கண்டதும் களித்ததும் - பகுதி 13 (புனே பயணக் கட்டுரைகள்)


பர்வதிக் குன்றுகள்


இருநூற்று எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் புனே நகரத்தின் கண்கவர் இடங்களில் ஒன்றாகத் திகழும் இடம் பார்வதி அல்லது பர்வதிக் குன்றுகள் (Parvati Hills).





 நாம் பார்வதி என்றழைத்தாலும் உள்ளூர்வாசிகள் பெரும்பாலும் “பர்வதி” என்றே அழைக்கிறார்கள். ஒருவேளை பர்வதராஜ குமாரி என்பதால் பர்வதி என்கிறார்களோ என்னமோ? புனே நகரத்தை கிட்டத்தட்ட முழுமையாக ஒரே கண் வீச்சில் காண விரும்புபவர்களுக்குப் பார்வதிக் குன்றுகள் நல்லதோர் தேர்வாக அமையும் என்பதில் ஐயமில்லை. காரணம் புனே நகரின் இரண்டாவது மிக உயர்ந்த பகுதி இதுதான். கடல் மட்டத்திலிருந்து சுமார் 650 மீட்டர்  அல்லது 2400 அடி உயரத்தில் பார்வதி குன்றின் உச்சி அமைந்துள்ளது. சாலையிலிருந்து 103 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். படிகள் சரிந்த வாக்கில் மேலேறும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. 





பர்வதிக் குன்றுக் கோவில் வளாகத்தில் ஆட்சி செலுத்தும் முதன்மைத் தெய்வமான பார்வதி தேவி நோய்களைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டவள் என்று சொல்லப்படுகிறது. 1740 ஆண்டில், கால் தொடர்பான நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நானாசாகேப் பேஷ்வாவின் தாயார் ஒருமுறை இத்திருக்கோவிலுக்குப் பிரார்த்தனைக்காக வருகை புரிந்தார். அதற்குப் பின்னர் அவரது உபாதை குறைந்து நலமடைந்தார். ஆகவே பேஷ்வா அங்கு ஒரு கோவில் வளாகத்தை நிறுவ முடிவு செய்தார். 



         
நானா சாகேப் பேஷ்வா நல்ல ரசனை மிக்கவராதலால் புனே நகரை உருவாக்கி அழகுறச் செய்தார். பார்வதிக் குன்றில் முதலில் தேவதேவேஷ்வர் ஆலயத்தை 1749 ஆம் ஆண்டு கட்டத் துவங்கினார். ஆலய வளாகத்தில் மையமாக சிவாலயமும் சுற்றிலும் நான்கு மூலைகளிலும் நான்கு ஆலயங்களையும் அமைத்தார். அதாவது இந்து மதத்தின் ஐம்பெரும் உட்பிரிவுகளான சௌரம், காணாபத்யம், சாக்கதம், வைணவம் மற்றும் சைவம் ஆகியவற்றைக் குறிப்பது போல அமைந்துள்ளது. இந்த நான்கில் சௌரம் சூரியனுக்கானது. அதில் சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் பயணிப்பது போல் அமைந்துள்ளது. அடுத்தது காணாபத்யம், யானை முகத்தோன் வினாயகனுக்கானது. மூன்றாவது சாக்கதத்தில் பார்வதி தேவி பவானியாகவும், கடைசியில் நான்காவதாக வைணவத்தில் ஜனார்த்தனராக மஹாவிஷ்ணுயும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.






நானா சாகேப் தனது அரசரும் சத்ரபதி சிவாஜியின் பேரனுமான சத்ரபதி ஷாகு(1682–1749 )மீது பெரும் பற்றுடையவர். சத்ரபதி ஷாகுவின் மறைவுக்குப் பின்னர் அவரது பாதணிகளை சிவவிக்ரஹத்திற்கு  அடியில் வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தலத்தின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் விக்ரஹம் சிவலிங்கத்திற்கு பின்பாக உள்ளது. இச்ச்சிலாரூபம் முழுக்க முழுக்கச் சுத்தமான வெள்ளியால் செய்யப்பட்டது. சிவசன்னதிக்கு இடப்புறம் உள்ள பார்வதி தேவியின் விக்ரஹமும், வலப்புறம் உள்ள வினாயகரின் விக்ரஹமும் சொக்கத் தங்கத்தால் ஆனவை. 1760 ஆம் ஆண்டில் ஆலயத்தின் கோபுரம் தங்கத்தால் நிர்மாணிக்கப்பட்டது. 



