கனகாபிஷேகம்
இங்கு நான் சொல்லப் போவது என் பிறப்புக்கும் முன்பு நடந்தது. என் தாய்வழிப் பாட்டியின் குடும்பம் பெரிய செல்வந்தக் குடும்பம். என் பாட்டியின் அம்மாவின் கணவர் மகா கோபக்கார மனிதன்.
வீட்டின் பெண் பிள்ளைகளை கிஞ்சிற்றும் மதிப்பது கிடையாது. அவருக்கு எதிராக யாருமே வாய்திறக்க முடியாது.
அந்தக் காலத்தில் செல்வந்தர்கள் மனைவியைத் தவிர வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொள்வதெல்லாம் பெரிய குற்றமாக ஆணாதிக்கச் சமுதாயத்தில் பார்க்கப்படவில்லை.
என் னுடைய அந்தக் கொள்ளுத் தாத்தாவும் அப்படி ஒரு தொடுப்பு வைத்திருந்தாராம். ஆனால் அது கண்கூடாகத் தெரிந்தும் அவரை நேரடியாகக் கேள்வி கேட்க அனைவரும் பயந்தனர் என்பதே உண்மை.
கொள்ளுப்பாட்டி ஒரு பிள்ளைப் பூச்சி. விதியை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டிய நிர்பந்தம். சொல்லப் போனால் லோகேஷ் ரகுராமனின் " கடல் கனித்தது" கதையில் வரும் முதியவர் எவ்வளவோ தேவலை.
அப்போதெல்லாம் தொடுப்பு வைத்துக் கொள்வதை நான் சார்ந்த சமூகம் தனது அந்தஸ்தைப் பறைசாற்றும் வகையில்தான் எடுத்துக் கொண்டு இயல்பாகக் கடந்து சென்றது.
எல்லாத் தவறுகளும் நிச்சயமாக ஒரு காலகட்டத்தில் முடிவுக்கு வந்துதானே ஆகவேண்டும். அதுவும் ஒருநாள் நடந்தது. அவர்கள் குடும்ப வியாபாரம் இரண்டாவது உலகப் போரின் போது பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது. ஒரே இரவில் கோடிஸ்வரக் குடும்பம் ஒரே இரவில் நொடித்துப் போனது.
தொடுப்பின் தாய்க்கிழவிகள் எப்போதும் 'கதவைச் சாத்தடி, கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவைச் சாத்தடி' என்பதில் உறுதியாக இருப்பார்கள் எனக் கேள்விப்பட்டுள்ளேன்.
தாய்க்கிழவி அவரது தொடுப்பிடம், "ஏண்டி அந்த ******* ஐயர்தான் நொடிச்சிப் போய்விட்டாராம். அவரென்ன எனக்கு கனகாபிஷேகமா செய்யப் போறாரு. சீக்கிரம் வெட்டி விட்டு அடுத்த வேலை பாரு";என்று செல்வதைக் கேட்டபடி உள்ளே நுழைந்த என் கொள்ளுத்தாத்தன் திரும்பி வீட்டுக்கு வந்து மீதமுள்ள சில சொத்துக்களை விற்றுத் தங்க நாணயமாக மாற்றிக் கொண்டு தொடுப்பு வீட்டிற்குச் சென்று அந்தத் தங்க நாணயங்களை தொகுப்பின் தலை வழியாக கொட்டி விட்டு கனகாபிஷேகமும் முடிந்தது உன் தொடர்பும் இத்தோடு முடிந்தது என்று சொல்லி விட்டுத் திரும்பிப் பாராமல் வீட்டுக்கு வந்து சேர்ந்தாராம்.
இது தனிப்பட்ட யாருடைய மனதையும், இனத்தையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.அந்தக் காலத்தில் பெண்கள் மீதான ஆணாதிக்கம் எப்படி இருந்தது என்பதை அறியும் நோக்கத்தில் எழுதப்பட்டது.
மீண்டும் சந்திப்போம்.

Comments
Post a Comment