மனிதர்கள் (1)

என் மகன் 2018 ஆம் ஆண்டில் மகாராட்டிர மாநிலத்தில் புனே நகரில் பணியாற்றி வந்தார். அப்போது அவருடன் நானும் என் மனைவியும் ஒரு மாதம் தங்கியிருந்தோம். புனே நகரில் காண வேண்டிய பல இடங்களில் உள்ளன.‌ என் மகன் அலுவலகம் செல்வதால் அவனது விடுமுறை நாட்களில் மட்டுமே எங்களை வெளியில் அழைத்துச் செல்ல முடியும் என்ற நிலை. எங்களுக்கு ஹிந்தியோ மராத்தியோ தெரியாது. 


சரி இருக்கவோ இருக்கிறது ஆங்கிலம். அதை வைத்து நாமே புனே நகரில் உள்ள முக்கிய இடங்களைக் காணலாம் என்று முடிவு செய்தோம். புனேயின் புறநகர் பகுதியான கோந்துவா குர்த் (Kondhwa Khurd) என்ற இடத்தில் மகனின் இல்லம் இருந்தது. 


 முதல் கட்டமாக ஒரு தாளில் புனே நகரில் பார்க்க வேண்டிய இடங்களை இணையதளத்திலிருந்து பட்டியலிட்டோம்.‌


அன்று காலை உணவு உட்கொண்ட பின்னர் வீட்டின் அருகில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஓட்டுநர் ஒருவரிடம் எனக்கு அரைகுறையாகத் தெரிந்த ஆங்கிலத்தில் அந்தப் பட்டியலைக் காட்டி அழைத்துச் செல்ல முடியுமா என்று கேட்டதும்  அவர் ஆங்கிலம் தெரியாது என்று ஒற்றை வரியில் பதிலளித்தார். அங்கிருந்த பிற ஓட்டுநர்களும் அப்படியே பதிலிருத்தனர். அதில் ஒருவர் சற்றுத் தள்ளி நின்றிருந்த ஆட்டோ ஒட்டுநருக்கு ஆங்கிலம் தெரியும்  அவரிடம் கேளுங்கள் என்றார். 


உடனே நாங்கள் அவரிடம் நாங்கள் தயாரித்த பட்டியலைக் காட்டி இங்கெல்லாம் செல்ல வேண்டும் உங்களால் அழைத்துச் செல்ல முடியுமா என்று‌ ஆங்கிலத்தில் வினவ, அவர் நான் நிச்சயமாக அழைத்துச் செல்கிறேன்.‌ ஆனால் எல்லா இடங்களையும் காண ஒருவாரமாவது ஆகும் என்றார்.‌


ஒருவகையில் அதில் எங்களுககு மகிழ்ச்சிதான். ஒரு வாரம் நல்லபடியாக பொழுது போய் விடும் என்பதால் சரி என்றோம். அவர் நீங்கள் இந்துக்கள் என நம்புகிறேன்.‌நான் இஸ்லாமியன் பரவாயில்லையா என்றார். 


நாங்கள் எங்களுக்கு அதில் எந்த ஆட்சேபனையும் கிடையாது என்று சொன்னோம்.‌ அப்போ சரி என்று பட்டியலைப் பார்த்து விட்டு அன்று செல்வதற்கு வசதியான இரண்டு இடங்களைக் கூறினார்.

முதலில் சனிவார் வாடா என்ற‌ இந்த இடம் முற்றிலுமாகத் தீ விபத்தில் எரிந்து போன பேஷ்வாக்களின் அரண்மனையின் எச்சங்கள். பேஷ்வா மன்னர்களால் 1732-ல் கட்டப்பட்ட இக்கோட்டை, மராத்தியப் பேரரசின் முக்கிய அரசியல் மையமாக விளங்கியது. 27 பிப்ரவரி 1828 அன்று சனிவார்வாடா கோட்டை அரண்மனை வளாகத்தின் உட்புறத்தில் பெருமளவில் தீப்பற்றி எரிந்தது.


 ஏழு நாட்கள் எரிந்த தீயில், கோட்டையின் உட்புறத்தில் இருந்த ஏழு அடுக்கள் கொண்ட அரண்மனை வளாகம் முற்றிலும் எரிந்து வீழ்ந்தது. சனிவார்வாடா கோட்டையும், தரை தளம் மட்டுமே தீயில் தப்பியது. மத்திய அரசின் தொல்லியல் துறையால் இந்த வளாகம் பராமரிக்கப்படும் இந்த இடத்தைச் சுற்றிப் பார்க்க நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பழைய‌ கோட்டையின் பதில் சுவர் வாயில்கள் மற்றும் ஒரு தர்பார் மண்டபம் இவை தவிர வேறு எதுவும் கிடையாது. மீதமுள்ள மையப் பகுதியில் எந்தெந்த இடத்தில் என்னென்ன கட்டடங்கள் இருந்தன என்பதைக் காட்டும் விபரக்குறிப்பு வைத்திருந்தார்கள். 

இது புனே நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.‌ கட்டடம் தீ விபத்தில் எரிந்து போனாலும் அதன் வரலாறு அழியாமல் இருக்கிறது. 


சனிவார்வாடா கோட்டையில் வாழ்ந்த பேஷ்வா நாராயணராவ், 1773ல் தமது சித்தப்பா பேஷ்வா இரகுநாதராவ் மற்றும் சித்தி ஆனந்திபாய் ஆகியோரின் ஆணையால் கொல்லப்பட்டார். அவரது ஆவி அங்கே உலாவுவதாகவும் கொலை செய்யப்பட்ட நாராயண ராவ் தன்னைக் கொலையாளிகளிலிருந்து காப்பாற்ற அரற்றும் குரல் இன்றும் இரவில் கேட்பதாக கதைகள் உலவுவதால் அமானுஷ்யங்களுக்குக் குறைவில்லை.


