அதிக உடல் பருமன் ( Obesity)

அதிக உடல் பருமன் (Obesity) என்பது பொதுவாகவே பிறரின் கேலிப் பேச்சுகளால்  மன உளைச்சலையும் அதே நேரம் உடல் ரீதியான பல பிரச்சனைகளையும் தரக் கூடியது. உடலின் எடை அதிகரித்தல் மட்டுமே அதிக உடல் பருமன் (Obesity) இல்லை. இது உடலில் கொழுப்பு சேகரமாவதால் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, கொலஸ்டிரால் மட்டுமல்லாமல்  புற்றுநோய்  தாக்கும் அபாயத்தைக் கூட அதிகரிக்கச் செய்யும் தீவிரமானதொரு மருத்துவ நிலை என்றும் சொல்லலாம்.  

ருசித்து வயிறாரச் சாப்பிடக் கூட நேரமில்லாமல் மிகவும்  கஷ்டப்பட்டு உழைத்துப் பணம் சம்பாதித்து, அப்படிச் சம்பாதித்ததுச்  சேமித்த பணத்தை  வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி சேர்த்த பணம் என்று சொல்வது வழக்கம். உண்மையில் வாயைத் கட்டி வாழ்ந்தால் நிச்சயமாகப் பிற்காலத்தில் வயிற்றைக் கட்டி வாழ வேண்டி இராது என்று கொழு உடல் மருத்துவ இயல் அல்லது உடல் பருமனியல் மருத்துவம்  (Bariatric medicine) தெரிவிக்கிறது.

உண்மையில் வாயைக் கட்டாமல் அதாவது கண்டவற்றையும் தேவையில்லாமல்  உட்கொண்டால் பின்னாளில் வயிற்றை இறுக்கிப் பிடித்துக் கட்ட வேண்டி வரும். இரைப்பைப் பட்டை அறுவைச் சிகிச்சை (Gastric Band surgery) குறித்துச் சொல்லும் போது அதைப் பற்றிக் காண்போம். 

அதிக உடல் பருமன் (Obesity) உடலில் கூடுதலாகக் கொழுப்பு சேர்வதால் ஏற்படுகிறது. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் ஆற்றலும் ( Nutrition and energy) நாம் உண்ணும் உணவு மூலமாகவே கிடைக்கிறது. உடற் செயல்பாடுகள் (Physical activities) குறைவான அளவில் இருக்கும் நேர்வில்  உணவின் வழியாகப் பெறப்பட்ட ஆற்றல் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் அல்லது எரிக்கப்படாமல் மிகுதியாக இருக்கும். உடலால் பயன்படுத்தப்பட்டது போக மீதமுள்ள ஆற்றல் கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுகிறது. உடலில் கொழுப்பு தொடர்ந்து சேகரமாகும் போது  உடல் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. இது அதிக உடல் பருமனில் போய் முடியும். இது குறித்து இன்னும் மேலதிகத் தகவல்களை என்னுடைய ட்ரைகிளிசரைடுகள் என்ற கட்டுரையில் பெற இயலும்.

https://weyes57.blogspot.com/2021/02/triglycerides.html


ஒருவரது உடல் நிறைக் குறியீட்டெண்ணின் (Body Mass lndex) மதிப்பு முப்பதுக்கும் (30) மேல் இருக்குமானால் அவர் அதிக உடல் பருமன் கொண்டவராகக் கருதப்படுவார். இப்போது உடல்நிறைக் குறியீட்டெண்ணை (BMI) எப்படிக் கணக்கிடுவது என்று காண்போம்.

உடல் நிறைக் குறியீட்டெண் என்பது ஒருவரது உடல் நிறையை கிலோகிராமிலும், அவரது உயரத்தை மீட்டரிலும் மதிப்பிட வேண்டும். பின்னர் நிறை மதிப்பை உயரத்தின் இருமடியால் (square) வகுக்க அவரது உடல் நிறைக் குறியீட்டெண் கிடைக்கும்.

உ.நி.கு எண் = நிறை/(உயரம்)^2 கிகி/மீ^2

BMI = Mass/(Height) ^2 Kg/m^2

இவ்வாறு கிடைக்கும் உ.நி.கு எண்ணின் மதிப்பு உ.நி.கு எண்ணின் அட்டவணையுடன் (BMI chart) ஒப்பிடுகிறது. அட்டவணை குறிப்பிட்ட வெட்டு மதிப்புகளைக் (Cut - off values) கொண்டு இயல்பு எடை (Normal weight), அதிகமான உடல் எடை (over weight), அதிக உடல் பருமன் (Obesity) என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதிக உடல் பருமன் மேலும்  மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.


