இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)
காலத்தை அறிந்து கொள்ள இன்றைக்குப் பலவகையான கருவிகள் சந்தையில் கொட்டிக் கிடக்கின்றன. கைக்கடிகாரங்கள் போன்ற எந்தக் கருவியும் இல்லாத அந்தக் காலத்தில் கிராமங்களில் மனிதர்கள் இரவில் உடுக் கூட்டத்தின் நிலையை வைத்துத்தான் தோராயமாகக் நேரத்தை நிர்ணயிப்பார்கள். முதலில் கீழ்க்கண்ட ஒருவரி வாய்ப்பாட்டைப் பார்ப்போம். “அச்சுவனி அறுமீன் குதிரைத்தலைபோல் மெச்சிடு கடகத்திரு கடிகையதாம்” இதனைப் பின்வருமாறு பொருள் கொள்ளலாம். அஸ்வினி உடுத் தொகுப்பில் ஆறு உடுக்கள் உள்ளன. இந்த ஆறு உடுக்களும் சேர்ந்து குதிரையின் தலை போலக் காணப்படும். அஸ்வினி உச்சத்தில் வரும் போது வானில் கடக இராசி உதயமாகி இரண்டு நாழிகைப் பொழுது ஆகி இருக்கும். இதனை எளிதாக விளங்கிக்கொள்ள கீழ்க்கண்ட, நமக்கு முன்னரே இத்தொடரின் முதல் பகுதியில் பரிச்சியமான பழைய படத்தைப் பயன்படுத்துவோம். ஐப்பசி மாதம் 15 ஆம் தேதிக்கு ஒருவர் இரவில் தலைக்கு மேல் அஸ்வினி உடுவைக் காண்பதாகக் கொள்வோம். ஐப்பசி மாதம் என்பது ஆங்கிலத்தில் அக்டோபர் - நவம்பர் மாதம். அப்போது சூரியன் விருச்சிகத்துக்கு நேராக இருப்பதாகத் தோற்றமளிக்கும். அல்லும் பகலும் ...