நிஷ்கலங் மகாதேவ் ஆலயம்


மகாபாரதத்தில் குருஷேத்திரப் போரில் கௌரவர்கள் கொல்லப்பட்டு பாண்டவர்கள் வெற்றி அடைகின்றனர். போரில் வென்ற போதும் சொந்தபந்தங்களைக் கொன்ற பெரும் பாபம் அவர்களைச் சேர்ந்ததால் பாண்டவர்களின் மனதில் நிம்மதி இல்லாமல் போனது.
இந்தப் பெரும் பாபம் நீங்கி விமோசனம் பெற வேண்டி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை அணுகி வழிகாட்ட வேண்டினர்.

பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்களிடம் ஒரு கருப்புப் பசுவையும் கருப்புக் கொடியையும் அளித்தார். கருப்புக் கொடியைப் பிடித்தபடி கருப்புப் பசுவைப் பின் தொடர் வேண்டும் என்றும், எந்த ஒரு இடத்தில் கருப்புக் கொடியும், கருப்புப் பசுவும் வெண்ணிறமாக நிறம் மாறுகிறதோ அந்த இடத்தில் பாபவிமோசனம் பெறச் சிவபெருமானை நோக்கித் தவமியற்றி வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.


பாண்டவர்கள் ஐவரும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அறிவுரைப்படி கருப்புப் பசுவின் பின்னே கருப்புக் கொடியைப் பிடித்தவாறு பல ஆண்டுகளாகப் பாரத தேசத்தின் பல இடங்களிலும் நடந்து வந்தனர். தற்போதைய குஜராத் மாநிலத்தில் பவ்நகர் (Bhavnagar) மாவட்டத்தில் உள்ள கோலியாக் (Koliyak)நகரத்தின் கடற்கரைக்கு வந்தபோது கருப்புக் கொடியும், கருப்புப் பசுவும் வெள்ளையாக நிறம் மாறின.


பாண்டவர்கள் தாங்கள் தவமியற்ற வேண்டிய இடம் இதுதான் என்றறிந்து கொண்டதும் சிவபெருமானை நோக்கிப் பல ஆண்டுகள் கடும் தவம் மேற்கொண்டனர். அவர்களின் கடும் தவத்தில் மகிழ்ந்த பரமேஸ்வரன் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகக் காட்சியளித்து பாபவிமோசனம் அளித்தார். 


இந்த இடத்தில் பாண்டவர்கள் ஆலயம் எழுப்பி வழிபட்டனர். ஆனால் காலப்போக்கில் புயல், பூகம்பம், சுனாமி போன்றவற்றால் கோயில் முழுக்க அழிந்து போனது. அதில் மிச்சமாக உள்ளது நந்தியுடன் கூடிய ஐந்து சுயம்புலிங்கங்கள் மட்டுமே.

2001 குஜராத்தில் பூகம்பம் வந்த போதும், நிறையப் புயல்களால் தாக்கப்பட்டிருந்த போதும் இந்த சிவலிங்கங்கள் இன்னும் அப்படியே உள்ளது பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது. 


இந்த ஆலயம் கோலியாக் கடற்கரையிலிருந்து அரபிக்கடலுக்குள் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஒரு நாளின் சுமார் 19 மணி நேரம் கடலுக்குள் முப்பதடி ஆழத்தில் மூழ்கியே இருக்கிறது. 


கோவில் கடலில் மூழ்கியுள்ள நேரத்தில் கோவிலில் உள்ள ஒரு கோபுரத்தின் மேற்பகுதியை மட்டுமே காண இயலும்.



கோவிலைக் கடல் உள்வாங்கும் நேரத்தில் அதாவது தாழலை (Low tide) உள்ளபோது மட்டுமே வெறுங்கால்களால் நடந்து போய் அடைய இயலும். இந்த நேரம் அன்றைய நாளின் திதியைப் பொறுத்தது.

இந்திய நாள்காட்டி ஒரு மாதத்தை 15 திதிகள் கொண்ட இரண்டு பட்சங்களாகப் பிரித்துள்ளது. ஒன்று வளர்பிறை(சுக்ல பட்சம்). மற்றது தேய்பிறை(கிருஷ்ண பட்சம்). இதையே குஜராத்தியில் சுத் - வாட்(sud - vad) என்று குறிப்பிடுகின்றனர்.

வளர்பிறை - பிரதமை(1), துவிதியை(2), திருதியை(3), சதுர்த்தி(4), பஞ்சமி(5), ஷஷ்டி(6), சப்தமி(7), அஷ்டமி(8), நவமி(9), தசமி(10), ஏகாதசி(11), துவாதசி(12), திரயோதசி(13), சதுர்த்தசி(14), பௌர்ணமி(15) என்றும்

தேய்பிறை - பிரதமை(1), துவிதியை(2), திருதியை(3), சதுர்த்தி(4), பஞ்சமி(5), ஷஷ்டி(6), சப்தமி(7), அஷ்டமி(8), நவமி(9), தசமி(10), ஏகாதசி(11), துவாதசி(12), திரயோதசி(13), சதுர்த்தசி(14), அமாவாசை (15) என்ற வரிசையிலும் இருக்கும்.

குறிப்பிட்ட திதியில் தாழ் அலைகள் (Low tide) மற்றும் உயர் அலைகள் (High tide) ஏற்படும் நேரங்கள் தினமும் வெவ்வேறு நேரங்களில் நடைபெறுகிறது. 