எடுத்துக்காட்டாக ஒருவரது உயரம் 165 செமீ அல்லது 1.65 மீட்டர் என்போம். அவரது நிறை 75 கிலோகிராம் என்றால் அவரது உ.நி.கு எண் (BMI) = 75/(1.65)^2

உ.நி.கு.எண் (BMI) = 75 /( 1.65)^2

உ.நி.கு.எண் (BMI) = 75 /( 2.7225)

உ.நி.கு.எண் (BMI) = 27.5

மேலே காட்டிய எடுத்துக்காட்டில் கணக்கிடப்பட்ட உ.நி.கு.எண்ணின் மதிப்பு முப்பதுக்கும் (30) கீழ் இருப்பதால் அவர் சற்றே கூடுதலான உ.நி.கு.எண் (Normal BMI) பிரிவின் கீழ் வருவார்.


இதில் ஒருவரின் உடல் பருமனை உ.நி.கு (BMI) மூலம் மதிப்பிடுப்பிடுதல் சரியான தொடக்கம் என்றாலும் இதனை மிகச்சரியான முறையாகக் கருத இயலாது. ஒரே உ.நி.கு எண்ணுடையவர்களின் உடற் கூறுகளின் தொகுப்பு (Composition) மற்றும் பகிர்மானம் (Distribution) ஆகியன பெருமளவில் வேறுபடக் கூடும். எடுத்துக்காட்டாக விளையாட்டு வீரரின் உடலில் கொழுப்பின் அளவு குறைவாக இருந்தாலும் தசைகளின் நிறை காரணமாக அதிகமான உ.நி.கு எண் இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே உடலில் உள்ள கொழுப்பின் விழுக்காடு கணக்கிடப்பட வேண்டும். அவ்வாறு மதிப்பிட எளிய அளவிடுதல்கள் முதல் மிகச் செலவு பிடிக்கும் சோதனைகள் வரை பல வழிமுறைகள் உள்ளன.



Picture courtesy : https://www.drworkout.fitness/bmi-calculator/


அதிக உடல் பருமன் என்ற ஆபத்தின் துவக்கப்புள்ளியே இடுப்பின் சுற்றளவு எனலாம். அதீத உடல் பருமன் (Obesity) என்பது உடலில் சேகரமாகும் கொழுப்பின் அளவைப் பொறுத்தது மட்டுமல்ல. அது சேமிக்கப்பட்டுள்ள இடத்தையும் சார்ந்தது. வயிற்றுப் பகுதியில் படியும் கொழுப்பு நீரிழிவு நோய் (DIABETES), கொழுத்த கல்லீரல் (FATTY LEVER), உயர் இரத்த அழுத்தம் (HIGH BLOOD PRESSURE), இதய நோய்கள் (HEART DISEASES) மற்றும் இதர வளர்சிதை மாற்றம் தொடர்பான பிரச்சனைகளுக்கான (METABOLIC PROBLEMS) மிகப் பெரிய ஆபத்துக் காரணியாகும். 




 


முன்னர் குறிப்பிட்டபடி அதிக உடல் பருமனுக்கு மிக முக்கியமான காரணியாகச் சொல்லப்படுவது உடலின் பயன்பாட்டுக்கும் உட்கொள்ளும் உணவின் அளவுக்கும் இடையில் சமநிலை இல்லாதிருப்பதுதான்.  அதிகமாக உணவு உண்ட பின்னுமே பசி எடுப்பதாக அதிக உடல் பருமன் கொண்டவர்கள் உணரக் கூடும். இதனால் அவர்கள் தேவைக்கு அதிகமாக மேலும் மேலும் உண்ணக் கூடும்.

தற்காலத்தில் பல உணவகங்கள் வழங்கும் காம்போ  (food combo) உணவு வகைகள் என்ற பெயரில் துரித உணவு வகைகளுடன் கூடவே  உயர் கலோரி செயற்கைச் சுவையூட்டிய பானங்களையும் சேர்த்தே தருகின்றன . சில உணவகங்கள் பீட்சா, பர்கர் போன்ற மேற்கத்திய துரித உணவு வகைகளை அதிக அளவில் விற்பனை செய்வதற்காகச் செயற்கைச் சுவையூட்டிய பானங்களை இலவசமாகத் தருகின்றன.  இத்தகைய உணவுத் தேர்வுகள் தேவைக்கு அதிகமாக உண்பதை அதிகரிக்கச் செய்து உடலில் பயன்படுத்தப்படாத கலோரிகளை அதிகரிக்கும்.

