கண்டதும் களித்ததும் - பகுதி - 12 (புனே பயணக் கட்டுரைகள்)


                                           ஷிண்டே சத்ரி(Shinde Chhatri)                                          
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மஹத்ஜி ஷிண்டே(Mahadji Shinde) என்ற மராட்டிய படைத் தளபதிக்காகக் கட்டப்பட்ட நினைவுச் சின்னம் ஷிண்டே சத்ரி (Shinde Chhatri). இந்நினைவுச் சின்னம் புனே நகரின் அனைவராலும் நன்கு அறியப்பட்ட வான்வாடி(Wanwadi) பகுதியில் அமைந்துள்ளது. புனே நகரத்தின் குறிப்பிடத்தக்கதோர் அடையாளமாகவும் மராட்டிய  ஆட்சியை நினைவூட்டும்  வகையிலும் ஷிண்டே சத்ரி அமைந்துள்ளது. 



                                                  மஹத்ஜி ஷிண்டேயின் உடல் தகனம் செய்யப்பட்டது 1794 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் நாள். தகனம் செய்யப்பட்ட இடத்தைக் குறிக்கும் வகையில் எழுப்பப்பட்டுள்ள நினைவுக்கூடமே ஷிண்டே சத்ரி. 1794 ஆம் ஆண்டில் இந்த நினைவுச் சின்னம் அமைந்துள்ள வளாகத்தில் மஹத்ஜியால் கட்டப்பட்ட சிவாலயம் மட்டுமே இருந்தது. அந்த ஆண்டிலேயே அவர் மரிக்கவும், அவரது இறுதிச் சடங்குகள் அந்த வளாகத்தில் நடத்தப்பட்டன. 






                                                    1965 ஆம் ஆண்டில்தான் சிவ சன்னதிக்கு முன்பாக, மஹத்ஜி ஷிண்டேயின் பூதவுடல் தகனம் செய்யப்பட்ட அதே இடத்தில் சமாதி கட்டப்பட்டது. மாதவராவ் ஷிண்டே இந்த வளாகத்தையும், மஹத்ஜியின் நினைவகத்தையும் கட்டினார்.  



ஷிண்டே சத்ரியின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வரலாற்றில் சற்றே பின்னோக்கிச் செல்வது அவசியமாகிறது. தற்போது ஷிண்டே என்பது மஹாராஷ்டிர மாநிலத்தின் சதாரா மாவட்டத்திலிருந்து வந்த முக்கியமானஅரச குடும்பத்தின் குடும்பப்பெயராக (surname) உள்ளது. இருப்பினும் மராட்டியர்களின் ஆட்சிக் காலத்தில் இவர்கள் பேஷ்வாக்களின் கீழ் பணியாற்றி வந்தனர்.



பொதுவாக பேஷ்வாக்கள் அரசர்கள் என்று தவறாகக் குறிப்பிடப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் மராட்டியப் பேரரசர்களின் ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பின் பாதுகாவலர்கள் மட்டுமே. இதற்கிணையான முறை லக்னோவில் இருந்து வந்தது. அதாவது நவாப்கள் அனைவருமே அரசர்களாகச் சொல்லப்பட்டாலும் உண்மையில் அவர்களும் முகலாயப் பேரரசின் ஆட்சியாளர்களின் நிலப்பரப்பின் பாதுகாவலர்கள்தான். 


ஷிண்டேக்கள் இன்னும் வடக்கிலும் மத்திய இந்தியாவிலும் (தற்போது மத்தியப் பிரதேசம்) இடம் பெயரத் துவங்கியதும் சிந்தியா வம்சத்தைத் (Scindia Dynasty) தோற்றுவித்தனர். குவாலியரைத் தலைமையிடமாகக் கொண்ட இவர்களின் அரசு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே முக்கியமான வலிமை மிக்க அரசாகத் திகழ்ந்தது. பின்னாளில் 1947 ஆம் ஆண்டு இந்திய அரசுடன் இணைந்தது. சிந்தியா வம்சத்தின் குடும்பத்தினர்களில் பலரும் தற்போதைய அரசியலில் மிகவும் வலிமையான நிலையில் உள்ளனர்.  மஹத் ஷிண்டே, இந்த மிக வலிமை வாய்ந்த வம்சத்தைச் சேர்ந்தவர்.1760 முதல் 1780 வரையில் பேஷ்வாகளின் கீழ் மராட்டியப் படைக்குத் தலைமைத் தளபதியாகப் பணியாற்றியவர்.  



1768 முதல் 1794 வரையில் புனே நகரம் பேஷ்வாக்களின் அதிகார மையமாக விளங்கியது.1761 ஆண்டில் நடந்த மூன்றாம் பானிப்பட் யுத்தத்தில் மராட்டியப் படை ஆப்கானின் துரானிப் பேரரசால் (Durrani Empire) நிர்மூலம் ஆக்கப்பட்ட நிலையில்,  மராட்டிய சேனையை உருவாக்கி மராட்டியர்களின் பெருமையை மறுபடியும் நிலைநாட்டியது மட்டுமல்லாமல்  மராட்டியர்களுக்குச் சாதகமாக டெல்லியில் முகலாயர்களின் ஆட்சியைத் திரும்பச் செய்த காலம் மஹத்ஜி ஷிண்டேஜியின் காலகட்டம். அது மட்டுமல்லாமல் வலிமை வாய்ந்த ஆங்கிலேய கிழக்கிந்தியகம்பெனிப்படைகளை  முதல் ஆங்கிலோ மராத்தாப்  போரில் (1775 - 1782) தோற்கடிக்கக் காரணமாக இருந்தவர் மஹத் ஷிண்டேஜி.