கடந்த காலங்களில் என்றுமே புனேநகரம் பாதுகாப்பற்ற திறந்த நகரமாகவே இருந்து வந்துள்ளது. எதிரிகளின் படையெடுப்பின் போதெல்லாம் விக்ரஹங்கள் சின்ஹாகட் கோட்டைக்கு (Sinhagad Fort) பாதுகாப்புக்காக கொண்டு செல்லப்படும். 1818 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் படைகள் சின்ஹாகட் கோட்டையை நான்கு மாத காலம் தொடர் முற்றுகைக்குப் பின்னரே கைப்பற்ற முடிந்தது. இந்த விக்ரஹங்களும் இதர பொக்கிஷங்களுடன் போர்க் கொள்ளைப்பொருளாகப் பிரிட்டிஷாரின் கைகளில் கிடைத்தது. என்னவோ தெரியவில்லை, போர்க் கொள்ளையில் கிடைத்தவற்றை அள்ளிச் சென்றவர்கள் விக்ரஹங்களை மட்டும் ஆலய அர்ச்சகர்களிடம் கொடுத்து விட்டுச் சென்றனர். 




இவ்வாறு திரும்பவும் விக்ரஹங்கள் கோவிலுக்கு வந்து சேர்ந்தன. அன்னியப் படையெடுப்பாளர்கள் அழிக்காத அல்லது கொள்ளயடித்துச் செல்லாத விக்ரஹங்களை 1932 ஆம் ஆண்டில் திருடர்களிடம் பறி கொடுத்ததுதான் மாபெரும் சோகம். அன்று திருடிச் செல்லப்பட்ட அசல் சிலைகள் இன்றுவரை கண்டுபிடித்து மீட்கப்படவில்லை. 




பழைய புகைப்படங்களின் அடிப்படையில் செய்யப்பட்ட மாற்று விக்ரஹமே இன்று நாம் தரிசிப்பது.



தேவ தேவேஷ்வர் ஆலயத்திற்கடியில் பாதாள அறை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து 1930 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளில் கோவில் வளாகத்திற்குக் கீழ் சுரங்கங்கள் சில இருப்பது தெரியவந்தது.  இச் சுரங்கங்கள் எல்லாம் செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களால் அடைக்கப்பட்டு உள்ளன. இவை பர்வதிக் குன்றின் பழைமையான ஆலய வளாகமாக இருந்திருக்கலாம் என்று சுட்டுவது போல உள்ளது. இது தவிர நானா சாகேப் அந்த அறையில் “ சொர்ணத் துலா” வைத்திருந்ததாகவும், அதில் தன் நிறைக்கு ஈடான தங்கத்தை எடை போட்டு தர்ம காரியங்களுக்கு வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது. 1750 ஆம் ஆண்டில் பேஷ்வா ஒரு மாதவ்-விஷ்ணு ஆலயத்தை பர்வதியில் நிர்மாணித்தார். சிலையில் சங்கு, சக்கரம், தண்டாயுதம் மற்றும் தாமரை ஆகியவற்றைக் காண முடிகிறது. 


பேஷ்வாவின் இளைய சகோதரர் ரகுநாத்ராவ் கார்த்திகேயனுக்கு அதாவது ஆறுமுகக் கடவுளுக்கு பர்வதியில் ஒரு ஆலயம் கட்டியுள்ளார். மராட்டியத்தில் பிற தலங்களில் பெண்கள் கார்த்திகேயனைத் தரிசித்து வணங்கத் தடை  செய்யப்பட்ட போதும் பர்வதி தேவஸ்தான் இங்கு அப்படியான தடை எதையும் விதிக்கவில்லை.





