மனிதர்கள் (2)
நல்ல மனிதர்கள் பலர் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
என் மகளின் சூட்கேஸில் ஒரு பிரச்சினை. அதை சரி செய்து தர வேண்டும் என்று இங்கே சென்னைக்கு கொண்டு வந்தாள்.
இது போன்ற பழுதுபட்ட பெட்டிகளை பழுது நீக்கி சரி செய்யும் கடைகள் அண்ணா நகரில் நிறைய உண்டு. நாங்கள் கோயம்பேட்டில் இருந்தபோது அண்ணா நகருக்குஎளிதாகப் போய் வர முடிந்தது. மெட்ரோ ரயிலில் சென்று திருமங்கலம் நிலையத்தில் இறங்கினால் சூட்கேஸ் பழுது நீக்கி சரி செய்து தரும் கடைகள் பல உள்ளன. க்ஷஇங்கே நங்கநல்லூருக்கு வந்து பின்னர் அண்ணா நகர் செல்வது எளிதாக இல்லை. மேலும் சற்றே அளவில் பெரிய பெட்டியை அண்ணா நகருக்கு மெட்ரோ ரயிலில் எடுத்துச் சென்று வருவது எளிதாக இருக்காது என்பது மற்றொரு காரணம்.
ஆகவே இங்கே நங்கநல்லூரிலேயே இருக்கும் சூட்கேஸ் பழுது பார்த்துக் தரும் கடைகளை இணையத்தில் தேடியதில் நாலைந்து கடைகள் தேறின. அவற்றை ஆராய்ந்து பார்த்ததில் ST BAG REPAIRING என்ற கடைக்கு 25 வாடிக்கையாளர்கள் ஐந்து புள்ளிகளை வழங்கி இருந்தனர். எனவே அந்தக் கடையில் சூட்கேஸை பழுது பார்த்து விடலாம் என்று முடிவெடுத்தேன்.
என் இல்லத்திலிருந்து சுமார் 1.5 கிமீ தொலைவில் கடை அமைந்திருப்பதை கூகுள் மேப்ஸ் காட்டியது.
ஒரு ஆட்டோவில் பெட்டியை எடுத்துக் கொண்டு நானும் என் மனைவியும் அந்த ST BAG REPAIRING கடைக்குப் போனால் கடை பூட்டி இருந்தது. வெளியில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் இருந்தன. தொலைபேசியில் தொடர்பு கொண்ட சில நிமிடங்களில் கடையின் உரிமையாளர் வந்து விட்டார்
என்னென்ன பழுதுகளை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பின்னர் சனிக்கிழமை தர முடியும் என்றார்.
ஆனால் என் மகள் வெள்ளிக்கிழமை காலையிலேயே கிளம்புகிறார் என்று அவரிடம் சொன்னதும், சரி. சரிசெய்து வியாழன் மாலை தர முடியும் என்றார்.
உடனே நாங்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாளை வருகிறோம் என்று சொன்னோம்.
கடையின் உரிமையாளர் திரு. சசிகுமார் உடனே நான் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை கடும் கோடை வெய்யிலில் அலைய வைக்க விரும்பவில்லை. ஆகவே நீங்கள் வர வேண்டிய அவசியம் இல்லை. நானே உங்கள் வீட்டிற்கு பெட்டியைப் பழுதுபார்த்து வியாழன் மாலையே கொண்டு வந்து தருகிறேன் என்று கூறினார்.
உங்கள் adress மற்றும் location வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தால் போதுமானது என்று சொன்னார். ஆகா பருத்தி புடவையாகக் காய்ந்தது போல என்று மகிழ்ச்சி அடைந்தோம்.
அவர் கேட்டிருந்த படி வாட்ஸ்அப்பில் address and location அவருக்குப் பகிர்ந்து விட்டு நன்றி கூறிவிட்டு விடைபெற்றோம்.
இன்று (04/06/2026) சரியாக நண்பகல் 12. 30 மணிக்கு திரு.சசிகுமார் தொலைபேசியில் அழைத்தார். சூட்கேஸ் பழுது நீக்கி சரி செய்தாயிற்று. இப்போது கொண்டு வந்து தருகிறேன் என்று கூறினார். சரியாகப் பத்து நிமிடங்களில் பழுது நீக்கிய பெட்டி மற்றும் பைகளை எங்கள் வீட்டில் கொண்டு வந்து தந்தார்.
பொதுவாக இப்படி யாரும் சேவை செய்வது கிடையாது. ஆனால் விதிவிலக்காக வயதானவர்களை வாட்டும் கோடை வெய்யிலில் அலைய வைக்கக் கூடாது என்ற கொள்கையுடன் கடை நடத்துபவர் இவர் ஒருவராகத் தான் இருக்க வேண்டும்.கொளுத்தும் வெயிலில் இருசக்கர வாகனத்தில் வந்து வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் மனிதர்களும் இப்புவியில் உண்டென உணர்ந்தோம்.
மலே உள்ள படம் திரு. ஹெல்த் கேர் (தமிழ்) ஆசிரியர் திரு. ராஜா அவர்கள் AI tool கொண்டு உருவாக்கி அனுப்பியது. நன்றி திரு. ராஜா சார்.
அந்த நல்ல மனதுள்ள மனிதரை வாழ்த்தி மகிழ்ந்தோம்.

Comments
Post a Comment