நிழல் - கதை(3) - லோகேஷ் ரகுராமன்
'விஷ்ணு வந்தார்' புத்தகத்தில் இரண்டாவது கதையான 'அது நீ' கதையை நீங்கள் படித்திருப்பீர்கள். அந்தக் கதையை லோகேஷ் ரகுராமன் மறைபொருள் எதார்த்தவாத (MYSTICAL REALISM) பாணியில் வடிவமைத்திருப்பார். இந்த நிழல்கள் கதையில் மாய எதார்த்தப் (MAGICAL REALISM) பாணியைப் பயன்படுத்தியிருக்கிறார்.
அதென்ன மறை பொருள் எதார்த்தவாதம் , மாய எதார்த்தம்? என்ன வேறுபாடுகள் இவற்றுக்கிடையில் என்ற எண்ணம் நமக்குத் தோன்றுவது தவிர்க்க இயலாது.
மாயாஜால அல்லது மாய யதார்த்தவாதம் (Magical Realism) என்பது சாதாரண நிஜ வாழ்க்கையில் மாயாஜால நிகழ்வுகள் சாதாரணமாக நடப்பது போல் எழுதுவது.
மறைபொருள் யதார்த்தவாதம் (Mystical Realism) என்பது ஆன்மீகம், பிரபஞ்ச சக்தி அல்லது மத நம்பிக்கைகளை மையமாகக் கொண்டு, உலகத்தை ஒரு மாயக் கண்ணோட்டத்தில் பார்ப்பது. லோகேஷ் ரகுராமன் ஏசுவின் உயிர்த்தெழுதல் என்னும் (Resurrection ) மத நம்பிக்கையை மையமாகக் கொண்டு கதை 'அது நீ' கதையைப் புனைந்திருப்பார்.
இந்த நிழல் புனைவில் அது போன்ற மத நம்பிக்கையைச் சார்ந்த விஷயங்கள் எதையும் சேர்த்து எழுதவில்லை. ஆகவே இக்கதையை மேஜிக்கல் ரியலிசம் என்றே நான் கருதுகிறேன். என் கருத்து சரியா தவறா என்பது விவாதிக்கப்பட வேண்டும் என்பது என் அவா.
சரி இப்போது கதைக்கு வருவோம்.
கதையின் இணைப்புக் கண்ணியைக் கீழே தந்துள்ளேன். முதலில் கதையைப் படிக்கவும். பின்பு கதை மீதான என் பார்வையைப் படிக்கலாம்.
https://lokeshraghuraman.wordpress.com/2020/03/23/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d/
எப்படி வந்தேன்? யார் என்னை இந்த மலையில் கொண்டு விட்டார்கள்? என்று எதுவும் அறியாத ஒரு காட்டுவாசியின் கதை. தன் முகத்தைக் கூட அவனால் சுனை நீரில் காண முடியவில்லை. நிழல் இல்லாத மனிதன் அவன். தன்னைப் பற்றி அறிந்து கொள்ள மலையிலிருந்து கீழே இறங்கி வருகிறான்.
தன் நிழல் பூமியில் படாததை உணர்ந்த அவனுக்கு தன் உருவம் பிறருக்குத் தெரிகிறதா என்ற ஐயமும் உள்ளது. காரணம் காட்டில் வேட்டையாடிகள் அவனைக் கண்டு கொள்ளாமல் கடந்து செல்கிறார்கள். எப்படியும் தன்னை அறிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் கீழிறங்கும் அவன் கண்ட நிழலை ஆராதிக்கும் மனிதர்கள் வாழும் ஊரை அடைகிறான்.
அங்கே நட்பாகும் ஆதிரன் அவனுக்குத் "தூயன்" என்று பெயர் சூட்டுகிறான். அந்தக் கிராமத்தில் யாரும் ஒருவர் நிழலை மற்றொருவர் மிதிப்பதில்லை.இதற்காக ஒரு சுவாரசியமான கதை சொல்லப்படுகிறது.
புராணங்கள் நேரடியாகக் கதையில் சொல்லப்படாத நிலையில், நாம் சூரியன் சாயா தேவி கதையை தொடர்பு படுத்திக் கொள்ளலாம். சாயா தேவி சூரியனின் வெப்பம் தாங்காமல் தன் நிழலை விட்டுச் செல்கிறாள். அவளுக்கும் சூரியனுக்கும் பிறக்கும் பிள்ளையே சனி பகவான்.