பர்வதியில் இன்றைக்கும் பேஷ்வாவின் பழைய அரண்மனை இருக்கிறது. இந்த அரண்மனை தற்சமயம் பேஷ்வா அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. நுழைவுக் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அருங்காட்சியகத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை . ஆனால் வெளியிலிருந்து படமெடுக்கத் தடையேதுமில்லை. அருங்காட்சியகம் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடம். பேஷ்வாக்களின் வாழ்க்கை முறை, பயன்படுத்திய பொருட்கள், போர்கள் குறித்த சித்திரங்கள், சமையல் கலங்கள், உடைகள், ஆயுதங்கள், நாணயங்கள் என்று காட்சியகம் நிறைந்திருக்கிறது. மராட்டிய பேஷ்வாக்களின் பண்பாடு, கலாச்சாரம் குறித்து அறிந்து கொள்ள நிறையவே இங்கு வாய்ப்புள்ளது. அரண்மணையின் அருகில் இருநூற்றைம்பது வயதான பெருங்கள்ளி மரம் (Plumeria) ஒன்றும் உள்ளது. இந்த அரண்மணையில் தான் நானா சாகேப் பேஷ்வா உயிர் நீத்தார். அதன் நினைவாக நினைவுச் சின்னம் கட்டப்பட்டுள்ளது. நினைவுச் சின்னத்திற்கு வெளியில் உள்ள சதுக்கம் 1761 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் நாள் நடைபெற்ற பானிப்பட்டுப் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கானது. இச்சதுக்கத்தை பெரிய அளவில் பானிப்பட்டுப் போர் நினைவுச் சின்னமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 




பார்வதிக் குன்றுக்குச் செல்லும் பாதி வழியில் நாற்பது அடி அகலமுள்ள பழங்காலக் குகைகள் காணப்படுகின்றன. இக்குகைகள் தற்போது பாறைகள் வழியாகக் கசியும் நீரைத் தேக்கி வைக்கும் பகுதியாக (reservoirs) உள்ளது. பேஷ்வா பாஜி ராவ் (இரண்டு) குன்றின் தன்காவாடி (Dhankavadi) என்ற இடத்திலிருந்து ஒரு நீர்வழியை ஏற்படுத்த முயன்றார். ஆனால் அது முற்றுப்பெறவில்லை. குன்றின் மீதேற தற்போது பயன்படுத்தப்படும் கற்படிகளை இவரே அமைத்தார். அகலமான படிகள் வழியாக மெல்ல குன்றின் மீதேறிச் செல்லும் போது, ஒரு பெண்மணி உடன்கட்டை ஏறிய நடைமேடையைக் காண முடியும். 




1875 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாள் புனே நகரத்தின் அழகை ரசித்தனுபவிக்க பிரிட்டனின் வேல்ஸ் இளவரசரான எட்வர்ட் VII , பெருத்த மகிழ்ச்சி ஆரவாரத்துடன் யானை அம்பாரியில் (howdah) ஆரோகணித்து பார்வதி மலை மீது ஏறினார். ஆனால் துரதிஷ்டவசமாக மலையின் 57 ஆம் படியில் யானை சறுக்கி விழுந்ததில் வேல்ஸ் இளவரசர் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினாலும் அம்பாரியில் அவருடன் பயணித்த அரச குடும்பத்தினர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டது. மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கிய ஊர்வலம் பாதியில் சோகமாக முடிந்து போனது.  



பார்வதிக் குன்றின் கோவில்கள் புனேயின் பல வெற்றிகளுக்கும் துயரங்களுக்கும் மௌனசாட்சியாக இருந்து வந்திருக்கிறது. இந்த மலைக் கோலில் மீதிருந்துதான் 1817 இல் இரண்டாம் பாஜிராவ் தனது மராட்டியப் படை கட்கி (Khadki) யில் முறியடிக்கப்படுவதை வேதனையுடன் கையைப் பிசைந்தவாறு பார்த்துக் கொண்டிருந்தார். சனிவார்வாடாவில் ஒரு நாள் இரவு நேரத்தில் ஓடஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நாராயணராவ் பேஷ்வா அன்றைய தினம் காலையில் வழிபட வந்ததும் இந்த ஆலயத்திற்குத்தான். ( இதுபற்றி சனிவார்வாடா கட்டுரையில் எழுதியுள்ளேன்.) மராட்டியப் பேரரசு அட்டோக்(Attock) முதல் கட்டாக் (Cuttack) மற்றும் குமான் (Kumaon) முதல் காவிரி (Cauvery) விரிவடைந்ததற்கும் பார்வதிக் குன்றுகளில் அமைந்த இவ்வாலயங்களே இன்றும் சான்றாகத் திகழ்கின்றன.

Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)