இரத்தச் சர்க்கரைச் சோதனைகளின் (Blood Sugar Tests) முக்கியத்துவம்
இரத்தச் சர்க்கரைச் சோதனைகள்
(Blood Sugar Tests) என்பவை நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மதிப்பிடும்
ஒரு வழிமுறையாகும். இச் சோதனைகளை உங்களுக்கு மருத்துவர் நீரிழிவு நோயைக்
(Diabetes) கண்டறியப் பரிந்துரைக்கலாம். மேலும் இச் சோதனைகள் நீரிழிவு நோய் உள்ள நோயாளிகளும்
தங்களது நோயின் நிலையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகின்றன.
இரத்தச் சர்க்கரைச் சோதனை தரக் கூடிய உடனடியான முடிவுகள் வாயிலாகக் கிடைக்கும் நற்பயன்கள்
1) நமது வழக்கமான உடற்பயிற்சி அல்லது உணவில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள்
2) நீரிழிவு நோய்க்காக எடுத்துக் கொள்ளும் மருந்தின் செயல்பாடு
3) இரத்தச் சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளதா அல்லது அதிகமா உள்ளதா
என்றறிதல்
4) நீரிழிவு நோய்க்கான ஒட்டு மொத்த சிகிச்சையின் இலக்கை நிர்வகித்தல்
ஆகியன.
மருத்துவர் இரத்தச் சர்க்கரைச் சோதனையை வழக்கமான சோதனையாகக் கூடப் பரிந்துரைக்கலாம்.
இதனால் அவர் நோயாளி நீரிழிவு நோய்க்கு முந்தைய கட்டத்தில் (Prediabetes) உள்ளாரா அல்லது
நீரிழிவு நோயை (Diabetes) அடைந்து விட்டாரா என அறிந்து கொள்ள இயலுகிறது.
இரத்தச் சர்க்கரைச் சோதனை
என்ன செய்கிறது?
இரத்தச் சர்க்கரைச் சோதனை இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை அளக்கிறது. நமது உடல் உணவு, பழங்கள் மற்றும் தானியங்களிலிருந்து கார்போஹைட்ரேட்களை
எடுத்துக் கொண்டு குளுக்கோஸாக, அதாவது சர்க்கரையாக மாற்றுகிறது. குளுக்கோஸ்தான் உடலுக்கு ஆற்றல் வழங்கும் முக்கியமான ஆற்றல் மூலம். இரத்தச் சர்க்கரை நோயாளிகள் தாமாகவே தங்கள் இல்லத்திலேயே பரிசோதனை மேற்கொண்டு
இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்காணித்துக் கொள்ள முடியும். இப்போது அதற்கான எளிய
மின்னணுக்கருவிகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
குறைந்த இரத்தச் சர்க்கரை நோய்க்குத்
(Hypoglycemia) தக்க சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் அசட்டையாக இருக்கும் நோயாளி வலிப்பு
(Seizures) அல்லது நினைவிழந்த முழு மயக்க நிலை (Coma) நிலைக்குத் தள்ளப்படும் வாய்ப்புகள்
உள்ளன. அதே போல் நீரிழிவு நோய் வகை - 1 நோயாளிகளின் கவனிக்கப்படாத உயர்ந்த இரத்தச்
சர்க்கரை நோய் (Hyperglycemia) கீட்டோஅசிட்டோசிஸ் (Ketoacidosis) என்னும் உயிராபத்து
நிலைக்கு இட்டுச் செல்லும். கீட்டோ அசிட்டோசிஸ் நோய் உடல் கொழுப்பை ஆற்றலுக்கான எரிபொருளாகப்
பயன்படுத்துவதால் உண்டாகிறது. நீண்ட கால உயர்ந்த இரத்தச் சர்க்கரையானது நரம்புகளைச்
சேதப்படுத்துவதுடன் கூடவே இதயம், சிறுநீரகம் மற்றும் கண் நோய்களையும் உருவாக்கக் கூடும்.
