பொன்மார் - கதை (7) லோகேஷ் ரகுராமன்
முதலில் கதையின் இணைப்புக் கண்ணி.
https://lokeshraghuraman.wordpress.com/2017/09/08/ponmaar-short-story/
கதை உங்களுக்கு அதிர்ச்சி தரலாம். ஆனாலும் ஆணின் சுயநலத்தைக் காட்டும் கதையாகவே இதை நான் எடுத்துக் கொண்டேன்.
எல்லாரோட எழுத்திலும் எல்லாம் இருக்கும். இர்விங் வாலஸின் "SEVEN MINUTES"
ஹெரால்டு ராபின்ஸின் "A STONE FOR DANNY FISHER" இவற்றைச் சுட்டலாம்.
அது போலத்தான் லோகேஷ் ரகுராமனின் பொன்மாரையும் பார்க்கிறேன். இனி என் பார்வையில் பொன்மார் கதையைக் காண்போம்.
கல்கத்தா நகரின் சிவப்பு விளக்குப் பகுதி சோனாகாச்சியின் பின்புலத்தில் கதை சொல்லப் படுகிறது.
கதாநாயகன் இளைஞன். காமத்தை அனுபவிக்கத் துடிக்கும் வயது. வாழ்கையின் பல நேரங்களில் தோல்வியைச் சந்தித்த அவனுக்கு காமத்தை ருசிப்பதே வடிகால் எனத் தோன்றுகிறது.
பேருந்தில் சோனாகாச்சியின் 11000 பாலியல் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையான நாப்கின்னுக்கு விதிக்கப்பட்ட GST பற்றிச் சக பயணி அவனிடம் கூறுகிறார்.
பேருந்தில் கூட்டமாக ஏறும் பாலியல் தொழிலாளர்கள் GST க்கு எதிரான தங்கள் எதிர்ப்பைக் காட்ட ஆண்களுக்கு ராக்கி கட்டி மென்மையாகத் தெரிவிக்கிறார்கள். பாவம் வாயில்லாப் பூச்சிகளால் வேறென்ன செய்ய முடியும்?
காமத்தை அனுபவிக்கத் துடிக்கும் அவன் தன் கையைப் பிடித்து ராக்கி கட்ட வரும் ஒரு பேரழகுப் பெண்ணைத் தடுத்து விடுகிறான். அவனால் அவள் அழகை மறக்க முடியாமல் சோனாக்காச்சியில் தேடுகிறான். யதேச்சையாக அவளைச் சந்திக்கிறான். அவளுடன் உறவு வைத்துக் கொள்ள 2000 ரூபாய் தரத் தயாராக இருக்கிறான். ஆனால் அவள் எல்லாம் முடிந்த பின் வாங்கிக் கொள்வதாக கண் கூறுகிறாள். அது அவளது தொழில் நேர்மையைக் (Professional ethics) காட்டுகிறது.
அந்த அறையில் ஒரு சிசுவைக் காணும் அவனுக்குத் தன்னைப் போன்று வந்த ஒருவனின் அவளுக்கு அளித்திருப்பான் என்ற நினைப்பு மட்டுமே ஏற்படுகிறது மற்றபடி பரிதாபம் ஏதும் வரவில்லை.
கதையில் அவள் அவனை ஆணுறை அணியச் சொல்லி ஆணுறை தருகிறாள். முன்னெப்போதோ அவளை ஜாக்கிரதை ஆக இருக்க விடாத ஆணுறை அணிந்து உறவு கொள்ள மறுக்கும் அதற்காக அதிகப் பணம் தரும் ஆண்மகனால் இந்தச் சிசு ஜனித்திருக்கும் அல்லது அவளது காதலன் அவளைக் கர்பவதியாக்கி இங்கு கொண்டு வந்து விற்றிருக்கலாம். எனக்கு இரண்டாவது நேர்வே இருக்க வாய்ப்புள்ளதாகத் தோன்றுகிறது.
அவன் அவள் மீது வெறி கொண்டு இயங்கும் போது பாலுக்காக அந்தச் சிசு அழுகிறது. ஆனால்
காமம் என்பதும் ஒருவகையில் பசி தானே. தன் உடற் பசியை மட்டுமே கணக்கில் கொள்ளும் அவனை மன்னிக்க முடியவில்லை.
அதே சமயம் அந்தப் பெண்ணின் கடமை உணர்ச்சி அதாவது customer satisfaction அவளது தாய்மை உணர்ச்சியைத் தடுக்கிறது என்றும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. "பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது. நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது" என்ற வரிகள் அர்த்தமுள்ளவை.
மகாராஷ்டிர சட்ட மன்றத்தில் ஒரு முறை மும்பையில் சிவப்பு விளக்குப் பகுதியைத் தடை செய்யக் கோரிக்கை வைக்கப்பட்டபோது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.காரணம் காமம் நிறைந்த ஆண்களின் வடிகாலாக அப்பகுதி உள்ளது. சிவப்பு விளக்குப் பகுதியே பல குடும்பப் பெண்களைக் கற்பழிப்பிலிருந்து காக்கும் அரணாக விளங்குகிறது என்று சொல்லப்பட்டது.
தனது காமம் திருப்தியடைந்ததால் இன்று நகரில் ஒரு கற்பழிப்பு நடக்காது என்ற அவன் கருத்து அவனைக் கடைந்தெடுத்த பெண் பித்தன் என்றே அடையாளம் காட்டுகிறது. .
மீண்டும் சந்திப்போம்.

Comments
Post a Comment