பாஞ்சஜன்யம் - கதை 3 - லோகேஷ் ரகுராமன்
லோகேஷ் ரகுராமனின் விஷ்ணு வந்தார் புத்தகத்தில் மூன்றாவது கதையாக வருகிறது.
இது அரூ மின்னிதழில் பிரசுரமான சிறுகதை. இச் சிறுகதை குறித்த என் பார்வை
முதலில் கதையை படித்து விட்டு பின்னர் என்னுடைய கதை குறித்த கருத்தைப் படித்தால் நல்லது. கதை அரூ மின்னிதழில் பிரசுரமான ஒரு கதை. முடியும் பட்சத்தில் அதன் இணைப்புக் கண்ணியை இறுதியில் பதிவிடுகிறேன்.
லோகேஷ் ரகுராமனின் கதைகளில் ஒவ்வொரு சிறுகதையும் வேறு வேறு களங்களில் நடக்கின்றன. இச் சிறுகதை சென்னையில் நடக்கிறது.
காது கேட்காத, மனைவியை இழந்த தந்தையைத் தன் வீட்டில் வைத்துப் பராமரிக்கும் மகள். ஆஸ்திரேலியாவில் பயோ அக்கஸ்டிக்ஸில் (BIO ACOUSTICS) தாவரங்களின் ஒலி உணர்தல் குறித்து ஆராய்ச்சி செய்யும் மகன். காது கேட்காததால் நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் மனைவியைப் பற்றி கொடுத்த தந்தை, மனைவியைத் தான் கொன்று விட்டதாகக் கருதி மனமுடைந்து போகிறார்.
தன் காதுக்குள் இறந்து போகும் முன் மனைவி எழுப்பிய அலறல் ஒலி கேட்பதாகச் சொல்லி வருந்துகிறார். மனைவி உயிரோடு இருக்கும் காலத்தில் அவள் ஆசையாகப் பராமரித்த தோட்டத்தைக் குறித்து எந்த அக்கறையுமின்றி இருந்தவர். அவளது மறைவுக்குப் பின் நாள் முழுவதும் தோட்டத்திலேயே கழிக்கக் தொடங்குகிறார்.
மனைவி வளர்த்த செடிகளிடம் மனைவியிடம் பேசுவது போல மனைவியின் பெயர் சொல்லி ராஜி, ராஜி என்றழைத்துப் பேசுவார். அவருக்குப் பிடித்த மாலே மணிவண்ணா ..... திருப்பாவைப் பாடலை பாடப் சொல்வார். இதை எல்லாம் பார்த்த அவர் மன நோயாளியாக ஆகி விட்டாரா என்ற ஐயம் மகளுக்கு இருந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர் செடி, கொடிகளுடன் பேசுவதைப் பார்த்தால் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற பயம் வேறு.
மகனின் நண்பனான மருத்துவர் சாரங்கன் முழுச் செவிடான அவர் காதில் ஒலி எதுவும் நுழையாததால் அவர் இப்படி நடந்து கொள்கிறார். வெளிச் சப்தங்கள் காதில் நுழையும்போது அவர் இயல்பாக நடந்து கொள்வார். ஆகவே பிரச்சினைக்குத் தீர்வாக (Cochlear implant) அறுவைச் சிகிச்சை தரலாம் என்று கருத்துத் தெரிவிக்கிறார். காக்லியர் இம்ப்ளான்ட்கள் என்பவை செவித்திறன் இழப்பைச் சமாளிக்க உதவும் மின்னணு சாதனங்கள் (Electronic device) ஆகும்.
செவிகள் அற்ற நத்தை கேட்கும் திறனற்றது ஆனால் இரு காதுகளுக்கு உள்ளிருக்கும் இரண்டு நத்தைகள் கேட்கும் திறனுள்ளவை எனச் சாரங்கன் அறுவைச் சிகிச்சைக்கு முன் சொல்கிறார்.
