இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (5)

இந்திய வானியல் மரபில் மேஷ இராசியில் உள்ள இரண்டு உடுக்கள் மட்டுமே அஸ்வினிக்கு உரியவை.
β -  ஏரியெட்டிஸ் என்ற ஷெரட்டன் (Sheratan – β Arietis)  மற்றும் γ - ஏரியெட்டிஸ் (Mesarthim – γ Arietis ) என்ற மெசர்திம் ஆகிய இரு உடுக்களும் அஸ்வினி இராசிக்கு உரியன என்று கொள்ளப்படுகின்றன. இவற்றை அஸ்வினி குமாரர்கள் என்ற இரட்டைச் சகோதரர்கள் இந்து தொன்மங்கள் குறிப்பிடுகின்றன. இதில் ஒருவரின் பெயர் நாசத்யா என்றும் மற்றொருவர் தஸ்ரா என்றும் சொல்லப்பட்டுள்ளனர்.



இவர்கள் இருவரும் குதிரைத் தலையைக் கொண்டவர்கள் , தெய்வங்களின் மருத்துவர்கள் என்றும் இவர்களின் குறியீடாக குதிரைத் தலையும், விலங்குக் குறியீடாக ஆண் குதிரையும் இந்துத் தொன்மங்களில் சொல்லப்பட்டுள்ளது. 
அப்பல்லோ (Apollo), கொரொனிசின் (Coronis) ஆகிய இருவரின் மகனான அஸ்கெல்பியஸ் (Asklepios) கிரேக்க தொன்மங்களில்  சொல்லப்படும் மருத்துவத்திற்கான தெய்வம். அஸ்கெல்பியஸை (Asklepios) அஸ்வினிக்குச் சமானவராகக் குறிப்பிடலாம்.

ரிக் வேதத்தில் இந்த அஸ்வின் குமாரர்கள் விஸ்வகர்மாவின் மகளும் மேகங்களின் தேவதையான சரண்யாவிற்கும் சூரியனின் விவஸ்வாட் (Vivasvat) ரூபத்திற்கும் பிறந்தவர்கள். அஸ்வினி குமாரர்கள் வேதகாலத்துத் தெய்வங்கள் விடியலில் தங்கத் தேரில் மனிதர்களுக்குப் பொக்கிஷங்களை அள்ளி எடுத்துக் கொண்டு வரும் இவர்கள் துரதிஷ்டத்தையும், பிணிகளையும் அண்டவிடாமல் காக்கக் கூடியவர்களாகக் குறிக்கப்படுகின்றனர்.


இனி தொன்மக்கதைக்கு வருவோம். சியவன (Chyavana) முனிவர் நீண்டகாலமாகத் தவத்தில் இருந்தார். அப்போது அவருடை உடலை மறைத்து பறவைகள் கூடு கட்டி இருந்தன. இதனை அறியாத சர்யாதி மன்னரின் மகளான சுகன்யா விளையாட்டாக அந்தப் பறவைக் கூடுகளைக் கலைக்கும் போது அவளது விரல்கள் குத்தியதில் சியவன முனிவரின் இரண்டு கண்களிலும் பார்வை பறி போனது. இதை அறிந்த மன்னன் சர்யாதி, தனது மகள் சுகன்யாவை செய்த தவறுக்குப் பிராயச்சித்தமாக முனிவருக்கு மணமுடித்துக் கொடுத்தான்.


இப்படி இருக்கையில் வானவெளியில் பறந்து வந்து கொண்டிருந்த அஸ்வினி சகோதரர்கள் சுகன்யாவின் அழகில் மயங்கிக் கீழே இறங்கி வந்தனர். வந்தவர்கள் கிழட்டுத் தோற்றம் கொண்டு கண் பார்வையும் இன்றி இருக்கும் சியவனரை விட்டு விட்டுத் தங்களில் யாராவது ஒருவரை மணந்து கொள்ளும்படி சுகன்யாவை வேண்டினர். பதிவிரதையான சுகன்யா மறுத்து விடவும் அவர்கள் அவளுடைய பதிபக்தியைப் பாராட்டி அவள் கேட்கும் ஒரு வரத்தை நிபந்தனையின் பேரில்அளிப்பதாக வாக்களித்தனர். அந்த நிபந்தனை என்னவென்றால் முனிவரும் அஸ்வினி குமாரர்களும் அருகில் இருந்த குளத்தில் மூழ்கி வருவார்கள். அப்போது மூவரும் ஒரே மாதியான தோர்றத்தில் காணப்படுவார்கள். இந்த மூவரில் யார் தன் கணவர் சியவனர் என்று சுகன்யா சரியாக அடையாளம் காண வேண்டும். அப்படிச் சரியாக அடையாளம் கண்டுபிடித்தால் உடனே சுகன்யாவின் கணவரான சியவனருக்கு இளமைத் தோற்றமும் கண் பார்வையும் மீண்டும் கிடைக்கச் செய்வார்கள். சுகன்யா சரியாகச் சொல்லத்  தவறும் பட்சத்தில் அஸ்வினி சகோதரர்களில் யாராவது ஒருவரை அவள் கணவனாக வரிக்க வேண்டும் என்பதே. தன் கற்பின் மீது நம்பிக்கை கொண்ட சுகன்யா போட்டிக்குச் சம்மதித்தார். முனிவரும் அஸ்வினி குமாரர்களும் குளத்தில் மூழ்கி வெளி வந்தனர். மூவரையும் நிமிர்ந்து பார்த்தால் மூவரும் ஒரே மாதிரியாக முகத்துடன் இருந்தது சுகன்யாவைக் குழப்பியது. 



