அது நீ - கதை (2) - லோகேஷ் ரகுராநான்

 இந்தியாவின் டெல்லியில் வசிக்கும் நண்பனை அதாவது கதை சொல்லி ஃபிராங்கோவை பாலஸ்தீனத்தின்‌ ஜெரிக்கோ (Jericho) நகரில் வசிக்கும் அரேபிய நண்பன் ஜியாங் முகமது அப்பாஸ் அழைக்கிறார்.‌ கதை சொல்லுபவர் ஒரு மரபணு விஞ்ஞானியாக இருக்க வேண்டும்.‌  அரேபிய நண்பன் அவரது கல்லூரித் தோழன்.‌ 

பாலஸ்தீனத்தில் வசிக்கும் பழங்குடி இன இடையர்களில் ஐம்பது சதவீதம் பேருக்குக் காணப்படும் ஒரு விசித்திரமான தழும்பு குறித்து மரபணு ரீதியில் ஆராய வேண்டித் தன் இந்திய‌ நண்பனை அழைத்திருப்பதாகக் கதை‌ தொடங்குகிறது.

இந்திய நண்பன் இஸ்ரேலின் டெல்அவிவ்வில் இறங்கி பாலஸ்தீனத்தில் உள்ள ஜெரிக்கோ நகரை காரில் பயணித்து அடைகிறார். வழியில் அந்தப் பிராந்தியத்தின் அமைப்பை விவரிக்கிறார்.‌ ஒரு பக்கத்தில் பல செய்திகளை சொல்லி விடுகிறார். இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டான் ஆறு, பெரும் பிளவு பள்ளத்தாக்கு ( Great Rift Valley), கலிலி கடல் ( Gallile sea), சாக்கடல் (Dead sea), ஏசு கிறிஸ்து தொடர்புடைய நிகழ்வுகளை பட்டியல் இட்டு நம்மை ஆச்சரியத்தில்  ஆழ்த்தி விடுகிறார். 

ஆனால் அந்தப் பகுதியின் ஒரு வரைபடம்  தரப்பட்டிருந்தால் என்னைப் போன்ற கும்மிடிப்பூண்டியைத் தாண்டாத கிணற்றுத் தவளைகளுக்கு புரிதல் அதிகமாக வாய்ப்புக் கிடைத்திருக்கும். வரைபடம் தர இது என்ன புவியியல் பாடநூலா? என்று ஆசிரியர் கேட்கலாம்.  இருந்தாலும் அடுத்த பதிப்பில் மேற்காசியாவின் வரைபடத்தையும்  சேர்க்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

பரவாயில்லை. அதனால்  ஒன்றும் கெட்டுப் போகவில்லை. நான் இணையத்திலிருந்து இரண்டு படங்களைத் தரவிறக்கி  இந்த மேற்காசியப் பிரதேசத்தின் புவிவியல் அமைப்பு குறித்து தெளிவாக அறிந்து கொண்டேன். ஒரு நூலைப் படிக்கும் போது அது அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் மேலதிகமாக தெரிந்து கொள்ளும் ஆவலை வாசகனிடம் தூண்ட வேண்டும்.‌ இதில் லோகேஷ் ரகுராமன் வெற்றி பெற்றுள்ளார்.


