தேனாண்டாள் - கதை (8) - லோகேஷ் ரகுராமன்




இந்தக் கதை குறித்த என் பார்வையை பகிர்வது குறித்து நெடு நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். காரணம் கதையில் வரும் பொன்னன் என்ற பாத்திரம் தன் கூட்டாளி தங்கராசுவிடம் கோபத்தில் சொல்லும் போது பயன்படுத்தப்பட்ட சில வாசகங்கள். 


படிப்பறிவு இல்லாத மலை வாழ் மக்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் கதையில் எதார்த்தமாக வரும்  வசவுச் சொற்களை அருவருப்புடன் நோக்குவது நேர்மையான செயலாக இராது. மனதின் உள்ளே நீறுபூத்த நெருப்பாகக்  கனன்று கொண்டிருக்கும் அடங்காத கோபத்தை வெளிக்காட்டும் சொற்கள் அவை. ஆகவே இச் சொற்கள் கதை ஓட்டத்தில் வலிந்து திணிக்கப்பட்டவை இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன்.‌  

மேலும் ஒரு எழுத்தாளர் எழுதிய கதைக்கு தடை போடவும் குறை சொல்லவும் அதற்குச் சம்பந்தமில்லாத நான் யார்? நான் பகிர வேண்டாம் என்று முடிவெடுத்தாலும் வேறு இணைய மின்னிதழ்களில் அதனை படிக்கும் வாய்ப்பும் உரிமையும் வாசகர்களுக்கு நிச்சயமாக உண்டு. அதனால் பகிர முடிவு செய்தேன்.‌ என் முடிவை நீங்கள்  ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இப்போது கதையின் இணைப்புக் கண்ணியைக் கீழே தந்துள்ளேன். வழக்கம் போல் கதையை முழுவதுமாகப் படித்து விட்டு அப்புறம்  கதை குறித்த என்னுடைய பார்வையைப் படிப்பது சிறப்பாக இருக்கும்.

https://lokeshraghuraman.wordpress.com/2020/01/13/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/


பொதுவாகவே லோகேஷ் ரகுராமன் வத வத என்று ஆட்டு மந்தை போல ஏகப்பட்ட கதாபாத்திரங்களை வைத்து கதை சொல்வதில்லை. பல கதைகளில் பெரும்பாலும் இரண்டு பாத்திரங்கள் மட்டுமே. கதையை அந்த இரு பாத்திரங்களுடைய உரையாடல்கள் வழியாகவே நடத்திச் செல்வார்.‌ தவிர்க்க இயலாத நேர்வில் ஓரிரு பாத்திரங்களைச் சேர்த்திருப்பார். இந்தக் கதையிலும் அப்படித் தான்.‌ 

பொன்னன், தங்கராசு இவர்கள் மூலமே கதை நகர்கிறது. அதிலும் தங்கராசு ஊமை என்பதால் கதையில் பேசுவது கூட பொன்னன் மட்டுமே. இருவரும் எதிரெதிர் குடிசைகளில் வசிப்பவர்கள். மலையில் வறட்சி காரணமாகக் கிழங்கு விளைச்சல் இல்லை என்பதால்  தேனெடுக்க கீழே இறங்கி வருகிறார்கள்.  மலையிலிருந்து இறங்கும் போது கடும் வயிற்று வலியால் அவதிப்படுகிறான் தங்கராசு.‌ அந்த நடு இரவு இருளில் பொன்னன் குடித்திருகககும் புளித்த கள்ளின் வாடையை வைத்தே தங்கராசால் பின் தொடர்ந்து வர முடியும் என்று குறிப்பிடுவது பொன்னன் மிடாக்குடியன் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது 



கதைக் களம் கல்வராயன் மலைகள்.‌ அதிகாலை இரண்டரை மணிக்கெல்லாம் ஆரம்பூண்டி மலைக்கிராமத்திலிருந்து கிளம்பி  கால்நடையாகவே வெள்ளிமலைக்கு வந்து மலை இறங்கும் முதல் பேருந்தைப் பிடித்து கரியாலூர் வனச்சரக அலுவலகத்திற்கு வந்து அனுமதிக் கடிதம் பெற்று வனப்பகுதியில் நுழைகின்றனர். வனச்சரக அலுவலகத்தில் பொன்னன் வைத்திருந்த பீடிக்கட்டையும், தீப்பெட்டியையும் பறிமுதல்  செய்யப்படுகின்றன. காலை நேர பேருந்து நிலையம் எப்படி இருக்கும் என்ற விவரிப்பு அழகு.‌ 

தேனாண்டாள் பொன்னனின் மனைவி. பொன்னுக்கு மனைவி மீது சந்தேகம். நண்பன் தங்கராசோடு அவளுக்குத் தொடர்பு இருப்பதாக நினைக்கிறான். குடி போதையில் அவளை அடித்து வயிற்றில் கொள்ளிக்கட்டையால் சூடு போடுகிறான். எதிர்க் குடிசையில் இருக்கும் தங்கராசு அவளைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்து விடுகிறான்.‌

தேனடைக்கு நெருப்பு வைக்காமல் தேன் எடுக்கும் வித்தை அறிந்தவன் தங்கராசு.‌ அவனது தேனெடுக்கும் நிகழ்வு அழகாக ஆவணப்படுத்திய விதம் அருமை.

