இடிந்த வானம் - கதை ( 9) - லோகேஷ் ரகுராமன்
இது காதல் மணம் செய்து கொண்டஇளம் தம்பதிகளின் கதை. மனைவி அம்பரி ஒரு கட்டிட வடிவமைப்பாளர் (ARCHITECT). கணவன் சரண் ஒரு கணினி மென்பொருள் பொறியாளர். வழக்கம் போல் கதையின் இணைப்புக் கண்ணி கீழே. கதையை முழுமையாகப் படித்த பின்னர் கதை குறித்த என் பார்வையைப் படிப்பதே சிறந்தது.
https://kanali.in/idintha-vaanam/
கணவன் மனைவி இருவரும் இடையே நடக்கும் உரையாடல்களே கதையை நகர்த்திச் செல்கிறது. அவரவருக்கான வானம் என்பது மனைவி தனது புதிய கட்டட வடிவமைப்புக்கு கொடுக்கும் தலைப்பு.
வானத்தையும் அதன் நீல நிறத்தையும் பெரிதும் நேசிக்கும் அவரது பொழுதுபோக்கு வானை விதவிதமாகப் படம் வரைவது. கணவனிடம் புதிய கட்டட வடிவமைப்புக்கு அவளுக்குக் கிடைத்த அங்கீகாரம் மற்றும் பணியாணை(work order)க்குப் பாராட்டை எதிர்பார்க்கிறார். அவரது கைகளைப் பிடித்து முத்தமிட்டும் பாராட்டுச் சொல்லும் கணவனிடம் அவர்களின் காதலித்த நாட்களை நினைவூட்டுகிறார்.
அப்போது இருந்த மகிழ்ச்சி இப்போது இல்லை. அவரவர் வேலை அவர்களுக்கு என்று இருவரும் விலகிப் போய் விட்டதாக கணவன் சொல்கிறார். மேலும் மனைவி வரைந்த படங்கள் எதிலுமே மேகங்கள் இல்லாத பொட்டல் வானம்தான் இருக்கிறது என்றும் சொல்ல மனைவி பதில் சொல்ல முடியாமல் திடுக்கிட்டுப் போகிறார். சரண் அவளது கருவுற முடியாத இயலாமையைச் சுட்டிக் காட்டிச் சீண்டியதாகக் கருதி கோபப்படுகிறார்.
கடலும் வானும் சேரும் இடத்தில் மேகம் பிறக்கும். மேகம் என்பது உயிரின் பிறப்பு. மேகம் இல்லாத பொட்டல் வானம் அவளது படங்களில் வருவது கருத்தரிக்க முடியாத அவளது மனநிலையின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும் என்பது என்பதே என் எண்ணம். வானும் மண்ணும் சேர்ந்தால் தான் மேகம் பிறக்கும் என்ற கணவனின் சொற்கள் இருவரும் மீண்டும் தாம்பத்தியத்தில் இணைந்தால் மட்டுமே குழந்தை பிறக்கும் என்பதை உணர்த்துகிறது.
கணவனுக்கு குழந்தை வேண்டும் என்ற ஆசை. மனைவிக்கோ முன்னர் நடந்த கருச்சிதைவு குறித்த அச்சம் காரணமாக அதில் விருப்பமில்லை.
ஆசை இல்லாமல் மண்ணில் பிறப்பு இல்லை. ஒவ்வொரு விதைக்குள்ளும் ஆசை ஒளிந்திருக்கிறது. அர்த்தமுள்ள வரிகள்.
மணமான ஒரு வருடத்தில் கருத்தரித்து கருச்சிதைவு ஏற்பட மனதளவில் பாதிக்கப்பட்ட அவளுக்குக் குழந்தை ஆசை இல்லாமல் போய்விட்டாலும் கணவனின் வற்புறுத்தல் காரணமாக மீண்டும் கருத்தரிக்க ஒப்புக் கொள்கிறார்.
