கூடடைதல் - கதை (2) லோகேஷ் ரகுராமன்
கூடடைதல் என்றால் இரை தேடி வானில் பறந்து திரியும் பறவைகள் மாலையில் தன் கூட்டை அடைதல் என்று பொருள்படும்.
வழக்கம் போலவே முதலில் கதையின் இணைப்புக் கண்ணியைக் கீழே தந்துள்ளேன். முழுமையாகப் படித்துவிட்டுப் பின்னர் கதையைப் பற்றிய என் பார்வையைப் படித்தல் சிறப்பாக இருக்கும்.
https://www.facebook.com/story.php?story_fbid=33849177108063644&id=100001943649284
உண்மையில் சிறுகதை என்ற பெயருக்கு ஏற்ப மிகச் சிறிய கதையே. கதாநாயகன் பனிரெண்டு வயது முதல் இருந்து முப்பத்திரண்டு வயது வரை எந்தப் பொறுப்பும் இன்றி அரைப் பாக்கெட் சிகரெட் பிடித்தும், தூங்கியும், ஆற்றங்கரை மண்டபத்திலும் கழித்தவன். இப்போது எட்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் தொலைவாக இருக்கும் ஒரு ஊரில் வேலை செய்கிறான்.
அப்படி விட்டேத்தியாகப் பொறுப்பின்றி வாழ்ந்தவனையும் ஒருத்தி திருமணம் செய்து கொள்கிறாள். லோகேஷ் ரகுராமன் கதையில் வரும் பெண் பாத்திரங்கள் அதிகம் பேசாத உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் எதையும் அப்படியே ஏற்றுக்கொண்டு கடந்து செல்லும் தன்மை கொண்டவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். இந்தக் கதையிலும் அப்படியே.
கதாநாயகன் தன் வீட்டிலிருந்து ஆயிரம் கிமீ தொலைவில் உள்ள ஒரு இரசாயன ஆலையில் பணிபுரிகிறான். தனி அறையில் தங்கியிருக்கும் அவனுக்கு மாலையில் பணி முடிந்து அறைக்குத் திரும்பியதும் அறைக்கு வெளியே கேட்கும் புறாவின் கூடடைய சுவர் அதிரச் சிறகடிக்கும் ஒலியையும் அதன் குறுகல் முனகலையும் சுவரில் காலை வைத்துக் கேட்பதே பொழுதுபோக்கு.
எட்டு மாதங்களுக்குப் பின்னர் கிடைக்கும் ஒரு வார விடுமுறையில் வீடு திரும்புகிறான். பயணமே ஐந்து நாட்கள். மீதமுள்ள இரண்டு நாட்கள் மட்டுமே வீட்டில் செலவிட முடியும். அப்போது மேற்கொள்ளும் அவனது பயணத்தை விவரிக்கிறது கதை.
அவனது ரயில் பயணம் பாதியில் மழை காரணமாக நிறுத்தப்பட்டு விடுகிறது. கொஞ்ச தூரம் நடந்து வந்து நெடுஞ்சாலையில் ஒரு ஆம்னி வேன் கிடைக்கிறது. அதில் ஒரு தாயும் அவளது நோயாளி மகளும் பயணிக்கிறார்கள். மகளுக்கு ஆம்னி வேனில் கதாநாயகன் ஏறியது பிடிக்கவில்லை. டிரைவருடன் சண்டை போட்டுப் பாதி வழியில் அவனை இறங்க வைக்கிறாள்.
அடுத்து வந்த லாரியில் டிரைவர் அவனை ஏற்றிக் கொள்கிறார். வரும் வழியில் தான் பயணித்திருக்க வேண்டிய அந்த ஆம்னி வேன் விபத்தில் சிக்கி அதில் பயணித்த தாயும் மகளும் இறந்து விடுகின்றனர். யார் செய்த புண்ணியமோ அந்த நோயாளிப் பெண் சண்டையிட்டு இறக்கி விட்டதில் தெய்வாதீனமாக உயிர் பிழைக்கிறான்.
