செப்டம் - கதை (6) லோகேஷ் ரகுராமன்
அரோமா சிறுகதைத் தொகுப்பு நூலில் இது ஆறாவது கதை.
கதைக்கான இணைப்புக் கண்ணி கீழே உள்ளது.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பூம்புகார் சென்றிருக்கிறேன். அப்போதே சரியான கவனிப்பின்றி இருந்ததைக் காண முடிந்தது.கதையில் பூம்புகாரின் இப்போதைய நிலையை லோகேஷ் ரகுராமன் கண்முன் நிறுத்துகிறார்.
நல்ல சுற்றுலாத் தலமாக விளங்கியிருக்க வேண்டியது இப்போது சீர்குலைந்து போட்டிருப்பதை உணர முடிகிறது. நல்லதோர் வீணை நலம் கெடப் புழுதியில்.
சிலப்பதிகாரத்தில் வரும் ஐம் பெரும் மன்றங்களில் ஒன்று நெடுங்கல் மன்றம். சிறு வயது முதலே எலிப் பொந்து போன்ற வீட்டில் வசித்த அவனுக்கு விஸ்தாரமான இடத்தில் வசிக்க வேண்டும் என்ற ஆசை.
நெடுங்கல் மன்றத் தூண்களுக்கு இடையில் நிறையவே இடம் விட்டு விசாலமாகக் கட்டியிருக்கலாம் என்ற இடத்தில் கதாநாயகனின் இந்த ஆதங்கம் வெளிப்படுகிறது
நெடுங்கல் மன்றத்தை பட்டப் பகலில் பொது இடம் என்றும் பாராமல் வெட்கமின்றிக் காம இச்சையை தீர்த்துக் கொள்ளும் இளம் ஜோடிகளை தெரு நாய்களுக்கு ஒப்பிடுவதும், அங்கே வந்து அவனிடம் மதுவைப் பெறும் யாசகனையும் யாரும் பொருட்படுத்தாத தெரு நாய் என்று நினைப்பதும் நல்ல ஒப்பீடுகள்.
கதாநாயகன் கல்லூரி நாட்களில் மது அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவன். திருமணமான பின்னும் குடிப்பழக்கத்தை விடவில்லை. தன்னுடைய இயலாமையை, சோகத்தை மறக்கக் குடிப்பது ஒருவகையில் escapist மனப்பான்மை என்பது என் கருத்து.
அந்த எலிப் பொந்து வீட்டில் எங்கு போனாலும் எதிலாவது இடித்துக் கொள்ள வேண்டும். படுக்கும் போதும் ஆறடி உயரம் உள்ளவனுக்கு மூன்றடியே கிடைத்தது. அவன் வேலைக்குச் சேர்ந்து சேமித்து இடம் வாங்கி வீடும் கட்டிக் கொள்கிறான். இரவில் மனைவியுடன் இருந்து விட்டு பிறகு விஸதாரமாகப் படுக்க வேண்டி ஹாலில் வந்து படுத்துக் கொள்கிறான். மனைவி நான் கூட உங்களுக்கு இடைஞ்சலா என்று கேட்கிறார்.
எப்போதும் தன்னை நாலாபுறமும் சுவர்கள் சுற்றி இருப்பதாக நினைக்கிறான். மலையாள சினிமா போஸ்டரைப் பார்த்து நின்றவை பூஞ்சையான உடல்வாகு கொண்ட மனைவி மந்தணத்திலும் விஸ்தாரம் வேண்டுகிறானோ என்று ஐயமுற்று அவனை 'அந்தப் போஸ்டரை நினைச்சுக்குங்க' என்று சொல்வது அவனை மனரீதியாகப் பாதித்திருக்கலாம்.
கருவுற்ற மனைவியின் ஸ்கேன் பார்த்து விட்டு கருப்பையில் செப்டம் அதாவது குறுக்குத் தசைச் சுவர் இருப்பதை அறியும்போது கரு வலப்புறம் உள்ள சிறிய பகுதியில் இருப்பது அவனது எலிப் பொந்து வீட்டில் வாழ்ந்த வாழ்க்கையின் தொடர்ச்சியா? அதுதான் அவனை குடிக்கக் தூண்டியதா?
ஆங்கில ஆண்டுக்கான 12 மாதங்களைக் கருதினால், அதனை ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில் 8 மாதங்கள். பெரிய பிரிவாகவும் 9 ஆம் மாதமான 'செப்டம்'பர் அடுத்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையான 3 மாதங்களைச் சிறிய விரிவாகவும் இடைச்சுவராகப் பிரிப்பதால்தான் அப்படிப் பெயர் வந்திருக்கலாமோ?
உள்ளங்கைக்குள் அடங்கும் அளவுள்ள நண்டுகள் அலை வரும் போதெல்லாம் கடலோடு அடித்துக் கொண்டு போகாமல் மண்ணில் மறைந்து கொண்டு அலை போனதும் வெளிவருவது
பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை கதாநாயகனுக்குள் விதைக்கிறது. அலை போல அடுக்கடுக்காகப் பிரச்சினைகள் வந்தாலும் நண்டு போல் எதிர் கொள்ளும் நேர்மறை எண்ணத்தை ஊட்டுகிறது.
கடைசியாக தண்ணீர் சேர்க்காமல் மதுவை அருந்தி விட்டு பாட்டிலைத் தூக்கி எறிவது இனி அவன் குடிக்க மாட்டான் என எண்ண வைக்கிறது.
மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போம்.

Comments
Post a Comment