ஒளி நிறைந்தவர்கள் கதை(5) - லோகேஷ் ரகுராமன்
பணி நிறைவு செய்த இயற்பியல் ஆசிரியரான என்னை அதிகம் ஈர்த்த கதைகளில் இதுவும் ஒன்று. வழக்கம் போல அறிவியலைக் கலந்து பரிமாறி இருக்கிறார் லோகேஷ் ரகுராமன். இதோ கதை கீழே.
நம் கதாநாயகன் பெங்களூரில் ஒரு IT நிறுவனத்தில் பணிபுரிகிறார். மனிதர்களைப் பார்த்துப் பார்த்து சலித்துப்போன அவன் உத்தர கர்னாடகாவில் உள்ள ஒரு மலைப் பகுதிக்கு வருகிறான். காலா நதி உற்பத்தி ஆகுமிடம் அது. அந்த மலைக் காடுகளில் மலை ஏற அனுமதி கிடைப்பது கடினம். ஷைலேந்திரா கதாநாயகனுடன் பணியாற்றியவர். திடீரென ஒரு நாளில் வேலையை விட்டுவிட்டு மலை ஏறும் குழுக்களுக்கு வழிகாட்டியாக ஆகி விடுகிறான்.
அவன், "நான்கு சுவர்களுக்கு அப்பாலேதான் வாழ்க்கை" என்பான். நான் ரசித்து அனுபவித்த வரி அது. அற்புதமான உண்மை. ஷைலேந்திரா நம் கதாநாயகனை 'மகா' என்றழைக்கிறார். அதனால் கதாநாயகன் பெயர் மகாதேவனாகவோ அல்லது மகாலிங்கம் ஆகவோ இருக்கலாம். பரவாயில்லை. அது நமக்கு அவசியமும் இல்லை. நமக்கு கதாநாயகன் பெயர் இனி சுருக்கமாக 'மகா' தான். இனிமேல் கதாநாயகன் என்ற பெயரை கழற்றி விட்டு விட்டு 'மகா' என்று அழைப்பதில் எனக்குப் பிரச்சினை ஏதுமில்லை. மகாவின் மூலம் கதை நகர்த்தப்படுவதால் அவனை கதை சொல்லியாகச் சித்தரிப்பதை லோகேஷ் ரகுராமன் ஆட்சேபிக்க மாட்டார் என உறுதியாக நம்புகிறேன்.
அந்த அடர்ந்த மலைக் காட்டில் எதிர்பாராத விதமாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு முதியவரைச் சந்திக்கிறான். முதியவரின் நோக்கமே கதையின் கரு என்பதால் அவரை கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்த்தப் போகிறேன்.
தன்னைப் பற்றி மகாவிற்கு சொல்லும் போது அவர் முற்காலத்தில் ஒரு ஒளி விஞ்ஞானி என்றும் தற்போது உருக்குலைந்த வயதானவர் என்று சொல்கிறார்.
மகா பசியாற அவர் குளத்தில் பிடித்த ஆரல் மீன்களை நெருப்பில் நாட்டில் தருகிறார். எப்போதும் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் சிறிய குறிப்பு ஒன்று இருக்கும். எடுத்துக் காட்டாக நாஞ்சில் நாடன் கதைகளில் 'பாளையங்கோட்டான் பழம்' அல்லது குண்டாக இருக்கும் பெண்களைக் குறிக்க 'பஸ்காரமாக இருந்தார்' என்று நெல்லை வழக்கு எப்படியோ நுழைந்து விடும். அது அவரது எழத்தை எளிதாக அடையாளம் காட்டிவிடும். லோகேஷ் ரகுராமன் கதைகளில் ஆரல் மீன் இடம் பெற்று விடும். அது அவரை அடையாளம் காண எனக்கு உதவுகிறது.
1990 ஆண்டுகளில் பொறியியல் படிக்க நுழைவுத் தேர்வு உண்டு. பொதுவாக ஐந்து பேரிடமிருந்து தனித்தனியே வினாத்தாளைத் தயாரிக்க சொல்லப்படும். அதில் ஒரு வினாத்தாள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும். அப்போது நாம் தயாரித்த வினாத்தாள் தான் வந்திருக்கிறதா என்பதை அறிய வினாவில் யாராலும் தெரிந்து கொள்ள முடியாத ஒரு CODE WORD ஐ உட்புகுத்தி விடுவோம். அது நாம் தயாரித்த வினாத்தாள் தான் என்பதைத் தெரிவித்து விடும். இந்த ஆரல் மீன் அதை நினைவு படுத்துகிறது.
