்கும் முடிவிலிக்கும் நடுவில்
ஒளிப்பிழம்பாய் நிற்பதைக் காணுங்கள்.
தன் வெண்சிறகுகளை அடித்தென்னை
அவள் அழைக்கும் ஓசையை உங்கள் மூச்சடக்கி
என்னுடன் இணைந்து கேளுங்கள்.
என்னருகில் வந்து விடை கொடுங்கள்;
புன்னகைக்கும் உதடுகளுடன் என் கண்களைத் தொடுங்கள்.
குழந்தைகள் தம் மிருதுவான ரோஜா விரல் கொண்டு
என் கரங்களைப் பற்றிக் கொள்ளட்டும்.
மூத்தோர் நரம்புக் கரங்களால் என் சிரம் தொட்டு ஆசி வழங்கட்டும்.
தேவகன்னிகைகள் என்னை நெருங்கி வந்து
ஆண்டவனின் நிழல் என் கண்களில் தெரிவதையும்,
அவனது விருப்பத்தின் எதிரொலி என் சுவாசத்துடன்
போட்டியிட்டு விரைந்து செல்வதையும் காணட்டும்.
கலீல் ஜிப்ரான்
தமிழாக்கம் : வெ.சுப்ரமணியன்
Comments
Post a Comment