அந்த மலை அடிவார கிராமத்தின் தலைவர் தன் மக்களின் பணியிலும் தன் ஆளும் பரப்பை விஸ்தரிப்பிலும் கவனம் செலுத்தியதில் தன் அந்தரங்க வாழ்க்கையை சுத்தமாக மறந்து விட்டார். மனைவி அவரது நிழலைக் கூடி கருத்தரித்து ஒரு மகவை ஈன்றெடுக்கிறார். எப்படி சூரியன் தன் மகனாக சனியை ஏற்றுக் கொள்ளவில்லையோ அது போல இங்கும் நிகழ்வுக்குப் பிறந்த மகனை ஊர்த் தலைவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஊருக்கு அருகில் உள்ள பாலைக்கு அந்தச் சிசுவைக் கொண்டு போய்க் கொன்று விடுகிறார். இதை அறிந்த ஊர்த் தலைவரின் மனைவி ஊர் பாலையாகி அழிந்து போகட்டும் என்று சாபமிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். இதற்கெல்லாம் காரணம் நிழல் தானே என்று புலம்பும் ஊர்த் தலைவரை விட்டு அவரது நிழல் நீங்காது இருப்பது அவருக்கு கனமாக இருக்கிறது. அதைத் தாங்க முடியாமல் பூமியில் பள்ளம் தோண்டி இருட்டில் ஒளிந்து கொண்டு நிழலைத் தவிர்க்கிறார். ஆனாலும் பிரச்சினை தீரவில்லை. சாபத்தால் ஊர் பாலையாகி அழிவதைச் சகிக்க முடியாத தலைவர் ஆரூடம் கேட்கிறார்.
அதில் ஊர்த் தலைவரின் மனைவியைத் திருப்தி செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. பலி கொடுத்து திருப்தி செய்ய தலைவர் முடிவு செய்கிறார். ஆனால் பலியை ஏற்றுக் கொண்டாலும் நடந்து முடிந்த சேதாரத்தை மாற்ற முடியாது. இனிமேல் பாதிப்பு செய்யமட்டுமே முடியும் என்று அறிந்து கொள்கிறார்.
அந்தக் காலத்தில் தற்கொலை செய்து கொண்ட பெண் இசக்கியம்மன் போன்ற தெய்வமாக மாறுவார் என்ற நம்பிக்கை உண்டு. அப்படிப்பட்ட தெய்வங்களைப் திருப்திப்படுத்த தன்னையே 'அரிகண்டம்' கொடுக்கிறார். நவ கண்டம், அரிகண்டம் குறித்து எழுத்தாளர் பாலகுமாரன் தன் உடையார் நூலில் விவரித்திருப்பார். தமிழ்நாட்டில் பல கிராமங்களில் நடுகற்களில் இந்த நவகண்டம், அரிகண்டம் சிற்பங்களைக் காணலாம்.
தன் சிரத்தைத் தானே வெட்டிக் கொண்டுதான் வாக்குக் கொடுத்தபடி பலியை நிறைவேற்றுவார். ஒரு கையில் வாளையும் மறு கையில் தன் தலையையும் ஏந்திபடி முண்டமாக நிற்பவரை ஊர்மக்கள் தெய்வமாக வணங்குகிறார்கள். பலிக்கு முன் நிலவொளியில் தெரியும் தன் நிழலை வாளால் கீறிக் குத்திக் கிழிக்கிறார். நிழலுக்கும் உயிருண்டல்லவா. அதிலிருந்து பீறிட்டு வந்தது குருதி. தரையில் நிழலை நனைத்தது குருதி. கறுப்பாக மாறியது மண்.
அன்றிலிருந்து அவ்வூரில் நிழலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக முன் சொன்னது போல யாரும் அடுத்தவர் நிழலைத் தொடவோ அல்லது மிதிப்பதோ இல்லை.
முதலில் உன் நிழலைப் பெற உன் தந்தை வழியாக முயற்சி செய் என்று நூற்றுக்கு ஆதிரன் யோசனை சொல்கிறான். பாலையில் தந்தையை கண்டறிய அலைகிறான். ஒரு கழுகு அவன் நிழலைப் பெற்றுத் தருகிறது. தன் நிழல் தரையில் விழுவதில் மகிழ்ச்சியடைந்து பாலை நில மண்ணில் ஓடுபவனின் காலில் இடறுகிறது ஒரு சிறுவனின் விலாக் கூடு எலும்பு.