குவாலியரைச் சேர்ந்த சிந்தியாக்களின் வழிவந்த தௌலத் ராவ் சிந்தியா ( Daulat Rao Sindhuja) வின் தத்துப்பிள்ளைதான் மஹத்ஜி ஷிண்டே. சிந்தியா குடும்பத்தின் வழித் தோன்றல்களால் நிறுவப்பட்ட குவாலியரைச் சேர்ந்த ஷிண்டே தேவஸ்தான் அறக்கட்டளை (Shinde Devasthan Trust) என்ற அமைப்பு ஷிண்டே சத்ரியைப் பராமரித்து நிர்வகிக்கிறது. ஷிண்டே சத்ரியில் நுழைவுக் கட்டணமாக ரூபாய் பத்து வசூலிக்கப்படுகிறது. கூடத்தைப் புகைப்படம் வெளியிலிருந்து எடுக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் கூடத்தின் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.




புனேயின் ஷிண்டே சத்ரியின் ஈர்ப்புக்கு  ராஜஸ்தான் பாணியில் அமைந்த அதன் மிக நேர்த்தியான கட்டிடக் கலையே முக்கியமான காரணம். ஆங்கிலோ – ராஜஸ்தான கட்டிடக்கலைப் பாணி, இரண்டு முற்றிலும் மாறுபட்ட ஆங்கிலேய மற்றும் ராஜஸ்தானக் கலாச்சாரங்களின் சிறப்பான நல்லதோர் கலவை. வாஸ்து சாஸ்திரப்படி கட்டப்பட்ட உயிரோட்டமான மாதிரிக் கட்டடமாக, அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கம்பீரமான தோற்றத்தோடு கட்டடக்கலை வடிவமைப்பை இன்றைக்கும் தக்க வைத்துக்கொண்டு விளங்குவது பாரட்டத்தக்கது.









சிவாலயத்தின் கூரான கோபுரத்தில் மிக நுட்பமான வேலைப்பாடு கொண்ட சிற்பங்களும், துறவியர்களின் சிலைகளும் மஞ்சள் நிறக் கற்களால் செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஆலயத்தின் கருவறையும், அடித்தளமும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. சத்ரி அதாவது கூடமானது சிற்பங்களும், ஓவியங்களும் கொண்டுள்ளது மட்டும் இல்லாமல் ஒரு கலைக்கூடத்தையும் உள்ளடக்கியது. சன்னல் கண்ணாடிகள் ஆங்கிலேயப் பாணியில் வண்ணமயமாக காணப்படுகிறது. கூடம் அழகிய ஓவியங்களாலும், ஷிண்டே குடும்பத்தினரின் புகைப்படங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.







துரதிருஷ்டவசமாக இந்த நினைவிடம் பல ஆண்டுகளாகக் கவனிப்பாரின்றி சிதிலமடைந்து மோசமான நிலையில்தான் இருந்தது. கட்டடம் பாசி பிடித்து மழை நீர் தேங்கிய நிலையில் ஒழுகிக் கொண்டிருந்தால் மழை மற்றும் ஈரப்பதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மஞ்சள் வண்ணக் கற்களால் கட்டப்பட்ட மேல்தளம் நிறம் மாறி சாம்பல் வண்ணத்தில் உருக்குலைந்து போயிருந்தது. கூரையும் பாதிக்கப்பட்ட நிலையில் மழை நீர் கசிவால் கூடத்தின் சிற்ப வேலைபாடுகளும் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தன.




அழகான இக்கட்டடத்தைத் தற்போது அதன் அசல் தோற்றத்திற்கு மீட்டெடுக்கும் பணிகள் இரு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. முதல் கட்டத்தில் பலம் குன்றியுள்ள மிக நுண்ணிய துளைகளைக் கொண்ட மஞ்சள் வண்ணக் கற்களின் மீது படிந்துள்ள பாசி இயந்திரங்கள் உதவியுடன் அழுத்தம் தரப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. கட்டடத்தின் திறந்தவெளித் துணை மாடி தற்போது முற்றிலுமாகச் சீரமைக்கப்பட்டு விட்டது. நீர்க்கசிவைத் தடுக்கும் பொருட்களைப் பயன்படுத்தி கூரை சீர் செய்யப்பட்டு விட்டதால் வருங்காலத்தில் கூடத்திற்குள் நீர்க்கசிவு ஏற்படுவதற்குச் சாத்தியமில்லை.
இரண்டாம் கட்டத்தில் ஜன்னல் கதவுகளின் ஆங்கிலேயப் பாணி வண்ணக் கண்ணாடிக் கதவுகள் மாற்றப்படவுள்ளன.







வருங்காலத் திட்டமாக ஷிண்டே சத்ரியின் புனரமைக்குப் பின்னர் ஒரு சிறு அருங்காட்சியகம் (museum) கலைக்கூடத்தில் (gallery of the hall)அமைக்க ஷிண்டே தேவஸ்தான் அறக்கட்டளை உத்தேசித்துள்ளது.


மராத்தி மொழியில் சத்ரி என்றால் குடை என்று பொருள். மாவீரர்க்கு மரியாதை செலுத்தும் வகையில் ஷிண்டே சத்ரி நினைவகத்தின் வளாகத்திற்குள் மழை பெய்யும் தருணங்களிலும் பார்வையிட வரும் பார்வையாளர்கள்   தங்களது குடையை மடக்கி வைத்துக் கொள்ள வேண்டப்படுகிறார்கள்.   


படங்கள்: நன்றி www.thrillingtravel.in மற்றும் wikipedia.












Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)