கோமா கொத்து (Coma Cluster)

இதுவரை அறியப்பட்ட பெரும் விண்மீன் திரள் கொத்துகளில் (galaxy cluster) ஒன்று கோமா கொத்து (Coma Cluster).  நடுத்தர மற்றும் பெரிய பொழுதுபோக்கு வகை தொலைநோக்கியால் (Amateur telescope)நோக்கும் போது கட்புலனாகும் சற்று தெளிவற்ற ( கோமாபெரினிசஸ் விண்மீன் கூட்டத்தில் (Coma Berenices constellation) காணப்படும் விண்மீன் திரள்களின் குழுவே கோமா விண்மீன் திரள் கொத்து. சிம்மத்திற்கும் (Leo ) , பூட்டஸ் (Bootes) க்கும் இடையில் அமைந்துள்ள இதனை வசந்த மற்றும் கோடை கால மாலைப் பொழுதுகளில் எளிதாகக் காணலாம். சிம்மத்தில் ரெகுலசும் (Regulus) பூட்டசில் சுவாதி என்று சொல்லப்படும் அக்குரசும் (Arcturus) அதிகமாக அறியப்பட்ட மிகவும் பொலிவான விண்மீன்கள்.


திறந்த விண்மீன் கொத்துக்கள், மற்றும் தொலைநோக்கி வழியே காண்பதற்கு ஏதுவான தொலைவான விண்மீன் கொத்துக்களையும்  வானத்தில் காண்பதற்குரிய பகுதி இதுதான். கோமா விண்மீன் திரள் கொத்துக்களைக் காண்பதற்கு இருண்ட வானம் அவசியம். 


இந்த விண்மீன்திரள் கொத்து, கோமாபெரினிசஸ் விண்மீன் கூட்டத்தின் வடக்கு எல்லைக்கு அருகில், அதாவது தோராயமாக ரோ-பூட்டிஸையும் (Rho – Bootes) டெல்டா- லியோனிஸையும் (Delta Leonis) இணைக்கும் நேர்கோட்டின் மத்தியில் வட அண்ட முனைக்கு (North Galatic Pole) அருகிலும் அமைந்துள்ளது.


  
கோமா விண்மீன் திரள் கொத்தின் வட்டமான மையப்பகுதி  கிட்டத்தட்ட முழுமதியின் பரப்பைப் போல் ஒன்பது மடங்கு பரப்பளவு கொண்டது. முழு கொத்து இன்னும் பல மடங்கு தொலைவாகப் பரவி இருக்கும். எண்ணிலடங்காத பிற விண்மீன் திரள் கொத்துகள் இந்தப் பகுதியில் காணக் கிடைப்பதால் வானின் இப்பகுதி விண்மீன் திரள்களின் சாம்ராஜியம் (Realm of the Galaxies) என்ற அழகான பெயரிட்டு அழைக்கப்படுகிறது.


Image courtesy: http://io9.gizmodo.com/5811816/a-helpful-map-of-the-50000-nearest-galaxies

ஒரு புறத்திலிருந்து மறுபுறம், கிட்டத்தட்ட 20 மில்லியன் ( 200 இலட்சம்) ஒளி ஆண்டுகள் தொலைவு அளவுக்குப் பரந்துள்ள  கோமா விண்மீன் திரள் கொத்து சுமார் 320 மில்லியன் ( 3200 இலட்சம்) ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. வினாடிக்கு 6900 கிமீ வேகத்தில் அதாவது மணிக்கு 15 மில்லியன் (150 இலட்சம்) கிமீ வேகத்தில் நம்மிடமிருந்து விண்மீன் திரள் கொத்து பறந்து சென்றபடி உள்ளது.

நிற்க. ஒரு ஒளி ஆண்டு என்பது 9.461×1012 கிமீ என்பதை நினைவில் கொள்க.