படம்: By Ramanarayanadatta astri - https://archive.org/details/mahabharata02ramauoft, 
Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=21155711


ஒருகணம் நிதானித்த சுகன்யா, சட்டெனக் குனிந்து அவர்களின் கால்களைப் பார்த்தாள். அதில் ஒருவருடைய கால்கள் மட்டும் தரையில் பதிந்து இருந்தன. மற்ற இருவரின் கால்களும் தரையையே தொடவில்லை. யார் கால் தரையைத் தொட்டுக் கொண்டுள்ளதோ அவர் மனிதப்  பிறவி என்றும், தரையைத் தொடாத கால்களைக் கொண்டவர்கள் தெய்வப்பிறவிகள் என்றும் உணர்ந்து கொண்ட சுகன்யா, மனிதப் பிறவியான முனிவரைச் சரியாக அடையாளம் காட்டினாள். அஸ்வினி குமாரர்களும் அவளது பதிபக்தியையும், மதிநுட்பத்தையும் பாராட்டி சியவன முனிவருக்கு தேவலோக மருந்துகள் மூலம் இளமையையும் இழந்த கண்பார்வையையும் மீட்டுத் தந்தனர்.  இப்போது இந்திய மருத்துவத்தில் ச்யவன்பிராஷ் (Chyavanprash) லேகியம் பல நிறுவனங்களால் தயாரித்து விற்கப்படுவதை நாம் அறிந்ததுதான். இந்த லேகியத்தில் உள்ள மூலிகைப் பொருட்கள் முதுமையைத் தள்ளிப்போடும் என்று  சொல்லப்படுகிறது. சியவன முனிவருக்கு முதுமையைப் போக்கி இளமையை  அஸ்வினி குமாரர்கள் அளித்ததால் லேகியத்திற்கும் "ச்யவன்பிராஷ்" பெயரிடப்பட்டிருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது.


சோதிடத்தில் அச்சுவினியை கேது ஆள்கிறது.
அஸ்வினி உடுவைத் தமிழில் இரலை, ஐப்பசி, யாழ், ஏறு, புரவி, பரி, சென்னி என்ற சொற்களால் திவாகர, சூடாமணி நிகண்டுகள் சுட்டியுள்ளன. 
அடுத்து சிறிது இந்த இரு உடுக்களின் தன்மைகள் குறித்துக் காணலாம்.
β -  ஏரியெட்டிஸ் என்ற ஷெரட்டன் (Sheratan – β Arietis):
ஷெரட்டன்  என்றால் அரபு மொழியில் இரண்டு என்று பொருள். ஆரம்ப காலத்தில் γ - ஏரியெட்டிஸ் (Mesarthim – γ Arietis ) என்ற மெசர்திமும் ஒன்றாகவே கருதப்பட்டு இரட்டை என்ற பொருளில் ஷெரட்டன் எனப்பட்டது. பின்னாட்களில் γ - ஏரியெட்டிஸ் (Mesarthim – γ Arietis ) என்ற மெசர்திம் தனியாகக் குறிப்பிடப்படுகிறது.

β -  ஏரியெட்டிஸ் என்ற ஷெரட்டன் இரண்டாவது பொலிவான உடு. முதல் பொலிவான உடு, α -  ஏரியெட்டிஸ் என்ற ஹாமல் (Hamal – α Arietis). இங்கு நாம் மூன்று உடுக்கள் குறித்தும் சுருக்கமாகக் காண்போம். இங்கு நான் நிறை, ஆரம், வயது, பொலிவு, தொலைவு, தரம், வெப்பநிலை மற்றும் ஒற்றை உடுவா அல்லது இரட்டை உடுவா என்பது குறித்து மட்டும் ஒப்பிட்டுக் கொள்ள வசதியாக ஒரு அட்டவணை தருகிறேன். அட்டவணையில் தரப்பட்டுள்ள தரவுகள் புரியாவிட்டாலும் அது பற்றிக் கவலைப்பட அவசியம் இல்லை. 





