நீர் பதுமராகம் - கதை (4) - லோகேஷ் ரகுராமன்

 என்னுடைய பள்ளி வாழ்க்கை திருநெல்வேலி டயோசிசன் டிரஸ்ட்  அசோசியேஷன் (TDTA) நடத்தி வரும் பள்ளி ஒன்றில் தொடங்கியது. திருநெல்வேலி டவுண் பகுதியில் இருந்த அந்தப் பள்ளியின் பின்புறம் ஒரு வாய்க்கால் ஓடும்.‌ வாய்க்காலில் மிதந்து வரும் ஆகாயத்தாமரை செடிகளை எடுத்து வந்து கரும்பலகை (BLACK  BOARD) மற்றும் எங்களின் ஸ்லேட் (SLATE)முதலியவற்றைத் துடைப்போம்.‌ அப்படிச் சிறுவனாக இருக்கும் போதே எனக்கு அறிமுகமானதுதான்  நீர் பதுமராகம் என்ற நமக்கு நன்கு பரிச்சயமான ஆகாயத் தாமரை ( Water Hyacinth). இவற்றின் மலர்கள் ் வெளிர்  ஊதா, லாவெண்டர் மற்றும் இளம் சிவப்பு நிறங்களில் காணப்படுகின்றன. கிரேக்க தொன்மக் கதையில் இந்த நீர்த் தாவரம் உருவான செய்தி வருகிறது. 

படம் - நீர் பதுமராகம் 


தொன்மக் கதையைப்  படிக்க ஆரம்பித்ததும் ஆகா, இது ஒரு மாதிரியான கே (GAY) களமாக இருக்கும் போலிருக்கிறதே என்று நினைத்தேன். ஆனால் நல்ல வேளையாக கதை அந்தத் திசையில் பயணிக்கவில்லை.


 ஹயாசிந்த் மலரின் கதை கிரேக்க தொன்மத்தில் ஆரம்பமாகிறது.‌ அந்த கிரேக்க தொன்மக் கதையில்  சூரியக் கடவுளான அப்பல்லோ (APOLLO) இவனும் ஹயாசிந்த் (HYACINTH ) என்ற‌ பேரழகனும் காதலிக்கிறார்கள்.‌ ஹயாசிந்தை நான்கு காற்றுக் கடவுள்களில் ஒருவனான மேற்குத் திசைக்கான செஃபிரஸும் (Zephyrus) ஒருதலையாகக் காதலிக்கிறான். ஒரு ஆணை மற்றொருஆண் விரும்புவதெல்லாம் கிரேக்கத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்திருக்கிறது. செஃபிரஸ் பொறாமையால் ஹயாசிந்தை கொலை செய்து விடுகிறான்.

செஃபிரஸ் மனம் வருந்தி அப்பல்லோவிடம் மன்னிப்புக் கேட்கிறான். செஃபிரஸால் கொல்லப்பட்ட ஹயாசிந்தின் இரத்தத் துளிகள் தடாக நீரீல் மிதக்கின்றன. அவற்றைத் தன்னுடைய உயிர்ப்பிக்கும் சக்தியால்  நீர்த் தாவர மலர்களாக ரன் உணர மாற்றுகிறான் அப்பல்லோ. அது மிதக்க உதவ தாவரத்தின் தண்டுப் பகுதியில் காற்றை நிரப்பி பாவ மன்னிப்பு கிடைக்க செஃபிரஸுக்கு ஆலோசனை சொல்கிறான். ஆக இது கிரேக்க தொன்மத்தில் வரும் விசித்திரமானதோர் காதல் கதை. இது நீர் பதுமராகம் என்ற தாவரம் உருவான தொன்மக் கதை, அவ்வளவுதான். 

இந்தக் கதையில் நம்மால் அதிகம் அறியப்படாத பிரிட்டிஷ் ஆட்சிக் கால வரலாற்றுச் செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. தவிரவும் இந்த மலர் மற்றும் தாவரம் குறித்து பேசப்பட்டுள்ளது.