பெரும் பிளவு பள்ளத்தாக்கு (Great Rift Valley) பற்றி  திரு. லோகேஷ் ரகுராமன் கொடுத்த குறிப்பு என்னை மேலும் அந்த பள்ளத்தாக்கு குறித்து படிக்கத் தூண்டியது.‌ இந்தப் பள்ளத்தாக்கு 2000 மீட்டர் ஆழமானது.‌6500 கிமீ நீளமுள்ளது.‌ஹெர்மன் மலைத்தொடரில் தொடங்கி கிழக்கு ஆப்பிரிக்கா வழியாக மொசாம்பிக் வழியாக செல்கிறது.‌ ‌ கலிலி கடல்( Gallili sea) மற்றும் சாக்கடல் (Dead sea) ஆகியன இப்பள்ளத்தாக்கில் உள்ளன. ஜோர்டான் ஆறு பள்ளத்தாக்கில் வடக்கிலிருந்து தெற்காக ஓடுகிறது. இந்தத் தகவல்கள் மேலதிகமாக இணையத்தில் தேடியதில் கிடைத்தன. மேற்கில் உள்ள ஆப்பிரிக்க கண்டத்திட்டும் கிழக்கில் உள்ள மேற்கு ஆசிய கண்டத்திட்டும் மோதியதில் உருவானதாம் பெரும் பிளவு பள்ளத்தாக்கு.

இந்தக் கதையில் சொல்லப்பட்ட அளவுக்கு புவியியல் தகவல்கள் நம் பாட நூல்களில் இடம் பெறாமல்  இருப்பது நம் துரதிர்ஷ்டமே.





 


இப்பகுதியில் காணப்படும்     500 முதல் 600 நபர்களைக் கொண்ட பழங்குடி இடையர் இன மக்களில் தோராயமாக நூற்றுக்கு ஐம்பது பேருக்கு வலப் பக்க கழுத்துப் பகுதியில் காதுக்குக் கீழிருந்து தோள்பட்டை வரையில் ஒரே மாதிரியான தழும்பு காணப்படுவது ஆச்சரியமானது. இதற்கான  காரணத்தை அறிய ஜியாத் மெனக்கிடுவதில் வாசகனுக்குக் கிடைப்பதோ மரபணுவியல்‌ (Genetics ) குறித்த பல சுவையான  அரிய தகவல்கள்.

சாதாரணத் தழும்பு(Ordinary  Scar)எப்படி கீலாய்ட் தழும்பாக (Keloid Scar) ஆக மாறுகிறது என்பதையும் கீலாய்ட் தழும்பு மரபணு வழியாக  கடத்தப்படுவது குறித்த தகவல்கள் சுவாரசியமாக சொல்லப்பட்டுள்ளன.

கிருஸ்தவம் தோன்றிய இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளில் முதலில் தோன்றிய யூதமும், பின்னர் தோன்றிய இஸ்லாமும் உள்ளன ஆனால் இடையில்  வந்த  கிருஸ்தவம் இன்று இல்லை.‌ இயேசு கிருஸ்து மரித்த பின் அந்தப் பகுதியில் நிலவிய பழங்குடியினரின் மாற்று வரலாறுகள் எப்படி ஒற்றைக் கடவுளர் என்ற த்துவத்திற்காக அதிகார மையமான கிருஸ்தவத்தால் காவு கொடுக்கப்பட்டது என்று சொல்லப்பட்டுள்ளது.‌ பழங்குடி மக்கள் இயேசு தங்களில் ஒருவர் என்றே நம்பினர். ஹீப்ரூ மொழிப் பாடல் ஒன்று, கழுத்தில் வெட்டுத் தழும்பும் கரங்களில் வெள்ளை ஆட்டுக்குட்டியுடன் இயேசு விண்ணுலகைச் சேர்ந்ததைக் கண்டதாக மூத்த பழங்குடி இனப் பெண் கூறியதைத்  தெரிவிக்கிறது.

இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த கெஸ்தாஸுக்கும் இயேசுவிற்கும் நடக்கும் உரையாடல் அல்டிமேட்.‌ 

கெஸ்தாஸ் இயேசு மீது சுமத்தும் குற்றச்சாட்டில்"ஒரு மலர் மலர்வதைப் போல் சத்தமின்றி நீங்கள் பிறந்து வந்து எங்கள் பாவங்களை‌ ஏற்றுக் கொண்டு உயிரை விட்டிருக்கலாம்.‌ ஆனால் அப்படிச்  செய்யாத உங்கள் வருகையால் ஆயிரமாயிரம் பச்சிளம் குழந்தைகள் ஏரோது மன்னனால் உங்கள் பிறப்பை காரணமாக வைத்து கொல்லப்பட்டன. அந்தப் பாவத்தை கழுவத்தான் உங்கள் ஆயுளைச் செலவிட்டீர்கள்" என்ற‌ குற்றச்சாட்டு இயேசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்ட நிகழவின் மற்றொரு கோணம்.

