இரு துறவிகள் - கலீல் கிப்ரான்
தனித்த மலையொன்றில் துறவிகள் இருவர் இறைவனைத் தொழுதும் ஒருவரை ஒருவர் நேசித்தும் வாழ்ந்து வந்தனர்.
அவர்களின் உடைமையாக இருந்தது ஒரே ஒரு மண்ணாலான கிண்ணம் மட்டுமே.
ஒருநாள் அவர்களில் வயது முதிர்ந்த துறவியின் நெஞ்சத்தில் ஒரு கெட்ட ஆவி உட்புகுந்து குடி கொண்டது. முதிய துறவி இளையவரிடம்,” நீண்ட நாட்களாக நாம் சேர்ந்து வாழ்ந்து வருகிறோம். நாம் இனிப் பிரிந்து வாழ வேண்டிய காலம் வந்து விட்டது. நம்மிடம்இருப்பதைப் பிரித்துக் கொள்வோம்” என்றார்.
இது கேட்டு வருந்திய இளைய துறவி,” சகோதரரே, நீங்கள் என்னை விட்டுப் பிரியவே கூடாது. அவ்வாறு பிரிய வேண்டும் என்பது எனக்குத் துக்கத்தைத் தருகிறது. இருப்பினும் பிரிதல் உங்களுக்கு அவசியம் என்றால் அப்படியே நடக்கட்டும்” என்றவர் அந்த ஒற்றை மண்கிண்ணத்தை எடுத்து வந்து,” இதை இரண்டாகப் பிரித்தல் என்பது இயலாது என்பதால் இதனை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
அதற்கு முதிய துறவி,”பிச்சை எல்லாம் எமக்குத் தேவையில்லை. எனக்குச் சொந்தமானதைத் தவிர வேறு எதையும் நான் ஏற்றுக் கொள்வதில்லை. கிண்ணம் பங்கு போடப்பட வேண்டும்”.
இளைய துறவி,” இந்த மண்சட்டியை உடைப்பதால் உங்களுக்கோ அன்றி எனக்கோ என்ன பயன் கிடைக்கப் போகிறது?.அதுதான் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் என்றால் நாம் சீட்டுக் குலுக்கிப் போட்டு முடிவு செய்யலாமே” என்றார்.
ஆனால் மறுபடியும் முதிய துறவி சொன்னார்,”எனக்கு நீதியும், எனக்கு பாத்தியதைப்பட்டதும் மட்டுமே வேண்டும். வீணான வாய்ப்பொன்றில் நீதியையும் எனக்கு பாத்தியதைப்பட்ட பொருளையும் இழக்கச் சம்மதம் இல்லை. கிண்ணம் பங்கு பிரிக்கப்பட வேண்டும்”.
இதற்கு மேலும் காரணம் சொல்லி நியாயப்படுத்த விரும்பாத இளைய துறவி,” உங்கள் தங்கள் சித்தம் கிண்ணத்தை உடைக்க வேண்டும் என்பதாகவே இருக்குமானால், சரி நாம் இப்போதே கிண்ணத்தை உடைத்து விடலாம்”.
முகம் மிகவும் கருத்துப் போய் உரத்த அழுகுரலில் முதிய துறவி, “ ஓ, நீ ஒரு சபிக்கப்பட்ட கோழை, நீ சண்டை போடவே மாட்டாய்” என்றார்.
கலீல் கிப்ரான்.
தமிழாக்கம் : வெ.சுப்ரமணியன்
Comments
Post a Comment