இயக்குநீர்கள் (Hormones), ஏற்பிகள் (Receptors) மற்றும்
இலக்கு உயிரணுக்கள் (Target Cells)



மனித உடலில் சளி, எச்சில், வியர்வை அட்ரீனலின், பிட்யூட்ரின் போன்ற
பலவகையான நீர்மங்கள் உற்பத்தியாகின்றன. இந்த நீர்மங்களை இயக்குநீர்
(Hormones) நீர்மங்கள் , இயக்கு நீரல்லாத (non-hormones) நீர்மங்கள் என்று
இருவகையாகப் பிரிக்கலாம். அவ்வாறு பிரித்து வகைப்படுத்தும் போது
இயக்கு நீர் நீர்மங்கள், இயக்கு நீரல்லாத நீர்மங்களிடமிருந்து எந்த
வகையில் வேறுபடுகின்றன என்பதை அறிவது மிகவும் முக்கியமானது.
இயக்குநீர்கள் (Hormones), குருதி (blood) அல்லது உயிரணுப் புறப் பாய்மம்
(extracellular fluid) வழியாக வேதியியல் தூதுவர் (chemical messengers) களாகச்
செயலாற்றுகின்றன என்று சொல்லலாம்.



பெரும்பாலான இயக்குநீர்கள் நம்முடலில் குருதியோட்டத்துடன் சுற்றி
வருகின்றன. இருப்பினும் ஒரு குறிப்பிட்ட இயக்குநீர் வரையறுக்கப்பட்ட
உயிரணுக்களுடன் மட்டுமே செயல் விளைவை ஏற்படுத்தும். இந்த
உயிரணுக்களை நாம் இலக்கு உயிரணுக்கள் (Target cells) என
அழைக்கிறோம். இலக்கு உயிரணுக்கள் தம்மிடம் ஒரு குறிப்பிட்ட
இயக்குநீருக்குரிய ஏற்பிகளைக் கொண்டிருந்தால் மட்டுமே
மறுவினையாற்றும். அதாவது ஒரு குறிப்பிட்ட இலக்கு உயிரணு ஒரு
குறிப்பிட்ட இயக்குநீருக்குக்கான செயல்பாட்டு ஏற்பியைக் கொண்டிருந்தால்
மட்டுமே அந்த இயக்குநீரால் நேரடித் தாக்கத்தைப் பெறும்.




இக்கருத்தைக் கீழ்க்கண்ட எளிய ஒப்பீட்டால் விளக்க முடியும். இக்காலத்தில்
நம்மில் பலர் பண்பலை வானொலி நிகழ்ச்சிகளை கைபேசி அல்லது தனித்த
எஃப் எம் வானொலி ஏற்பி (FM radio Receiver) வாயிலாகக் கேட்டு
மகிழ்கிறோம்.


சென்னையைப் பொருத்தவரையில் சூரியன் எஃப் எம் (Suriyan
FM), ரேடியோ மிர்ச்சி (Radio Mirchi), ரேடியோ ஒன் (Radio one), பிக் எஃப் எம்
(Big FM) என்று நிறையவே பண்பலை வானொலி ஒலிபரப்புகள் உள்ளன.
பண்பலை வானொலி நிலையங்கள் வேறு வேறு அதிர்வெண்களில்
ஒலிபரப்பு செய்கின்றன. இதில் எடுத்துக்காட்டாக சூரியன் எஃப் எம்
வானொலியின் அதிர்வெண் 93.5 மெஹா ஹெர்ட்ஸ் (MHz). ரேடியோ மிர்ச்சி
(Radio Mirchi) வானொலியின் அதிர்வெண் 98.3 மெஹா ஹெர்ட்ஸ் (MHz).
இவ்வாறு பல்வேறு அதிர்வெண்களுடன் வெளியாகும் ரேடியோ அலைச்
சைகைகள் அனைத்துமே, பரப்பிகளின் நெடுக்கத்திற்குள் (range) அமைந்த
பண்பலை வானொலி பயன்படுத்தும் அனைவரின் பண்பலை வானொலி
ஏற்பிகளையுமே அடையும்.