இந்த நேரங்களின் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது. அட்டவணைப்படி கடல் கரையை விட்டு உள்வாங்கும் (receding) நேரம் மீண்டும் கரையை நோக்கி முன்னேறும் (advancing) நேரம் குறித்து அறிந்து கொண்டு சென்றால் மட்டுமே நன்கு தரிசனம் செய்ய முடியும்.

ஆலய தரிசன நேரங்கள் 

திதி (தேய்பிறை அல்லது வளர்பிறை)

 தாழ் அலை நேரம் - உயர் அலை நேரம்

திதி (1) காலை 8:18 - மதியம் 1:18 

திதி (2) காலை 9:16 - பிற்பகல் 2:06 

திதி (3) காலை 9:54 - பிற்பகல் 2:54 

திதி (4) காலை 10:42 - பிற்பகல் 3:42

திதி (5) காலை 11:30 AM - மாலை 4:30 

திதி (6) நண்பகல் 12:18 - மாலை 5:18 

திதி (7) மதியம் 1:06 - மாலை 6:06 

திதி (8) பிற்பகல் 2:18 - முன்னிரவு 7:17  

திதி (9) பிற்பகல் 3:06 - முன்னிரவு 8:06 

திதி (10) பிற்பகல் 3:54 - முன்னிரவு 8:54

திதி (11) மாலை 4:32 - பின்னிரவு 9:42 

திதி (12) மாலை 5:30 - பின்னிரவு 10:30

திதி (13) மாலை 6:18 - பின்னிரவு 11:18

திதி (14) முன்னிரவு 7:06  - நள்ளிரவு 12:06 

திதி (15) முன்னிரவு 7:30 - நள்ளிரவு 12:30 

தாழலை நேரத்தின் போது கரையை விட்டு உள்வாங்கும் கடல் நீர் உயரலை நேரத்தின் போது மீண்டும் கரையை நோக்கி முன்னேறி நிரம்பி விடும்.

கோயிலை ஒட்டி பாண்டவர்கள் உருவாக்கிய பாண்டவ தீர்த்தம் ஒன்னு உள்ளது. இங்கு கை கால்களை சுத்தம் செய்த பின்னரே சிவ லிங்கங்களை பக்தர்கள் பூஜை செய்கின்றனர்.

06.02.2023 அன்று நாங்கள் எங்களுடைய யாத்திரையின் ஆறாவது நாளில் இங்கு சென்று சிவ வழிபாடு செய்தோம்.

நாங்கள் தேய்பிறை (கிருஷ்ணபட்சம்) பிரதமை தினத்தில் சென்றோம். அந்நாள் திதி (1) ஆகவே காலை 8.18 மணி முதல் கடல் உள்வாங்கத் தொடங்கியது. உள்வாங்க உள்வாங்க நாங்களும் கூடவே நடந்து சுமார் 9.45 மணிக்கெல்லாம் கோவிலை அடைந்தோம். 

முன்னதாக எங்களுக்கு வழிகாட்டியாக அர்ச்சகர்கள் இருவர் கடலுக்குள் நடந்து சென்று தினசரி வழிபாடுகளைத் தொடங்குகின்றனர்.‌  நம்முடன் கூடவே தமுக்கடித்தபடி வழிகாட்டுபவர் ஒருவரும் வருகிறார். அங்கு அர்ச்சகர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் யார் வந்தாலும் அமர வைத்து சங்கல்பம் அபிஷேகம் அர்ச்சனை செய்விக்கின்றனர். வாய் திறந்து காசு எதுவும் கேட்பதில்லை. இதற்காக நாம் தரும் சிறு தொகையை (ரூ10 அல்லது 20) மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்கின்றனர். 

100 ரூபாய்க்கு உடனடியாகப்  புகைப்படங்கள் எடுத்துத் தருகிறார்கள் நம்முடன் வரும் உள்ளூர் புகைப்படக் கலைஞர்கள். நாங்களும் அவர்களிடம் படம் எடுத்துக் கொண்டோம். சிறு நெகிழிப் பைகளில் (தோராயமாக 50 மிலி) இருக்கும் பால் பத்து ரூபாய்க்கு விற்கிறார்கள். கரையில் இருக்கும் கடைகளில் வில்வம், பூக்கள், இளநீர் போன்றவைகள் விற்கப்படுகின்றன. 

அர்ச்சகர் சங்கல்பம் செய்து வைக்க பால், நீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து வில்வம், விபூதி சாற்றி வழிபட்டு சுமார் 10.15 மணிக்கெல்லாம் கரைக்குத் திரும்பி விட்டோம்.

எங்கள் குழுவுடன் இணைந்து சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த 100 சுற்றுலாப் பயணிகளும் சேர்ந்து கொண்டனர். இவர்கள் தங்களின் சுற்றுலாவை  உஜ்ஜயினியில் தொடங்கிப் பயணம் செய்து வருவதாக அறிந்தோம். கடற்கரையில் உள்ளூர்  இளநீர் வியாபாரிகள் நாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஒரளவு சுமாரான தமிழில் உரையாடுகின்றனர். 30 ரூபாய்க்கு பெரிய இளநீர் கிடைக்கிறது. அந்தச் சூழலே ஏதோ தமிழ்நாட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. 

சர்வம் சிவார்ப்பணம்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி!எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!




Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)