முன்னுரை
என் நண்பர் சிவசாமி அவர்கள்,
சமூகவியலிலும், நிர்வாக இயலிலும் முதுநிலைப் பட்டப்படிப்புப் படித்தவர். அரசுப்பணியில்
உயர்ந்த பதவிகள் பலவற்றை வகித்தவர். மிகச் சமீபத்தில் ஓய்வு பெற்றவர். சென்னை அண்ணாநகர்
விஸ்வேஸ்வரய்யா கோபுரத்தைச் சுற்றி வந்து தினசரி நடைப் பயிற்சி செய்யும் போது அறிமுகமானார்.
நல்ல பண்பான மனிதர்தான் அவர், ஆனால் அவருக்கு மருத்துவர்கள் மீதும் அவர்கள் தரும் பரிசோதனைகள்
குறித்தும் பெரும் அவநம்பிக்கையும் ஐயப்படும் மனதில் இருப்பதை அவருடன் உரையாடும் போது
அறிந்து கொண்டேன். அது குறித்துச் சில சமயம் நாங்கள் இருவரும் விவாதித்துள்ளோம். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆய்வுகள் அனைத்துமே
அனாவசியமானவை, தண்டச் செலவு என்ற தவறான எண்ணம் அவருக்கு மட்டுமல்ல, பொதுவாகவே அனைத்துத்தரப்பு மக்களிடமும் காணப்படுகிறது. ஒரு நோயாளி, திடீரென
மருத்துவர் முன்பு போய் நின்று கொண்டு “எனக்கு என்ன நோய் என்று கண்டுபிடியுங்கள்” என்றால்
அவரால் நிச்சயமாகக் கண்டுபிடிக்கவே இயலாது. முதலில் நோயாளி தனக்கு இருக்கும் உடல் ரீதியான
உபாதைகளை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். அடுத்து அவற்றைக் கொண்டு ஓரளவு நோயாளியின்
நோய் குறித்து அவரால் அனுபவத்தின் அடிப்படையில் அவதானிக்க முடியும். அவரது அவதானிப்பை
உறுதிப்படுத்திக் கொள்ளவும், அவ்வாறு உறுதி செய்து கொண்ட பின்னர் நோயின் பாதிப்பின்
வீச்சை மதிப்பிடவும் ஆய்வகச் சோதனைகள் செய்ய வேண்டியது அவசியமாகிறது.
நோயின் தீவிரத்தைச் சோதனைகள் மூலம் அறிந்து
கொண்ட பின்னரே, எந்த மருந்தை எந்த அளவுக்கு எவ்வளவு காலம் பயன்படுத்த வேண்டும் என்பதை
மருத்துவரால் முடிவு செய்ய இயலும். மக்களிடையில் காணப்படும் அறியாமையாலும் வறுமையாலும்
அலட்சியத்தாலும் பல நேர்வுகளில் மருத்துவ ஆய்வை ஒன்று புறக்கணிக்கின்றனர் அல்லது தள்ளிப்
போடுகின்றனர். இதன் காரணமாகவே பலர் நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருகின்றனர்.
இது கூடுதல் மருத்துவச் சிக்கல்களை ஏற்படுத்துவதுடன், விரைவில் குணமாகும் வாய்ப்பைத்
தவற விடுவதால் நீண்ட காலம் சிகிச்சை மேற்கொள்ளவதற்கும் வழி வகுக்கிறது. இதனால் நோய் முற்றிலுமாகக் குணமடைவதும் சாத்தியப்படாமல்
போகலாம். உங்களில் பலருக்கு ஆங்கிலத்தில் சொல்லப்படும் இந்தப் பழமொழி தெரிந்திருக்கும்.
“ A stitch in time saves nine” அதாவது தக்க சமயத்தில்
கிழிசல் மீது இடப்படும் தையல் பின்னர் ஒன்பது தையல்கள் இடுவதைத் தடுக்கும். பொது மக்களின்
அதிலும் குறிப்பாகப் படித்தவர்களிடமும், நடுத்தர வர்க்கத்தினரிடமும் காணப்படும் இத்தகைய
தவறான என்ணத்தைப் போக்க வேண்டும் என்பதற்காகவே விழிப்புணர்வு நோக்கில் ஹெல்த் கேர்
(தமிழ்) இதழில் ஒரு தொடர்கட்டுரை எழுதலாமா என்று பத்திரிக்கையின் ஆசிரியர் திரு. ராஜா
அவர்களைக் கேட்டிருந்தேன். அடுத்த கணமே கரும்பு தின்னக் கூலியா, என்று தன்னுடைய ஒப்புதலை
வழங்கினார்.