மனைவியின் தோழியான மருத்துவர் வந்தனா அவளைப் பரிசோதித்து விட்டு அவள் குழந்தை பெற முழுத் தகுதியோடு இருப்பதாகத் தைரியமும் வாழ்த்தும் சொல்லி அனுப்புகிறார். அப்போது அவர் அம்பரியிடம் சொல்வது கீழ் காணும் உயிரியல் செய்தியை நமக்குத் தருகிறது
ஒரு பெண் பிறக்கும் போதே பிரசவிக்கும் போகும் அணுக்களையும் கூடவே கொண்டு வருகிறாள். பிறப்பெடுப்பதே இந்த அணுக்களைக் தீர்ககத்தான். பிறக்கும் போது 20 முதல் 30 லட்சம் அணுக்களோடு பிறக்கும் பெண் பூப்படையும் போது மூன்று லட்சம் அணுக்களே அவளுடன் இருக்கும். அதில் ஐநூறு மட்டுமே முற்றிச் சினை முட்டைகளாக மாதாமாதம் வெளிவருகின்றன. கருத்தரித்தல் நிகழ்ந்தால் அதுவும் தடைப்படுகிறது. மாதவிடாய் முடியும் போது அவள் எல்லா அணுக்களையும் தீர்த்துச் சோர்ந்து போய் விடுவாள்.
கதையில் சரண், நீலவானத்தைப் படம் வரைந்து தள்ளும் அம்பரிக்கு நிறங்கள் குறித்துச் சொல்லும் செய்தி நமக்குக் கிடைக்கும் நல்ல அறிவியல் தகவல்.
கணினி மற்றும் வண்ண வடிவமைப்புகளில் (Web design and digital graphics) சிவப்பு, பச்சை மற்றும் நீல (RGB) நிறங்களின் நிறத்தில் 256 "நிழல்கள்" (Shades) உள்ளன.
கணினி திரைகள் சிவப்பு, பச்சை மற்றும் நீல (RGB) நிறங்களின் அடிப்படையில் இயங்குகின்றன. சிவப்பு (Red), பச்சை (Green), நீலம் (Blue) ஆகிய மூன்று வண்ணங்களின் செறிவு ( Intensity) தலா 256 நிலைகளைக் (0 முதல் 255 வரை) கொண்டுள்ளன. இந்த 0 - 255 அளவீட்டை மாற்றுவதன் மூலம் சிவப்பில் 256 வகைகளை உருவாக்க முடியும்.
இந்த 0 முதல் 255 வரை உள்ள எண்கள் மொத்தம் 256 நிலைகளைக் (Shades) குறிக்கின்றன. இதில் சிவப்பு நிறத்திற்கு மட்டும் அதிகபட்ச எண் (255) வழங்கப்பட்டு, மற்ற நிறங்கள் (பச்சை, நீலம்) 0 ஆக இருக்கும் போது சுத்தமான சிவப்பு நிறம் உருவாகிறது. RGB (255, 0, 0) என்பது முழுமையான சிவப்பு நிறத்தையும், RGB (255, 255, 255) என்பது வெள்ளையையும், RGB (0, 0, 0) என்பது கருப்பு நிறத்தையும் தருகிறது.
இவற்றின் பெருக்கலின்படி ( 256 × 256 × 256 ), மொத்தம் 1,67,77,216 (சுமார் 16.7 மில்லியன்) வண்ணங்களை உருவாக்க முடியும்.
இதைப் போல ஒலியில் ஸரிகமபதநி என்ற ஏழு சுரங்களில் ஆரம்ப சுயமான ஸ - சுரத்தின் அதிர்வெண் (frequency) 256 Hz என்பது ஆச்சர்யமான ஒற்றுமை.
மருத்துவருடன் கலந்து பேசிய பின் அம்பரி மீண்டும் பழைய நிலைக்கு வருகிறாள். கணவனுடன் உறவு கொள்ளத் தயக்கம் காட்டுவது இல்லை. வானில் மேகக் கூட்டங்களை உருவகப்படுத்தி ரசிக்கிறாள். இப்போது அவள் வானம் வெறுமையாக இல்லை. விளைவு அவள் கருவுறுகிறாள்.