அடுத்து நாங்கள் சென்றது ஷிண்டே சைத்திரி" (Shinde Chhatri). மகாராஷ்டிராவில் புனே நகரில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னமாகும்.

மராத்தியப் பேரரசின் முக்கிய தளபதியான மகாத்ஜி ஷிண்டேவின் (Mahadji Shinde) நினைவாகவும், அவர் தகனம் செய்யப்பட்ட இடமாகவும் இது 1794-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.

முதல் நாள் இந்த இரு இடங்களைப் பார்க்கவே‌ மதியம் மூன்று மணி ஆகியிருந்தது.‌ ஆட்டோவில் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். ஆட்டோ ஓட்டுநர் திரு. யூசுப் கான் மீட்டர் காட்டிய தொகையைப் பெற்றுக் கொண்டார்.‌ நம் ஊரைப் போல மீட்டர் மேலே போட்டுத் தரச் சொல்லிக் கேட்கவில்லை.  மறுநாள் காணப் போகும் இடங்களைக் கூறி காலை 11 மணிக்கு வருவதாகச் சொன்னார்.

இப்படி தினம் இரண்டு முதல் மூன்று இடங்களுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அவர் கூடுதலாக புனேவின் பாஷான் (Pashan) பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அஹோபில மடத்தின் ஸ்ரீ பாலாஜி மந்திர், திருப்பதி பாலாஜி கோயிலின் அதே ஆன்மீக அதிர்வுகளையும், தென்னிந்திய கோயில் கட்டிடக்கலையையும் கொண்ட ஒரு புகழ்பெற்ற வழிபாட்டுத் தலத்திற்கும், புனேயில் உள்ள பெரிய இஸ்கான் ஆலயத்திற்கும் அழைத்துச் சென்றார். எல்லா நாட்களிலும் சரியாகப் 11 மணிக்கு வந்து விடுவார்.‌ மதியம் மூன்று மணிக்கு வீட்டில் கொண்டு விட்டு விடுவார்.‌ மீட்டர் காட்டிய தொகையைப் பெற்றுக் கொள்வார். பணிவாகவே உரையாடுவார். 

நாங்கள்  இப்படியாக புனே நகரில்  சுற்றிப் பார்க்கும் சமயம் ரமலான் மாதம். திரு.‌யூசுப்கான் ரமலான் பண்டிகை நாளில் கூடத் தொழுகையை முடித்து விட்டு சரியாக 11 மணிக்கெல்லாம் எங்களை அழைத்துச் செல்ல வந்து விட்டார்.‌ இப்படியாகப் பத்து நாட்கள்  கழிந்தன.


ஊருக்குத் திரும்பும் முந்தைய நாள் பார்வதி ஹில் மற்றும் காந்தி அடிகளைச் சிறை வைத்திருந்த ஆஹாகான் மாளிகை ஆகிய இடங்களுக்கு அழைத்துச்  சென்றார்.‌ அங்கு திருமதி கஸ்தூரிபாய் காந்தி மற்றும் காந்தியடிகளின் காரியதரிசி திரு. மகாதேவ் தேசாய் ஆகியவர்களின் சமாதிகளை சுற்றி வந்து வணங்கி விட்டு வந்தோம்.


இறுதியாக என் மனைவி ஒரு கைப் பை வாங்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு திரு. யூசுப் கான் சிட்டி மார்கெட் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றார்.‌ அந்த இடம் தொடர்பாக புனே நகராட்சிக்கும் வியாபாரிகள் சங்கத்திற்கும் இடையில் வழக்கு இருப்பதால் எல்லாம் நிரந்தர கடைகள் இல்லை. கிட்டத்தட்ட 100க்கும் மேல் துணிக்கடைகள்.‌ 

உள்ளே திரு யூசுஃப் கானுடன் சென்றால் எல்லாக் கடையிலும் உள்ளவர்கள் அவருக்கு வணக்கம் சொன்னார்கள்.‌ எங்களுக்கு ராஜ மரியாதை வேறு. அப்போது அங்கிருந்த ஒரு கடைக்காரரிடம் கேட்டபோது திரு.‌ யூசுப்கான் அந்தப் பகுதியில் பிரபலமான ஒரு தேசியக் கட்சியின் அரசியல் பிரமுகர் என்பதும் அந்த மார்கெட் வியாபாரிகளின் சங்கத் தலைவர் என்றும் தெரிந்து கொண்டோம். ஆனால் அந்த மனிதர் எந்த ஒரு நேர்விலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவோ,வெட்டி பந்தா காட்டவோ இல்லை.  பணிவான ஒரு ஆட்டோ ஓட்டுநராகவே காட்டிக் கொண்டார். 


இப்படிப்பட்ட மனிதர்களைக் காண்பது மிக அரிது. அவருடன் பயணம் செய்த நாட்கள் மிக அழகானவை.  புனே நகரில் அந்த நேரத்தில் லிச்சிப் பழம் சாலையோரம் விற்பார்கள். அதனை மராத்தியில் பேரம் பேசி மலிவாக வாங்கித் தருவார்.‌ சென்னைக்கு வந்த பின்னும் எங்கள் நட்பு தொடர்கிறது.‌ அரிய மனிதர்களின் நட்பு ஒரு பொக்கிஷம்.

Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (2)