இத் தொடரில் சாதாரணக் காய்ச்சல் (
Fever) முதலாக இந்தியா மற்றும் உலக நாடுகளின் முதல் 10 உயிர்க் கொல்லி நோய்கள் குறித்த
சில விழிப்புணர்வுத் தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். முக்கியமாக,
கட்டுரைத் தொடரை எழுதும் நான் மருத்துவம் படித்தவன் இல்லை. ஹெல்த் கேர் (தமிழ்) ஏட்டில்
எழுதும் மற்ற பெரும்பாலானவர்கள் தொழில் முறை மருத்துவர்கள். ஆகவே கட்டுரை எழுதும் முன்பு
எந்த ஒரு நேர்விலும் பிழையான தகவலோ அல்லது தவறான வழிகாட்டலோ வந்து விடக் கூடாது என்ற
எச்சரிக்கை உணர்வுடன் இணையத்தில் பல தகவல்களைத் திரட்டி, திரட்டிய தகவல்களை ஒன்றுக்குப்
பல முறை சரிபார்த்து, அதன் பின்னர் ஆங்கிலத்தில் இருப்பதால் முடிந்த அளவுக்கு தமிழில்
மொழிமாற்றம் செய்தே உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
தகவல்களைத் திரட்ட விக்கி பீடியா (Wiki pedia), மாயோ கிளினிக் (Mayo Clinic), ஹெல்த்
லைன் (Health line), வெப்மெட்(Webmed), ஹார்ட் ஆர்க் (Heart.org)., இன்னும் இங்கு பெயர் குறிபிடப்படாத
பல தளங்கள் பயன்பட்டன. அந்தத் தளங்கள் அனைத்துக்கும், வலைப்பூத்தள (Blog) ஆசிரியர்களுக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றி. அட்டவணைகளில் மதிப்புகளைத் தரும் போது அந்த மதிப்புகளை எடுத்தாளப்
பயன்பட்ட இணையதளங்களின் முகவரியை முடிந்தவரையில் அட்டவணையுடன் இணைத்திருக்கிறேன்.
.
மருத்துவர் தரும் ஆய்வுச் சோதனைகளை எக்காரணம் கொண்டும்
ஒத்திப் போட வேண்டாம். இச் சோதனைகள் மருத்துவர் மட்டுமன்றி நாமும் நமது உடல் நிலையை
அறிந்து கொள்ள வழிவகை செய்யும். இக்கட்டுரைத் தொடர், மக்களிடம் பரவலாகக் காணப்படும்
நோய்களுக்காக அதிகம் பரிந்துரைக்கப்படும் சோதனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படும்
நோக்கிலேயே எழுதப்படுகிறது.
“நோய் நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்பது வள்ளுவப்
பெருமானார் வாக்கு.
அதாவது நோய் இன்னதென்று ஆராய்ந்து நோயின் காரணம் ஆராய்ந்து அதனைத் தணிக்கும் வழியையும்
ஆராய்ந்து உடலுக்குப் பொருந்தும்படியாகச் செய்தல் வேண்டும் என்பது பொருள். மருத்துவர்
முதலில் நோயை பின்னர் அந்நோய் உருவான காரணத்தை
அறிந்து கொள்ள வேண்டுமல்லவா. இதன் பொருட்டே மருத்துவர் சோதனைகளைப் பரிந்துரைக்கிறார்.
ஒரு நோய் உருவாகப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எனவே நோய்க்கான சரியான காரணத்தை அறிதல்
மிக முக்கியமானது.
குறிப்பிட்ட ஒரு நோய் முதலில் எப்படி
உருவாகிறது, அதற்காகப் பரிந்துரைக்கப்படும் சோதனைகள் என்னென்ன? அந்தச் சோதனைகள் ஏன்
பரிந்துரைக்கப்படுகின்றன? சோதனைகள் தரும் முடிவுகள் உணர்த்துவதென்ன? நோய்த் தடுப்பு
மற்றும் நோயைக் கட்டுக்குள் வைக்கும் வழிமுறைகள் என்பது குறித்த எளிய விழிப்புணர்வை
ஓரளவுக்கு இந்தக் கட்டுரைகள் வாயிலாக ஏற்படுத்த முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.
கிட்டத்தட்ட நீச்சல் குளத்திற்கு அருகில்
வந்து விட்டோம். இனி குளத்தில் குளித்து மகிழ வேண்டியதுதான். இப்போது அதைத்தான் செய்யப்
போகிறோம். ஆழமில்லாத குளம்தான் என்றாலும் எப்போதும் முன்னெச்சரிக்கையும் , பாதுகாப்பும்
முக்கியம். ஆகவே மீண்டும் சொல்கிறேன். மருத்துவரால் மட்டுமே சோதனை முடிவுகளிலிருந்து
சரியான சிகிச்சையைத் தர முடியும். நீச்சலடிப்பது எப்படி என்ற புத்தகத்தை
மட்டும் படித்து விட்டு வெள்ளம் கரை புரண்டு ஓடும் ஆற்றில் நீந்தி உயிர் பிழைக்க இயலாதோ
அது போலவே புத்தகத்தைப் படித்து விட்டுச் செய்து கொள்ளும் சுய மருத்துவமும் உயிராபத்தானது.