கோக்லியா (Cochlea - செவிப்புலன் பகுதி):இது நத்தை போன்ற சுருண்ட வடிவில் இருக்கும் திரவம் நிறைந்த பகுதியாகும்.
பாஞ்சஜன்யம் - ஒரு சங்கிற்குள் நான்கு சங்குகள் அமைந்திருக்கும் அரிய அமைப்பைக் கொண்டது என்றும் ஆன்மீக நூல்கள் கூறுகின்றன.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் தம்பியுடன் பலமுறை விவாதித்து அவருக்கு காக்ளியர் இம்பிளாண்ட் அறுவைச் சிகிச்சை செய்ய மகள் முடிவெடுக்கிறார். தந்தைக்கோ அதில் விருப்பம் இல்லை. மகனும் மகளும் எப்படியோ பேசி தந்தையைச் சம்மதிக்க வைத்து விடுகிறார்கள். ஒருவழியாகப் பெரும் பொருட் செலவில் அறுவைச் சிகிச்சை முடிகிறது. ஆனால் அவருக்கு அது சரிப்பட்டு வரவில்லை. தன்னுடைய தலைக்குள் இரைச்சலாக இருக்கிறது. மெதுவாகப் பேசினாலும் அது பெரும் சப்தம் ஆகக் கேட்பதாகச் சொல்கிறார்.
அறுவைச்சிகிச்சைக்குப் பின்னர் தோட்டத்துக்குப் போய் வந்தாலும் முன்பு போல் நாள் முழுவதும் அங்கேயே அவர் கழிக்கவில்லை. ஒரு கட்டத்தில் மகளிடம் தனது வேதனை தாங்க முடியாமல் கோபத்தில் " நான் முழுச் செவிடாகவே இருந்து விடுகிறேன்" என்று கத்தியதாக அக்கா தம்பியிடம் தெரிவிக்கிறார்.
மீண்டும் மருத்துவ நண்பனைக் தொடர்பு கொண்டு காக்ளியர் இம்பிளாண்டை நீக்கி விட ஆலோசனை கேட்கப்படுகிறது. அதன்படியே மருத்துவர் சாரங்கன் மேற்பார்வையில் காக்ளியர் இம்பிளாண்ட் நீக்கப்படுகிறது.
இதற்குள் மூன்று செய்திகள் கதையில் சொல்லப்படுகிறது.
முதலாவதாகத் தாவரங்களுக்கும் உயிருண்டு. தாவரங்களும் பேசும், ஒலியை உணரும், தங்களின் உணர்ச்சிகளை கேளாஒலி வழியாக வெளிப்படுத்தும் என்ற ஜெகதீஷ் சந்திர போஸின் கண்டுபிடிப்பு. பூவரசு மரத்தை வெட்டிக் கதவு செய்வது அப்போது மரம் வருந்தும் அதனால் விளையும் பாபத்தைச் போக்கிக் கொள்ள பூசை தேவை என்ற கார்பெண்டர் தரும் விளக்கம் அருமை.
நீர் கிடைக்காமல் வறண்ட நிலையிலும் தக்காளி , புகையிலை போன்றவையும் மரங்கள் வெட்டப்படும் போதும் மனிதக் காதுகளுக்குக் கேட்காத 20000 ஹெர்ட்ஸ்க்கு மேற்பட்ட அதிர்வெண்ணைக் கொண்ட மீயொலியை எழுப்புகின்றன என்ற கண்டுபிடிப்பு சிறப்பானது.
இரண்டாவது மழை காலத்தில் சென்னையில் அதிகமாகக் காணப்படும் கிழக்கு ஆப்பிரிக்க நன்னீர் நத்தைகள்.