இரத்தச் சர்க்கரை
நோய்க்கான சோதனைகளை மேற்கொள்வதால் எந்த அபாயமோ அன்றிப் பக்க விளைவுகளோ ஏற்படாது. அபூர்வமாக ஒரு சிலருக்கு
இரத்த நாளத்திலிருந்து ஊசி வழியாக இரத்தம் சேகரித்த இடத்தில் வேதனை, வீக்கம், தோல்
கன்றிப் போதல் போன்றவை ஏற்படக் கூடும். ஆனால் இவை எல்லாமே மறு நாளே சரியாகி விடும்
ஒரு தற்காலிகமான விளைவுகள்தான்.
நீரிழிவு நோய் என்றால் என்ன?
உடலில் இன்சுலினின் உருவாக்கப்படுவதையோ அல்லது இன்சுலினைப் பயன்படுத்தும்
திறனைப் பாதிக்கும் ஒருவகையான நிலைமையே நீரிழிவு நோய் என்ரு சொல்லப்படுகிறது. இரத்தத்தில்
உள்ள சர்க்கரையை ஆற்றலாக மாற்ற இன்சுலின் உதவுகிறது. நீரிழிவு நோயால் இரத்த
சர்க்கரை மட்டங்கள் அசாதாரணமான அளவுக்கு உயர்வதில் போய் முடியும். நாளடைவில் நீரிழிவு நோய்
இரத்தக் கலங்கள், நரம்புகள் முதலியவற்றில் சேதமேற்படுத்துவதால் கண்பார்வை குறைதல்,
கை, கால் கூச்சம், மரத்துப் போதல், மாரடைப்பும் பக்கவாதமும் ஏற்படும் அபாயம் அதிகரித்தல்
உள்ளிட்ட மாறுபட்ட பல நோய்க்குறிகளை வெளிப்படுத்துகிறது. ஆரம்ப நிலையிலேயே நோய் கண்டறியப்படுமானால்,
தக்க சிகிச்சை மேற்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தொடங்க நம்மால் இயலும்.
யாரெல்லாம் நீரிழிவு நோய்க்காகப்
பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்?
ஆரம்ப நிலையில் நீரிழிவு நோய் பல நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தவும்
செய்யலாம் அல்லது வெளிப்படுத்தாமலும் இருக்கலாம். ஆகவே எப்போதாவது சில சமயங்களில் ஆரம்ப
அறிகுறிகளாகக் கீழே சொல்லப்பட்டவற்றில் எதையாவது நீங்கள் உணர்வீர்களானால் நீரிழிவு
நோய்க்கான சோதனைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம்.
1) அடங்காத அதிகமான தாகம் 2) எப்போதும் சோர்வாக உணர்தல் 3) சாப்பிட்ட
பின்னரும் அதிகம் பசி எடுப்பதாக உணர்தல் 4) மங்கலான பார்வை 6) வழக்கத்திற்கு அதிகமாக
அடிக்கடி சிறுநீர் கழித்தல் 7) குணமாகாத புண்கள் அல்லது வெட்டுக்காயங்கள்.
ஒருவரது BMI (Body Mass Index) என்ற உடல் நிறைக் குறியீடெண் 25 க்கும்
அதிகமாக இருந்து கீழ்க்கண்ட பிரிவுகளில் ஏதாவது ஒன்றின் கீழ் வரும் எந்த ஒரு நபருமே
இந்த அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையிலும் கூட நீரிழிவு நோய்க்கான பரிசோதனைகளை செய்து
கொள்வது நல்லது என்று அமெரிக்க நீரிழிவு நோய்ச் சங்கம் (American Diabetes
Association) பரிந்துரைக்கிறது.
1) நீரிழிவு நோய் தாக்கும்
உயர் அபாயமுள்ள இனங்களைச் சேர்ந்தவர்கள் ஆப்ரிக்க – அமெரிக்கர், இலத்தின் அமெரிக்கர்,
பூர்வீக அமெரிக்கர், பசிபிக் தீவுவாசி, ஆசிய – அமெரிக்கர் போன்ற நீரிழிவு நோய் தாக்கும்
அதிக அபாயமுள்ள இனங்களைச் (Ethnicity) சேர்ந்தவர்கள்.
2) உயர் ரத்த அழுத்தம்
(High Blood Pressure), உயர் ட்ரைகிளிசரைடுகள்
(High Triglycerides), குறைவான அளவில் உயரடர்த்திக் கொழுப்பு (Low high Density
Lipid Cholesterol) அல்லது இருதய நோய்
(Heart Disease) உள்ளவர்கள்.