ராணித் தேனீயை தன் வசப்படுத்தி ஆண் மற்றும் வேலைக்காரத் தேனீக்களை விரட்டி விட்டுத் தேனடையை எடுக்கும் வித்தை புதுமையாக இருந்தது.‌ இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை.

கதையைப் படித்ததும் தேனீக்கள்  குறித்து இணையத்தில் தேடி கிடைத்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ராணித் தேனீ தன் உடலில் இருந்து  
'ராணி மாண்டிபுலர் பெரோமோன்'      ‌(Queen Mandibular Pheromone - QMP)            மற்றும் பிற பெரோமோன்களை ஹார்மோனாகச் சுரக்கிறது.
இவற்றின் முக்கிய செயல்பாடுகள்
இனப்பெருக்கக் கட்டுப்பாடு: 
பணித் தேனீக்களின் இனப்பெருக்க உறுப்புகள் வளராமல் தடுத்து, கூட்டத்தில் ராணித் தேனீ மட்டுமே முட்டையிடுவதை உறுதி செய்கிறது.
ஒருங்கிணைப்பு: 
ராணி நலமாக இருக்கிறாள் என்பதை மற்ற தேனீக்களுக்கு உணர்த்தி, கூட்டத்தை ஒருமைப்பாட்டுடன் வைக்க உதவுகிறது.
ஆண் தேனீக்களை ஈர்க்க:  
இனச்சேர்க்கைக்காக ஆண் தேனீக்களை (Drones) ஈர்க்கப் பயன்படுகிறது. 
இந்த ராணி மாண்டிபுலர் பெரோமோனை (Queen Mandibular Pheromone - QMP) செயற்கையாகத் தயாரிக்க முடியும். இது இயற்கையான பெரோமோனைப் போலவே செயல்படுகிறது. இந்த செயற்கை பெரோமோன்கள் தேனீக்களின் முட்டையிடும் திறனை மேம்படுத்தவும், தேன் கூட்டில் ஏற்படும் முரண்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் வணிக ரீதியாகப் பயன்படுகின்றன.
ஒரு மனிதன் தன் உடம்பில் ராணித் தேனீயின் பெரோமோனைத் (QMP) தடவிக்கொண்டாலும் ராணித் தேனீயை ஈர்க்க முடியாது. ராணித் தேனீக்களின் இந்த வேதிப்பொருட்கள் (Pheromones) அந்தந்த இனத் தேனீக்களுக்கு மட்டுமே பிரத்யேகமானவை. மனிதர்களைத் தேனீக்கள் இனச்சேர்க்கைக்கோ அல்லது கூட்டத்திற்கோ ஈர்க்கக்கூடியவையாகப் பார்ப்பதில்லை.
ஆகவே ராணித் தேனீயை ஈர்க்கும் இந்த வித்தையை மலைவாழ் தேனெடுப்பவர்கள் பெற்றிருப்பது ஒரு வரம் என்றே கருத இடமுண்டு.

வயிற்றுப் புண்ணுக்காகத் தேனாண்டாள் தங்wகராசுவிற்குக் கடுக்காய் பொடி கொடுத்தனுப்பி இருப்பாள். அதன் கடுப்பை குறைக்க பூக்களின் தேனை வாயால் உறுஞ்சுவான். அப்போது பொன்னன் சொல்லவே வாய் கூசும் வார்த்தைகளால் தேனாண்டாளையும் தங்கராசையும் கேவலமாகத் திட்டுவான். 

தங்கராசைப் பொறுத்தவரை அவனுக்கு தேனாண்டாள் பொன்னனிடம் வதைபடுவதைத் தாங்க முடியாமல் மட்டுமே அவளைத் தன்னோடு அழைத்து வந்து விட்டான். ஆனால் அவள் மீது உடல்‌ரீதியான பாலியல் ஈர்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. தன் மனைவியை மற்றொருவன் வைத்திருக்கிறான் என்ற நினைப்பே கொடுமையானது. தங்கராசு மிகவும் பொறுமையான ஆசாமி என்பதைச் சொல்லும் இடத்தில் பேருந்தில் இருவரும் பயணம் செய்யும் போது தூங்கி வழியும் பொன்னியின் எச்சில் தங்கராசுவின் மார்பில் வழிகிறது. பேருந்திலிருந்து இறங்கிய பின் கோபப்படாமல் எந்த அருவருப்புமின்றி துடைத்துக் கொள்வான் என்று காட்சிப்படுத்துவது மிக அருமை.