அடுத்து பரணி பற்றிய விபரங்களைக் காண்போம். பரணி நட்சத்திரம் ஒரு பாகை வித்தியாசத்தில் விளங்கும் இரண்டு நட்சத்திரங்கள் கொண்டது. 
41 ஏரியெட்டிஸ் (41 Arietis) மற்றும் 35 ஏரியெட்டிஸ் (35 Arietis). இவைகளில் முதலாவதான 41 ஏரியெட்டிஸே  மூன்றுஉடுக்களால் ஆனது. அதாவது 41- ஏரியெட்டிஸ் A மற்றும் 41- ஏரியெட்டிஸ் D சேர்ந்து 41 ஏரியெட்டிஸ் Aa. அது தவிர 41- ஏரியெட்டிஸ் B மற்றும் 41- ஏரியெட்டிஸ் C யுடன் சேர்ந்த தொகுப்பும் 41 ஏரியெட்டிஸ் A யுடன் சேர்ந்த 41 ஏரியெட்டிஸ் Ab   இரண்டாவது, 35 ஏரியெட்டிஸ் ஒரு இரட்டை உடு. முதலாவது 166 ஒளியாண்டு தூரத்திலும், இரண்டாவது 172 ஒளியாண்டு தூரத்திலும் இருக்கின்றன. இது தவிர 39 ஏரியெட்டிஸ் என்ற 340 ஒளியாண்டு தூரத்தில் உள்ள ஒற்றை உடுவும்  உண்டு. 


மேஷ ராசியில் பரணி உடுக் கூட்டம் முன்று உடுக்களைக் கொண்ட தொகுப்பாகச் சொல்லப்படுகிறது. அதாவது  ஏரியெட்டிஸ் 35, ஏரியெட்டிஸ் 39 மற்றும் ஏரியெட்டிஸ் 41 ஆகிய மூன்று உடுக்களால் ஆனதாகக் கொள்ளப்படுகிறது. கிராமங்களில் திருமண வீடுகளில் மூன்று கற்களை வைத்து அடுப்பு போல உருவாக்கிச் சமையலுக்குப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கலாம். அது போன்ற முக்குட்டி அடுப்பு போல பரணி உடுத் தொகுப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இதனாலேயே தமிழில் பரணி உடுவை அடுப்பு என்று வழங்குகிறார்கள். மூன்று கற்கள் சமையற்கலனைத் தாங்குகிறதல்லவா அதனால் பரணி என்ற வடமொழிப் பெயருக்குச் சமமான பொருள் தமிழில் தாங்கிப் பிடிப்பது. பரணியின் மற்றொரு குறியீடு அண்ட யோனி. அதாவது உயிர்களைத் தாங்கிப்  பாதுகாத்துப் படைக்கும் பெண்மையின் பேராற்றலைக் குறிக்கிறது. இந்திய சோதிடத்தில் பரணிக்கான தெய்வம்  யமன். யமன் மரணத்தின் தேவன். நடுநிலை தவறாதவன், தென் திசைக்கு அதிபதி, காலன் என்றெல்லாம் சொல்லப்படும் தெய்வம். யமன் தவிரக் காளி, அதாவது பார்வதி தேவியின் உக்கிரக வடிவமும் பரணியுடன் தொடர்பு படுத்தப்படுகிறது.  காடு கிழவோன் பூதமடுப்பே, தாழி பெருஞ்சோறு தருமனாள் போதமெனப் பாகு பட்டது பரணி நாட்பெயரே "  என்கிறது திவாகர நிகண்டு . ஆகவே
காடு கிழவோன், பூதம் அடுப்பு, தாழி, பெருஞ்சோறு, தருமன் நாள் மற்றும் போதம் என்னும் பெயர்களும் பரணிக்கு உண்டு. பரணிக்கான மிருகம் யானை. போர் அல்லது அழிவு சார்ந்த செயல்களுக்கு பரணி உடுவில் சந்திரன் இருக்கும் நாள் உகந்ததாகக் கொள்ளப்படுகிறது. அடுத்த பகுதி சற்று சிறிய பகுதியாக நாளை வெளிவரும். அதில் மேஷராசி உடுக்களான அஸ்வின் மற்றும் பரணி குறித்த வேறு சில மாறுபட்ட செய்திகளைத் தருகிறேன். 





  

Comments

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)