3) குடும்ப வரலாற்றில்
நீரிழிவு நோய்ப் பின்ணணி கொண்டோர்.
4) தமது மருத்துவ வரலாற்று
விவரங்களில் அசாதரணமான சர்க்கரை அளவு அல்லது இன்சுலின் எதிர்ப்பு (Insulin) அறிகுறிகள்
காணப்படுபவர்கள்.
5) தினமும் உடற்பயிற்சி செய்வதைப் பழக்கமாகக் கொள்ளாதவர்கள்.
6) சினைப்பை நோய்க்குறி (Polycystic ovary
syndrome) அல்லது கர்ப்பகால நீரிழிவு (Gestational diabetes) மருத்துவ வரலாறு
(Medical History) கொண்ட பெண்கள்.
நீரிழிவு நோய் தாக்கும்
அபாயம் வயதுடன் அதிகரிக்கிறது என்பதால் நாற்பத்தைந்து (45) வயதைக் கடந்த அனைவருமே தொடக்க
இரத்தச் சர்க்கரைப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்க நீரிழிவுச் சங்கம் (ADA) பரிந்துரைக்கிறது.
இதனால் இரத்த சர்க்கரை அளவுக்கான அடிப்படைக் கோட்டை (Baseline) ஏற்படுத்த முடியும்.
நீரிழிவு நோய் உருவாகும் வாய்ப்பை சோதனை செய்து கொள்வதன் வாயிலாக அறிந்து கொள்ள இயலும்.
நீரிழிவு நோய்க்கான இரத்தப்
பரிசோதனைகள்
1) A1c பரிசோதனை
இரத்தப் பரிசோதனைகள் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மருத்துவர்
அறிந்து கொள்ள இயலும். A1c என்பது மிகப் பொதுவானதோர் இரத்தப் பரிசோதனை. இச் சோதனையின் முடிவுகள் வாயிலாகக்
கடந்த காலத்தில் இருந்த இரத்த சர்க்கரையின் அளவை மதிப்பிட முடியும். மேலும் இச் சோதனைக்கு
உணவு உன்ணாமல் இருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது.
இச் சோதனை கிளைக்கேட்டட் ஹீமோக்குளோபின் சோதனை (Glycated hemoglobin test) என்றும் சொல்லப்படுகிறது. சோதனைக்கு முந்தைய கடைசி இரண்டு
அல்லது மூன்று மாதங்களில் எவ்வளவு குளுக்கோஸ் உடலில் உள்ள இரத்தச்சிவப்பணுக்களுடன்
இணைந்திருந்தது என்பதை அளவிட இச் சோதனை செய்யப்படுகிறது. சிவப்பு அணுக்களின் ஆயுள்காலம்
கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் என்பதால் A1c சோதனை இரத்தச் சர்க்கரையின் மூன்று மாதச்
சராசரி அளவைத் தரும். இச் சோதனைக்குச் சிறு அளவிலேயே இரத்தம் தேவைப்படும். இதன் முடிவுகள்
விழுக்காடு அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன.
சோதனையின் முடிவுகள் அட்டவணையாகத் தரப்பட்டுள்ளன.
5.7 விழுக்காட்டிற்கும் குறைவான மதிப்பு இயல்பான நிலை (Normal).
5.7 முதல் 6.4 வரையான மதிப்பு நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை (Prediabetes)
6.5 க்கும் அதிகமான மதிப்பு நீரிழிவு நோய்யை அடைந்த நிலையைக் (Diabetes) குறிக்கிறது.
தேசிய கிளைக்கோஹீமோக்குளோபின் தர அளவுப்படுத்தும் அமைப்புத் திட்டத்தின்படி
(National Glycohemoglobin Standardization Program - NGSP) ஆய்வுக்கூட முடிவுகள் படித்தரமாக்கப்பட்டுள்ளன.
இதனால் எந்த ஆய்வுக் கூடத்தில் செய்தாலும் பயன்படுத்தப்படும் ஆய்வுமுறை ஒன்றாகவே இருக்கும்.
