ஆராய்ச்சிகளில் எலிகளை அதிகம் பயன்படுத்துவது ஏன்?


                              அன்றாடம் நாம் உண்ணும் உணவில் கிடைக்கப் பெறாத சத்துக்களின் குறைபாட்டை ஈடு செய்யும் பொருட்டுக் கூடுதலாக எடுத்துக் கொள்ளும் ஊட்டச்சத்து நிரப்பி (dietary supplements) மாத்திரைகள் முதல் 
கேன்சருக்கான மருந்துகள் வரைநாள்தோறும் புதிதுபுதிதாகப் பல வகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன 
ஆய்வகங்களில் புதிய மருந்துகளைப் பரிசோதித்துப் பார்ப்பதிலாகட்டும் அல்லது பல வியப்பூட்டும் மருத்துவ கண்டுபிடிப்புகளிலாகட்டும் சுண்டெலிகளும் (Mice) எலிகளும் (Rats) மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன.
உண்மையில், உயிரிமருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை (Foundation for Biomedical Research) சுருக்கமாக எப்.பி.ஆர் (FBR) என்றழைக்கப்படும் நிறுவனத்தின் கூற்றுப்படி மேற்படி மருத்துவம் தொடர்பான ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் விலங்குகளில் தொண்ணூற்றைந்து (95%) விழுக்காட்டு விலங்குகள் சுண்டெலிகளும் எலிகளும் தான்.
அறிவியலாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் தமது ஆய்வுகளுக்காகச் சுண்டெலிகளையும் எலிகளையும் பெருமளவில் சார்ந்து இருப்பதற்கு நிறையவே காரணங்கள் உள்ளன. முக்கியமாக கொறியுண்ணிகள் (rodents) பொதுவாகவே வடிவில் மிகவும் சிறியவை. சிறிய இடத்தில் அவற்றுக்கான வசிப்பிடத்தை அமைக்க இயலும். இதன் காரணமாக அதிகச் சிரமம் இல்லாமல் அவற்றைக் கையாளவும் பராமரித்துக் காக்கவும் முடியும்.
மேலும் கொறியுண்ணிகள் புதிய வாழ்விடச் சூழலுக்கு ஏற்பத் தம்மை எளிதில் தகவமைத்துக் கொள்கின்றன. தவிரவும் கொறியுண்ணிகள் குறைந்த ஆயுள் காலம் கொண்டவை. அதாவது இரண்டு முதல் மூன்றாண்டுகளே வாழக் கூடியவை. மேலும் விரைவாக இனப் பெருக்கமும் செய்யக் கூடியவை என்பதால் பிற விலங்குகளுடன் ஒப்பு நோக்க, ஒப்பீட்டளவில் பல தலைமுறைகளை மிகக் குறைந்த கால அளவில் ஆய்ந்தறிய முடியும்.
.பிற ஆய்வக விலங்குகளின் விலையுடன் ஒப்பிடும் போது சுண்டெலிகளும் எலிகளும் அதிக என்ணிக்கையிலும் அதே சமயம் மிகவும் மலிவான விலையிலும் கிடைக்கின்றன. ஆராய்ச்சியாளர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு கொறியுண்ணிகளை அதிக அளவில் இனப் பெருக்கம் அடையச் செய்து பலர் வியாபார நோக்கில் பெருமளவில் வளர்க்கின்றனர்.
கொறியுண்ணிகள் பொதுவாகவே சாந்தமான, எளிதில் பழகக் கூடிய தன்மை கொண்டவை என்பதால் ஆராய்ச்சியாளர்களால் எளிதாகக் கையாள இயலும். இருப்பினும் சில வகை எலிகளையும் சுண்டெலிகளையும் கட்டுப்படுத்துவது மற்ற பல வகைகளைக் காட்டிலும் கடினமாகவே உள்ளது.
தேசிய மனித மரபணு ஆராய்ச்சிக் கழகத்தின் (National Human Genome Research Institute) கூற்றுப்படி, அநேகமாக மருத்துவச் சோதனைகளில் பயன்படுத்தப்படும் எலிகள் உடன்பிறந்தவையாகவே இருக்கும். இதன் காரணமாகப் பாலின வேற்றுமை தவிர்த்து அவைகள் ஒத்த மரபணுக்களைக் கொண்டிருக்கும். இதனால் மருத்துவச் சோதனைகள் வாயிலாகப் பெறப்படும் முடிவுகளில் அதிகம் மாறுதல் இராது. குறைந்தபட்சத் தேவையாக ஆய்வுக்குப் பயன்படுத்தும் எலிகள் தூய இனப் பெருக்கம் (pure bred) செய்யப்பட்டிருந்தாலே போதுமானது.
கொறியுண்ணிகளை மருத்துவ ஆய்வுகளில் மாதிரியாகப் பயன்படுத்துவதற்கு வேறு ஒரு அதி முக்கியமான காரணம் அவற்றின் மரபு, உயிரியல் மற்றும் நடத்தைப் பண்புகள் மனிதனை நெருக்கமாக ஒத்திருக்கிறது. இதனால் மனிதனுடைய நிலைமைகள் குறித்த அறிகுறிகளை எலிகளிடம் பிரதிபலிக்கச் செய்யலாம்.
தேசிய சுகாதாரக் கழகத்தின் (National Institutes of Health) பிரிவான ஆய்வக விலங்குகள் நலத்துறையின் அலுவலகத்தின் (Office of Laboratory Animal Welfare) பிரதிநிதி ஜென்னி ஹலிஸ்கி (Jenny Haliski), “பாலூட்டிகளான எலிகள் நிறையச் செயல்படுதல்களை மனிதனுடன் பகிர்ந்து கொள்கின்றன என்பதால் ஆய்வு வினாக்களுக்கு விடையளிப்பதற்கு அவற்றைப் பயன்படுத்துவது பொருத்தமானதாகவே இருக்கும்என்கிறார்.
கடந்த இருபதாண்டுகளில் இந்த ஒற்றுமைகள் இன்னும் அதிகமாகவே வலுவடைந்துள்ளது. அறிவியலாளர்கள் இப்போது டிரான்ஸ்ஜெனிக் மைஸ்” (transgenic mice) என்ற மரபணு மாற்றம் செய்த எலி இனத்தை உருவாக்கியுள்ளனர். இந்தப் புதிய எலி இனத்தின் மரபணுக்கள் மனித நோய் ஏற்படுத்தும் மரபணுக்களை ஒத்திருக்கின்றன. இதேபோலச் சில குறிப்பிட்ட மரபணுக்களின் செயல்பாட்டைத் தடுத்து நிறுத்தியோ அல்லது செயல்படாமல் முடக்கியோ  நாக் அவுட் மைஸ்”( knockout mice) உருவாக்கலாம். இந்த நாக் அவுட் மைஸ்களைப் பயன்படுத்துவதன் வாயிலாகப் புற்று நோய் ஏற்படுத்தும் வேதிப்பொருட்களின் விளைவுகளை மதிப்பீடு செய்து மருந்துப் பொருட்களின் பாதுகாப்பு குறித்து சரியாக அனுமானிக்க முடியும் என்கிறது தேசிய மனித மரபணு ஆராய்ச்சிக் கழகம் (National Human Genome Research Institute).
கொறியுண்ணிகள் சிறந்த ஆராய்ச்சி விலங்குகளாகத் திகழ அவற்றின் உடற்கூறியல் (anatomy), உடலியல் (physiology) மற்றும் மரபியல் (genetics) முதலியவற்றை ஆராய்ச்சியாளர்கள் நன்கு அறிந்துள்ளதால் அவர்களால் எலியின் நடத்தையில் அல்லது பண்பில் ஏற்பட்ட மாற்றம் எதனால் ஏற்பட்டது என்ற காரணத்தை எளிதாகச் சொல்ல இயலுகிறது.
எஸ்.சி..டி (SCID - severe combined immune deficiency) என்று சுருக்கமாக சொல்லப்படும் சில கொறியுண்ணிகள் இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு அமைப்புகள்(immune systems) இல்லாமலேயே பிறக்கின்றன. தேசிய மனித மரபணு ஆராய்ச்சிக் கழகம், இத்தகைய கொறியுண்ணிகள் சாதாரண மற்றும் கேடு விளைக்கும் மனிதத் திசுக்கள் ஆய்வில் (Malignant human tissue research) மாதிரிகளாகப் (models) பயன்படுகின்றன என்று குறிப்பிடுகிறது. .
உயர் இரத்த அழுத்தம் (Hypertension), நீரிழிவு(Diabetes), கண்புரைகள் (Cataracts), உடல் பருமன் (Obesity), வலிப்பு (Seizures), சுவாசக் கோளாறுகள் (Respiratory problems), காது கேளாமை (Deafness), பார்க்கின்சன் நோய் (Parkinson's disease), அல்சீமர்ஸ் நோய் (Alzheimer's disease), புற்று நோய் (Cancer), சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் (Cystic fibrosis), எச்..வி மற்றும் எய்ட்ஸ் (HIV and AIDs), இதய நோய்கள் (Heart disease), தசைநார் தேய்மானம் (Muscular dystrophy) மற்றும் தண்டுவடக் காயங்கள் (Spinal cord injuries) போன்ற மனிதர்களிடையே காணப்படும் நோய்களுக்கும் (diseases), கோளாறுகளுக்கும் (disorders) எலிகள் மற்றும் சுண்டெலிகள் மாதிரி (model) களாகப் பயன்படுகின்றன.

