டி.என்.ஏ (DNA) - பகுதி 5

மூலக்கூறு கடிகாரங்கள் மனித மற்றும் பிற உயிரினகளின் பரிணாம வளர்ச்சிக் கணக்கீடுகளில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்த போதிலும் அதன் பயன்பாட்டில்  சில சிக்கல்களும் உள்ளன. 

உண்மையில் பிறழ்வு மற்றும் மறு இணைவு ஆகிய இரண்டுமே நிகழக் கூடிய வீதங்கள் மனித பரிணாம வளர்ச்சியில் என்றுமே மாறாமல் இருந்திருக்கவில்லை என்பது ஒரு முக்கியமான சவாலாக விளங்குகிறது. இந்த வீதங்கள் இரண்டும் காலம், உயிரிங்களின் வகைகள் சார்ந்து  சிறிது சிறிதாக மாற்றம் அடைகின்றன. சொல்லப்போனால் மனிதக் குழுக்களுக்கிடையில் கூட சற்று மெதுவாக மாற்றமடைகிறது. இது வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறான வேகத்துடன் டிக் டிக் என்றியங்கும் கடிகாரத்தைக் கொண்டு காலத்தை அளப்பதற்கு ஒப்பானது என்றே கூறலாம்.


Prdm9 என்னும் மரபணுதான் டி.என்.ஏ யின் குறுக்கிணைவு (crossover) நிகழ்வுகள் ஏற்பட வேண்டிய இடத்தைத் தீர்மானிக்கிறது. மனிதர்கள், சிம்பன்சிகள் மற்றும் சுண்டெலிகளில் இந்த குறிப்பிட்ட மரபணுவின் வேறுபாடுகள் (variations) மறு இணைவு சுடுபுள்ளிகளைத் (Recombination hotspots) திருத்தியமைக்கின்றன. மறு இணைவு சுடுபுள்ளிகள் என்பவை மரபணுத்தொகுப்புகளில் (Genome) அதிக செயல்பாடுகளைக் கொண்ட குறுகிய பகுதியாகும். இப்பகுதியில் நடுநிலையான எதிர்பார்ப்புக்கும் மேலாக  மிக அதிகமான வீதத்தில் மறு இணைவு நிகழ்கிறது. சுடுபுள்ளிக்குள் நடக்கும் மறு இணைவின் வீதம் சுற்றுப்புறத்தை நோக்க நூறு மடங்கு அதிகமாக இருக்கும். Prdm9 மற்றும் சுடுபுள்ளிகளின் மாற்றத்தால் மறு இணைவு வீதத்திற்கான நுண்ணிய அளவுகோல், மனிதன் மற்றும் சிம்பன்சிக்கிடையில் வேறுபடுவதைப் போல் ஆப்பிரிக்கருக்கும் ஐரோப்பியருக்கும் இடையில் கூட வேறுபட வாய்ப்புள்ளது. இணைப்புச் சுடுபுள்ளிகளின் மாற்றத்தால்,  வெவ்வேறான கால அளவுகளில் வெவ்வேறான மக்கள் கூட்டங்களில் மறு இணைவுக் கடிகாரம் சிறிதளவு மாறுபட்ட வீதத்தில் தன் டிக்  டிக் இயக்கத்தை மேற்கொள்கின்றன. 


மற்றொரு பிரச்சனை பிறழ்வு வீதம் பாலினம், வயது இவற்றாலும் வேறுபடுகிறது. தந்தையர்கள் வயதாக வயதாகத் தங்களின் பிள்ளைகளுக்கு வருடத்திற்கு இரண்டு பிறழ்வுகளைக் (Mutations) கூடுதலாகத் தருகின்றனர். வயதான தந்தையர்களின் விந்தணு நிறையச் சுற்றுகள் உயிரணுப் பிரிவுக்கு ஆளாகியிருக்கும். எனவே பிறழ்வுகளுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு பெண்களின் கரு முட்டைகள் எல்லாமே ஒரே காலத்தில் அவர்கள் பிறக்கும் முன்பாகவே உருவாகி விடுவதால் அன்னையர்கள் தந்தையர்களுக்கு நேர்மாறாக  குறைந்த அளவிலான அதாவது ஆண்டுக்கு 0.25  பிறழ்வுகளையே வரும் சந்ததிக்குக் கடத்துகின்றனர். மேலும் பிறழ்வு வீதம் பூப்பெய்தலின் தொடக்கம், கருத்தரித்த வயது  மற்றும் விந்தணு உற்பத்தி வீதம் ஆகிய காரணிகளையும் பொறுத்தமைகிறது. 



இந்த வாழ்க்கை வரலாறுப் பண்புக்கூறுகள் தற்போது வாழும் முதன்மை உயிரினங்களிடையே மட்டுமல்லாமல் மனித இனத்தின் முன்னோரான அழிந்து போன உயிரினங்களிலும் வேறுபட்டிருக்கலாம். இக்காரணங்களால் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க அளவில் பிறழ்வு ஏற்படுதல் நன்கு மந்தமாகி விட்டது. 



எடுத்துக்காட்டாக சிம்பன்சியிடமிருந்து மனித இனம் பத்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்  பிரிந்தது. அக்காலகட்டத்தில்  பிறழ்வு வீதம் ஆண்டொன்றுக்கு ஆறு டி.என்.ஏ எழுத்து (ATCG) மாறுபாடு என்று கணக்கிடப்பட்டுள்ளது.




எப்படி ஒரு வாகனத்தின் வேகத்தை அது கடந்த மொத்த தூரத்தை, அத்தொலைவை கடக்க எடுத்துக் கொண்ட மொத்த காலத்தால் வகுத்துக் கணக்கிடுறோமோ அதுபோல மொத்தம் ஏற்பட்ட நியூக்கிளியோடைட் மாற்றங்களின் எண்ணிக்கையை படிமங்களின் வாயிலாக அறியப்பட்டுக் கிடைக்கும் மனிதர்களும் பிற குரங்கினங்களும் பிரிந்த தேதி முதல் இன்றுவரையான காலத்தால் வகுத்துக் கணக்கிடப்படுகிறது. இதே வழியில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெற்றோருக்கும் அவர்களது வாரிசுகளுக்கும் இடையில் இந்த வீதம் கணக்கிடப்படும் போது கிடைக்கும் மதிப்பு ஓராண்டிற்கு மூன்று என்று முன்னர் குறிப்பிட்டதில் பாதி அளவிலேயே இருக்கிறது.




உத்தேசமாக நாகரீக மனிதன் நியாண்டர்தால் மனிதனிடமிருந்து பிரிந்த காலத்தை குறைவான வீதத்தில் கணக்கிட்டால், சுமார் 765000 முதல் 550000 ஆண்டுகள் என்றும் வேகமான வீதத்தில் கணக்கிட அதுவே 380000 முதல் 275000 ஆண்டுகள் என்றும் கிடைக்கிறது. இது பெரிய வேறுபாடு என்றே சொல்ல வேண்டும்.எந்த நேர்வில் எந்த மாதிரி வீதத்தை யார் மீது பயன்படுத்த வேண்டும் என்ற சிக்கலான வினாவிற்கு தீர்வு காணும் பொருட்டு ஆய்வாளர்கள் இன்னும் புதியதான மூலக்கூறு கடிகாரங்களை பிறழ்வு மற்றும் மறு இணைவு வீதங்கள் ஏற்படுத்தும் சவால்களை எதிர் கொள்ளும்  வகையில் உருவாக்கம் செய்து வருகிறார்கள். 


தொடரும்.....

Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)