கெஸ்தாஸ் அந்த சிசுக்கள் கொலை செய்யப்பட்ட போது கழுத்துக் காயத்துடன் தப்பிப் பிழைத்து ஓநாய் கூட்டத்தால் வளர்க்கப்பட்டதும் பின்னர் சூனியக்காரன் ஒருவனால் வளர்க்கப்பட்டு வழிப்பறியில்  ஈடுபட்டது  எல்லாம் பாலகனொருவன் பாவியானதைச் சொல்கிறது.

இறுதியில் கொடும் இருள் நரகத்தில் அல்லல்படும் அவனை இரட்சிக்க வந்து.    "இது பிதாவின்  ஆணை" என்று விண்ணுலகம் அனுப்பும் போது " நான் என்று அறியப்படுபவன் இனி நான் இல்லை" என்ற வசனம் கூறி கெஸ்தாஸை இயேசுவாக உருவெடுக்கச் செய்வதுஏற்றுக் கொள்ளச் சிரமமான ஒரு நல்ல கற்பனை.

ஃபிராங்கோவும் ஜியாங் கும் பழங்குடி இனத்தவரை பாலை நிலத்தில் சந்திக்கச் செல்லும் போது வழியில்  குறுக்கிடுறது செம்மறி ஆட்டு மந்தை. ஆடடிடையனையும் அவனது கழுத்துக் தழும்பையும் கண்டு அவனை இயேசுவாக அடையாளம் கண்டு மண்டியிட்டு அழுகிற ஃப்ராங்கோவை ரசிக்க முடிகிறது.

கடைசியில் இந்த தழும்பு தலைமுறையாக நடத்தப்படுவதை மரபணு பிரதி மாற்றம் (Genetic mutation), மரபணு பிரதியேற்றம்           (Epigenetic  modification) என்று சொல்வதில் பிரச்சனைக்குப் ஒரு புதிய முடிவை எட்டுகிறார். தனிப்பட்ட வலி வேதனைகள் ஜீன்களில் படியும். ஆனால்  இந்தப் படிவு ஜீனின் பிரதியை மாற்றுவதில்லை. இப்படிப் படியும் வலி வேதனைகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றன.  இந்த மரபணு பிரதியேற்றத்துக்கு எடுத்துக்காட்டாக இரண்டாம் உலகப் போர் கைதிகளுக்கு இது நடந்துள்ளது எனக் குறிப்பிடுவது என்னை இது குறித்து விரிவாகப்படிக்கத் தூண்டுகிறது. 

டெல்லிக்கு வந்து சேர்ந்த ஃபிராங்கோவிற்கு நேர்வதாகச் சொல்வது நல்ல திருப்பம்.‌

முதல் கதையான விஷ்ணு வந்தார் கதைக்குச் தொடர்பற்ற திசையில் இரண்டாவது கதைக்களம் அமைந்துள்ளது.‌ ரசிக்கவும், சிந்திக்கவும் நிறைய இடங்கள் கதையில் இருக்கின்றன.‌ நான் ரசித்தும் சிந்தித்தும்  மகிழ்ந்தேன். 

நன்றி திரு.‌லோகேஷ் ரகுராமன் சார்.‌










Comments

Popular posts from this blog

தேசியக் கொடிகள் பற்றிய சில அடிப்படைத் தகவல்கள் - (1)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

உடுத் தொகுப்புகளின் குடும்பங்கள் (Constellation families)