இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (3)


இந்த மூன்றாவது பகுதியை எழுதுவதற்கு நிறையவே தயக்கம் இருந்தது. காரணம் முதல் கட்டுரையை இன்றுவரையில் 70 பேர் படித்தோ அல்லது பார்த்தோ இருப்பது தெரிந்தது. உடனே உற்சாகமாக இரண்டாம் பகுதியை எழுதி இணைப்பு அனுப்பினால் இன்னும் 30 பேரைக் கூடத் தொடவில்லை.
சரி மூண்றாவது பகுதியை எழுத வேண்டாம் என்று நினைத்து நேற்றெல்லாம் ஒரு வேலையும் செய்யவில்லை. 

ஆனால் சொறி பிடித்தவன் கையும் எழுதுபவன் கையும் கண்டிப்பாகச் சும்மா இராது. மனசைத் திடப்படுத்திக் கொண்டு வந்தது வரட்டும் என்று துணிந்து எழுதுகிறேன். சபரி மலைக்கு என்றைக்கு ஒரு கன்னி சாமி கூட வரவில்லையோ அன்று திருமணம் செய்து கொள்வதாக ஸ்ரீ ஐய்யப்பன் சொன்னதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது போல் என்று என் கட்டுரையை ஒருவர் கூடப் பார்க்கவில்லையோ அன்று இந்தத் தொடரை எழுதுவதை நிறுத்தி விட என்ணியுள்ளேன்.  ஒரு கட்டுரைக்கான நேரச் செலவு கிட்டத்தட்ட இரண்டு தினங்கள். அத்தனை உழைப்பும் வீணாவது சங்கடமாக இருக்கிறது. சரி. இனி கட்டுரைக்குள் செல்லலாம்.

பொதுவாகவே ஒருவரைப் பார்க்கச் செல்லும் முன் சில தகவல்களை அறிந்து கொண்டு செல்வது நல்லது. முதலில் குறிப்பிட்ட நபரின் விலாசம். அடுத்து நாம் இருக்கும் இடத்திலிருந்து அவர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார். அவருடைய வீட்டிற்கு அக்கம்பக்கத்தில் வேறு யாரல்லாம் இருக்கிறார்கள். எந்த நேரத்தில் அவரை எளிதில் பார்க்க முடியும் என்பது போன்ற தகவல்கள் மிகவும் முக்கியம்.
அதே போல நமது மேஷ ராசியில் காணப்படும் உடுக்கள் அசுவினி மற்றும் பரணி ஆகியன என்பது உங்களுக்குத் தெரியும். 


இப்போது சித்திரை மாதம். அதாவது மேஷ மாசம். அதனால் மேஷ ராசி உடுக்களைக் காண்பது இயலாது. காரணம் இராசிக்கு முன் ஞாயிறு இருப்பதால் அதன் கூசொளியில் (Glare) அசுவினி, பரணி உடுக்கள் தெரியாது. அப்போது எந்த மாதம் இந்த உடுக்களைக் காண உகந்த காலம் என்றால் ராசியின் எதிர்ப்புறம் துலா ராசிக்கு முன் ஞாயிறு அமையும் காலமான அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை மேஷராசி உடுக்களைக் காண உகந்த காலமாகும். அதிலும் டிசம்பர் மாத இரவில் உள்ளூர் நேரம் 9.00 மணிக்கு நன்கு கட்புலனாகும்.


அப்படியானால் துலாராசி (Libra) உடுக்களைக் காண இந்த ஏப்ரல் மாதம் சிறப்பானது என்பதைச் சொல்லத் தேவையில்லை. துலாராசியை ஏப்ரல் முதல் ஜூலை வரையில் நள்ளிரவில், அதிலும் குறிப்பாக ஜூன் மாதம் தலைக்கு நேர் மேலாகக் காண முடியும்.




பட உதவி https://commons.wikimedia.org/w/index.php?curid=15406068
நன்றி: IAU and Sky & Telescope magazine (Roger Sinnott & Rick Fienberg) - IAU site, CC BY 3.0,.

அடுத்தது வானில் எந்தப்பகுதியில் மேஷராசி உடுக்களைக் காண முடியும் என்பது. இராசியின் வலது ஏற்றம் (Right Ascension - RA) 1h 46m தொடங்கி
3h 29m வரை பரவியுள்ளது. அதே போல வான்கோள நடுவரை விலக்கம் (Declination – Dec.) + 10.36 o முதல் + 31.22o பரவியுள்ளது. இப்போது உங்களுக்கான வினா. எந்தக் கால் பகுதியில் மேஷராசி அமைந்திருக்கும்?


RA மதிப்பு 6 மணிக்கும் குறைவு, அடுத்தது நேர்க்குறியுடன் கோணம் 90 o யை விடக் குறைவு என்பதால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் NQ1 என்று.  
அக்கம் பக்கத்து ஆசாமிகள் யார்யார் என்பது முக்கியம். காரணம் நாம் மேஷ ராசியை காணும் போது வேறு நாலைந்து உடுக் கூட்டங்களையும் அடையாளம் காண முடியும் அல்லவா? அதற்காகதான். பெர்சியஸ் (Perseus), ரிஷபம் (Tarus), டிரையாங்குலம் (Triangulam), மீனம் (Pisces), சீட்டஸ் (Cetus) ஆகியன நமது மேஷராசியைச் சுற்றி அமைந்துள்ளன. இதில் ரிஷபமும், மீனமும் இராசி உடுக் கூட்டத்தைச் சேர்ந்தவை. மற்றவை இராசிக் கூட்டத்தில் சேராத புதியவை. ஆக நாம் அக்டோபர்  முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஆறு உடுக் கூட்டங்களைக் காண வாய்ப்புள்ளது.


