கடல் கனித்தது - கதை(11) - லோகேஷ் ரகுராமன்



       ‌                    வில்லுண்டித் தீர்த்தம்



இரண்டு தலைமுறைகளுக்கு முந்தைய கதை என்று சொல்லலாம். தன் தந்தையைப் பராமரிக்கும் மகள். அவளது தாயை எவ்வளவு அலட்சியமாகத் தன் தந்தை நடத்தினார் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். அம்மாவின் மாதவிலக்கு நாட்களில் குடிக்கக் தண்ணீர் கேட்டால் கண்டும் காணாதது போல இருந்து விடுவார். சரி அவர்தான்  எடுத்துத் தரவில்லை. வேறு யாரையாவது அழைத்துக் கூடத் தரச் சொல்ல மாட்டார். மறந்த போனது போல இருந்து விடும் ஆண்களின் ஆணவம்.

அம்மாவின் அப்பாவும் அம்மாவும் இவரிடம் தங்கள் மகள் படும் பாட்டை மனதுக்குள் வைத்துக் கொண்டு மறுகுவார்கள். தன் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பன். ஆனால் மனைவிக்கு நல்ல கணவனாக இல்லை என்பதைச் சொல்ல வரும் மகள் தன் கணவன் அவளைக் கொடுமைப் படுத்தினால் எவ்வளவு எவ்வளவு மனவேதனை அடைவார் என்கிறார்.‌ நல்ல வேளை அப்பா மாதிரி ஒரு கணவன் தனக்கு வாய்க்கவில்லை என்கிறாள்.

சாம்பாரில், ரசத்தில் உப்பு அதிகம் போட்டிருக்கிறாய். வாயில் வைக்க முடியவில்லை கரிக்கிறது என்று பிரச்சினை செய்கிறார் அந்த முதியவர். நாளாக நாளாகத் தண்ணீர் முதற்கொண்டு காபி ஏன் பாயாசம் கூட உப்புக் கரிக்கிறது என்னும் போது பிரச்சினை மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறது. அவருக்கு உடலிலேயே உப்பு உற்பத்தி ஆகி உமிழ் நீருடன் சேர்த்து கரிக்கிறது என்று கண்டறியப்படுகிறது. 

இது தெரியாமல் ஒரே மாதிரியான டப்பாக்களில் உள்ள சர்க்கரையையும் உப்பையும் அம்மா தான்தான் சர்க்கரைக்குப் பதில் உப்புப் போட்டு விட்டோமோ என்று கலங்கி அழுவது அவரைக் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. அதற்குப் பின் தினமும் கணவருக்கு உப்பில்லாமல் சமைத்து அதையே நானும் உண்ணும் அந்தப் பெண்மணி இந்த இடத்தில் மகாபாரதத்தில் வரும் காந்தாரியை நினைவூட்டுகிறார். கணவன் காணாத உலகத்தை தானும் காண வேண்டாம் என்று தன் கண்களைக் கட்டிக்கொண்டு வாழும் வாழ்க்கை உண்மையிலேயே தியாகம் அல்லவா. அந்தத் தியாகத்திற்கு எள்ளளவும் இந்த அபலைப் பெண்ணின் தியாகம் குறைந்ததில்லை. 

ஆனால் பேத்தி லலிதாவிற்குத் தாத்தா மீது பாசம். அவளால் அவரது பிரச்சினையைப் புரிந்து கொள்ள முடிகிறது.‌ 

ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்த மகள் மருமகன் தாத்தா பேரன் பிரணவ் எல்லாம் கோவில் தரிசனம் முடித்து பின்னர் எதிர்பாராத விதமாக மறுநாளும் தங்க நேரிடுகிறது. ராமேஸ்வரத்தில் மறுநாள் மாப்பிள்ளை அமாவாசைத்  தர்ப்பணம் செய்ய ஏற்பாடு செய்து‌ கொள்கிறார். அப்போது தாத்தாவையும் தன் மனைவிக்குப் பிண்டம் கொடுக்க வைக்கிறார் மகள். 

பிண்டம் கொடுத்த இடம் வில்லுண்டித் தீர்த்தம். தாகமாக இருந்த சீதா தேவிக்கு ஸ்ரீ ராமன் தன் அம்பை ஊன்றி நன்னீர் வரவழைத்த இடம். அந்த இடத்தில் ஊற்று நீரை எந்தச் சொட்டு மருந்தும் இல்லாமலேயே ருசித்துக் குடிக்கிறார். உப்புக் கரிக்கவில்லை. 

தன் தாகத்துக்கு நீர் தராத கணவனின் செயலை மன்னித்து விடும் அந்தப் பத்தினி சீதா தேவியின் மறு வடிவமோ? அங்கே ஸ்ரீ ராமன் சீதையின் தாகம் தீர்த்தான்.‌ இங்கு‌ ஒரு‌ சீதாதேவி ராமனின் தாகம் தீர்க்கிறார். ஒருவேளை அவர் கொடுத்த அந்தப் பிண்டம் மாயம் செய்ததோ என்னவோ.

கடந்த காலங்களில் ஆணாதிக்கம் எப்படிக் கொடி கட்டிப் பறந்தது என்றால் தன் கணவன் மாமனார் அந்நிய ஆண்களுக்கு முன் பெண்கள் நேரில் வரமாட்டார்கள். கதவுக்குப் பின்னிருந்தே பேசுவார்கள். இப்போது காலம் மாறிப் போய் விட்டது.‌ ஆனால் பெண் விடுதல, பெண் சுதந்திரம் எல்லாம் வேறு மாதிரியான அவதாரம் எடுத்து விட்டது வருத்தமான விஷயம்.





Comments

Popular posts from this blog

தேசியக் கொடிகள் பற்றிய சில அடிப்படைத் தகவல்கள் - (1)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

உடுத் தொகுப்புகளின் குடும்பங்கள் (Constellation families)