டி.என்.ஏ (DNA) - பகுதி 5
மூலக்கூறு கடிகாரங்கள் மனித மற்றும் பிற உயிரினகளின் பரிணாம வளர்ச்சிக் கணக்கீடுகளில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்த போதிலும் அதன் பயன்பாட்டில் சில சிக்கல்களும் உள்ளன. உண்மையில் பிறழ்வு மற்றும் மறு இணைவு ஆகிய இரண்டுமே நிகழக் கூடிய வீதங்கள் மனித பரிணாம வளர்ச்சியில் என்றுமே மாறாமல் இருந்திருக்கவில்லை என்பது ஒரு முக்கியமான சவாலாக விளங்குகிறது. இந்த வீதங்கள் இரண்டும் காலம், உயிரிங்களின் வகைகள் சார்ந்து சிறிது சிறிதாக மாற்றம் அடைகின்றன. சொல்லப்போனால் மனிதக் குழுக்களுக்கிடையில் கூட சற்று மெதுவாக மாற்றமடைகிறது. இது வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறான வேகத்துடன் டிக் டிக் என்றியங்கும் கடிகாரத்தைக் கொண்டு காலத்தை அளப்பதற்கு ஒப்பானது என்றே கூறலாம். Prdm9 என்னும் மரபணுதான் டி.என்.ஏ யின் குறுக்கிணைவு ( crossover) நிகழ்வுகள் ஏற்பட வேண்டிய இடத்தைத் தீர்மானிக்கிறது. மனிதர்கள், சிம்பன்சிகள் மற்றும் சுண்டெலிகளில் இந்த குறிப்பிட்ட மரபணுவின் வேறுபாடுகள் (variations) மறு இணைவு சுடுபுள்ளிகளைத் (Recombination hotspots) திருத்தியமைக்கின்றன. மறு இணைவு சுடுபுள்ளிகள் என்பவை மரபணுத்தொகுப...