ஆப்பிளும் விஷமும் - கதை (1) - லோகேஷ் ரகுராமன்
லோகேஷ் ரகுராமன் ஆப்பிளும் விஷமும் கதையின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழும் (LIVING TOGETHER COUPLE) இருவரின் அழகான காதல் கதை. கதையை முழுவதும் படித்து விட்டு பின்னர் கதையை நான் அணுகிய விதத்தை என்னுடைய பார்வையில் எழுதியிருக்கிறேன்.
கதை குறித்த என்னுடைய பார்வையை எழுதும் போது அவர்களைக் கணவன் மனைவி என்று கருதியே எழுதினேன். ஆனால் கதாசிரியர் லோகேஷ் ரகுராமன் அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழும் இருவர் என்று தெரிவித்தார். என்னுடைய காலங்களில் அத்தகைய வாழ்க்கை முறை இல்லை என்பதால் அந்தக் கோணத்தில் சிந்திக்கவே இல்லை.
https://lokeshraghuraman.wordpress.com/2019/11/29/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/
![]() |
ராணி அகல்யா பாய் ஹோல்கர் கோட்டை மாகாலேஷ்வர், மத்திய பிரதேசம். |
ஒருவர் மீது ஒருவர் நெஞ்சு நிறையக் ஆசையும் பாசமும் கொண்டு திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழும் இருவரின் காதல் காவியம் என்று சொன்னால் அது மிகையாகாது. கணவனைக் காதலிக்கும் மனைவி அமைவதே அபூர்வம்.
தன் காதலை வெளிப்படுத்த காதலனின் தொண்டையில் உள்ள ஆடம்ஸ் ஆப்பிள் மீது ஆசையுடன் முத்தமிடும் விசித்திரமான பெண்ணைக் கற்பனை செய்து பாருங்கள். அப்படி ஒரு காதலி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். அவன் அது பற்றிக் கேட்க, ' அதெல்லாம் புரிஞ்சிக்க பொண்ணாப் பொறக்கணும்' என்பாள்.
கழுத்தில் கொடுத்த முத்தம் கூச்சத்தை அவனுக்குத் தருகிறது. 'நீ வேண்டுமானால் என் கழுத்தை கூச செய்யேன்', என்று வம்பு செய்யும் காதலியைக் கற்பனையில் நினைத்துப் பார்ப்பதே என்ன ஒரு சுகம்.
கூச்சம் புலன்களைக் குவித்து விடுகிறது. கூச்சம் என்பது இயற்கையின் ஆதி வடிவம். குச்சியால் தொடரப்படும் மரவட்டை சுருண்டு விடுவது ஆதி வடிவத்தை மீட்டுக் கொள்வதுதான். கூச்சம் என்பது அந்த வடிவத்தின் கூப்பாடு.
அடுத்துப் பெண்ணின் வாசனையை அறிவது பற்றி இருவருக்கும் இடையில் நடக்கும் உரையாடல் சிறப்பு. பெண்ணுக்கு வாசம் உண்டா என்று பாண்டியனுக்கு சந்தேகம் எழவில்லை. அப்படி ஒருவேளை எழுதிருந்தால் தருமிக்குப் பதிலாக வைரமுத்து, ஆம். உண்டு என்று அடித்துச் சொல்லியிருப்பார் என்று கீழ்க்கண்ட பாடல் வரிகள் தெரிவிக்கிக்கிறது.
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டா? கண்டதுண்டா? கண்டவர்கள் சொன்னதுண்டா? ...
என்ற வைரமுத்து எழுதிய "கொடி பறக்குது" திரைப்படப் பாடல் வரிகளை நினைத்துப் பார்க்க வைக்கிறது.
காதலனின் உதட்டில் ஒடும் வரியை, புரியாத லிபியைப் படிக்க விரும்பும் பெண்ணே, நீ அபூர்வமானவள்.
இருவரும் விடுமுறை நாட்களைக் கழிக்கக் காதலி தேர்ந்தெடுத்த இடம் மத்தியப் பிரதேசத்தில் நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள மாகேஷ்வர் நகரம். மராட்டிய அரசி அகல்யா பாய் ஹோல்கர் அரசாட்சி புரிந்த இடம். அந்தக் கோட்டையைச் சற்றும் பழைமை மாறாமல் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதில்தான் நம் கதையில் வரும் இந்த இணைந்து வாழும் (LIVING TOGETHER COUPLE) தம்பதிகள் தங்குகிறார்கள். ஜன்னல் கதவைத் திறந்தால் நர்மதை நதியின் படித்துறை கண்ணில் படும்.
