பொது இடங்களில் இம்சைகள்


 பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு பாடமாக பள்ளிகளில் வைத்து விடலாம்.‌ காரணம் நம்மாட்கள் செய்யும் அட்ராசிட்டி.

என் கண்ணில் பட்ட சில நிகழ்வுகளில் நம் மக்கள் எவ்வளவு சுயநலமாக அடுத்தவரைக் குறித்துக் கவலையே படாமல் இருக்கிறார்கள் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஒரு‌வகையில்‌ வட இந்தியர்களை‌ விட நாம்‌ பரவாயில்லை.‌ வட இந்தியாவில் சுயநலமிக்க மக்கள் அதிகம் என்பது‌ என் கருத்து.

பிக் பாக்ஸர்கள் (BIG BOXERS) அதாவது பெரிய பெட்டிக்காரர்கள்.

முதலாவதாக ரயில் பயணங்களில் லக்கேஜ் எடுத்துவரும் பயணிகள் குறைந்தபட்சமாக இரண்டு சூட்கேஸ்களாவது எடுத்து வருகிறார்கள். டறள திரும்பும் பயணிகள் பெரிய ஜம்போ சைஸ் சூட்கேஸ்கள்  நாலைந்து எடுத்து வருவார்கள்.‌ அந்த சூட்கேஸ்களில் சராசரியாக அறுபது கிலோ நிறையுள்ள ஒருவரை நாலாக மடித்து உள்ளே வைத்து விடலாம்.‌ அத்தனை பெரிசாக இருக்கும்.‌ இவர்கள் எல்லாம் ரயில் வந்து நின்றதும் முண்டியடித்துக் கொண்டு லக்கேஜுடன் ஏறி லக்கேஜ் வைக்கும் இடத்தை நிரப்பி விடுவார்கள்.‌ ( அடுத்தவரை ஏறவே விட மாட்டார்கள்). சரி இவர்களுக்கு வழி விட்டு பின்னர் ஏறும் என் போன்ற புஜபல வலிமை  இல்லாத ஆசாமிகள் ஏறும் முன்பே பெட்டிகள்  வைக்கும் இடங்கள் எல்லாம் ஹவுஸ் ஃபுல் வாக இருக்கும்.‌ நமது லக்கேஜை வைக்க இடமிருக்காது.‌ 

நம் தலைக்கு மேல் இருக்கும் இடத்தில்      மேற்சொன்ன ஜம்போ‌ பெட்டி இருக்கும். அந்த ராட்சதப்பெட்டி தலையில் விழுந்து விடுமோ என்ற‌ பயத்துடனேயே நமது பயணம் இருக்கும்.

"இது யாருடைய‌ பெட்டி? பெட்டியை கொஞ்சம் நகர்த்தி வையுங்கள்.‌ நானும் என் பெட்டியை வைக்க வேண்டும்"

 என்றால் எல்லாருமே செவிடானது போல இருப்பார்கள். அப்புறம் கொஞ்சம் குரலை உயர்த்தி சண்டையிடும் தொனியில் கேட்டால் யாரோ அந்தப்‌ பெட்டிக்குச் சம்பந்தமில்லாத பரோபகாரி சக பயணி  போனால் போகிறது என்று கொஞ்சூண்டு இடம் ஒதுக்கித் தந்து‌ நம்மைச்‌ சமாதானப்‌படுத்துவார். சற்று நேரம் கழித்து பெட்டியை வைத்த மகானுபாவர் யாரோடோ செல்பேசி உரையாடலில்‌ நம்மைப் பற்றிய தன் கருத்தை நம் காதுபடச் சப்தமாக பேசுவார்.

 " இப்பெல்லாம் ரயிலில்‌ ஏசி கோச்சும் கச்சடா ஆகிப் போச்சு. கொஞ்சம் கூட டீசன்சி இல்லாத ஆட்கள் எல்லாம்  ஏறுகிறார்கள். நம்ம பெட்டிகளை வைத்தால் கொஞ்சம் கூட அட்ஜஸ்ட்மெண்ட் இல்லாமல் சண்டைக்கு வருகிறார்கள்" 

என்று நம்மைக் காட்டுமிராண்டியாகச் சித்தரிப்பார்.  டீசன்ட் யார் காட்டுமிராண்டி யார் நீங்களே சொல்லுங்கள். தென்னாப்பிரிக்கவில் காந்தியடிகளை ரயிலிருந்து பிடித்துத் தள்ளிய மாதிரி என்னை அவர் தள்ளிவிடவில்லை. நல்லவேளை  காட்டுமிராண்டியான என்னைக் கோச்சிலிருந்து பிடிச்சுக் தள்ளாததுதான் அவரது‌ டீசன்சியோ? என்னவோ தெரியவில்லை.

