கடல் கசந்தது - கதை (5) - லோகேஷ் ரகுராமன்
முதலில் கதையைப் படித்த பின்னர் என் பார்வையைப் படிப்பதே சிறப்பு. இதுவரை கதைக்கான தமிழினி மின்னிதழின் இணைப்புக் கண்ணியைக் கீழே பகிர்ந்துள்ளேன்.
லோகேஷ் ரகுராமனின் சிறுகதைத் தொகுப்பான " விஷ்ணு வந்தார்" புத்தகத்தில் மேற்கண்ட ' கடல் கசந்தது' கதை 5 வது சிறுகதையாக இடம்பெற்றுள்ளது. இக் கதைக்காகவே அவருக்கு சாகித்திய அகாதமியின் 2024 ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.
மகன் இறந்த 14 வந்த நாளன்று அலுவலகம் சென்று கதை நாயகன் காறி உமிழுவதற்காக கடலில் இறங்குவதைக் கதை சொல்கிறது.
கடல் மீது ஏன் அப்படி ஒரு வெறுப்பு? ஓயாமல் கரை மேல் காறித் துப்பும் கடலுக்கு என்ன என்னைப் போல் இரைப்பையில் பித்தநீர் பிரச்சினையா என்று தந்தையிடம் வினா எழுப்பும் சாவின் விளிம்பில் நிற்கும் ஏழு வயது மகனின் பரிதாப வாழ்க்கையைப் பற்றி கதை இது.
இரைப்பையில் அதிக அளவில் பித்தநீர் சுரக்கும் கொடிய நோயால் பிறந்ததிலிருந்து பாதிக்கப்பட்ட குழந்தையுடன் சென்னைகுயில் வசிக்கும் இளம் தம்பதிகள் குறித்த கதை. நோயின் தாக்கத்தால் வயிற்றில் சுரக்கும் கசப்பான பித்தநீர் சாப்பிட்ட அனைத்தையும் வாந்தி எடுத்து விடும் பிரச்சனை.
இந்த மாதிரி வாந்தி எடுக்கும் அந்தப் பிள்ளைக்குத் தாய்ப்பாலும் விதிவிலக்கில்லை. வாய் வழியாக உணவு கொடுக்க முடியாத நிலையில் மூக்கு வழியே உணவு தரப்படுகிறது. அந்தச் சிறுவனின் உடல்ரீதியான பிரச்சினைகளை மட்டும் கதை பேசவில்லை. பெற்றவர்களின் மனநிலை குறித்தும் அலசுகிறது.
பெற்றவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தால் இணையும் அந்த இளம் இணையர்களின் குணாதிசயங்களையும் பேசுகிறது. திருமணத்திற்கு முன் பலமுறை பேசி ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டாலும் இருவரின் மணவாழ்க்கையிலும் வந்த நோயாளிக் குழந்தையால் குடும்பத்தில் நிம்மதி பறிபோய் விடுகிறது.
மனைவி தங்கள் குழந்தைக்கு மற்ற தாயார்களையும் போன்று அமுதூட்ட முடியாத அவல நிலையை மௌனமாக அவள் ஏற்றுக் கொண்டதைக் கணவன் அவள் பிள்ளையிடம் பாராமுகமாக இருப்பதாகக் கருதுவது பிரச்சனையின் புதிய கோணம்.
கணவன் பதட்டப்படும் அமைதியற்றவன். மனைவியோ கேப்டன் கூல் தோனி மாதிரி அதற்கு நேர்மாறாக அமைதியின் வடிவம். எது நடந்தாலும் அமைதியாக ஏற்றுக்கொண்டு கடந்து விடும் அவளது இயல்பை வெறுக்கிறான். அதற்காக அவளைத் தன் வார்த்தைகளால் காயப்படுத்துகிறான். அவளது மௌனனத்தை அக்கறையின்மை யாகவே பார்க்கிறான். பொதுவாக அத்தகைய தருணங்களில் அமைதியாகக் கடந்து விடும் அவள் ஒருமுறை அவனிடம், "நீங்கள் ஏன் எப்போதும் சவசலப்பாகவே இருக்கிறீர்கள்" என்று கேட்கிறாள். அவன் ஆரவாரிக்கும் கடல் அவளோ மலைக் காடுகளில் சலனமின்றி இருக்கும் சுனை என்று அழகாகச் சித்தரிக்கிறார் லோகேஷ் ரகுராமன்.
அதற்காக அவரை அவள் வெறுக்கவில்லை. எப்போதும் கணவன் மீது அன்பாகவே இருக்கிறார். அவனுக்கும் இத்தனையும் மீறி அவள் மீது ஒரு ஈர்ப்பு இருக்கவே செய்கிறது. தன் மகனை, மனைவி புறக்கணிக்கிறாளா என்ற சிந்தனையே அவனை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது.
இடையில் நோயாளிக் குழந்தை படும் உடல்ரீதியான அவஸ்தைகள். மரண வாயிலில் இருக்கும் மகனைத் தன் சொந்த ஊரான "அலைவாய் புதூர்" க்கு அழைத்துச் செல்லும் தந்தையிடம் ஊரின் பெயர் கேட்கும் மகன், அந்த நிலையிலும் கூட நகைச்சுவையாக, "புது ஊர் என்பதால் புதூரா"? கேட்கிறான்.
கடலைப் போல ஓயாமல் சலசலப்பை ஏற்படுத்தும் தன் மீதான சுய வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாகக் கடல் மீது காறி உமிழ்வதாக நான் பொருள் கொண்டேன். சோகத்தில் மிகக் கடுமையானது புத்திர சோகம். அதன் வலி நம் கதாநாயகனை பாதித்தாலும் இனி மனதளவில் அவனுக்கு ஒரு விடுதலையே. கடல் மட்டுமல்ல சரியாகப் புரிந்து கொள்ளப்படாத உறவுகள் எதுவுமே கசப்பாகவே இருக்கும்.
மகனின் இறப்பு எதிர்பார்த்த ஒன்றுதான். அந்த இறப்பு மனைவியைப் பாதித்திருந்தாலும் அவள் மௌனமாக வழக்கம் போல் ஏற்றுக் கொள்வாள். கணவன் தன் பக்கத்தில் உள்ள குறைபாட்டை இனி உணர வாய்ப்புள்ளதாகவே நான் கருதுகிறேன் இதனால் கணவன் மனைவிக்கு இடையில் இருந்த உறவில் இருந்த பனித்திரை விலகும் என எதிர்பார்க்கலாம்.
மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போம்

Comments
Post a Comment