உலராதிருக்கும் வரை - கதை (4) சுழி

 

ஒரு தந்தையின் மனப் போராட்டம் கதையில் சொல்லப்படுகிறது.  அந்தப் போராட்டம் எப்படி இயற்கையின் விளையாட்டோ அதேபோல் அது முற்றுப் பெறுவதும் இயற்கையின் விளையாட்டாகவே அமைகிறது.‌

இதோ கீழே கதையின் இணைப்புக் கண்ணி 

 https://vallinam.com.my/version2/?p=9445#


இனி கதை என் பார்வையில். 

கதையில் கதாநாயகனுக்கு மகன் அதுவும் தன்னுடைய 2.0 பதிப்பாகப் பிறக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் பிறந்து என்னவோ பெண் குழந்தை. அதுவும் தன் குணாதிசயங்களைத் கொள்ளாமல் எல்லாச் செயல்பாடுகளிலும் தன் மனைவியைக் கொண்டிருப்பதில் கொஞ்சம் வருத்தம். 


மகளின் நடை உடை பாவனை மற்றும் செயல்கள் எல்லாம் அவளது தாயைப் போலவே இருப்பதை அவள் பெருமையாகக் கருதுகிறாள். 


அவன் மனைவி வழியில் மரபணுவிலேயே பெண்கள்தான் dominant. அதைக் கிண்டலாக 'கோழிப்பண்ணை'க் குடும்பம் என்றழைக்கும் சகலைகள் வாயிலாக வெளிப்படுத்துகிறார் லோகேஷ் ரகுராமன்.


அதே மாதிரி பெண்ணின் செயல்பாடுகளில் சக்கரம் வைத்த பெட்டியை சிரமப்பட்டு தன் தாயைப் போலவே தூக்கிக் கொண்டு நடப்பது போன்றவற்றைக் குறிப்பிடுகிறார். 


பெண்ணிற்கோ தான் தாயை நடை, உடை பாவனையில் கொண்டுள்ளதில் ஏகத்திற்கும் பெருமை. 


சொல்லி வைத்த மாதிரி 

பெண்ணுக்கும் பெண்ணே பிறக்கிறது.‌ பேத்தி பிறந்ததில் சந்தோஷம் இருந்தாலும் பேரன் பிறக்கவில்லையே என்ற ஏக்கமும் உள்ளிருக்கிறது.


யதேச்சையாக பேத்திக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது அவள் தன்னைப் போன்றே ஜீரோ (0) எழுதும் போது வலப்புறமாகச் சுழிப்பதைக் காண்கிறான். அப்பாடா தன் குணாதிசயம் ஒன்று பேத்திக்கு வைத்திருப்பதில் மனத் திருப்தி அடைகிறான்.


பொதுவாக அப்பனுக்குப் பெண் பிடிக்கும். அம்மைக்குப் பிள்ளை பிடிக்கும் என்பார்கள். ஆனால் இங்கு தகப்பன் தன்னுடைய ஜெராக்ஸ் பிரதியாக ஒரு பிள்ளைக்கே ஆசைப்படுகிறான். சரி அதுதான் நடக்கவில்லை.‌ இயற்கையின் விளையாட்டு என்றால் மகள் தன் குணாதிசயங்கள் எதையும் கொள்ளாமல் போனதில் பெரும் ஏமாற்றம். எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றியது போல இருக்கிறது "நான் அம்மா மாதிரி" என்று பெருமையாக மகள் சொல்லிக் கொள்வது.


இப்படித் தொடர் ஏமாற்றங்களுக்கிடையில் பேத்தியின் ஒரு சின்ன செயல்பாடு பாலைவனத்தில் ஒரு பசுஞ்சோலை. 


என் மகள் இதற்கு நேர்மாறாக எல்லோரிடமும் நான் என் அப்பா மாதிரி என்பாள். அதைக் கேட்கவே என் மனசுக்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி ஊற்றெடுக்கும். 


சராசரி ஆண்கள் அனைவருக்கும் தன் வாரிசுகள் தன்னைக் கொள்ள வேண்டும் என்ற ஆசை நிச்சயமாக இருக்கும். அது நிராசையாக ஆனால் மனதுக்குள் வலிக்கும். 


அந்த வலிக்கு பேத்தி மூலம் மருந்திட்டு விடுகிறார் லோகேஷ் ரகுராமன். நல்ல கதை.‌ தகப்பன்மார்கள் நிச்சயமாகப் படித்து ரசிக்க முடியும்.



மீண்டும் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

தேசியக் கொடிகள் பற்றிய சில அடிப்படைத் தகவல்கள் - (1)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)