அநிச்சயக்கரை - சிறுகதைத் தொகுப்பு - கதை(3) - லோகேஷ் ரகுராமன்

 



மணிகர்ணிகா கட்டப் படித்துறை - காசி



இந்தச் சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் இருபது சிறுகதைகள் உள்ளன. அவற்றில் இரண்டு என் மனதைத் தொட்டு என்னவோ செய்தன. முதலில் அவற்றை மட்டும் என் பார்வையில் பதிவிடுகிறேன்.

முதல் கதை - உலர்தல்.

கதையில் கையில் காசில்லாத ஒருவன் தன் தந்தையின் ஆசைப்படி அவரது சடலத்தை எப்படி எரியூட்டுகிறான் என்று கூறுகிறது. அவன் சடலத்தை ஏற்றி வந்த மீன் பாடி வண்டிக்கே தேவையான அளவு பணம் கொடுக்க முடியாத நிலையில் சண்டையிடுகிறான். மீன் பாடி வண்டியோட்டி அவன் தந்தையின் சடலத்தை மணிகர்ணிகா கட்டத்தின் படியில் கொண்டு போட்டு விடுகிறான். அன்று இரவு முழுவதும் சரியான மழை. படியில் கிடத்தப்பட்ட சடலம் இரவு முழுவதும் மழையில் நனைந்தவாறு இருக்கிறது. அவனும் சடலத்தின் கால்மாட்டில் இரவு முழுவதும் நினைத்தவாறே இருக்கிறான்.

ஒரு அகோரி சடலத்தை இலவசமாக எரித்துத்தர ஒப்புக் கொள்கிறார். ஆனால் மழையும் விடவில்லை. முந்தைய நாள் தகன மேடையில் எரியும் பிணமே முற்றிலுமாக எரியவில்லை. அவனுக்கோ தன் தந்தையின் பிணத்தை எரித்து முடிக்க வேண்டும் என்று அகோரியை நச்சரிக்கிறான். ஈரமாக இருந்தாலும் தன்னுடைய தந்தையின் உடல் எளிதில் எரிந்து விடும் என்கிறான். அவனது நச்சரிப்பால் எரிச்சலடைந்த அகோரி தகன மேடையில் எரியும் பிணத்தின் மீது மண்ணெண்ணெயை ஊற்றி ஒருவழியாக எரித்து முடிக்கிறான்.

அடுத்த எரிமேடையைச் சீர் செய்த விட்டு இவனது தந்தையின் சவத்தை எரிக்கிறான். இரவு முழுவதும் மழையில் நனைந்திருந்தாலும் பிணம் நன்றாக எரிகிறது. ஆச்சரியமான அகோரி, சம்சார பந்தம் விடாது என்கிறான்.‌ மணிகர்ணிகா கட்டத்தில் எரியும் பிணத்தின் புகை அருகில் உள்ள குடியிருப்புகளில் பரவுகிறது. அங்கு வசிக்கும் ஒரு குடும்பத்தில் உள்ள‌ சிறுமி பல் தேய்த்து முகம் கழுவுகிறாள். அவளது பள்ளிச் சீருடை மழையில் காயவில்லை. அச் சிறுமியின் தாய் பள்ளிச் சீருடையை உள்பக்கத்தை வெளிப்பக்கம் ஆக மாற்றிப் போடுகிறாள். 

அந்த இடத்தில் காயவைத்த துணிகள் பிணம் எரியும் புகை மூட்டத்தில் காய்வது வழக்கம் போல. 

"வர்ஷியாம் கற்பூரம் தஹதி" என்று வட மொழியில் அகோரி சொல்கிறார்.

வர்ஷியாம் கற்பூரம் தஹதி" (Varshiyam Karpuram Dahati) என்பது துர்க்கா ஸ்தோத்திரத்தில் வரும் ஒரு சமஸ்கிருத வரி. இதன் முழுமையான வரி: "ஸோடாஸ வர்ஷியாம் கற்பூரம் தஹதி" என்பதாகும். துர்கா தேவியின்  ஒளியில் எரியும் இந்த  சடலமத்தின் மன அழுக்குகள்  கற்பூரம் போல எதுவும் மிச்சமின்றி எரிந்தழியட்டும்.

சடலம் எரிந்து சாம்பலாக அங்கங்கே அகோரியும், அவனும் கம்பியால் குத்தி விடுகிறார்கள். சடலத்தின் சாம்பலை கை நிறைய எடுத்துத் தன் உடலில் பூசிக் கொள்கிறான் அகோரி. அவனிடம் சாம்பலைக் கொடுத்து கங்கையில் கடைக்குச் சொல்கிறான். கிழக்கு நோக்கி மும்முறை தலை முழுகச் சொல்கிறான்.  

கதாநாயகன் தன் தந்தையின் பிணம் எரிந்து ஏற்பட்ட புகை அந்தப் பள்ளி செல்லும் சிறுமியின் சீருடையில் படிந்து அதனைக் காய் வைத்து விடுவதைக் காண்கிறான். அந்தச் சிறுமியின் வீட்டைக் கண்டுபிடிக்க முடியாமல் அலையும் போது எதிர்பாராத விதமாக அந்தச் சிறுமி ஒரு ஆட்டோ ரிக்சாவில் பள்ளி செலவதைக் காண்கிறான்.அவனும் அந்த இடத்தை விட்டு அகலுகிறான்

கதை சரியாக இரண்டே முக்கால் பக்கம்தான். ஆனால் அதற்குள் எத்தனை விவரங்கள். மணிகர்ணிகா கட்டத்தில் நடக்கும் தகனங்கள் அதற்கு அருகில் வசிக்கும் மக்கள் அகோரிகள் என்று கதை நிறையப் பேசுகிறது. கையில் பணமில்லை என்றாலும் தந்தையின் ஆசையை நிறைவேற்றும் மகன் தன் தந்தையின் புகை(ஆவி) அந்தச் சிறுமியின் பள்ளிச் சீருடையில் படிந்ததாக நினைக்கிறான். ஒருவேளை அவர் ஞாபகார்த்தமாக அந்த உடையை யாசித்துப் பெறவே அச்சிறுமியின் வீட்டைக் தேடிப்பிடித்து போனானா? தெரியவில்லை.

கேளடி கண்மணி என்ற திரைப்படத்தில் இறந்து போன தன் தாய் ஊதித் கொடுத்த காற்றுத் தலையணையை ஒரு சிறுமி பத்திரமாக பாதுகாப்பாள். காரணம் தலையணையில் அம்மாவின் காற்று உள்ளது என்பாள். அதுதான் என் நினைவுக்கு வந்தது.

கதையின் லிங்க் கிடைக்கவில்லை. ஆகவே கதையை கிட்டத்தட்ட கொடுத்து உள்ளேன். படித்து முடித்து இயல்பு நிலைக்குத் திரும்ப எனக்கு இரண்டு நாட்கள் ஆனது. என்னவோ நானே அந்த மணிகர்ணிகா கட்டத்தின் படியில் தகன மேடைக்கருகில் அமர்ந்திருப்பது போன்றிருந்தது.‌ 

 

மீண்டும் சந்திப்போம். 







 

Comments

Popular posts from this blog

தேசியக் கொடிகள் பற்றிய சில அடிப்படைத் தகவல்கள் - (1)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

உடுத் தொகுப்புகளின் குடும்பங்கள் (Constellation families)