அத்தியாயம்
(1)
மருத்துவரும்
நோயாளியும்
எந்த ஒரு மருத்துவரும் தன்னிடம் வரும் நோயாளியின் பெயர், வயது இவற்றை முதலில்
குறித்துக் கொள்வார். அடுத்ததாக உடல் நிறை, உயரம் ஆகியவற்றின் மதிப்பை அளவிட்டு அவற்றிலிருந்து
நோயாளியின் உடல் நிறை குறியீட்டெண் (Body Mass Index – BMI) மதிப்பை அவரால் காண இயலும்.
பி.எம்.ஐ அட்டவணையிலிருந்து வந்துள்ள நபர் எத்தகைய எடை பிரிவில் இருக்கிறார் அதாவது
குறைந்த, ஆரோக்கியமான, அதிக, அதீத அல்லது மிக அதீத எடைப்பிரிவா என்று அறிந்து கொள்ள
முடியும்.
அட்டவணை (அ)
பின்னர் நோயாளியின் இரத்த அழுத்தமும்
கூடவே நாடித் துடிப்பு அல்லது இதயத் துடிப்பு எண்ணிக்கை அவரால் அளவிடப்படுகிறது. இவை
அனைத்துமே அடிப்படையானவை. இவற்றின் வாயிலாக உடலின் இயல்பு நிலை மாறுபட்டுள்ளதா இல்லையா
என்பதை அறிய மருத்துவரால் முடியும். ஒருவரின்
இதயத்தின் ஆரோக்கியம், இயக்கமற்ற
நிலையில் (Resting Heart Rate) அவரது இதயத்
துடிப்பைச் சார்ந்தமையும். அவரது இதயம் எத்தகைய நிலையில் உள்ளது என்ற புறக்கோட்டோவியத்தை
கீழே தரப்பட்டுள்ள அட்டவணை
(ஆ) தரும். எளிய ஆரம்ப கட்ட பரிசோதனைகள் மூலம் நோயாளியின் இதயத்தின் நிலையை ஓரளவுக்கே
மருத்துவரால் அவதானிக்க முடியும்.
அட்டவணை
(ஆ)
இதன் பின்னர் மருத்துவர் நோயாளியின் உடல் வெப்பநிலையை வெப்பநிலைமானி கொண்டு அளவிட்டு
அறிகிறார். முழு வளர்ச்சி அடைந்த மனிதனின் உடல் வெப்பநிலை 36.5o C முதல்
37.5o C அதாவது 97.7o F – 99.5o F ஆக இருக்கும். எனவே மணித உடலின் சராசரி வெப்ப நிலை
37.0o C (96.6o F) என்று கொள்ளப்படுகிறது. இந்தக் கட்டுரைத்
தொடரில் இனி செல்ஷியஸ் அளவுகளையே பயன்படுத்துவோம்.
பொதுவாக உடலின் வெப்ப நிலையானது எடுக்கப்படும் இடம் (வாய், நெற்றி, அக்குள்,
காதுக்குழல், ஆசனவாய்) சார்ந்து சிறிது வேறுபட்டிருக்கும். இம் மதிப்புகள் அட்டவணை
(ஈ) யில் தரப்பட்டுள்ளது. வயது மற்றும் பாலினம் சார்ந்து உடல் வெப்ப நிலை வேறுபடும்.
பிறந்த குழந்தைகள், மழலைகளின் (New Born and children) உடல் வெப்பநிலை பொதுவாகவே முழு வளர்ச்சியடைந்தவர்களை
(Adults) விடச் சற்று அதிகமாகவே இருக்கும். முழு வளர்ச்சியடைந்தவர்களுக்கு முதியோர்களை
(Elders) விட அதிகமாகவும், மகளிரின் உடல் வெப்ப நிலை ஆடவர்களை விட 0.3o
C உயர்ந்து காணப்படும்.
அட்டவணை
(இ)
மருத்துவரிடம் நாம் காய்ச்சல் என்று பொத்தாம் பொதுவாக எளிதாகச் சொல்லி விடுகிறோம்.
ஆனால் காய்ச்சலில் பல்வேறு வகைகளும், முக்கியமான நான்கு பிரிவுகளும் உள்ளன. இவை வெவ்வேறு
காரணங்களால் ஏற்படுபவை. குறிப்பிட்ட நோயாளிக்கு காய்ச்சல் எத்தனை நாட்களாக உள்ளது?