அவர் கையில் உயிருடன் இருந்த ஆரல்மீனின் கண்ணில் தெரிந்த 'மின்' எப்படிக் காணாமல் போகிறதென அறிய முற்படுகிறார். மின்' என்பது மின்சாரம் (Electricity) அல்லது மின்னணுவியல் (Electronics) தொடர்பான சொற்களைக் குறிக்கும்.
சரி. கதைக்கு வருவோம். நம் கதாநாயகனான நெதர்லாந்து நாட்டு ஒளி விஞ்ஞானி ஒளியைச் சேமித்துப் பயன்படுத்த ஆராய்ச்சி செய்தவர். அவரது கொள்கைகளை மற்ற விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் அவர் தன் கொள்கையில் உறுதியாக இருக்கிறார்.
டீ பிராக்ளே (De Broglie)யின் பருப் பொருளின் இருமைப் பண்பு, ஒளியின் இரட்டைப் பண்பு எல்லாம் அவர்களின் உரையாடலில் இடம் பெறுகின்றன. அதற்காக நான் சமன்பாடு எல்லாம் தந்து என் இயற்பியல் அறிவை வெளிக்காட்டி உங்களது ஆர்வத்தை அணைக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் உங்களிடம் மாட்டிக்கொண்டு பல்ப் வாங்கவும் விரும்பவில்லை. அவர் எதிர்பார்க்கும் பொருள் ஒளியை வாங்கித் தன்னுள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும். அந்த தள்ளாத 78 வயதிலும் தான் தோற்றுவிடக் கூடாது என்ற வைராக்கியம் அவனுக்குப் பிடித்திருந்தாலும்
அவர் மகாவிடம் கெஞ்சும் தொனியில் தன் கொள்கையை ஏற்றுக்கொள்ள மன்றாடுவது அவனுக்கு எரிச்சலூட்டுகிறது.
இயற்பியலில் ஃபெர்ரீயின் கரும் பொருள் பற்றி அறிந்திருக்கலாம். ஆனால் அவர் தேடுவது அதுவல்ல. அவரை புறக்கணித்து விடுகிறான் மகா.
இந்த மலைக் காட்டுக்கு கடந்த நாற்பதாண்டுகளாக வருடா வருடம் அத்தகைய பொருளைத் தேடி அவர் வருவதை அறிந்து வியப்பெய்துகிறான்.
இடையில் சிறிது வரலாறு. சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு போர்த்துகீசியர்களுக்கு பயந்து இந்த மலைக் காட்டுக்குள் கோவாவில் இருந்து இடம் பெயர்ந்து வந்து விடுகிறது ஒரு இனக்குழு. மைய நிலத்துடன் தொடர்பு இல்லாமல் இருந்தவர்கள் குறித்து யாருமே பல காலமாக அறியவில்லை. தற்காலத்தில் தான் அவர்களுக்கு மையநிலத்தோடு தொடர்பு ஏற்பட்டுள்ளது. கொங்கணி அவர்களின் பேச்சு மொழி.
முன்பு கணினியில் பிளாப்பி தகடுகள் பயன்பட்டன. அவை மின்காந்த நாடாக்கள். நம் நெதர்லாந்து நாட்டு விஞ்ஞானி ஒளியை வைத்து தகவல் பரிமாற்றம் ஆப்டிகல் ஃபைபர் வடங்கள் மூலம் (OPTICAL FIBRE CABLE) சாத்தியமாகி விட்டது. அதன் மற்றொரு பகுதியான தகவல் சேமிப்பை சாத்தியப்படுத்த ஒரு பொருள் தேவை. அது தேன் கூட்டில் தேன் சேகரமாவது போல அல்லது எலக்ட்ரானியலில் பைனரியில் அதாவது 0 , 1 என்ற வடிவில் தகவல் சேமிப்பைப் போல ஒளியால் தகவலைச் சேமிக்கும் முறை என்பது வருங்காலத்தில் சாத்தியம். அதுதான் தனது இலக்கு என்கிறார்.
இந்த மலைவாழ் பழங்குடி இன மக்களைத் தேடி நானூறு ஆண்டுகளுக்கு முன் மையநிலப் பகுதியில் இருந்து அங்கு வந்தார் ஒரு அருந்தவச்சீலர். அவர்தான் வேட்டைச் சமூகமாக இருந்தவர்களை இவர்களுக்குப் பயிர்த்தொழிலைக் கற்றுத் தந்து அவர்களை மாற்றினார்.
