அன்னம் - கதை (6) - லோகேஷ் ரகுராமன்
வழக்கம் போல கதையின் wordpress இணைப்புக் கண்ணியைக் கீழே தந்துள்ளேன். கதையை முழுவதும் படித்து விட்டு அதன்பின் என் பார்வையில் கதையை குறித்து எழுதியுள்ளதைப் படிக்கவும்.
இந்த அன்னம் மிகச் சிறிய கதை. இதுவரை நான் படித்த லோகேஷ் ரகுராமனின் கதைகளில் இதுதான் அதிக ஆழமில்லாத கதைக் களத்தைக் கொண்டது என்று சொல்வேன். நடுத்தர வர்க்கத்தின் கதை என்று சொல்ல முடியும்.
கதையில் முதியவர் ஒருவர் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள மளிகைக் கடையில் அரிசி வாங்குகிறார். அரிசியைக் கொஞ்சம் கொஞ்சமாக தேவைக்கேற்ப வாங்கலாம் என்ற மனைவியின் பேச்சைக் கேட்காமல் ஒரேயடியாகப் பத்து கிலோ அரிசியை வாங்கி விடுகிறார்.
வாங்கிய அரிசி மூட்டை பிரிக்கப்படாமலேயே மூன்று தினங்கள் ஒடி விடுகிறது. முதியவரின் மகன் பிரித்து வேறு பாத்திரத்திற்கு மாற்றிய போது அரிசியில் பழவாடை அடிப்பதும் சாக்கு மூட்டை ஈரித்திருப்பதும் தெரிகிறது. மகன் அரிசிப் புழுக்கூடுகளைக் கண்டதும் கடைக்கு மாற்றித் தருவதற்காக எடுத்துச் செல்கிறார்
கடைக்காரர் மற்றும் அவரது மனைவி இருவரும் சற்றுக் கறாரானவர்கள். அவர்கள் இருவரும் கெட்டுப்போன அரிசியை மாற்றித் தர மறுப்பதுடன் அரிசி கெட்டுப்போனதற்கு காரணம் வாடிக்கையாளரான நீங்கள்தான் என்று குற்றம் சாட்டுகிறார். தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி கெட்டுப் போன பொருளை வாங்கிக் கொள்ள மறுத்து முதியவரின் மகனைத் திருப்பி அனுப்பி விடுகிறார்.
இந்த இடத்தில் ஒரு பிரபலமான தற்காலத் தமிழ் எழுத்தாளர் புளித்துப் போன தோசைமாவை மாற்றித் தர மறுத்த நிகழ்ச்சி நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.
வீட்டில் இது பிரச்சனை ஆகிறது. முதியவர் தானே கடைக்கு நேரில் சென்று அரிசியை மாற்றித் தரக் கேட்கிறார்.ஆனால் கடைக்காரர் மீண்டும் மறுத்து விடுகிறார்.அவருக்கே தன் தவறு உறுத்தியிருக்க வேண்டும்.
கடைசியில் முதியவர் உன்னால் ஒரு பருக்கை கூட சாப்பிட முடியாது என்று சாபமிட்டதுடன் அந்த அரிசி மூட்டையை கடையின் அருகில் போட்டு விட்டுப் போய் விடுகிறார். கடைக்காரரும் அதை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார். அப்புறம் அவர் அந்தக் கடையில் பொருட்களை வாங்குவதை நிறுத்திக் கொண்டார்.
ஒரு நாள் கடையின் ஷட்டரைத் திறந்து பார்த்த காட்சி அதிர்ச்சி அளிக்கிறது. அரிசி மூட்டையில் ஒரு வெள்ளரிச் செடி முளைத்திருந்தது. அந்தக் செடியை நட்டு உரமாக ஒரு மூட்டை அரிசியையும் கடைக்காரர் போட்டு விடுகிறார். குற்ற உணர்வில் தவிக்கும் கடைக்காரர் முதியவருடன் பேச முயற்சி செய்கிறார். முதியவர் ஆனால் அவரை முற்றிலும் நிராகரித்து விடுகிறார். இப்படிப் போகிற கதை நம் வாழ்வில் அன்றாடம் நடக்கும் கதைதான்.
சுருக்கமாகச் சொன்னால் கலியுகத்தில் கைமேல் பலன் என்பார்கள், கதை நமக்கு அதை உணர்த்துகிறது.
வெள்ளரி விளைந்து தோட்டம் முழுவதும் பரவியிருந்தாலும் பழுத்து மஞ்சள் நிறத்தில் வேலிக்கு வெளியே மின்னுகிறது என்ற கதையின் முடிவு யாருக்கும் பயன்படாமல் வீணாகிறது என்று என்று குறிப்பால் உணர்த்துகிறாரோ திரு.லோகேஷ் ரகுராமன் என்று தோன்றுவது எனக்கு மட்டும்தானா?
வரிசையில் அடுத்த கதை "நவம்". விரைவில் சந்திப்போம்.

Comments
Post a Comment