வீட்டருகே இருக்கும் பாலத்தில் உயரமான தெருவிளக்கு ஒன்றுள்ளது. அதில் மைனா ஒன்று கூடு கட்டுகிறது.
ஆறு மாதங்கள் கடந்த பின் ஒரு நாள் மீண்டும் கருச்சிதைவு ஏற்படுகிறது. கருவிலேயே குழந்தை இறந்து விடுகிறது. கருவிலிருக்கும் சிசு தானே தன் கைகளால் உடலை இறுக்கிக் கொண்டு இறந்து விடுகிறது. கணவன் அம்பரியின் நிலை காரணமாகக் குற்ற உணர்வில் தவிக்கிறான். அவளது உதிரப் போக்கு உடைகளை நனைக்கும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. அந்த ஆடைகளைக் குப்பையில் போடும்போது, "கடைசித் துளி வரை நான் எஞ்சுவேன்" என்று சொல்லிக் கொள்கிறாள்.
வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் அம்பரி ஒரு மாறுதலுக்காக வீட்டை விட்டு வெளியே எங்காவது செல்ல நினைத்து காரில்ஹ் வேகமாகப் பயணிக்கிறாள். வீடு திரும்பும் போது அந்த மைனாக் கூடு காரின் முன் விழுகிறது. அத்தனை உயரத்திலிருந்து விழுந்ததில் முட்டைகளின் ஓடு உடைந்த தரையில் கிடக்கிறது.
அங்கிருந்த பெரியவர் முட்டையின் ஓட்டை உடைத்துக் கொண்டு குஞ்சுகளால் வர முடியாமல் முட்டைக்குள்ளேயே இறந்து விட்டதாகச் சொல்கிறார். அவற்றின் அலகுகள் கால்களின் இடையிலும், சிறகுகளிலும் சிக்கிக் கொண்டதால் இப்படி ஆனதாகச் சொல்கிறார் குஞ்சுகள் இறந்தது தெரியாமல் அடைகாத்து எதுவும் நடக்கவில்லை என்றதும் முட்டைகளை அசைத்துப் பார்த்து கூட்டைப் பிரித்து கீழே தள்ளி விட்டு விட்டதாக அவர் தெரிவிக்கிறார்.
கதையில் கருச்சிதைவு ஏற்பட்ட அம்பரிக்கு D and C (Dilation and Curettag) நடப்பதும் மைனா தன் கூட்டைப் பிரித்து முட்டைகளைக் கீழே தள்ளி விடுவதும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய இடம்.
கதையில் சரண் மனைவி அம்பரியின் உடல் நிலையை அறிந்திருந்தாலும் அம்பரியின் மன அழுத்தத்தைக் கணக்கில் கொண்டாரா என்ற வினா மனதில் தோன்றுகிறது. மருத்துவ ரீதியாக டாக்டர் வந்தனா, அம்பரி உடல் நிலை சீராக இருக்கிறது என்று கூறி அவரைத் தாம்பத்தியதைத் தொடரலாம் என்று அறிவுரை சொன்னதில் தவறில்லை. சரணுக்குக் குழந்தை வேண்டும் என்றால் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்திருக்கலாம். இன்றைய நாட்களில் கருவுறாமல் தாம்பத்திய உறவுக்கு சாத்தியம் உள்ளது என்ற போது அம்பரியை இரண்டாம் முறையாக கருவுறத் தூண்டி இருக்க வேண்டாம்.
வானத்தில் மேகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வானம் அழகுதான்.
மீண்டும் அடுத்தது "ஒத்திசைவு"கதையில் சந்திப்போம். இக் கதையே "விஷ்ணு வந்தார்" புத்தகத்தில் உள்ள பத்தாவது கடைசிக் கதை

Comments
Post a Comment