நடத்தை, புலன் சார் உணர்வுகள், முதுமை, ஊட்டச்சத்து, மரபியல் குறித்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படுவது தவிர, போதைக்கு அடிமையானவர்களை அதன் பிடியிலிருந்து  மீட்கப் பயன்படுத்தும் போதை நாட்டம் எதிர்க்கும் மருந்துகளைச் (anti-craving medication) சோதிப்பதிலும் எலிகள் பயன்படுகின்றன.
உயிரி மருத்துவ அமைப்புகளை (biomedical systems) அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்ள மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் விலங்குகளைப் பயன்படுத்துவது மிக முக்கியமானது. இத்தகைய ஆய்வுகள் வாயிலாகத்தான் பயனுள்ள மருந்துகள், சிகிச்சை முறைகள் மற்றும் குணப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கி முன்னேறிச் செல்ல முடியும்என்று ஜென்னி ஹலிஸ்கி (Jenny Haliski)  வாழ்வின் சிறு இரகசியங்கள்என்ற தலைப்பில் நடைபெற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டதை இங்கே சுட்டுவது கூடுதல் சிறப்பாக அமையும் .
குறிப்பு: இக் கட்டுரை ஹெல்த் கேர் (தமிழ்) ஜூன் 2019 மாத இதழில் வெளியாகியுள்ளது.




நன்றி: ஆசிரியர், ஹெல்த் கேர்.

Comments

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)