இருந்தபோதிலும் ஒரு குறிப்பிட்ட வானொலி
நிலைய நிகழ்ச்சியைக் கேட்க அந்த வானொலி நிலையத்தின்
அதிவெண்ணுக்கு ஏற்பி இசைவு (tune) செய்யப்பட்டிருக்க வேண்டும்.
சூரியன் FM வானொலியின் இலக்கு (target receiver) என்பது சூரியன் FM
வானொலியின் அதிர்வெண்ணுக்கு இசைவு செய்யப்பட்டிருக்கும் ஏற்பி
அல்லது ஏற்பிகள் மட்டுமே. குறிப்பிட்டதோர் நிலையத்தின் (station)
அதிர்வெண்ணுக்கு இசைவு செய்யப்பட்ட நிலையில் இந்த வானொலி
ஏற்பிப் பெட்டிக்கு இசைவு செய்யப்படாத பிற நிலையங்களின்
அதிர்வெண்களால் எந்தத் தாக்கமும் ஏற்படாது.

இயக்குநீர் ஏற்பிகள் (Hormone Receptors), இயக்கு நீரின் வகையைப்
பொருத்து உயிரணுவின் புறப்பரப்பிலோ அல்லது உயிரணுவின்
உட்புறத்திலோ காணப்படும். இயக்கு நீர், இயக்குநீர் ஏற்பியுடன்
பிணைக்கப்படும் போது அடுக்கடுக்கான வினைகள் உயிரணுவின் உள்ளே
தூண்டப்பட்டு அதன் செயல்பாட்டைப் பாதிக்கிறது.



இயக்குநீர்கள் குறித்து வழிவழியாகச் சொல்லப்படும் வரையறை, இவை
குருதியில் சுரந்து தொலைவாக உள்ள உயிரணுக்களில் தாக்கத்தை
ஏற்படுத்தும் என்பதே. இருப்பினும் பெரும்பாலான இயக்குநீர்கள் அவ்வாறே
செயல்படுவதாக அறியப்பட்டாலும், அவைகள் அருகில் உள்ள
உயிரணுக்களிலும், இயக்குநீரைச் சுரந்த உயிரணுக்களிலுமே தாக்கத்தை
ஏற்படுத்துகின்றன என்றும் காட்டப்பட்டுள்ளது. ஆயினும் கூட, ஒரு
குறிப்பிட்ட இயக்குநீர் பாதையில் எவ்வாறு சைகையானது பகிரப்படுகிறது
என்பதை விளக்க மூன்று வகையான செயல்கள் வரையறுக்கப்படுகிறது.
1) எண்டோக்கிரைன் செயல்பாடு (Endocrine action): இச் செயல்பாட்டில்
சுரக்கப்பட்ட இயக்குநீர் குருதி வழியாகப் பகிரப்பட்டு தொலைவாக உள்ள
உயிரணுக்களுடன் பிணைகிறது.



2) பாராக்கிரைன் செயல்பாடு (Paracrine action): இச் செயல்பாட்டில்
சுரக்கப்பட்ட இயக்குநீர் சுரப்பு மூலத்திலிருந்து விரவிச் சென்று மூலத்தின்
அருகில் உள்ள இலக்கு உயிரணுக்களிடம் தாக்கத்தை உருவாக்கும்.




3) ஆட்டோக்கிரைன் செயல்பாடு (Autocrine action): இதில் இயக்குநீர்
அதனைச் சுரந்த உயிரணுவிடம் தாக்கத்தை உண்டாக்கும்.
அகோனிஸ்ட்ஸ் (Agonists), ஆண்டகோனிஸ்ட்ஸ் (Antagonists) என்பன
ஏற்பிகளின் இயக்குநீர் பிணைப்புத் தளங்களின் மூலக்கூறுகளைக் குறிக்கும்
மிக முக்கியமான இரண்டு சொற்கள். இதில் ஏற்பியைப் பிணைக்கும்
அகோனிஸ்ட்ஸ் (Agonists) மூலக்கூறுகள் தூண்டுவதால், இயக்குநீர்
ஏற்கப்பட்ட பின்னரான நிகழ்வுகள் உயிரியல் விளைவுகளுக்குக் காரணமாக
அமையும். வேறு வகையில் சொல்வதானால் இவை இயல்பான
இயக்குநீரைப் போல் செயல்படும் என்றாலும் ஒருவேளை சற்றே அதிகமான
அல்லது குறைந்த வீரியத்துடன் செயல்படவும் கூடும். இயற்கையான
இயக்குநீர்கள் எல்லாமே அகோனிஸ்ட்ஸ்களே. பல நேர்வுகளில் ஒன்றுக்கு
மேற்பட்ட இயக்குநீர்கள் ஒரே ஏற்பியுடன் இணைவதும் உண்டு.
கொடுக்கப்பட்ட ஒரு ஏற்பிக்கு வெவ்வேறு அகோனிஸ்ட்ஸ்கள் வியப்பூட்டும்
அளவுக்கு மாறுபட்ட வீரியம் கொண்டிருப்பதும் உண்டு.



