நடைப்பயிற்சி
முதுகுத் தண்டில் காசநோய் தாக்கியதால் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக நடக்காமல் இருந்ததால் நடையில் தள்ளாட்டமும் தடுமாற்றமும் இருந்தது. நடைப்பயிற்சி செய்ய கோயம்பேட்டில் வசதியான பூங்காக்கள் கிடையாது. ஏசியன் கேம்ஸ் வில்லேஜ் வளாகத்தில் நடக்கலாம். ஆனால் தூரம் அதிகம்.
அங்கிருந்து நவம்பரில் நங்கநல்லூருக்கு வந்து பின்னர் நடைப்பயிற்சிக்கு நிறைய சிறிய பூங்காக்கள் இருக்கின்றன. என்ன பிரச்சினை என்றால் செக்கு மாடு சுற்றுவது மாதிரி சுற்ற வேண்டும். நான் நாலு கிமீ நடக்க வீட்டின் அருகில் உள்ள பூங்காவில் 20 சுற்றுகள் வைக்க வேண்டியுள்ளது.
பூங்காவில் காலை ஆறு மணிக்கு ஆஜர் ஆகி விடுவேன். அதிகம் கூட்டம் இருக்காது. என்னையும் சேர்த்து பத்து நபர்கள் இருந்தால் அதுவே பெருங்கூட்டம்.
இன்று நான் சென்றபோது வழக்கமாக வரும் கராத்தே மாஸ்டர் சப்தம் எழுப்பாமல் பரத நாட்டியம் கற்றுக் கொள்ளும் பெண் போல் கைகளையும் கால்களையும் அசைத்து அபினயித்துக் கொண்டிருந்தார். பார்க்க வேடிக்கையாக இருந்தது. நானும் கடந்த மூன்று நாட்களாகப் பார்க்கிறேன், அவரிடம் பயிற்சி எடுக்க மாணவர்கள் யாரும் வருவதில்லை. ஒருவேளை விளம்பரம் செய்ய செயல்முறை அபிநயம் செய்கிறார் போலிருக்கிறது. விரைவில் அவருக்கு நிறைய மாணவர்கள் கிடைக்க வாழ்த்துகள்.
நடைப்பயிற்சி செய்பவர்கள் இரண்டு வகை. முதல் வகை காலையில் வீட்டில் காபி சாப்பிட்டு வந்து நடைப்பயிற்சி செய்யப் போவதாகக் சொல்லி விட்டு பூங்காவில் வந்து அங்குள்ள பெஞ்சில் அமர்ந்து கொண்டு நிதானமாக ஒரு மணி நேரம் செல்போனில் நோண்டி விட்டு வீட்டுக்குப் போகும் பெரிசுகள். பாவம் அவர்களுக்கு வீட்டில் என்ன பிரச்சினையோ. மனைவியின் பிடுங்கல், மருமகளின் அவமதிப்பு இப்படி எதாவது இருக்கலாம்.
இரண்டாவது வகை மாலையில் நடைப்பயிற்சி செய்பவர்கள். இவர்கள் நடைப்பயிற்சி என்ற பேரில் சும்மா இரண்டு மூன்று தடவை பூங்காவில் சுற்றி வந்த பின் பக்கத்தில் உள்ள டீ கடையில் பஜ்ஜி, போண்டா சாப்பிடுவதையே அதி முக்கியமான கடமையாக கொண்டவர்கள்.
இவர்கள் அனைவரும் பொதுவாக 70 வயதான என் வயதொத்த பூமர்கள்தான். பாவம் மருமகள் வாய்க்கு ருசியாக சிற்றுண்டி எதுவும் செய்து தர மாட்டார்கள். கேட்டால் பஜ்ஜி, போண்டா சமாச்சாரங்கள் உங்கள் உடம்புக்கு ஆகாது மாமா என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவார்கள். என் மாமனாருக்கு எண்ணெய்ப் பலகாரம் சாப்பிட ஆசை வரும் என்பதால் நான் வீட்டில் இவற்றைச் செய்வதே இல்லை என்று பிறரிடம் தியாகி போலப் பெரும் அடித்துக் கொள்வதே மருமகள்களின் வழக்கம். ஆனால் மாமனார் நடைப்பயிற்சி செய்ய( பஜ்ஜி சாப்பிட) செல்லும் போது ஸ்விக்கியில் தங்களுக்கு வேண்டியதை ஆன்லைனில் ஆர்டர் பண்ணி சாப்பிடுவது தனிக்கதை.