இதுகாறும் அறியப்பட்டுள்ள அதிக  விண்மீன் திரள்களைக் கொண்ட கொத்துக்களில் ஒன்றான கோமா திரள் கொத்தில், எப்படியும் பத்தாயிரம் அல்லது அதற்கு மேல் விண்மீன் திரள்கள் (Galaxies) இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எப்படியாயினும் நல்ல தெளிவான இரவு நேரத்து வானில் புற உதவி எதுவுமின்றி வெறும் கண்களுக்குக் கட்புலனாகும் விண்மீன்களின்  எண்ணிக்கையை விட அதிகமான தனித்த விண்மீன் திரள்கள் இருக்கும் என்றே கருதப்படுகிறது.
கோமா விண்மீன் திரள் கொத்தில் அடங்க்கியுள்ள பெரும்பாலான விண்மீன் திரள்கள் நீள் வட்ட (elliptical) வடிவிலானவையாக இருப்பினும் சில விண்மீன் திரள்கள் சுருள் (spiral) வடிவிலும் காணப்படுகின்றன. NGC 4889 மற்றும் NGC 4874 இரண்டும் மிகப் பொலிவானவை. இவைகள் நமது சூரியன் அமைந்துள்ள விண்மீன் திரளான பால் வழிக் கூட்டத்தை விட குறைந்தது 2 முதல் மூன்று மடங்கு அளவில் பெரியவை. நமது விண்மீன் திரளின் கூட்டாளி விண்மீன் திரள்களான பெரிய மெக்லானிக் முகில், சிறிய மெக்லானிக் முகில் ஆகியவற்றைப்போல் அதிக எண்ணிக்கையிலான குள்ள விண்மீன் திரள்களைக் (Dwarf galaxies) கொண்டது.
அதிகம் தெளிவில்லாத விண்மீன் திரள் கொத்து என்பதால் மனிதனால் வெறும் கண்ணாலோ, இருகண் நோக்கியாலோ அன்றி சிறிய தொலைநோக்கி உதவியுடனோ காண இயலாது. இக்காரணத்தால் முற்காலத்தில் அதிகமாக அறியப்படாத இத்துடன் தொடர்புடைய தொன்மக் கதைகள் எதுவும் இல்லை. இருப்பினும் ஏபெல் 1656 (Abel 1656) என்ற இன்னொரு பெயருடைய கோமா விண்மீன் திரள் கொத்து குறித்த மிகவும்  சுவாரசியமான வரலாறு ஒன்று உள்ளது.
அதிக விண்மீன் திரள் அடர்த்தி கொண்ட , அளவில் பெரிய விண்மீன் திரள் கொத்துக்களில் ஒன்றான  இந்த விண்மீன் திரள் கொத்துதான் நமது விண்மீன் திரளில் இருண்ட பொருள் (dark matter ) பற்றிய முதல் சிந்தனை ஏற்பட மூலகாரணமாக இருந்தது. இதுவரை கட்புலனாகாத, மர்மமான இந்த இருண்ட பொருள், மிகப் பெருமளவில் மொத்த நிறையையும் அண்டத்தின் ஈர்ப்பு வலிமையையும்  அதிகப்படுத்தி அண்டத்தின் பரிணாம வளர்ச்சியையும் அதன் தலைவிதியையும் பாதிக்கிறது.
1930 ஆண்டு சுவிஸ் – அமெரிக்க வானியலாளர் ஃபிரிட்ஸ் ஸிவிக்கி (Fritz Zwicky) கோமா விண்மீன் திரள் கொத்தைக் கண்டறியும் வரையில் இருண்ட பொருள் என்பது யாரும் அறியாத அல்லது அப்படி ஒரு பொருள்   இருப்பதாக சந்தேகம் கொள்ளாத ஒன்றாகவே இருந்தது. ஸிவிக்கி இந்த விண்மீன் திரள் கொத்தின் (cluster)  கட்புலனாகும் விண்மீன் திரள்களின் (visible galaxies) மொத்த நிறையைக் கணக்கிட்டு சமன் செய்தார்.
பின்னர் மாற்று முறையாக அவர் திரள் கொத்தின் விளிம்பில் இயக்கத்திலுள்ள திரள்களை உற்றுநோக்கிய போது,  அவற்றின் இயக்கம்  கொத்தின் ஒட்டு மொத்த ஈர்ப்புவிசை அதாவது நிறை நிர்ணயிப்பதைக் கண்டறிந்தார். ஸிவிக்கி  இரண்டாவது முறையில் இயக்கம் மூலம் பெறப்பட்ட நிறை மிக அதிக அளவில் முதல் முறையில் அதாவது புலனாய்வு கணக்கிட்டதிலிருந்து வேறுபட்டது.
வானியலாளர் ஸிவிக்கியைப் பொறுத்தவரை நியூட்டனின் ஈர்ப்பியல் விதியின் மீது ஐயம் கொள்ளவோ அல்லது தவறு என்று சொல்லவோ எந்த  நியாயமான காரணமும் இல்லை. ஆகவே ஜெர்மன் மொழியில் டங்கில் மேட்டெரி(Dunkle Materie) என்ற புதிய பொருள்(இருண்ட பொருள்)  பிரச்சனைக்கு தீர்வாக கூடுதல் நிறை மூலமாக உருவாக்கப்பட்டது.

இன்றைக்கு அண்டம் முழுவதும் இருண்ட பொருளின் முத்திரையை எங்கும் காண முடிகிறது. இது காட்சிப்படும் விண்மீன்கள், விண்மீன் திரள்கள் போன்ற பொருளைக் காட்டிலும் குறைந்தது ஐந்து மடங்காவது அதிகமாக இருக்க வேண்டும் என்று அனுமானிக்கப்படுகிறது.


Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)