இதுவரை நான் அறிந்திராத கொல்கத்தா கருந்துளை  துயரச் சம்பவம் ( KOLKATA BLACK HOLE TRAGEDY), வாரன் ஹேஸ்டிங்ஸின் காதல், உயர்குடி ஆங்கிலேயர்கள் இருவர் தங்களுக்கிடையிலான பிரச்சினையை தீர்த்துக் கொள்ள அவர்கள் இருவர் மட்டுமே வாளால் அல்லது துப்பாக்கியால் தத்தம் கௌரவத்தை நிலைநாட்டிக் கொள்ளப் போடும் சண்டை (DUAL) இவற்றையெல்லாம் குறித்து கதையில் பேசப்படுகிறது.

இந்த இடத்தில் எங்கு நீர் பதுமராகம் வருகிறது என்றால் வாரன் ஹேஸ்டிங்ஸ் இந்தியா வரும் போது இந்த ஆகாயத்தாமரை மலர்களை தன் மேலதிகாரியான ராபர்ட் கிளைவ்க்கு பரிசளிக்கும்  நோக்கத்துடன் கொண்டு வருகிறார்.‌ ஆனால் காதலி மரியத்துக்கு அதைக் கொடுத்து மகிழ்கிறார்.

நீர் பதுமராகம் மலரை ஏன் கிளைவுக்கு பரிசாகத் தர வேண்டும் என்ற மரியத்தின் வினாவிற்கு," எப்படி இந்தத் தாவரம் நீர்நிலைகளில் குறுகிய  காலத்தில் முழுமையாகப் பரவி விடுகிறதோ அதுபோல ஆங்கிலேயர்களின் ஆட்சியும் குறுகிய காலத்தில் விரைவாக உலகம் பூராவும் பரவ வேண்டும் என்பதைக் குறிக்க" என்று விடை சொல்வது வாரன் ஹேஸ்டிங்ஸின் ஆதிக்க மனப்பான்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுமிடம் எனலாம்.

ஓவியம் தவிர வேறு எதிலும் நாட்டமில்லாத மரியத்தின் கணவனை விவாகரத்து  செய்யத் தூண்டி அவளிடமிருந்து பிரித்து மணம் புரிந்து கொண்டது தான் நினைப்பதை எப்படியாவது அடைய வேண்டும் என்ற வாரன் ஹேஸ்டிங்ஸின் அப்பட்டமான சுயநலத்தைக் கூறுகிறது.

ஹேஸ்டிங்ஸை கொன்று விட்டு விதவை மரியத்தை  வேறு ஒரு செல்வந்தனுக்கு விற்க நினைத்த பிரான்ஸிஸ் பிலிப்ஸை  DUAL சண்டைக்கு அழைத்து தன் கௌரவத்தை நிலைநாட்டிக் கொள்வது என்று கிளை விடுகிறது.

இன்று 19 ஜூன் 2026. இன்றைக்குச் சரியாக 270 ஆண்டுகளுக்கு முன் அதாவது 20 ஜூன் 1756 ஆம் ஆண்டில் நிகழ்ந்த நிகழ்ச்சிதான் கொல்கத்தாவின் கருந்துளை சோகம்.  என்ன ஒரு தற்செயலான நிகழ்வுப் பொருத்தம் பாருங்கள். இந்த நிகழ்வு குறித்து என் எழுபதாண்டு கால வாழ்க்கையில் கேள்விப்பட்டதில்லை. அந்த நிகழ்வு‌ கதையில் சொல்லப்பட்டுள்ளது. 


அன்றைக்கு ராபர்ட் கிளைவ் விரும்பியவாறு டெல்லி, மும்பை, சென்னை‌ மற்றும் கொல்கத்தா ஆகியவற்றை‌ என்ன கொல்கத்தாவை தலைநகராக ஒன்றிணைத்த ஒற்றை அமைப்பாக  மாற்றிய  பெருமை வாரன் ஹேஸ்டிங்ஸையே‌சாரும். 