நான் செல்லும் பூங்கா ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தது. ஆகவே அங்கு அதிக அளவில் கூட்டமில்லை. இதுவே பக்கத்தில் உள்ள மற்றொரு பூங்கா ' சுதந்திர தினப் பூங்கா' . இங்கு காலை நாலரை மணிக்குப் பூங்கா திறந்தது முதலே தேர்க்கூட்டம் திருவிழாக்கூட்டம்தான். அங்கு நடைப்பயிற்சி செய்தால் எப்படியும் பத்து நபர்களோடாவது மோதிக் கொள்ள வாய்ப்புண்டு. அதனால் அது என் லிஸ்டில் இல்லை.
பொதுவாக நம்ம பெரிசுகள் டீ சர்ட், பெர்முடாஸ், ஸ்போர்ட்ஸ் ஷூ சகிதம் தான் நடைப்பயிற்சி செய்ய வருவார்கள். ஆனால் நான் செல்லும் பூங்காவில் பெரிசுகள் லுங்கி, சட்டையுடன் சாதாரணச் செருப்பு அல்லது ஷூ அணிந்து நடைப்பயிற்சி செய்வதைப் பார்ப்பது சற்று வித்தியாசமாக இருக்கிறது.
பெண்கள் என்றால் பேரிளம் பெண்கள்தான் அதிகம் நடைப்பயிற்சிக்கு வருகிறார்கள். நல்லவேளை எல்லோரும் புடவை அல்லது சுடிதார் அணிந்தே வருகிறார்கள். யாருமே சென்னையின் உடையான நைட்டியில் மேலே துண்டைப் போர்த்திக்கொண்டு வருவதில்லை.
இளம் பெண்கள் என்றால் 30 வயதைக் கடந்த தாய்மார்கள். அவர்கள் மழலைகளையும் அழைத்து வருபவர்கள். மழலைகள் அங்குள்ள ஊஞ்சல் சறுக்கு மரம் இவற்றில் விளையாடுவதை இங்கே காணலாம். நிறையப் பூங்காக்களில் குழந்தைகள் வேடிக்கை பார்க்க மாடு மாதிரி வளர்ந்த யுவதிகள் ஊஞ்சல் ஆடுவார்கள்.
எது எப்படியோ நங்கநல்லூர் வந்த பின் நடைப்பயிற்சி காலை 6 மணி முதல் ஒரு மணிநேரம் சிரமம் இல்லாமல் செய்ய முடிகிறது.
மற்றபடி கோயம்பேட்டில் இருக்கும் போது அண்ணா நகர் டவர் பார்க் வருவேன். அங்கு கூட்டம் அதிகம். மேலும் வறுகடலை முதல் பல முறுக்கு மூசுண்டைக் கடைகள் நம்மை கொக்கி போட்டு இழுக்கும் அபாயம் உண்டு. பூங்கா பராமரிப்பு சுமாராகவே இருக்கும்.
இதுவே செனாய் நகர் பூங்காவில் கூட்டம் இருந்தாலும் பராமரிப்பு சூப்பரா இருக்கும்.
பெங்களூரில் என் மகள் இருக்கும் கேட்டர் கம்யூனிட்டியில் நடைப்பயிற்சி செய்ய நன்றாக இருக்கும். சிறார்கள் நம்மோடு ஸ்கேட்டிங் செய்தவாறு வருவார்கள்.
ஆக நடைப்பயிற்சி பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்.
Comments
Post a Comment