விஷ்ணு வந்தார் - கதை (1) - லோகேஷ் ரகுராமன்
லோகேஷ் ரகுராமனுக்கு கதை சொல்வதில் எந்தத் தடுமாற்றமும் இல்லை. தஞ்சாவூர் வாத்திமா பிராமணர்கள் அவர்களின் ஆதி வரலாறு, அவர்களின் பதினெட்டு ஊர்கள், சடங்குகள் என்று பிரித்து மேய்ந்து இருக்கிறார். சில தகவல்கள் இதுவரை கேள்விப்படாதவை. வாத்திமர் என்பது மத்யமரிலிருந்து மருவிய சொல் என்பது. நாகார்ஜுனரால் ஏற்படுத்தப்பட்ட பெளத்த மதத்து மாத்யாமீகம் பிரிவு அத்வைத தத்துவத்தை ஒத்திருந்ததால் அவர்களை கெளடபாதர் அத்வைதத்தில் இணைத்தார். பின்னாளில் ஆதி சங்கரரும் அதை ஏற்றுக் கொண்டார் என்ற தகவல் அப்படிப்பட்டதே. மற்றொரு சுவாரசியமான கதை அரசலாற்றின் பெயர் காரணக் கதை. விஷ்ணு சக்கராயுத்தைத் தொலைத்து விட்டு வீழிமலை சுவாமியைத் தவமிருந்து பெற்றது. விஷ்ணு வந்த ஊர் என்பதால் விஷ்ணுபுரம் என்ற பெயர் வந்த காரணம், அரிசொல் ஆறு என்பதே அரசலாற்றாக மருவியது எல்லாம் அந்த ரகம்.
கதை மாந்தர்கள் மொத்தமாக ஏழு பேர்தான். விஸ்வநாதையர், சாம்பமூர்த்தி, வீழி சார் என்ற ரிட்டரயர்ட் பள்ளிக்கூட வாத்தியார் வீழிநாதன், இறந்து போய் விட்ட தக்காளி சுவாமிநாதன், அவருக்கு ஸ்ரார்த்தம் செய்ய ஊருக்கு வருடந்தோறும் வரும் அவருடைய தத்துப் புத்திரன் ஆடிட்டர் முத்துராமன், தக்காளி சுவாமிநாதனின் நண்பர் சுப்பையர், சுப்பையரின் மகளும் ஆடிட்டர் முத்துராமனின் மனைவி வாலாம்பாள் இவர்களைப் சுற்றிப் பின்னப்பட்ட கதை.
இன்றைக்குக் தேதியில் நகர்ப்புறங்களில் ஏன் கிராமப்புறங்களில் கூட பலர் ஸ்ரார்த்தம் செய்வதை விட்டு விட்டனர். இளைய தலைமுறைக்கோ இதில் நம்பிக்கை எல்லாம் இல்லை. பலரும் ஸ்ரார்த்தத்தை ஹிரண்ய ரூபமாக செய்வது என்றாகி விட நிலையில் ஒரு ஸ்ரார்த்தம் எப்படிச் செய்வது என்பதற்கு ஒரு கோனார் நோட்ஸ் போல தெளிவாகச் சொல்லி விடுகிறார். ஸ்ரார்த்தம் பிராமணர்கள் எண்ணிக்கை அவர்கள் அமரவைக்கப்படும் திசை முதற்கொண்டு படுதுல்லியமாகச் சொல்லி விடுகிறார். ஸ்ரார்த்தம் செய்து வைக்கும் உபாத்தியாயர் தீட்டும் படாத பிளாஸ்டிக் பை முதற் கொண்டு நம் கண் முன் கொண்டு வந்து விடுகிறார் லோகேஷ் ரகுராமன்.
ஆடிட்டர் முத்துராமன் தன் தந்தைக்கு ஸ்ரார்த்தம் செய்யவதை விவரித்த விதம் ஒரு ஸ்ரார்த்தம் எப்படி நடைபெறும் என்று கண்முன்னே நிறுத்தி விடுகிறது. ஸ்ரார்த்தம் செய்ய ஒவ்வொரு பிராமணருக்கும், ஸ்ரார்த்தம் செய்து வைக்கும் உபாத்தியாயருக்கும் தட்சணை தற்காலத்தில் தரப்படும் தட்சணை முதற்கொண்டு லோகேஷ் ரகுராமன் கதையில் பேசுகிறார்.
தஞ்சை மாவட்ட அக்ரஹார வீடுகளின் அமைப்பும் விஸ்தாரமாக சொல்லப்படுகிறது. எப்படிப் பார்த்தாலும் ஒரு எல்லாவற்றையும் தொட்டு அழகாக ஆவணப்படுத்திய விதம் சிறப்பு.
மனைவியை இழந்து வாரிசும் இல்லாத வீழி சார் ஊர்க்காரர்களிடம் கேட்ட வரம். ஏன் அப்படி ஒரு வரம் கேட்டார் என்பதுதான் உண்மையானமுடிச்சு என்றே சொல்ல வேண்டும்.
ஸ்ரார்த்தம் முடிந்தபின் ஆசிர்வாதம் வாங்குவதும் அப்போது வீழி சாருக்கும் (பித்ரு, பிதாமகர், பிரப்பிதாமகர்) ஆடிட்டர் முத்துராமனுக்குமான உணர்வுபூர்வமான அனுபவத்தை விவரித்த விதம் அருமை.
விஸ்வேதேவராக ஸ்ரார்த்தத்தில் பங்கேற்கும் விஸ்வநாதய்யர், மகாவிஷ்ணுவாக ஸ்ரார்த்த நிகழ்வில் கலந்து கொள்ளும் சாம்பமூர்த்தியிடம் உரையாடுவதாகக் கதை நகர்கிறது.
தக்காளி சுவாமிநாதன் தோட்டத்துத் தக்காளியின் சுவையில் கடைசியில் தெரியும் கடுப்பு அதை நீக்க சுப்பையர் செய்யும் தக்காளி-உருளைக்கிழங்கு ஒட்டுப்பயிர். அதை ஏற்றுக் கொள்ளாமல் அத்தனை செடிகளையும் பிடிங்கி எறியும் சுவாமிநாதன் அதன் உட் பொதிந்த பொருள்தான் கதையின் கருப்பொருளாக உள்ளது.
ஆசிர்வாத நிகழ்ச்சியில் சாம்பமூர்த்திக்குத் தோன்றும் எண்ணம். அதை உறுதிப்படுத்தும் விஸ்வநாதய்யர்.
நிறைய அழுத்தமான பஞ்ச் வரிகள். எடுத்துக்காட்டுக்கு சேத்தில கூட காலை விடலாம் ஆனா அத்வைத்தத்தில் காலை விடக்கூடாது. வாத்திமாகாரனெல்லாம் முகஸ்துதி பிரியர்கள். வாத்திமாகாரால்லாம் நல்லா நொள்ளை நொட்டை சொல்வார்களாம் போன்றவை சில. லோகேஷ் ரகுராமனின் சொந்த அனுபவமா தெரியவில்லை.
மொத்தத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் நல்ல சிறுகதையைப் படித்த திருப்தி.
மீண்டும் அடுத்த கதை 'அது நீ' யில் சந்திப்போம்.

Comments
Post a Comment