டி.என்.ஏ (DNA) - பகுதி (4)

ரோமானியாவில் குகை ஒன்றில் கிடைத்த ஐரோப்பாவின் ஆரம்ப கால (Early Modern Man)  நாகரீக மனிதனின் தாடை எலும்புப் படிமத்திலிருந்து நியாண்டர்தால்களும், ஐரோப்பிய ஆரம்பகால நாகரீக மனிதர்களும் 40000 ஆண்டுகளுக்கு முன்பு இணைந்து ஒரு கலப்பினத்தை உருவாக்கியதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இந்த தாடை எலும்பை டி.என்.ஏ சோதனை செய்த போது இதுவரை வரிசைப்படுத்தப்பட்ட நாகரீக மனித எலும்புக் கூடுகளில் அதிகபட்ச விழுக்காடு மரபணுக்களை நியாண்டர்தாலிடமிருந்து பெற்றுள்ள மரபணுத் தொகுதியைக் (GENOME) கொண்டது இதுதான் என்று தெரிய வந்துள்ளது.  அதாவது கிட்டத்தட்ட 8 முதல் 11 விழுக்காடு நியாண்டர்தால் மரபணுக்களை தன் மரபணுத் தொகுப்பில் கொண்டுள்ளதாக மரபியலாளர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது.
உடற்கூறு (ANATOMICALLY) ரீதியாக நாகரீக மனிதன் என்று கொள்ளப்படும் தொன்மையான எலும்புப் படிமங்களை கடந்த தசாப்தத்தில் டி.என்.ஏ ஆய்வுக்கு உட்படுத்திய போது கிடைத்த திடுக்கிட வைக்கும் வெளிச்சத்திற்கு வந்த உண்மை என்னவென்றால், நம் நேரடி முதாதையர்கள் நியாண்டர்தால்களுடன் பாலியல் உறவு கொண்டது மட்டுமல்லாமல் வளமான சந்ததிகளையும் உருவாக்கியுள்ளனர் என்பதே . இந்த வெளிப்பாடுகளுக்கு முற்பட்ட காலகட்டத்தில் மானுடவியல் ஆய்வாளர்கள் தங்களின் எண்ணங்களில் வேறுபட்டு  இக் கருத்தை பற்றி சர்ச்சை செய்தபடி இருந்தனர். அவர்களால் முதலில்  இதுபோன்ற உறவு சாத்தியமானதே இல்லை என்றே கருதப்பட்டது. அப்படியே அது சாத்தியப்பட்டிருந்தாலும் பாலியல் ரீதியாக வளமான சந்ததியை உருவாக்கியிருக்கவே முடியாது காரணம் நியாண்டர்தால்களுக்கும், நாகரீக மனிதனுக்கும் இடையில் மரபணுத் தொகுதிகளில் (GENOME) எகப்பட்ட வேறுபாடுகள் இருப்பது அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

இத்தகைய   கலப்பின உறவில் பெண் குதிரைக்கும், ஆண் கழுதைக்கும் பிறந்த மலட்டுத் தன்மை கொண்ட கோவேறு கழுதை (MULE) உருவாவது அதிகம் அறியப்பட்ட நிகழ்கால எடுத்துக் காட்டாக உள்ளது.

மாக்ஸ் பிளாங்க்  பரிமாண மானிடவியல்  கழக (Max Planck Institute for Evolutionary Anthropology ) ஆய்வாளர்கள் இந்த தாடை எலும்பின் 10 மில்லி கிராம்  மற்றும் 25 மில்லி கிராம் பொடியிலிருந்து இரண்டு டி.என்.ஏ சாரங்களை எடுத்தனர். அதிலிருந்து தொடக்க கால நாகரீக மனிதனுக்கும் நியாண்டர்தாலுக்கும் டி.என்.ஏ களில் உள்ள நெருக்கத்தை உறுதி செய்தனர்.
மரபியலாளர்கள் இப்போது இரண்டின் கலவையைக் கொண்ட சில அரிய படிமங்களைக் கண்டறிந்து வருகின்றனர். புதிய ஆய்வு மிகப் புதிரானதோர் கண்டுபிடிப்பைத் தந்துள்ளது.
ஒரு ஆண் தாடை எலும்பு மற்றும் ஒரு மனித மண்டையோடு இவற்றின் படிமங்களை  கதிரியக்க கார்பன் வயதுக் கணிப்பிற்கு உட்படுத்திய போது அவை 37000 முதல் 42000 ஆண்டுகளுக்கு முற்பட்டதென அறியப்பட்டது. இந்தப் படிமங்கள் பெஸ்தெரா கியு ஓஸ் (Peştera cu Oase) என்ற ரோமானிய (ROMANIA) நாட்டிலுள்ள இடத்திலுள்ள குகைகளிலிருந்து கிடைத்த,  ஐரோப்பாவின் தொடக்க கால நாகரீக மனிதனின் காலத்தால் மிகவும் முற்பட்ட மிகப் பழமையான படிமங்கள். வேறெந்த நாகரீக மனிதனும் உடல் கூறு ரீதியாகப்  பெற்றிருந்ததை விட அதிகமான நியாண்டர்தால்களின் டி.என்.ஏ களைப் பெற்றிருந்தது இந்த தனிப்பட்ட மனிதனே என்பது குறிப்பிடத் தக்கது. இது ஆரம்ப காகட்ட நாகரீக மனிதனின் முப்பாட்டனின் முப்பாட்டன் நியாண்டர்தால் என்பதை எடுத்தியம்புகிறது. கிடைத்த எலும்பு குறித்த புள்ளியியல்  பகுப்பாய்வுகள் டி.என்.ஏ ஆக்கக் கூறுகள் எட்டு முதல் பதினோரு விழுக்காடு நியாண்டர்தால்களின் மரபணுக்களைக் கொண்டுள்ளதாகக் தெளிவு படுத்துகிறது.