தொடர்ந்து இருக்கிறதா? அல்லது விட்டு விட்டு வருகிறதா? வியர்த்தலும், குளிர்தலும் மாறி
மாறி உள்ளதா? போன்ற இன்றியமையாத சில வினாக்களை நோயாளியிடம் மருத்துவர் கேட்டறிவதன்
மூலம் காய்ச்சலின் அடிப்படைக் காரணத்தை ஓரளவுக்குத் தன் அனுபவத்தின் அடிப்படையில் அவதானிப்பார்.
முதலில் காய்ச்சல் குறித்துச் சில அடிப்படைத் தகவல்களை இங்கு சுருக்கமாகக் காண்போம்.
காய்ச்சல் (Fever) அல்லது
பைரெக்சியா (Pyrexia) மற்றும் காய்ச்சலுக்கான எதிர்ச் செயல் (Febrile
response) என்பது உடலின் வெப்ப அமைவு நிலைப் புள்ளி (Temperature set point) இயல்பான
உடல் வெப்ப நிலை வீச்சின் (37.5 °C - 38.3 °C) பெரும மதிப்பைக் காட்டிலும் அதிகமாக இருப்பது என்று வரையறை செய்யப்படுகிறது.
இயல்பான உடல் வெப்ப நிலைக்கான அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதோர் பெரும வரம்பு எதுவும்
இல்லை. அமைவுப் புள்ளி (Set point) யின் உயர்வால் தசைகள் சுருங்கிடத் தூண்டப்பட்டு
குளிரும் உணர்வை ஏற்படுத்தும். இதனால் அதிக அளவில் வெப்பம் உருவாக்கப்பட்டு உடலின்
வெப்பத்தைப் பாதுகாக்கும் முயற்சி ஆரம்பமாகும். உடல் மீண்டும் இயல்பு அமைவு நிலைப்புள்ளியை
அடைந்ததும் உடல் வியர்த்து, சிவந்து போய்ச்
சூடாக இருப்பதை உணரலாம். அபூர்வமான நேர்வுகளில் காய்ச்சல் வலிப்பு (Febrile
seizure) ஏற்படலாம் ஆனால் குழந்தைகளுக்கே பொதுவாக இது உரித்தானது. காய்ச்சல் சாதாரணமாக
41.0 °C - 42.0 °C க்கு மேல் உயராது.
ஹைப்பர் பைரெக்ஸியா(Hyper
Pyrexia) அல்லது உயர் காய்ச்சல் என்பது உடல் வெப்பநிலை அடையும்
பெரும மதிப்பு. இது மூலத்தைப் பொறுத்து 41.0 °C அல்லது 41.5 °C க்குச் சமமான
அல்லது அதற்கு மேற்பட்ட முக்கியமான உடல் வெப்பநிலையாகப் வகைப்படுத்தப்படுகிறது. இத்தகைய
உடல் வெப்ப நிலையால் மூளையில் நிரந்தர பாதிப்பு அல்லது மரணம் ஏற்பட வாய்ப்புள்ளதால்
இந்த நிலை ஒரு மருத்துவ அவசரநிலையாகக் (Medical Emergency) கருதப்படுகிறது. உயர் காய்ச்சல்
ஏற்படத் தலைக்குள் (மூளையில்) ஏற்படும் இரத்தக் கசிவு (Intracranial Hemorrhage) பொதுவான
காரணமாக இருக்கிறது.
நமது உடல் வெப்ப நிலை 35 o C க்கும் குறைவாகக் காணப்படுவதையே
உடல் வெப்பக் குறைவு நிலை
(Hypothermia) ஹைப்போதெர்மியா என்று அழைக்கிறோம். உடலின் வெப்பநிலையைச் சரியான
நிலையில் வைத்திருப்பது ஹைப்போதாலமஸ் (Hypothalamus) என்ற மூளையில் உள்ள ஒரு பகுதியின்
வேலை. ஹைப்போதாலமஸ் உடல் வெப்ப நிலையில் ஏதாவது மாறுபாட்டை உணர்ந்ததால் உடனே உடலைத்
தூண்டி எதிர் செயலாற்றி மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரச் செய்யும். உடலின் வழக்கமான
வளர்சிதை மாற்றத்தின் போது வெப்பம் உருவாகிறது. அவ்வாறு உருவான வெப்பத்தின் பெரும்
பகுதி உடலின் மேல்பரப்புத் தோல் (Skin surface) வழியாகச் சுற்றுப்புறத்திற்கு வெப்பக்
கடத்தல், வெப்பச் சலனம் மற்றும் வெப்பக் கதிர்வீச்சு மற்றும் ஆவியாதல் வழியாகச் சுற்றுப்புறத்துக்குத்
தரப்படுகிறது.