உறங்கும் காதலியை எழுப்பாமல் கடைவீதியில் நடக்கும் கதாநாயகனின் கண்ணில்படுவதெல்லாம் வீதி நிறைய புடவைக் கடைகள். மறுநாள் அங்கே நர்மதை நதிக்குச் சேவை அணிவிக்கும் விழா என்பதைக் கேட்டறிகிறான். தன் கையில் தவழும் நதியாக மனைவியைக் கருதும் ஆண் அவர்களுக்குச் சேவை கட்டி ஆனந்தம் கொள்கிறான். இங்கும் மனைவிக்குப்/ காதலிக்குப் பட்டுச் சேலை வாங்கி வருகிறான். மனைவி அதை ஆசையுடன் பெற்றுக் கொள்கிறாள். கூடவே சேலைக்கு ஜாக்கெட் யார் வாங்கித் தருவார்கள் என்று வம்பிழுத்துச் சிரிக்கிறாள். தன் முட்டாள்தனமான செயலால் முகம் வாடிய கணவனை கடைக்குச் சென்று ஜாக்கெட் தைக்கக் கொடுக்கலாம் என்று யோசனை கூறித் தேற்றுகிறாள்
நதிக்குக் குறுக்காக இக்கரைக்கும் அக்கரைக்கும் புடவைகளை இணைத்து கட்டி நர்மதை நதிக்கு சேலை உடுத்தி ஆராதனை செய்கின்றனர்.
அவனோடு இருக்கும் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்துச் செலவழிக்கிறாள். ஆனால் காலம் இந்த இனிய உறவை இரண்டாண்டுகளிலேயே கத்தரித்து வெட்டிப் போட்டு விடுகிறது. பிரிவக்கு (BREAK UP) முன்பான அவளுடனான இறுதிக் கணங்களில் கண்ணீர் சிந்தாமல் வெற்றுப் பார்வையில் வழியனுப்பி வைக்கிறான். அந்த நிராகரிப்பை இதுவரையில் அவனால் உணர முடியவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
கண்ணீரால் எண்ணங்களை இலகுவாகக் கரைத்துக் கடந்து போயிருக்கலாம் ஆனால் அது தனக்கு வாய்க்கவில்லை என்று கருதுகிறான். எண்ணங்கள் விண்ணிற்கானவை. அது சரிதான்.ஆனால் கீழே விழுபவை எண்ணத்தின் நிழல்களா? நல்ல தர்க்கம். ஆனால் அதைப் புரிந்து கொள்ள நிறையவே மெனக்கிட வேண்டும்.
பிளேட் வெட்டியதில் காயம்பட்ட கடைச் சிறுவன் அதையே பார்த்துக் கொண்டிருப்பதால் எந்தப் பயனுமில்லை காயம் அவன் சாவதற்குள் ஆறி விடும் என்று கண்டிக்கும் சலூன் கடை அண்ணனின் சொற்கள் நம் கதாநாயகன் பழைய இழப்பையை நினைப்பதில் அர்த்தமில்லை. என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது
சலூன் அண்ணன் கூற்றான, "வன்முறையின் தொடங்கி அழகில் முடிவது தங்கள் தொழிலில் மட்டுமே" என்பது அழகான உண்மை.
சலூனில் தாடி மீசையை எல்லாம் எடுத்து விடும் நம் கதாநாயகன் இரண்டு வயது குறைந்தது போல் ஆகி விட்டேன் என்று முடி திருத்துபவரிடம் பாராட்டாகக் கூறுவது அவன் இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை மனதளவில் அடைந்து விட்டதைத் தெரிவிக்கிறதா? சலூனில் அவனது கழுத்துக் கூச்சமும் போய் விடுகிறது. அப்படியானால் பழைய நினைவுகளுக்கு தலை முழுகி விடுகிறான் என்றே நான் எடுத்துக் கொள்கிறேன்.
மனைவி அல்லது காதலி என்னதான் கணவனை/ காதலனை உயிருககுயிராகக் காதலுடன் நேசித்தாலும் அவளது பிரிவுக்குப் (Break up) பின், சில நாட்களில், மாதங்களில் இல்லை சில ஆண்டுகளில் அவன் மனதளவில் அடுத்த திருமணத்திற்கு/ காதலுக்குத் தயாராகி விடுவான் என்பதையே கதை முடிவு தெரிவிக்கிறது என்றே ஊகிக்கிறேன். என் ஊகம் சரியா இல்லையா என்பதை லோகேஷ் ரகுராமன் தான் சொல்ல வேண்டும்.
இறுதியாக திரு. ஜெயகாந்தன் தனது" இலக்கணம் மீறிய கவிதை" என்ற கதையில் ஒரு பாலியல் தொழிலாளிக்கும் அவரது ஒரு வாடிக்கையாளருக்கும் இடையில் ஏற்படும் காதலைப் பேசி இருப்பார்.
அதேபோல் திரு. ஜி. நாகராஜன் தன்னுடைய " குறத்தி முடுக்கு" குறுநாவலிலும் பாலியல் தொழிலாளி, வாடிக்கையாளர் இருவருக்கிடையே ஆன மெல்லிய காதலைச் சொல்லியிருப்பார்.
அந்தக் கால கட்டத்தில் இதைப் போன்ற உறவுகள் புழக்கத்தில் இல்லாததால் அவர்கள் இது போன்ற களங்களில் கதை சொல்லவில்லை. இன்று அத்தகைய வாழ்க்கை முறை பரவலாகி வருகிறது. இது சமுதாயத்தின் சாபம். கண்டிப்பாக வரமில்லை என்பதே என் கருத்து
மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போம்

Comments
Post a Comment