கறை - கதை (9) - லோகேஷ் ரகுராமன்


இந்தக் கதை 2022 ஆம் ஆண்டில் கர்நாடகாவில் ஒரு கல்லூரியில் நடைபெற்ற  நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன்.

கதையின் இணைப்புச்‌ சுட்டி கிடைக்கவில்லை. லோகேஷ் ரகுராமன் சாரிடமிருந்து பெற்று  விரைவில் இணைக்கிறேன். 

கறை என்பது  மத வெறியர்களால் மதத்தின் பெயரால் ஏற்பட்ட கறையா? அல்லது அந்த அப்பாவி இஸ்லாமிய மாணவியின் புர்காவில் ஏற்பட்ட கறையா? என் வரையில் நம் அனைவரது மீதும் படிய வைக்கப்பட்ட கறை என்றே தோன்றுகிறது.

கல்லூரியில் படிக்கும் சற்று வெகுளித்தனமான பெண். அவளது மென்மையான இயல்பு எல்லாம் அழகாக சொல்லப்பட்டுள்ளது. பொதுவாகவே பள்ளியலும் கல்லூரியிலும் படிக்கும் காலத்தில் எல்லாப் பெண்களுமே செல்லமாகவும், சோம்பேறித்தனமாகவுமே இருப்பார்கள். என் மகள் கூட அப்படித்தான். வீட்டு வாசலில் ஆட்டோ வந்த பின்புதான் காலை உணவை வாயில் திணித்துக் கொண்டு ஷூவைக் கையில் தூக்கிக் கொண்டு ஓடுவாள். இங்கும் அதே கதைதான். குளிக்கப் போனாலும் அதிக நேரம் எடுத்துக் கொள்வது. எல்லாம் நம் வீட்டின் செல்லப் பெண்களை அப்படியே அச்சு அசலாகக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

புர்கா தினமும்‌ அணிந்து அலுத்துப் போன நிலையில், குளித்து விட்டு வந்து புர்கா அணிய வேண்டாம் என நினைக்கும் அவள் உம்மாவிடம் திட்டு வாங்க வேண்டாம் என்பதால் தன் முடிவை மாற்றிக் கொண்டு அதை அணிகிறாள். அங்குதான் விதி விளையாடுகிறது.‌ கல்லூரியில் அவளை‌ உடையை வைத்து இஸ்லாமியப் பெண் என அடையாளம் கண்டு கொள்ளும் ஒரு கூட்டம் சுற்றிவளைத்து ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம்  என என வெறியோடு கூச்சலிடுகிறது.‌ தனியாக நடந்து வரும் பெண்ணை பயமுறுத்தும் கூட்டத்தைக் கண்டு முதலில் பயத்தில்   திகைத்துப் போகும் ஆதரவில்லாத பெண்ணுக்கு அந்தக் கூட்டத்திற்கு எதிராக அல்லாஹூ அக்பர் என எதிர் முழுக்கம் இடும் தைரியம் எப்படியோ வந்து விடுவது நல்ல திருப்பம். 

பெண்களின் மன தைரியம் என்பது எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் பயத்தை வென்று நேர்மறையாக முடிவெடுக்கும் திறன் ஆகும். சமூகத்தின் விமர்சனங்களைப் புறந்தள்ளி, தங்கள் சுயமரியாதையைக் காத்துக்கொண்டு, இலக்குகளை நோக்கி முன்னேறுவதே உண்மையான மன தைரியம். இதுவே ஒரு பெண்ணின் மிகப்பெரிய பலமாகும். அந்த மனோ தைரியம் தான் அவளை அந்தக் கடினமான நேரத்திலும் உடனடியாகச் செயல்பட்டுக் காப்பாற்றியது என்பதே உண்மை.


மறுநாள் அந்த கருப்பு உடையில் இருந்த செந்தூரக் கறையைத் தேய்த்துத் தேய்த்து அகற்ற முயற்சி செய்வது இரண்டு‌ செய்திகளைத் தருகிறது.
முதலாவது செந்தூரக் கறையைப் போல நடந்து முடிந்த அந்த  நிகழ்வை அடியோடு மனதிலிருந்து அடியோடு அகற்றுவது. இரண்டாவது புர்கா அணிய யோசிக்கும் அவளை இனி தினமும் புர்கா அணிந்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தைத் உறுதிப்படுத்துகிறது என்றே எடுத்துக் கொள்கிறேன்.

மதவாதிகள் மிரளச் செய்தோ அல்லது  கூச்சலிட்டோ ஒரு பெண்ணை பயமுறுத்தி விட முடியாது.‌ மாறாக அதனால் அவளது மன உறுதி அதிகரிக்கவே செய்யும். 

வன்முறை எந்தப் பிரச்சனைக்கும் தீர்வாகாது
 பிரச்சினையை மேலும் இறுக வைக்கும் என்பதை லோகேஷ் ரகுராமன் சொல்வியிருப்பதே கதையின் செய்தியாக எடுத்துக் கொள்கிறேன்.


மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போம் 







Comments

Popular posts from this blog

தேசியக் கொடிகள் பற்றிய சில அடிப்படைத் தகவல்கள் - (1)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)