சுற்றுப்புறம் குளிர்ச்சியாக இருந்தால் உடல் நடுங்கத் தொடங்கும். இதனால் தசைகளின்
இயக்கம் அதிகமாகி கூடுதல் வெப்பம் உருவாகும். இருந்தபோதிலும் மிகக் குளிர்ந்த சூழலில்
உடல், சுற்றுப்புறத்திற்கு அதிக வேகத்தில் வெப்பத்தை இழக்கும். ஆகவே உடலின் உட்புற
வெப்பம் குறைந்து விடும். இதனால் உடல், தோலுக்குஅடியில் செல்லும் இரத்தக் குழாய்களில்
செல்லும் இரத்தத்தை வேறு இடங்களுக்குத் திருப்பி விடும். அதனால் தோல் வழியாக இழக்கும்
வெப்பத்தின் அளவு உடனடியாகக் குறைக்கப்படும். திருப்பி விடப்பட்ட இரத்தம் மூளை, இதயம்,
சிறுநீரகம் மற்றும் நுரையீரல் போன்ற இன்றியமையாத உறுப்புகளுக்கு அனுப்பப்படும். இதயமும்,
மூளையும் குறைந்த வெப்பநிலைக்கு அதிக உணர்திறன் கொண்டவை. குறைந்த உடல் வெப்ப நிலையில்
இந்த உறுப்புகளின் மின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு இன்றியமையாத உறுப்புகளின் இயங்கும்
வேகம் குறையத் தொடங்கும். இவ்வாறு தொடர்ந்து உடல் வெப்பநிலை குறைந்து கொண்டே வந்தால்
இறுதியில் இன்றியமையா உறுப்புகள் செயலிழந்து மரணம் உண்டாகும். உடல் சுற்றுப்புறத்திற்கு
இழக்கும் வெப்பத்தை தான் உருவாக்கும் வெப்பத்தால் ஈடு செய்ய இயலாத நிலையில் உடல் வெப்பநிலை
இயல்புக்கு மாறாகக் குறைந்து போய் விடும் கடுமையான நிலையை ஹைப்போதெர்மியா எனலாம்.
உடல் மிகை வெப்ப நிலை
என்ற ஹைப்பர்தெர்மியா (Hyperthermia), இந்த நிலை உடல் சுற்றுப்புறத்திலிருந்து
பெறும் வெப்பத்தை விடக் குறைவான வெப்பத்தையே வெளியில் கொடுக்க முடியும் என்ற நிலையில்
உடலின் வெப்ப நிலை உயர்ந்து கொண்டே வரும். உடல் வெப்பநிலை 37.5 or 38.3 °C
(99.5 or 100.9 °F) க்குள் இருப்பதும் ஹைப்பர்தெர்மியாதான். காய்ச்சல் மற்றும்
உடல் உயர் வெப்பநிலை இரண்டின் வீச்சும் ஒன்றாக இருந்தாலுமே, இவை இரண்டும் மாறுபட்டவை.
காய்ச்சல் நுண் கிருமிகளால் ஏற்படுகிறது. ஆனால் உடல் உயர் வெப்பநிலை(Hyperthermia)
சுற்றுப்புறக் காரணங்களால் உருவாகிறது. அதிக வெய்யிலின் நேரடித் தாக்கத்தால் உடலில்
நீர்ச் சத்துக் குறையும் போது ஹைப்பர்தெர்மியா ஏற்படும். உடலில் அதிக நீர் இழப்பு
(Dehydration) காரணமாக வெப்பப் பக்கவாதம் (Heat stroke) ஏற்படும். சரியான சிகிச்சை
தரப்படாத நிலையில் உயிர் ஆபத்தை உண்டாக்கும்.
படம்
(அ)
படம்
இணையத்திலிருந்து எடுத்தாளப்பட்டது.
நன்றி
https://en.wikipedia.org/wiki/Fever#/media/File:Febbre.gif
(1) முறைக்காய்ச்சல்
(Intermittent fever).
குறிப்பிட்ட கால இடைவெளியில் விட்டு விட்டு வரும் முறைக்காய்ச்சலில் ஒவ்வொரு
நாளும் உடல் வெப்பநிலை உயர்ந்தாலும் மீண்டும் இயல்பு நிலைக்கோ (37.2o C)
அதற்குக் கீழாகவோ வரும். முறைக் காய்ச்சலில் உடல் வெப்பநிலை தொடர்ந்து பல மணி நேரம்
உயர்ந்து காணப்படும். பின்பு மீண்டும் தன் இயல்பு நிலைக்குத் திரும்பும். மறுபடியும்
வெப்பநிலை உயர்வதற்கு முன்னர் கால இடைவெளி இருக்கும்.
இதில் அன்றாடக் காய்ச்சல் (quotidian fever) என்பது ஒவ்வொரு நாளும் (24 மணி
நேர இடைவெளியியில்) சில மணி நேரம் காணப்படும்.