இரண்டாவது பகுதியில் தமிழ் நாட்டில் ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்கள் இவற்றில் மண்டிக் கிடக்கும் ஆகாயத்தாமரைகள் படர்ந்து நீரை உறிஞ்சி எடுத்து விடும் பிரச்சனை பேசப்படுகிறது.

சூழியல் துறை (ENVIRONMENTAL STUDIES) பேராசிரியை அன்னம்மாள் ராஜம் தமிழ்நாட்டில் நீர்நிலைகளில் குறுகிய காலத்தில் அசுர வேகத்தில் வளர்ச்சி பெற்று சூரிய ஒளியைக் தடுத்து நீர்வாழ் உயிரினங்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் செய்தழிக்கும் ஆகாயத்தாமரையை ஒழிப்பது குறித்து தன் கவலையை தெரிவிக்கிறார்.

ஆகாயத்தாமரையை அழிப்பது அத்தனை எளிதில்லை. கருவேல மரங்கள் போல வெளிநாட்டிலிருந்து வந்தவை. ஆகாயத்தாமரையை அழிக்க எப்படிச் சாணி வண்டுகள் (Dung beetles) பயன்படுகின்றன என்று  அன்னம்மாள் ராஜத்திடம் அவரது தோழியான பூச்சியியல் (ENTOMOLOGY) ஆய்வாளர் கிளாரா டேவிட்சன் விளக்கமாகச் சொல்கிறார்.

சாணி வண்டுகள் சாணத்தை உண்பவை. உருண்டையாக உருட்டிய சாணத்தை நேர் கோட்டில் மட்டுமே உருட்டிச் சென்று தன் கூட்டில் சேர்க்கும் என்று அறிந்து கொண்டேன். 

கதையில் வரும் 1400 ஏக்கர் பரப்பளவு கொண்ட கற்பனை ஏரி மூச்சு பாப்பானேரி . அந்த ஏரிக்கு அப்படிப் பெயர் வரக் காரணம் சொல்லப்பட்ட கதை வித்தியாசமாக இருக்கிறது. மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கதையை நினைவு படுத்துகிறது.

பூச்சிகளுக்கு காதல் கத்திரிக்காய் எல்லாம் தெரியாது.  உணவு உணவு ஒன்றுதான் அவற்றின் ஒரே தேவை.

ஒரு புதிய உயிரினம் தோன்றும்போது மறுபுறம் அதை அழிக்க வேறோரு உயிரினம் தோன்றும்.‌


படம் - கெஃப்ரீ - KHEPRl


எகிப்தின் தொன்மங்களில் சாணி வண்டுகளை கடவுளாக வழிபடும் வழக்கம் உள்ளது.‌ எகிப்தில் சூரியனைச் சாண உருண்டையாகவும் தினமும் சாணி வண்டொன்று  உதயத்திலிருந்து உருட்டி உருட்டி அஸ்தமனத்தில் மறுபுறம் சேர்ப்பதாகக் கருதியிருந்தனர். சூரியனை உருட்டும் சாண வண்டே (DUNG BETTLE) அவர்களின் கெஃபரீ (KHEPRI)சூரியக் கடவுள் .மனித உடலும் சாண வண்டின் தலையும் கொண்டது கெஃபரீ (KHEPRI)

இப்படி விசித்திரமான தகவல்கள் கதையில் சொல்லப்பட்டுள்ளன.

இனி தமிழினியில் வெளியான கதையின் இணைப்புக் கண்ணி.‌

https://tamizhini.in/2020/07/20/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%af%87%e0%ae%b7%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%95/


மீண்டும்  " கடல் கசந்தது" கதையில் சந்திப்போம்.






Comments