இப்போது இரண்டு வினாக்கள் .
தூயன் சிசுவாக இருக்கும் போது அவனை மலைக் காட்டில் கொண்டு போட்டது அந்தக் கழுகா? அல்லது ஏதாவது அமானுட சக்தியா? (அதாவது ஊர்த் தலைவரின் தற்கொலை செய்து கொண்ட மனைவியா?)
ஊர்த் தலைவரால் கொல்லப்பட்ட சிறுவனின் நிழலுக்கும் அந்தக் கழுகுக்கும் பிறந்தவன் தூயன். அதாவது மறுபிறவி (Re - incarnation). காரணம் தூயன் நினைவில் அழும் சிசுவின் அருகில் அமர்ந்த கழுகு அதன் உயர்த்திப் பிடித்த இறக்கையின் நிழலில் உறங்கும் சிசு என்னும் காட்சி. இது ஏற்றுக் கொள்ளக் கூடியது தானா?
பல இடங்களில் லோகேஷ் ரகுராமனின் வார்த்தைகள் சிந்திக்க வைக்கின்றன. எடுத்துக்காட்டாக தாந்திரீகன் சொல்லும் சொற்கள். ' உங்கள் அந்தரங்கத்தை நிஜம் தான் தொலைத்திருக்கிறது.நிழல் இல்லை'.
"பிரபஞ்சம் முழுவதும் இருள் பிரவாகம். அனைத்தும் இருள். இருளன்றி வேறில்லை".
"அருவமாய் இருந்த இருளுக்கு உருவம் கொள்ள இச்சை. இந்த இச்சைதான் உலகப் பிறப்புக்கும் உயிர்ப் பிறப்புக்கும் வித்து. உருவம், உருவம், உருவம் என்று தேங்கிப் கிடந்தது இருள். முழுப் பிரபஞ்சமும் அந்தத் தேக்கத்தில் நீண்டகாலம் லயித்திருக்க முடியவில்லை. இருளின் இருப்புக் கொள்ளாமையினால் ஒளி பிறந்தது. தொடர்ந்து புடவி (UNIVERSE) சமைக்கப்பட்டது. ஒவ்வொன்றும் பரு உருவம் கொண்டது. இருள் அப்பொருட்களின் நிழலென தன்னை மாற்றிக் கொண்டது. இருள் உருவடைந்தது. நாமெல்லாம் அந்த இருளின் அசையும் பரு வடிவங்கள். அவ்வளவே. அதுபற்றி வேறில்லை" என்கிறான் ஆதிரன்.
இப்போது பெரு வெடிப்புக் கொள்கையில் (BIG BANG THEORY) ஆதியில் அனைத்தும் இருள். ஏன் இப்பவும் அண்டத்தின் 95 சதவீதம் இருள்தானே. இருள் பொருள் மற்றும் இருளாற்றல் தத்துவத்தை (DARK MATTER AND DARK ENERGY) அழகாக உள்ளே நுழைத்து விடுகிறார் லோகேஷ் ரகுராமன்.
பிரம்மத்திற்குத் தேவை உயிரான தன் இருப்பைச் சுமந்தலைய ஒரு உடல். இருளுக்குத் தேவை நிழலான தன் இருப்பதைப் சுமந்தலைய ஒரு பருப்பொருள்.
உயிர் ஜனிக்க கண்டிப்பாக ஆசை அவசியம். ஆசை இல்லாமல் உயிர் உருவாகாது இல்லையா. இது 'இடிந்த வானம்' கதையில் வேறு மாதிரி சொல்லப்பட்டிருக்கும். அம்பரியிடம் மருத்துவர் வந்தனா, 'ஒவ்வொரு விதைக்கும் உள்ளே எவ்வளவு ஆசை' என்று சொல்வதை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.
நிறையவே சிந்தனையைத் தூண்டும் கதை. சொல்லப்பட்ட விதம் தமிழ் சிறுகதைகளில் வித்தியாசமான பாணியில் இருப்பது கூடுதல் சிறப்பு. நல்லதோர் வித்தியாசமான புனைவை நமக்களித்த லோகேஷ் ரகுராமனுக்கு நன்றி.
மீண்டும் வேறொரு கதையில் சந்திப்போம்



Comments
Post a Comment