இதைத் தன் போர்த்துகீசிய நண்பனின் தந்தையின் டைரிக் குறிப்பு மூலம் அறிகிறார் நம் நெதர்லாந்து விஞ்ஞானி.
அந்த அருந்தவச்சீலர் ஒரு பௌர்ணமி நாளில் தான் இறக்கப் போவதை அப் பழங்குடி மக்களுக்கு அறிவித்து விட்டு, அவர்களைச் சிகரத்த்திற்கு அழைத்துச் சென்று தான் ஒளியில் ஐக்கியமாவதைக் காட்டினார். அப்போது ஒளியைப் பருகி தங்களை நிறைத்துக் கொள்ளவும் பிறருக்குத் தெரிவிக்கவும் பழங்குடி இன மக்களுக்கு சொல்லி விடை பெறுகிறார். காலையில் அந்த வழுக்குப் பாறையில் உள்ளங்கை அளவுள்ள படிகம் ஒன்று கிடைக்கிறது.
படிகங்கள் ஒளியைக் கவர்ந்துகொள்வதில் அதன் படு கோணம் (GLANCING ANGLE) முக்கியமானது. இக் கோணத்தில் ஒளி வணிகத்தில் படும் போது மட்டுமே படிகம் தன்னைத் திறந்து காட்டுகிறது. இந்தக் கோணம் சிறிதளவு வேறுபட்டாலும் ஒளி படிகத்தில் உட்புகுவது இயலாது.
இந்த நிகழ்வு மறுபடி நடக்கப் பல வருடங்கள் கூட ஆகலாம். அதற்காக இந்த பழங்குடி இன மக்கள் வசிக்கும் கிராமத்துக்கு வந்து அவர்களின் வழிபாட்டில் ஒவ்வொரு ஆண்டும் வந்திருந்து கலந்து கொள்கிறார் நம் நெதர்லாந்து விஞ்ஞானி.
இவர்கள் இருவரையும் நள்ளிரவில் அந்த வழிபாட்டுக்கு அழைத்துச் செல்லும் ஊர்த் தலைவர் முழுவதும் திருப்தியடைந்திருப்பது அவர் பருகி உள்ளேற்றிக் கொண்ட ஒளியால்தான். அவர் தங்கள் மீது காட்டும் அன்பும் பாசமும் புதியவனான மகாவிற்கு வியப்பூட்டுகிறது. தன்னை மட்டுமல்ல மலைவாழ் பழங்குடி மக்கள் அனைத்து உயிர்களையும் சமமாகவே பார்க்கிறார்கள். எந்த பேதமும அவர்களுக்கில்லை. அன்று அவர்களின் வழிபாட்டில் கலந்து கொண்ட போது அருந்தவச்சீலர் மறைந்த அதே போன்ற நிகழ்வு மீண்டும் ஏற்படுகிறது. கதை பற்றிய பார்வையை கதாசிரியர் லோகேஷ் ரகுராமன் அவர்ளுடன் மின்னஞ்சல் வாயிலாகப் பகிர்ந்து கொள்வது வழக்கம்.
அப்போது அவர் இரண்டு முக்கியமான விஷயங்களை ( என்பிழைகளை) என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
1) மகா என்பது கன்னடத்தில் நண்பா அல்லது தோழா போன்ற ஒரு விளிச்சொல்.
2) இரண்டாவது அவர் அந்த அருந்தவச்சீலர் பாத்திரம் வள்ளலாரை நினைவு படுத்தவில்லையா? என்று கேட்டார்.
ஆம். அவை என் பிழைகளே. முதல் பிழை கன்னடம் அறியாததால் ஏற்பட்டது. இரண்டாவது என் சிந்தனை ஆழமாகச் செயல்படவில்லை என்பதால் ஏற்பட்டது.
பழங்குடி இன மக்களின் குல தெய்வமான அந்தப் படிமத்தை பாறையிலிருந்து
பெயர்ந்து எடுத்துக்கொண்டு போய் விடுகிறார் நம் விஞ்ஞானி. அதைத் தடுக்க வந்த மகாவை தாக்கி விட்டு காணாமல் போய் விடுகிறார். அதை மகா பழங்குடி இன மக்களின் ஊர்த் தலைவரிடம் தெரிவிக்க அவர் எந்தச் சலனமும் இல்லாமல் அதனாலென்ன? என்று எளிதாகக் கடந்து விடுகிறார் என்று கதை முடிக்கப்படுகிறது.