மொத்த வான் கோளப் பரப்பில் 1.1 விழுக்காடுப் பரப்பு நமது மேஷராசிக்கு உரியதாக வரையறை செய்யப்பட்டுள்ளது. மேஷராசியின் பரப்பளவு 441 சதுர பாகை (Sq.Degree). பரப்பளவின் அடிப்படையில் தர வரிசைப் பட்டியல் போட்டால் மேஷ ராசி 39 வது இடத்தில் உள்ளது.



அஸ்வினி உடுத் தொகுப்பில் காணப்படும் மிக முக்கியமான உடுக்கள் மூன்று பரணியில் ஒன்று என்று நான்கை மட்டும் நாம் எடுத்துக் கொள்வோம்.
ஏரியெஸ் (Aries) உடுக் கூட்டத்தில் ஹாமல் என்ற ஆல்பா ஏரியெட்டிஸ் (Hamal – α Arietis), ஷெரட்டன் என்ற பீட்டா (β) ஏரியெட்டிஸ் (Sheratan – β Arietis) மற்றும் மெசர்திம் என்ற காமா ஏரியெட்டிஸ் (Mesarthim – γ Arietis ) ஆகிய மூன்றும் கொள்ளப்படுகின்றன. ஆனால் அதுவே 

அசுவினிக்கு ஷெரட்டன் என்ற பீட்டா ஏரியெட்டிஸ் (Sheratan – β Arietis) மற்றும் மெசர்திம் என்ற காமா ஏரியெட்டிஸ் (Mesarthim – γ Arietis ) ஆகிய இரண்டு உடுக்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

பரணிக்கு சி- ஏரியெட்டிஸ் அல்லது 41 ஏரியெட்டிஸ் (41 Arietis / c Arietis) யும் முக்கியமான உடுக்களாகச் சொல்லப்படுகின்றன.


இவை தவிர டெல்டா ஏரியெட்டிஸ் (δ Arietis),
எப்சிலன் ஏரியெட்டிஸ் (ε Arietis),
35 ஏரியெட்டிஸ் (35 Arietis), 39 ஏரியெட்டிஸ் (39 Arietis) ஆகியவையும் உண்டு. 

பரணி உடுக் கூட்டத்திற்கு 41 ஏரியெட்டிஸ்,35 ஏரியெட்டிஸ், 39 ஏரியெட்டிஸ்  இந்த மூன்றையும் சேர்த்தே தமிழர் எடுத்துக் கொண்டனர்.



மேஷ ராசிக்குப் பின்னால் ஆழ் வான் பொருட்கள் நிறைய காணப்பட்டாலும் மிகவும் முக்கியமாகக் குறிப்பிடுவது தண்டற்ற சுருள் வளைய உடுத்திரள் (Unbarred spiral Galaxy) NGC772 மற்றும் ஒழுங்கிலிக் குள்ள உடுத்திரள்
(Dwarf Irregular Galaxy) NGC 1156 ஆகிய இரண்டுமே

அதென்ன ஆழ் வான் பொருள் (Deep Sky Objects) புதியாதாக இருக்கிறதா? அது ஒன்றும் இல்லை. நாம் வான் கோளத்தில் ஒரு உடுத் தொகுதியை நோக்கும் போது அதன் பின்ணனியில் வேறு பொருட்களும் கட்புலனாகும் இந்தப் பொருட்கள் உடுத் தொகுப்பு புவியிலிருந்து அல்லது ஞாயிறிலிருந்து அமையும் தொலைவைக் காட்டிலும் மிக அதிகமான தொலைவில் இருக்கும்.
எடுத்துக் காட்டாக
ஆல்பா ஏரியெட்டிஸ் (α Arietis)  66 ஒளி ஆண்டுகள் தொலைவிலும்
பீட்டா ஏரியெட்டிஸ் (β Arietis) 59.6 ஒளி ஆண்டுகள் தொலைவிலும்
காமா ஏரியெட்டிஸ் (γ Arietis ) 160 ஒளி ஆண்டுகள் தொலைவிலும்
இருக்கின்றன. ஆனால் இவற்றின் பின்புலத்தில் காணப்படும் NGC772 உடுத்திரள் 1300 இலட்சம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது. சிலருக்கு ஒளி ஆண்டு என்றால் என்ன என்று தெரியாமல் இருக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்காக இந்தத் தகவல். ஒளி ஒரு நொடிக்கு 3 இலட்சம் கிலோ மீட்டர் தொலைவைக் கடக்கும்.
3 இலட்சம் கிமீ/வி வேகத்தில் ஒளி 1 ஆண்டில் கடக்கும் தூரம் காண வேண்டும் என்றால் 300000 x 60 x 60x 24 x 365.25 =  9.4607 x1015 கிமீ தொலைவு.
அதாவது 300000 கிமீ/விவேகத்தில் பயணித்தால் ஆழ் வான் பொருள்
NGC 772 உடுத் திரளை (Galaxy) அடைய 1300 இலட்சம் ஆண்டுகள் பிடிக்கும். அதுவே மேஷராசி உடுக்களை அடைய 60 முதல் 160 ஆண்டுகளே போதுமானதாக இருக்கும்.


சந்திப்போம்.


Comments

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)