ஆச்சரியப்படத்தக்க வகையில் இவ்விரு இனங்களும் பல்லாயிரக்கணக்கான ஆண்டு காலம் தொடர்பு கொண்டிருந்தாலும், இன்றைய கால கட்டத்தில் ஐரோப்பாவில் வாழும் நாகரீக மனிதர்களின் முன்னோர்களுக்கும் நியாண்டர்தால்களுக்கும் இடையே கலப்பினம் ஏற்பட்டதற்கான டி.என்.ஏ சான்றுகள் மரபணுவில் இல்லை. சொல்லப் போனால் உண்மையில் ஐரோப்பியர்களிடம் காணப்படுவதை விட கிழக்கு ஆசிய மற்றும் அமெரிக்க பூர்வகுடியினரின் நாகரீக மனிதர்களிடம் அதிகமான அளவில் நியாண்டர்தால் டி.என்.ஏ யின் வெட்டுக்கூறுகள் காணப்படுகின்றது. பனியுக ரோமானியாவின் நாகரீக மக்கள், நியாண்டர்தால்களுடன் கலப்பு செய்யவில்லை என்றால் ஏன் நவீன ஐரோப்பியர்கள் நியாண்டர்தால்களின் டி.என்.ஏ கூறுகளைக் கடத்தியிருக்க வேண்டும்?

பகுப்பாய்வில் ஓஸ் (Oase) மனிதன் நாகரீக ஐரோப்பியர்களின் நேரடியான முன்னோர் அல்ல என்பது தெளிவாகிறது. ஆராய்ச்சிகள் இந்தப் புதிர் மீது மேலும் அதிகமான வெளிச்சத்தைத் தருகிறது. பண்டைய ரோமானியர்கள் ஐரோப்பியர்களின் நேரடியான மூதாதையர்கள் இல்லை. பதிலாக மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவிலிருந்து உருவான ஆரம்ப கால மனிதக் கூட்டம் குடியேற்றத்தின் போது ஐரோப்பா முழுவதும் பரவி விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றைக் கொண்டு வந்ததுடன்  தங்களின் மரபணுவையும் கடத்தியிருக்க வேண்டும். இந்தப் புதிய வாழ்க்கை முறை, முந்தைய மனித சமூகங்கள் அனைத்தையும் வகைப்படுத்திய வேட்டைக்கார வாழ்க்கையை மாற்றியமைத்தது. யுரேஷியாவிலிருந்து கிடைத்த மற்ற பிற தொன்மையான நாகரீக மனித எலும்புக் கூடுகள் பனியுகத்தில் மனிதனுக்கும் நியாண்டர்தால்களுக்கும் தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தை புறந்தள்ள ஏதுவாகிறது.




 மேற்கு இரஷ்யாவின் கோஸ்டெங்கி 14 என்ற இடத்திலிருந்து கிடைத்த தனிப்பட்ட மனிதனின் எலும்புக்கூட்டின் மீதான டி.என்.ஏ ஆய்வுகள் கிட்டத்தட்ட 1.7 முதல் 3.8 விழுக்காடு நியாண்டர்தால் டி.என்.ஏ களை கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த எலும்புக்கூடு 36000 முதல் 39000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது என்றும், கிழக்கு ஆசியர்களைக் காட்டிலும் இம் மனிதன் பிற்கால ஐரோப்பியர்களுடன் நெருங்கிய உறவு உடையவன் என்றும் தெரிகிறது.


இதற்கிடையே மேற்கு சைபீரியாவின் அஸ்ட் இஷ்ஹிம்(Ust’-Ishim) என்ற இடத்திலிருந்து கிடைத்த 45000 ஆண்டுகள் தொன்மையான படிம எலும்புக்கூடு தன்னில் 0.4 முதல் 3.6 விழுக்காடு நியாண்டர்தால் டி.என்.ஏ வை பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.  ஆய்வு முடிவுகள் கோஸ்டெங்கி 14 மற்றும் அஸ்ட் இஷ்ஹிம் இடங்களில், வாழ்ந்த மனிதனின் காலத்திற்கு பல காலம் முன்னதாகவே நியாண்டர்தாலிருந்து நாகரீக மனிதனுக்கான மரபணு ஓட்டம் தொடங்கியிருக்க வேண்டும் என்று காட்டுகிறது. அஸ்ட் இஷ்ஹிம் நிகழ்வில் அங்கே வாழ்ந்த மனிதனின் காலத்திற்கு சுமார் 1000 ஆண்டுகள் முன்னதாக மட்டுமில்லாமல்  ரோமானியா ஓஸ் 1(oase 1) குகை மனிதனுக்கும்  மிக முன்னதாக இருந்திருக்கவும் வேண்டும். 

தொடரும்.......



Comments

Post a Comment

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)