அடுத்தது ரயில் நாடோடிகள் (Train Nomads). இவர்கள் எந்தக் கோச் என்று யாருக்கும் தெரியாது.‌ எப்ப பார்த்தாலும் கோச்சின் கதவைத் திறந்து வெளியில் போய்ப் போய் வருவார்கள். குளிர் சாதன ரயில் பெட்டி என்ற எண்ணமே இல்லாமல் கதவைத் திறந்து திறந்து நடமாடுவார்கள். இவர்கள் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தமிழ் பண்பாட்டாளர்கள் இவர்கள்.‌ 

மெல்லத் திறந்தது கதவு 

பகல் நேர சதாப்தி ,  வந்தே பாரத் போன்ற‌ ரயில் வண்டிகளில் கழிப்பறை எப்போதும் செயல்பாட்டிலேயே இருக்கும்.‌ நீண்ட நேரக் காத்திருப்பு தேவைப்படும்.‌ நீரிழிவு நோயாளிகள் படும்பாடு திண்டாட்டம் தான். "தாள் திறவா மணிக்கதவே தாள் திறவா" என்று பாடியபடியே ரெஸ்ட் ரூம் பக்கத்தில் தேவுடு காக்க வேண்டும்.‌ ஹூம். எல்லாம் தலையெழுத்து.

அடுத்து லிஸ்ட்டில் வருவது சுட்டி பாய்ஸ்           (SMART BOYS)

இரண்டாங்கெட்டான் வயதுப் சிறுவர்கள் அடிக்கும் லூட்டி ஒரு தனிக்கதை. அவர்‌கள் செய்யும் சேட்டைகளை பெற்றோர் கண்டுக்கவும் மாட்டார்கள் கண்டிக்கவும் மாட்டார்கள்.‌ ஒருமுறை‌  வால் பையன் ஒருவன் நான் கஷ்டப்பட்டு லேப்டாப்பில் டைப்‌ பண்ணிய கட்டுரையை ஒரு நொடியில் delete  பண்ணி விட்டான்.‌ நான் சோகமா அவன்‌ பெற்றோரைப் பார்க்க அவர்கள் 

" சூரஜ் படு சுட்டி.‌ கம்ப்யூட்டரில்‌ அவனுக்கு‌ ரொம்ப‌ ஈடுபாடு.‌ கம்யூட்டரில் பூகுந்து விளையாடுவான்.‌இல்லையா‌செல்லம்?" என்று‌ சுந்தர் பிச்சைக்கு சவால் விடும் ரேஞ்சில் பேச எனக்கு அழுகையே வந்து விட்டது.‌ அந்தச் சுட்டி கேம் விளையாட என் லேப்டாப்பைக் கேட்டு அடம் பிடித்து அழ ஆரம்பிக்க 

"குழந்தை அழறான். கொஞ்ச நேரம் விளையாடி விட்டு தந்து விடுவான் " என்று என்னிடம் விண்ணப்பித்தார். குழந்தையிடம் அந்த 6 வகுப்புப் படிக்கும் பையனிடம், " ஆங்கிள் வேலையைச் சீக்கிரம் முடித்து விட்டு உனக்கு விளையாடத் தந்து விடுவார் என்று சமாதானம் செய்ய ஒரு வழியாக அழுகையை நிறுத்தி விட்ட அந்த வாண்டு ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஆங்கிள் வேலை முடிஞ்சிதா என்று அலட்ட ஆரம்பித்து விட்டான்.

சாதாரண மற்றும் விரைவு ரயில்களில் பயணிப்பவர்களில் பலர் கால்வலி என்று அடுத்தவர் உட்காரும் எதிர் சீட்டில் காலை நீட்டி அமர்வார்கள்.‌அவர்கள் கால் அழுக்கெல்லாம் நம் சீட்டில் ஆகாதா? இவர்களுக்கெல்லாம் யார் சொல்லுவது? சினிமா தியேட்டரில் முன்னிருக்கையில் கால் வைப்பது பல சமயங்களில் அடிதடி வரை சென்றுள்ளது. ஆனாலும் இப்படிச் செய்பவர்களை என்ன செய்வது? அரசியல் குடும்பத்தை அல்லது கட்சியையோ சேர்ந்தவர்கள் என்றால் அவர்கள் நம் தலை மீது காலை வைத்தாலும் கண்டுகொள்ளக் கூடாது. இல்லை என்றால் நம் நிம்மதி கெட்டுப் போய் விடும்.

பூங்காக்களில் ஒரு பெஞ்சில் அமர்ந்து இருப்பவர் நட்ட நடுவில் இரண்டு‌ கைகளையும் விரித்து அமர்ந்து நெஞ்சை தன் ஆளுகையில் வைத்திருப்பார்.‌ இவர்கள் ரயில் பயணங்களில் காலை அகலமாக விரித்து வைத்து சக பயணிக்கும் போனால் போகிறதென்று தம்மாத்தூண்டு இடம் விட்டுத் தருவார்.‌அதற்கு தேங்ஸ் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.‌ எல்லாம் கலி காலத்தின் கோலம்.‌


சிறிய இடைவேளைக்குப் பின் மீண்டும் சந்திப்போம்..






Comments

Post a Comment

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (2)