மூன்றாம் நாள் முறைக்காய்ச்சல் (Tertian fever) என்பது இரண்டு நாட்கள் இடைவெளியில்
(48 மணி நேர) வரும் காய்ச்சலாகும்.
நான்கு நாட்களுக்கு ஒரு முறை வரும் (Quartan fever) 72 மணி நேர இடைவெளியில் வருவது.
பொதுவாகத் தொற்று நோய்த் தாக்குதல் காரணமாக முறைக் காய்ச்சல் ஏற்படும். இதற்கு மலேரியா,
செப்சிஸ், எலிக்கடிக் காய்ச்சல், காச நோய் ஆகியன (Malaria,Sepsis, Rat- bite
fever, Tuberculosis) சிறந்த எடுத்துக்காட்டுகள். முறைக்காய்ச்சலுக்குக் காரணமமான தொற்றுநோயை
அறிந்து கொள்ளுவது நோயாளியின் மருத்துவ வரலாற்றின் அடிப்படை மற்றும் முழுமையான இரத்தப்பரிசோதனை
(Complete blood Count Test), இரத்த நுண்ணுயிரி வளர் சோதனை (Blood culture test) ஆகியவற்றையும்
தவிரக் கூடுதலாகப் பரிந்துரைக்கப்படும் மார்பு எக்ஸ் கதிர் சோதனை (Chest X-Ray), அடிவயிறு
மீயொலி நோட்டம் (Abdominal ultra sonography) போன்ற சோதனை ஆகியவற்றின் முடிவுகளின்
அடிப்படையிலானது.
(2) தணிந்துயரும் காய்ச்சல்
(remittent fever) என்பதில் ஒவ்வொரு நாளும் உடல் வெப்ப நிலை குறையும் போது
இயல்பு நிலைக்கு வராது. உடல் வெப்ப நிலை அடிப்படைக் கோட்டு மதிப்பைத் (Base line
value) தொடாமல் இயல்பை விட உயர்ந்தே காணப்படும். உடல் வெப்ப நிலையின் தினசரி மாற்றத்தில்
24 மணி நேர காலத்தில் மாறுதல் 1o C க்கு அதிகமாகவே காணப்படும். இவ்வகைக்
காய்ச்சலுமே பெரும்பாலும் தொற்று நோய்கள் காரணமாகவே ஏற்படும். இதற்கு டைஃபாயிட், இதய உட்பரப்புத் தொற்று, ப்ரூசெலொசிஸ்
(Typhoid, Infective Endocarditis, Brucellosis) ஆகியன சிறந்த எடுத்துக்காட்டுகள்.
தணிந்துயரும் காய்ச்சலைக் நோயுணர்தல் நோயாளியின்
மருத்துவ வரலாற்றின் அடிப்படை மற்றும் முழுமையான இரத்தப்பரிசோதனை (Complete blood
Count Test), இரத்த நுண்ணுயிரி வளர் சோதனை (Blood culture test) ஆகியவற்றுடன் கூடுதலாகப்
பரிந்துரைக்கப்படும் மார்பு எக்ஸ் கதிர் சோதனை
(Chest X-Ray) முடிவுகளின் அடிப்படையிலானது.
(3) தொடந்த
அல்லது நீடித்த காய்ச்சல் (continuous or sustained fever) நிலையில் உடல் வெப்ப
நிலை உடல் வெப்ப நிலை அடிப்படைக் கோட்டு மதிப்பைத் (Base line value) தொடாமல் இயல்பை
விட உயர்ந்தே காணப்படும். 24 மணி நேர காலத்தில் . உடல் வெப்ப நிலையில் பெருமத்துக்கும்
சிறுமத்திற்கும் இடையிலான மாறுதல் 1o C க்குக் குறைவாகவே காணப்படும். பொதுவாக
இவ்வகைக் காய்ச்சல் சில தொற்று நோய் காரணமாக ஏற்படுகிறது. இதில் வெப்ப நிலை ஒரு ஏணி
போன்று படிப்படியாக அதிகரித்து உயர்கிறது.
இதற்கு டைஃபாயிட், இதய உட்பரப்புத் தொற்று, டெங்கு (Typhoid, Endocarditis,
Dengue) ஆகியன சிறந்த எடுத்துக்காட்டுகள்.
நோய் அறிதல் மருத்துவ அறிகுறிகளையும் வெளிப்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இவை தவிர மார்பு எக்ஸ் கதிர்ப் படம் மற்றும் கணினி வழி உட்தள ஊடுகதிர் வரிக்கண்ணோட்டப்
படம் (Computerised Tomography Scan) ஆகியனவும் பயன்படுத்தப்படுகின்றன.