ஊரில் தன்னை இறக்கி விட்ட லாரி டிரைவருக்குப் நம் கதாநாயகன் பணம் கொடுக்க அவர் அதை வாங்க மறுத்து அவரது மனிதாபிமானத்தைக் குறுக்க வேண்டாம் என்று சொல்லி விட்டுக் கிளம்புகிறார்.
கதையில் தனது அரசங்கொல்லை வீட்டில் அடியெடுத்து வைத்ததும் அண்ணா என்று ஓடி வந்து பாசத்துடன் அணைத்துக் கொள்ளும் தங்கை, கொல்லையில் பூக்கும் பவளமல்லி மரம் தினம் ஒரே எண்ணிக்கையில் பூக்கிறது என்று வியந்து போகும் தந்தை, அந்த மலர்களைத் தொடுத்து மாமியாரின் படத்துக்குச் சாற்றும் மனைவி, அவளது மௌனம், மனைவி தனக்குப் பதில் நெருக்கமான உணர்வைக் கொடுக்கத் தரும் ஸ்வெட்டர் என்று கலவையான உணர்வுகளைச் சொல்லுகிறது.
/மனைவியின் சுபாவத்தை எடுத்துச் சொல்ல, ஐந்து சிகரெட்களைப் பிடித்து விட்டு வரும் கணவன். குடலைப் பிரட்டி வாந்தி எடுக்க வைக்கும் நாற்றத்தைப் பொறுத்துக் கொண்டு பக்கத்தில் படுத்தவனின் வன்முறையைத் கூட எதுவும் குற்றம் சொல்லாமல் மூக்கை புடவைக் தலைப்பால் மூடிக்கொண்டு மௌனமாக கடந்து போகும் மனைவி போல ஒருத்தியைக் பார்ப்பதே அபூர்வம்.
அவளுக்குத் தன் மேல் உரிமை இல்லையா? அல்லது பேச வார்த்தை இல்லையா? என்ற வினாவிற்கு, அவள் சொலும் ஒருத்தரை அப்படியே ஏற்றுக் கொண்டால் உரிமை இல்லாத போய்விடுமா என்ற வரிகள் ஆழ்ந்த அர்த்தமுள்ள வரிகள்.
பள்ளி நாட்களில் நாள் முழுவதும் பள்ளியில் கழித்து விட்டு கடைசிப் பிரிவேளையில், பள்ளியின் வாசல் கதவுகள் திறக்க எப்போது மணி அடிக்கும் என்று வீட்டிற்குச் செல்வதற்காகக் காத்திருக்கும் சிறுவர்களின் தவம் கூடடையதலின் வெளிப்பாடடே.
ஒரு வாரத்திற்குப் பின் பணிபுரியும் இடத்துக்கு வந்து சேரும் கதாநாயகன் இன்னும் ஆறுமாதங்களுக்குப் பின்னர் கிடைக்கும் ஒருவார விடுமுறையில்தான் கூடடைய முடியும். பறந்து செல்ல முடியாமல் தன் சிறகை யாரோட வெட்டி விட்டது போல் உணரும் கதாநாயகனுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு பறாக்களின் குறுகல் ஒலியும், அதன் சிறகடிக்கும் ஒலியுமே பொழுது போக்காக இருக்கும் போகிறது என்பதை சாளரத்தை தன் திறந்ததும் அறை நடுவில் தென்படும் இறகால் உண்ர்த்துகிறார் லோகேஷ் ரகுராமன்.
எளிய மனிதனின் கதை. தன் முகம் குறித்து கதாநாயகன் கொண்டுள்ள அபிப்பிராயம் அவனது நேர்மையான மனதைக் காட்டுகிறது.
சொல்லப் போனால் என்னை அதிகம் சிந்திக்க வைக்காத எளிய புனைவு என்றே தோன்றியது.
மீண்டும் அடுத்த புனைவான "நிழலில்" சந்திப்போம்.
தயவு செய்து உங்கள் கருத்துக்களை வலைப்பூவில் பதிவிடுங்கள். பின்னூட்டம் எனக்கு ஊக்கமளிக்கும்.

Comments
Post a Comment