நான் 1994 ஆம் ஆண்டில் கோயம்பேட்டில் குடியேறிய போது மழைக் காலங்களில் பெரிய பெரிய நத்தைகளையும், அட்டைகளையும் காண முடியும். அப்போது அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இப்போது சென்னையின் புற நகர்ப் பகுதிகளில் எடுத்துக்காட்டாக காயார், படப்பை, மறைமலை நகர் போன்ற இடங்களில் மழைக் காலங்களில் பல வீடுகளின் சுவர்களின் மீது உருவத்தில் பெரிய இந்த நத்தைகளைக் காண முடிகிறது என்று சொல்லப்படுகிறது. கிழக்கு ஆப்பிரிக்காவின் நன்னீர் நத்தைகள் எனப்படும் இவை மனித குலத்திற்கு தீங்கு தரும் பெரும் எதிரி என்றே கருதப்படுகிறது.
மூன்றாவதாக தாழொலி ( Infra sonics frequency) மற்றும் மீயொலி ( Ultrasonic frequency) குறித்தது. ஆறறிவு கொண்ட மனிதனால் 20 ஹெர்ட்ஸ் அதிர்வெண் தொடங்கி 20000 ஹெர்ட்ஸ் வரையே கேட்க முடியும். ஆனால் ஐந்தறிவு கொண்ட பல விலங்குகள் 0 ஹெர்ட்ஸ் முதல் 40000 ஹெர்ட்ஸ் வரை கேட்கும் திறனுடையவை. 20 ஹெர்ட்ஸிற்கும் குறைந்த தாழொலியை உணர முடிந்த நாய், பூனை, யானை போன்ற விலங்குகள் நிலநடுக்கம் குறித்து எச்சரிக்கை பெற்று பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து விடுகின்றன.
ஒலி அலைகளால் பேசும் உலகம். இதில் மனிதன் மட்டுமே செவித்திறன் குறை உள்ளவன்.
இப்போது மீண்டும் கதைக்கு வருவோம். காக்லியர் இம்பிளாண்ட் நீக்கப்பட்ட. பின் பெரும் மழைக்காலம் வருகிறது. அந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து மகன் வருகிறான். ஆப்பிரிக்க நன்னீர் நத்தைகள் மனைவியின் தோட்டத்தை அழித்து விடுகின்றன. அவற்றை அழிக்க என்ன இரசாயனப் பூச்சி மருந்துகளை தந்தை பயன்படுத்தினாலும் அழிக்க முடியவில்லை.
நத்தை ஓடுகள் கால்களில் மிதிபட்டு உடைகின்றன. அப்பா அதில் ஒரு நத்தை ஓட்டை காதில் வைத்து தன் மனைவியின் குரல் கேட்பதாக ஆனந்தம் கொள்கிறார்.
நத்தைகள் தானே வரவில்லை. மடியும் நிலையில் உள்ள செடிகள் நத்தைகளுக்கு ஒலி எழுப்பி அழைப்பு விடுத்து வரச் செய்திருக்க வேண்டும் என்ற செய்தியை அழகாக கதாசிரியர் பதிவு செய்கிறார்.
இயற்பியல் ஆசிரியரான நான் தாழொலி மீயோலி குறித்து அறிவேன். ஆனால் ஆப்பிரிக்க நன்னீர் நத்தைகள் மற்றும் ஒலியை எப்படி இந்தப் பிரபஞ்சத்தில் உயிரினங்கள் பயன்படுத்துகின்றன என்பதை இக்கதை வாயிலாக அறிந்து கொண்டேன்.
இறுதியாக ஒரு வார்த்தை. மனைவி ஆசையாய் வளர்த்த செடிகளை காப்பாற்ற வேண்டும் என்ற உத்வேகமும், காது முழுச் செவிடான நிலையில் மனைவி பேசும் வார்த்தைகள் கேட்பதாகச் சொல்வதும் கணவனின் மனைவியின் மீது கொண்ட நேசத்தின் வெளிப்பாடு.
https://www.aroo.space/2021/05/10/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/
சிறுகதை என்றாலும் சிறப்பான கதை.
மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போம்.



Comments
Post a Comment