(4) மீள வரும் காய்ச்சல் (Relapsing
Fever)
இந்த வகைக் காய்ச்சல் மனிதர்களுக்கு
பொரோலியா பேரினத்தை (genus Borrellia) சேர்ந்த நுண்ணுயிரி
(Bacteria) தொற்றுக் கடத்திகள் மூலமாக கடத்தப்படுவது. இந்த நுண்ணுயிர்க்கிருமிகளைக் கடத்துவன
பூச்சிகள் போன்ற உயிருள்ளவையாகவோ மற்றும் தூசு போன்ற உயிரற்ற பொருளாகவோ இருக்கலாம்.
இது பேன் (Lice) மற்றும் ஆர்னித்தோடோரோஸ் பேரினத்தைச் சேர்ந்த மிருதுடல் உண்ணிகள் (Soft bodied ticks) கடிப்பதனால் பரப்பப்படுகிறது.
பெரும்பாலானோருக்கு கடிபட்ட ஐந்து (5) முதல் பதினைந்து (15) நாட்களுக்கு இடையில் காய்ச்சல்
உருவாகத் தொடங்கும். நோய் அறிகுறிகளில் சளி, கடும் காய்ச்சல், தலைவை, மூட்டு வலி,குமட்டல்
ஆகியன இருக்கலாம். சில் நேர்வுகளில் சொறி கூட ஏற்படலாம். இந்த அறிகுறிகள் இரண்டு
(2) முதல் ஒன்பது (9) நாட்கள் வரை இருந்து மறைந்து விடும். தக்க சிகிச்சை எடுத்துக்
கொள்ளப்படாத நிலையில் இச்சுழற்சி பல வாரங்களுக்குத் தொடரும். ஆரம்ப நிலையில் கண்டறிய
இரத்தத்தீற்றல் சோதனை செய்யலாம். இரத்தத் தீற்றல் சோதனையில் சரியான முடிவை எட்ட இயலாத
நிலையில் எடுத்துக்காட்டாக எலிக்காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பைரோஸிஸ் ( Leptospirosis) போன்ற நோய்த் தொற்று கண்டறிய பாலிமரேசு தொடர் வினை (polymerase chain reaction – PCR) சோதனை மேற் கொள்ள மருத்துவர் பரிந்துரைப்பார்.
இது போன்ற காய்ச்சல் பொதுவாக தனி நபர் சுகாதாரம் பேண இயலாத பொருளாதாரத்தில் நலிந்த
பிரிவினருக்கும், சுகாதாரமற்ற இடங்களில் வசிப்பவர்களுக்கும் வரஅதிக வாய்ப்புகள் உள்ளது.
ஆகவே நீங்கள் கருதுவது போல் காய்ச்சல் (Fever) என்பது சாதாரணமான ஒன்றல்ல. பல
நோய்களுக்கு அதுவே உடலின் மொழி அல்லது ஒரு சைகை(Signal). அந்தச் சைகையை சரியாக அறிந்து
கொள்ள அனுபவமும் அதை உறுதிபடுத்திக்கொள்ளச் சோதனைகளும் மிகவும் அவசியம்.
அடுத்து இரத்த அழுத்த அளவிடுகளான சிஸ்டோலிக் (systolic), டயஸ்டோலிக்
(Diastolic) இரத்த அழுத்தங்கள் மற்றும் கூடவே நாடித் துடிப்பும் (Pulse) அளக்கப்படுகிறது.
இவற்றைப் பற்றி அடுத்தபகுதியில் சற்று விரிவாகக்
காண்போம். இயல்பு நிலைக்கு சற்று அதிகமாக இருப்பின் தொடர்ந்து வாரத்தில் மூன்று அல்லது
நான்கு நாட்கள் என்றவாறு ஓரிரு வாரங்களுக்கு இரத்த அழுத்தம் அளவிடப்படுகிறது. காரணம்
இரத்த அழுத்த நோயை ஒரே ஒரு அளவீட்டில் அறிந்து கொண்டு உறுதி செய்தல் இயலாது. இரத்த
அழுத்தம் நாமிருக்கும் சூழலைச் சார்ந்துள்ளது. ஒரே நாளில் நம் இரத்த அழுத்தம் பலமுறை
வேறுபடுகிறது. நமது இவ்வாறு அளவிடப்படும் போது பலமுறை இயல்பை விட உயர்ந்த இரத்த அழுத்தம்
காணப்பட்டால் மருத்துவர் மேலும் சில பரிசோதனைகளைப் பரிந்துரை செய்யலாம். இதன் வாயிலாக
அவரால் உயர் இரத்த அழுத்தம் எந்த நிலையில் உள்ளது என்பதையும் அறிந்து கொண்டு அதனைக்
கட்டுப்படுத்தும் சிகிச்சையைத் தொடங்க இயலும்.