இப்போது மீண்டும் சிறிது அறிவியல்.
3D ஒளிமின் படிகங்கள் (Three-dimensional Photonic crystals): ஒளியை எல்லா திசைகளிலும் தடுத்து, அதைத் தன்னுள் முழுமையாகச் சிறைபிடிக்கக்கூடிய திறன் கொண்டவை.
ஒளியை ஒரு முழு நிமிடம் வரை உறைய வைக்கவும், நிறுத்தவும், சேமித்து வைக்கவும் மேற்கொள்ளப்பட்ட திருப்புமுனைச் சோதனைகளில் பயன்படுத்தப்பட்ட படிகம், பிரசியோடைமியம் கலக்கப்பட்ட இட்ரியம் சிலிக்கேட்ஆகும் .
இந்தப் படிகத்தில் விஞ்ஞானிகள் ஒளியை எவ்வாறு "தடுக்கிறார்கள்" என்பது இங்கே விளக்கப்பட்டுள்ளது. அந்தப் படிகத்தில் பிரசியோடைமியம் அயனிகள் கலந்திருப்பதால், அது ஒளியை முழுமையாகத் தடுக்கிறது. ஒரு கட்டுப்பாட்டு லேசர் படிகத்தின் மீது ஒளிர்கிறது. இது மின்காந்தத் தூண்டப்பட்ட ஒளிபுகும் தன்மைஎனப்படும் ஒரு குவாண்டம் தந்திரத்தை உருவாக்குகிறது . இந்தத் தந்திரம் படிகத்தை ஒளிபுகும் தன்மையுடையதாக மாற்றி, இரண்டாவது ஒளித் துடிப்பு உள்ளே நுழைய அனுமதிக்கிறது. இரண்டாவது ஒளித் துடிப்பு உள்ளே இருக்கும்போது, கட்டுப்பாட்டு லேசர் விரைவாக அணைக்கப்படுகிறது. படிகம் உடனடியாக மீண்டும் ஒளிபுகா தன்மை அடைந்து, ஒளியை உள்ளே சிக்க வைக்கிறது. சிக்கிய ஒளி ஆற்றல் இனி நகர்வதில்லை. அது அணுக்களுக்குள் ஒரு நிலையான "சுழல் அலையாக" மாறுகிறது. ஆராய்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டு லேசரை மீண்டும் இயக்கும்போது, அந்த ஆற்றல் மீண்டும் ஒரு ஒளித் துடிப்பாக மாறி வெளியேறுகிறது.
இது எப்படிச் சாத்தியம்? ஒளி விநாடிக்கு சுமார் 3,00,000 கி.மீ வேகத்தில் செல்லும். இதுவே இயற்கையின் அதிகபட்ச வேகம். லேசர் கதிர்களைப் பயன்படுத்தி, அரிய வகை மூலப்பொருட்களால் ஆன படிகங்களை மிகவும் குளிர்ந்த வெப்பநிலைக்கு மாற்றுகின்றனர். இந்தச் சிறப்புப் படிகத்தினுள் ஒளி நுழையும்போது, அதன் அணுக்கள் ஒளியின் ஆற்றலை உறிஞ்சி, ஒளியை அசையாமல் ஒரு இடத்தில் தேக்கி வைக்கின்றன. நாம் தூண்டும்போது, அந்தத் தேக்கப்பட்ட ஒளி மீண்டும் படிகத்தில் இருந்து வெளியே வருகிறது.
எதிர்காலத்தில் வரவிருக்கும் மிக வேகமான குவாண்டம் கணினிகளில் (Quantum Computers) இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. கணினித் தகவல்களை ஒளியின் மூலமாகச் சேமிக்கவும், பாதுகாப்பாகப் பரிமாறவும் இது பெரிதும் உதவும்.
பதிவு அனுமன் வாலைப் போல நீண்டு கொண்டே போகிறது. ஆகவே இத்தோடு என் பார்வையை நிறைவு செய்கிறேன்.
இந்த அறிவியல் புனைவைப் படித்து விட்டுத் தவறாமல் பின்னூட்டம் இடுங்கள். அதை என் வலைப்பூவில் பதிவிடுங்கள்.
அடுத்த புனைவில் சந்திப்போம்.

Comments
Post a Comment