வனத்துறை அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு எப்போதோ கொண்டு வந்து மரம் பொந்தொன்றில் பதுக்கி வைத்த பீடிக்கட்டு மற்றும் தீப்பெட்டியைக் கொண்டு பீடி பிடிக்கும் பொன்னன். அதிலிருந்து ஒரு பீடியை எடுக்கும் தங்கராசை மீண்டும் தேனாண்டாள் உடன் இணைத்து அசிங்கமான சொற்களால் திட்டுகிறான் பொன்னன். 

அத்தனை கோபம் உள்ளுக்குள் இருந்தாலும் தங்கராசைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் பொன்னனுக்கு இல்லை. இருவரும் நள்ளிரவில் ஆளரவமற்ற காட்டில் நடந்து செல்லும் போது தங்கராசை கொன்றிருக்க பொன்னனால் முடியும் என்றாலும் அவன் அப்படிச் செய்யத் துணியவில்லை.

காட்டில் ஏற்பட்ட தீ விபத்துக்காக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தும் போது  பொன்னனை விட்டு விட்டு தேனாண்டாள் ஓடிப் போய் விட்டதாகச் சோலைமலை சொல்லும் போது அதைக் கோபத்துடன் மறுத்துத் தன் கண்ணெதிரேதான் என் நண்பனுடன் வாழ்கிறாள் என்று மனைவியை விட்டுக் தராமல் சொல்வான் பொன்னன்.

சமவெளி மக்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் இருக்கும் வாழ்வில் சட்டங்கள் வேறானவை.‌ நம் போன்ற‌வர்களின் வாழ்வில் நெறிமுறைகளை அளவு கோலாகக் கொண்டு மலைவாழ் மக்களின் வாழ்க்கை நெறிமுறையை அளப்பது சரியானதா?என்றால் கண்டிப்பாக இல்லை.

படிக்காத, நாகரீகம் இல்லாத மலைவாழ் சமூகத்தில் பிடிக்காத குடிகாரக் கணவனிடம் அடி வாங்கி நரக வாழ்கை வாழும் பெண்ணொருத்தி அவனை விட்டுவிட்டுப் பிடித்த வேறு ஒருவனுடன்  கணவன் கண் முன்பாகவே வாழ உரிமை இருப்பது சிந்திக்க வைக்கிறது. 

தங்கராசுவிற்கு  தேனாண்டாள் மீது இருப்பது இனம் புரியாத பாசத்துடன் கூடிய பரிதாப உணர்ச்சியே என்றே நான் கருதுகிறேன். காரணம் எந்த இடத்திலும் அவளை அவன் பெண்டாள விரும்பியதாகத் தெரியவில்லை. அவளது காயத்தை தடவிக்  கொடுத்த சம்பவத்தை நினைவு கூர்ந்து கண்ணீர் விடுவதும் அவள் மீது தங்கராசு கொண்ட பாவத்தையே காட்டுகிறது. அதேபோல் பொன்னனுக்கும் தேனாண்டாள் மீது கோபமிருந்தாலும் அசிங்கமான சொற்களால் திட்டிய போதிலும் அவளை வெறுக்கவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. 


மிகவும் சிக்கலான மலைவாழ் மக்களின் உறவுகளைப் புரிந்து கொள்ள நமக்குப் பழக்கப்பட்ட வாழ்க்கை முறை உதவாது.

 நாளிதழ்களில் கல்வராயன் மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயை வனத்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் சேர்ந்து போராடி அணைத்ததும்  அங்கு மழை பெய்த நிகழ்ச்சியும் செய்தியாக வருவது பொன்னன் தங்கராசு மீதான குற்றச்சாட்டு ஏற்கப்படவில்லை என்று சொல்லாமல் சொல்கிறது.

இந்த மலைப்பகுதியை  இந்தியாவுடன் இணைக்காமல் ஐநூறு ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக அரிய கவுண்டன், சடைய கவுண்டன்,குறும்ப கவுண்டன் என்ற‌ மூன்று ஜாகிர்தார்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்த மலைவாழ் மக்களைக் கொத்தடிமைகளாக வைத்திருந்துச் சுரண்டிக் கொழுத்து வந்தனர்.

1976 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் திருமதி. இந்தியா காந்தி அம்மையார் கொண்டு வந்த அவசர நிலை காரணமாக இந்த ஜாகிர்தார்களிடமிருந்து இப்பகுதி பிடுங்கப்பட்டு இந்திய அரசுடன் சேர்க்கப்பட்டது என்பதும் ஒரு அரிய தகவல்.

நிறைய எழுதி விட்டேன்.‌ கதை குறித்த  உங்கள் கருத்துக்களை என் வலைப்பூவில் பதிவிடுங்கள்.‌ வாட்ஸ்அப்பில் பதிவிட வேண்டாம்.

மீண்டும் "இடிந்த வானம்" கதையின் பார்வையில் சந்திப்போம்.









Comments

  1. I didn't like the story while I was reading it. I was even repulsed. But kept on reading it. Then after reading yr review I could appreciate the lifestyle of the hill tribes and the history of that location.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேசியக் கொடிகள் பற்றிய சில அடிப்படைத் தகவல்கள் - (1)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

உடுத் தொகுப்புகளின் குடும்பங்கள் (Constellation families)