பெரும்பாலான மருத்துவ அறிக்கைளில் சோதனை
செய்யப்பட்ட நபருக்கான மதிப்புகளும் கூடவே இயல்பான மதிப்புகளும் தரப்பட்டிருக்கும்.
இங்கு அட்டவணைகளில் கொடுக்கப்பட்டுள்ள
தரவுகள் இணையத்திலிருந்து எடுத்தாளப்பட்டவை. அவற்றில் தரப்பட்டுள்ள மதிப்புகள் வெவ்வேறு
சோதனைச் சாலைகளில் வெவ்வேறான மதிப்புகளைத் தருவதால் சற்றே மாறுபடலாம். பொதுவாகவே நம்
நாட்டில் மருத்துவச் சோதனைகளின் முடிவுகள் குறித்த அறிக்கைகள் மருத்துவருக்காக மட்டுமே
அவரது வேண்டுகோளின் அடிப்படையில் மட்டுமே தயாரித்துத் தரப்படுகின்றன. ஆகவே அந்த அறிக்கையை
வைத்து நாமாகவே எந்த முடிவுக்கும் வருவதும் சுயமாகச் சிகிச்சை மேற்கொள்வதும் மிகத்
தவறானது மட்டுமல்ல பேராபத்தானதும் கூட. ஆகவே இங்கே சொல்லப்பட்டிருக்கும் சோதனைகளில்
குறிப்பிட்ட அனைத்து மதிப்புகளும் விழிப்புணர்வு நோக்கில் மட்டுமே தரப்பட்டுள்ளன. உங்களுக்கான
சோதனையில் பெறப்படும் மதிப்பைக் கொண்டு நோய் பற்றிய எந்த ஒரு சரியான முடிவையும் மருத்துவர்களால்
மட்டுமே எடுக்க இயலும்.
இந்தியாவைப் பொறுத்தளவில் உயிர் கொல்லி
நோய்கள் பட்டியலில் முதல் பத்து (10) இடங்களில் இருக்கும் நோய்களும் மற்றும் அவற்றால்
ஏற்படும் இறப்பு விழுக்காடும் கீழே அட்டவணை (அ) யில் தரப்பட்டுள்ளது. அதிலிருந்து நமக்குத்
தெரியவரும் சில முக்கியமான விபரங்களைக் காண்போம்.
(1) இறப்புகளில் முதலிடம் பிடிப்பது
இதய இரத்தநாள நோய்கள்(Cardiovascular diseases). ஒட்டு மொத்த இறப்புகளில் கிட்டத்தட்ட
25 % இறப்புகள் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களாலேயே நிகழ்கிறது.
(2) சாலை விபத்துகளால் அதிக எண்ணிக்கையில்
மரணம் நிகழ்வதில் உலக நாடுகளிலேயே முதலிடம் வகிப்பது இந்தியாதான்.
(3) நம் நாட்டில் 15 முதல் 29 வயதுப்
பிரிவில் தற்கொலை காரணமாக மரணம் என்பது இரண்டாவது இடத்தில் இருப்பது கவலையளிக்கும்
ஒன்று.
அட்டவணை (ஈ)
உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்புப்படி,
உலக அளவில் 2016 அம் ஆண்டில் மட்டும் 15.2 மில்லியன் இறப்புகள் நிகழ்ந்துள்ளன. உலகின்
மொத்த இறப்பில் 54 விழுக்காடு இறப்புகள் முதல்
பத்து (10) இடங்களில் உள்ள நோய்களால் ஏற்படுகிறது எனத் தெரிகிறது. கடந்த பதினைந்தாண்டு
(15) காலமாகத் தொடர்ந்து முதல் பத்து இடங்களில் இந்த நோய்களே இருந்து வருவது கவலை தருகிறது.
நோய்களின் வரிசையும் இறப்பு எண்ணிக்கை மற்றும் இறப்பு விழுக்காடு ஆகியன அட்டவணை (ஈ)
வில் தரப்பட்டுள்ளது.
அட்டவணை (உ)
ஆகவே இன்று உலகம் முழுவதும்
எடுத்துக் கொண்டாலோ அல்லது நம் நாட்டை மட்டுமே எடுத்துக் கொண்டாலோ, இதய இரத்த நாள நோய்கள்
அல்லது குருதி ஓட்டக் குறை மற்றும் பக்கவாதம் ஆகிய நோய்களே முதலிடத்தில் இருப்பது நம்
கவனத்தை ஈர்க்கிறது. இதய இரத்த நாள நோய்களுக்கு
உயர் இரத்த அழுத்தம் தொடங்கி பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை பற்றி ஒவ்வொன்றாகச் சுருக்கமாக
அடுத்த பகுதியில் காண்போம்.
வளரும்…






Comments
Post a Comment