ஏற்பியுடன் தாம் பிணைந்தும் அதே சமயம் அகோனிஸ்ட்கள் பிணைவதைத்
தடுக்கும் தனமை கொண்ட மூலக்கூறுகள் ஆண்டகோனிஸ்ட்கள் எனப்படும்.
ஆனால் இவற்றால் செல்களுக்குள் சைகை நிகழ்வுகளைத் தூண்ட இயலாது.
அதிகார வர்க்கத்தினரில் சிலர், எந்த விதமான உபயோகமான செயலையும்
செய்யும் திறனற்றும், உபயோகமான செயலைச் செய்வதில் பங்களிக்கும்
திறமை கொண்டவர்களையும் தடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.



ஆண்டகோனிஸ்ட் மூலக்கூறுகளும் கிட்டத்தட்ட இவர்களைப் போன்றே
செயல்படக் கூடியவை. வேறு வகையில் சொல்லப்போனால் நம்மிடம் ஒரு
பூட்டும் இரண்டு சாவிகளும் உள்ளது என்று கருதுவோம். சாவிகளில் ஒன்று
குறிப்பிட்ட பூட்டிற்குரிய சாவி. மற்றது அந்தப் பூட்டிற்குரியது இல்லை.
சரியான சாவியால் மட்டுமே பூட்டைத் திறந்தும் மூடியும் செயல்படுத்த
இயலும். தவறான சாவியைப் பயன்படுத்தும் நேர்வில் அது பூட்டின் சாவித்
துளையிலிருந்து வெளியில் எடுக்க முடியாமல் சிக்கிக் கொண்டு அதனால்
பூட்டின் செயல்பாடு தடுக்கப்படுவது மட்டுமல்லாமல் சரியான சாவியைப்
பயன்படுத்துவதற்கும் தடை ஏற்படும் அல்லவா. இப்போது பூட்டை ஏற்பி
என்றும் சரியான சாவியை அகோனிஸ்ட் மூலக்கூறு என்றும் கொண்டால்,
ஆண்டகோனிஸ்ட் மூலக்கூறு தவறான சாவியைப் போன்றது எனலாம்.



இயக்குநீர் ஆண்டகோனிஸ்ட்கள் (Hormone Antagonists) பெரும்பாலும்
மருந்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.


இறுதியாக இயக்குநீர்களுக்குத் துறை சார்ந்த பெயர் சூட்டுவதில்
காணப்படும் பிரச்சனைகளைக் காண்போம். இயக்குநீரின் செயல்பாடுகள்
பற்றி அறிந்து கொள்ளுதல் மிக அடிப்படையான அவசியம் என்றாலும்
பொதுவாக ஒரு இயக்குநீர் கண்டறியப்பட்டதுமே பெயரிடுதலைத்
தவிர்க்கமுடியாது. இதன் பொருட்டு இயக்குநீரின் முதல் முதலான உடற்கூறு
ரீதியான விளைவு அல்லது முக்கியமான சேர்க்கைத் தளத்தின்
அடிப்படையில் தொடக்கத்தில் பெயர் சூட்டப்படுகிறது. பின்னாளில்
இயக்குநீர் குறித்த புரிதலும், அறிவும் வளரவளர அதற்கு இடப்பட்ட பெயர்
பல நேர்வுகளில் பொருத்தமின்றியோ அல்லது அதிகம்
கட்டுப்படுத்தப்பட்டதாகவோ தோன்றினாலும், அபூர்வமாகவே பெயர்
மாற்றம் எழுதப்படும் நூல்களில் செய்யப்படுகிறது. பிறிதொரு சூழலில் ஒரு
இயக்குநீர் ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்களால் குறிக்கப்படும் நிலையும்
காணப்படுகிறது.



இதில் சிக்கல் என்னவென்றால் இயக்குநீருக்குச் சூட்டப்படும் பெயர்களால்
ஒன்று குழப்பம் அல்லது தவறான கருத்து இறுதியில் உருவாகிறது.
இயக்குநீருக்கான பெயர்களை, மூலம் (source) அல்லது செயல்பாடிற்கான
(function) கறாரான வழிகாட்டுதல்களாகக் (strict guidelines) கொள்ளாமல்
மாறாக அடையாளப்படுத்த மட்டுமே பயன்படுத்துவது இச் சிக்கலுக்கு நல்ல
தீர்வாக அமையும்.


செப்டம்பர் 2019 மாத ஹெல்த் கேர் மாத இதழில் வெளியான கட்டுரை.





Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)