தேசிய நீரிழிவு, செரிமான மற்றும் சிறுநீரக நோய்கள் கழகமானது (National Institute
of Diabetes, Digestive and Kidney Diseases), NGSP யால் அங்கீகரிக்கப்பட்ட சோதனைகள்
மட்டுமே நீரிழிவு நோயைக் கண்டறிய நிச்சயமாகப் போதுமானது என்று கருதுகிறது.
A1c சோதனை முடிவுகளில் சிலருக்குச் சற்றே வேறுபாடு காணப்படலாம். கருவுற்ற
தாய்மார்கள் மற்றும் சில சிறப்புத் திரிபுரு ஹீமோக்குளோபின் (special hemoglobin variant)
கொண்ட நபர்களுக்கு இச் சோதனை மதிப்புகள் பிழையாக அமைய வாய்ப்புள்ளது. இத்தகைய சூழ்நிலையில்
மருத்துவர் வேறு மாற்று நிரிழிவு நோய்ச் சோதனைகளைப் பரிந்துரைக்கக் கூடும்.
குறிப்பில்லா
இரத்தச் சர்க்கரைச் சோதனை
(Random blood sugar test)
எந்த ஒரு நேரத்திலும், எப்போது உணவு உட்கொள்ளப்பட்டது என்பதைக் கணக்கில்
கொள்ளாது குறிப்பின்றிச் செய்யப்படும் இரத்தச் சர்க்கரைச் சோதனையை குறிப்பில்லா இரத்தச் சர்க்கரைச் சோதனை என்றழைக்கிறோம்.
இது தரும் முடிவில் இரத்தச் சர்க்கரையின் அளவு வளர்ச்சியடைந்த சராசரி நபருக்கு
80mg/dL முதல் 140 mg/dL வரை இருப்பின் இயல்பு நிலை என்றும், அதுவே 140 mg/dL முதல்
200 mg/dL வரை இருப்பின் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை என்றும்
220 mg/dL அல்லது அதற்குக் மேலாக இருந்தால் நீரிழிவு நோய் இருப்பதாகவும்
கொள்ளலாம் என்று அமெரிக்க நீரிழிவு நோய்ச் சங்கம் உரைக்கிறது.
உணவுண்ணா நிலையில்
இரத்தச் சர்க்கரைச் சோதனை
Fasting blood sugar test
இரவு உணவுக்குப் பின்னர் குறைந்தது எட்டு முதல் பன்னிரெண்டு மணி நேரத்திற்குக்குள்
வேறு எந்த உணவும் உண்ணாத நிலையில் எடுக்கப்படும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மதிப்பிடும்
சோதனையாகும்.
இச் சோதனை முடிவில் கிடைக்கும் மதிப்பு 100 mg/dL அல்லது அதற்குக் கீழாக இருந்தால்
இயல்பு நிலை என்று எடுத்துக் கொள்ளலாம்.
அதுவே 100 mg/dL – 125 mg/dL ஆக இருப்பின் நீரிழிவுக்கு முந்தைய நிலை என்றும்,
அடுத்தடுத்த இருமுறை அளவிடப்படும் போது 126 mg/dL க்கு அல்லது அதற்கு மேல் இருப்பின்
நீரிழிவு நோய் இருப்பதைச் சுட்டுவதாகக் கொள்ளலாம்.
வாய் வழி குளுக்கோஸ் ஏற்றாளும்
திறன் சோதனை
Oral glucose tolerance test
இச் சோதனையில்
முதலில் உண்ணாநிலையில் இரத்தச் சர்க்கரைச் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. பின்னர் 8 அவுன்ஸ்
(Ounce) அல்லது 237 மிலி (ml) தூயநீரில் 2.6 அவுன்ஸ் அல்லது 75 கிராம் (gm) குளுக்கோஸ்
கரைக்கப்பட்ட கரைசல் குடிக்கத் தரப்படுகிறது. இதுவே சிறுவர்களுக்கு உடல்நிறையைப் பொருத்து
1 கிலோ நிறைக்கு 1.75 கிராம் என்ற விதத்திலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு
8 அவுன்ஸ்க்கு 100 கிராம் என்றும் தரப்படும். முழு வளர்ச்சியடைந்த ஒருவரது உடல் நிறை
49 கிலோகிராமிற்கும் கீழாக இருந்தால் அவருக்கு மேல் குறிப்பிட்ட முழு அளவுக் கரைசல்
தரப்படக் கூடாது. அடுத்து அதிலிருந்து ஒவ்வொரு அரை அல்லது ஒரு மணி நேர இடைவெளியில்
இரத்தச் சர்க்கரையின் அளவு இரண்டு அல்லது மூன்று மணி நேரக் கால அவகாசத்திற்குக் காணப்படுகிறது.
சோதனை முடிவுகளைப் படித்தர அட்டவணையை ஒப்பிட்டு அறிந்து கொள்ளலாம்.
Urine testing for diabetes
பொதுவாக சிறுநீர்ப் பரிசோதனை நீரிழிவு நோயைக்
கண்டறியச் செய்யப்படுவதில்லை. மருத்துவர்கள் நோயாளிக்கு நீரிழிவு நோய் வகை -1 இருக்கலாம்
என்று கருதும் பட்சத்தில் பரிந்துரைப்பதுண்டு. நம் உடலில் இரத்தச் சர்க்கரைக்குப் பதில்
கொழுப்புத் தசைகளைப் பயன்படுத்தி ஆற்றல் பெறப்பட்டால் கீட்டோன் (ketone) பொருட்கள் உருவாகும். ஆய்வுக்கூடச் சிறுநீர்ச் சோதனைகளில் கீட்டோன் பொருட்கள்
மிதமான அளவிலிருந்து அதிக அளவில் காணப்படுவது உடல் தேவையான அளவுக்கு இன்சுலினைச் சுரக்கவில்லை
என்பதன் அறிகுறியாகக் கருதலாம்.
கர்ப்ப
கால நீரிழிவுச் சோதனைகள்
(Gestational diabetes tests)
கருவுற்ற மகளிருக்குக் கர்ப்பகால நீரிழிவு
நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. அமெரிக்க நீரிழிவுச் சங்கம் (ADA) நோய் அபாயம் அதிகமுள்ள பெண்களை
அவர்களின் முதல் வருகையிலேயே நீரிழிவுக்கான சோதனைகளை செய்வதன் மூலம் அவர்களுக்கு முன்னரே
நீரிழிவு நோய் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும். கர்ப்பகால நீரிழிவு நோய், இரண்டாவது
மற்றும் மூன்றாவது மும்மாதப் பருவத்தில்தான் ஏற்படும்.
இரண்டு வகையான சோதனைகளை மருத்துவர்கள் பயன்படுத்தலாம்.
முதலில் ஆரம்ப குளுக்கோஸ் சவால் சோதனை (initial glucose challenge test) தரப்படுகிறது. இச் சோதனையில் குளுக்கோஸ் கரைசல் குடிக்கத் தரப்பட்டு ஒரு மணி
நேரத்திற்குப் பின் இரத்தச் சர்க்கரையின் அளவு காணப்படுகிறது. இம்மதிப்பு 100 mg/dL – 125 mg/dL அல்லது அதற்கும் குறைவாக
இருப்பின் இயல்பு நிலை என்று கொள்ளப்படுகிறது. இதை விட அதிகமான இரத்தச் சர்க்கரை அளவு பெறப்படும் செய்யப்படுகிறது, மேலும் சோதனைகள்
இந்தச் சோதனைக்கு உணவு இன்றி இருக்கத் தேவையில்லை.
அதிகமான இரத்தச் சர்க்கரை அளவு பெறப்படும்
நேர்வில் இதன் தொடர்ச்சியாக முன்னர் சொல்லப்பட்ட OGTT சோதனை செயப்படுகிறது. இதற்கு
முன் சொன்னது போலப் 10 முதல்12 மணி நேரப் பட்டினி அவசியமாகிறது. இரத்தச் சர்க்கரை ஒவ்வொரு
மணி நேரத்திற்கும் ஒருமுறை என மூன்று முறை
கண்டறியப்படுகிறது. இதில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட முடிவுகளில் இரத்த சர்க்கரை
அளவு உயர்ந்திருப்பது கர்ப்பகால நீரிழிவு நோய் இருப்பதைச் சுட்டும்.


Comments
Post a Comment