அதிக உடல் பருமனுக்குப் பிற காரணிகளாக வயது, பாலினம், மரபணுக்கள், இயக்குநீர்கள் (Harmones), மன அழுத்தம் அல்லது மன உளைச்சல் போன்றவற்றையும் குறிப்பிடலாம். 

வயது கூடும்போது உடலின் வளர்சிதை மாற்ற வீதம் குறைவதால் தேவைப்படும் ஆற்றலின் அளவும் குறைந்து விடும். இதனால் தசை இழப்பு ஏற்பட்டு கொழுப்பு அதிகரிக்கும்.

ஒரே அளவிலான கலோரிகளைக் கொண்ட உணவை ஆண்களும் பெண்களும் எடுத்துக் கொண்டாலும் பெண்களே அதிக உடல் நிறையை அடைகிறார்கள். காரணம் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு அதிகம் தசைகள் இருப்பதால் அதிக ஆற்றலைத் தசைகள் எரித்துச் செலவழித்து விடுகின்றன.

அடுத்ததாக உடல் பருமனுக்கு மரபணுக்கள் ஒரு முக்கியமான காரணியாக அமைகின்றன என்று சொல்லப்படுகிறது. மரபணுக்கள் உடலின் வளர்சிதை மாற்றம் மற்றும் கொழுப்புப் பகிர்மானம் ஆகியவற்றில் அதிக அளவில் பங்கேற்கின்றன. குடும்பங்களில் உடல் பருமன் பல தலைமுறைகளாகத் தொடர்ந்து வருவதற்கு மரபணுக்கள் மட்டுமே காரணமென்று சொல்ல இயலாது . ஒவ்வொரு குடும்பமும் பாரம்பரியமாகக் குறிப்பிட்ட ஒரே வகையான உணவு வகைகளையே சமைத்துண்ணும் பழக்கத்தைக் கொண்டுள்ளதையும் காரணமாகக் குறிப்பிடலாம். இதனால் ஒரு குடும்பத்தில் உடல் பருமனான பெற்றோர்களின் குழந்தைகளும் உடல் பருமன் கொண்டவர்களாக வளரக்கூடிய அபாயம் அதிகம்.

பொதுவாகச் சலிப்பு, கோபம், மனச் சோர்வு போன்றவற்றின் பிடியில் உள்ளபோதும் பசியற்ற நிலையிலும் மக்கள் அதிகம் உணவு உண்பதுண்டு. அதேபோல மன அழுத்தததைச் சரிவரக் கையாளக் தெரியாத நிலையில் செய்வதறியாமல் கலோரி அதிகமான உணவுகளை அதிகமாக உண்ணக் கூடும்.

மன அழுத்தம் (DEPRESSION), குஷிங் நோய்க்குறி (CHSHING SYNDROME), பல கட்டிகள் கொண்ட சூற்பை நோய்க்குறி (POLYCYSTIC OVARIAN SYNDROME) மாத்திரைகள், மன அழுத்தம் குறைக்கும் மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டுகள் (STEROIDS) ஆகியவற்றைைப் பயன்படுத்தும்போது அவை தேவைக்கு மேல் உண்பதை அதிகரித்து  உடல் பருமனை அதிகரிக்கச்  செய்யும்.

ஆரோக்கியமற்ற துரித உணவு வகைகள் அதிகக் கலோரிகளையும் குறைந்த நார்ச்சத்தும் கொண்டவையாதலால் உடல் பருமனை அதிகப்படுத்தும். அதேபோல் உடற் செயல்பாடுகள் இன்றிச் செல்பேசி, மடிக்கணினியைப் பயன்படுத்தியவாறே நாள் முழுவதும் நிலையாக ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தவாறு சோம்பி இருப்பது,  புகைப்பிடிப்பது, அதிக அளவில் மது அருந்துவது, சர்க்கரை சேர்க்கப்பட்ட செயற்கையாகச் சுவையூட்டிய குளிர்பானங்களை அடிக்கடி பருகுவது போன்றவை ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைத் தேர்வுகள். அதிகம் மது அருந்துதல், செயற்கையாகச் சுவையூட்டிய குளிர்பானங்கள் பருகுதல் ஆகியன உடல் பருமனுடன் நேரடித் தொடர்பு கொண்டவை. துரித உணவுடன் செயற்கைச் சுவையூட்டிய குளிர்பானங்களையும் பருகுதல் அதிக உடல் பருமனுக்கு மிக வேகமாக இட்டுச் செல்லும் . 


உடல் நிறைக் குறியீட்டெண்ணின் (BMI) மதிப்பு 30 க்கும் அதிகமாக இருப்பதை அதிக உடல் பருமன் குறித்த முதல் எச்சரிக்கையாகக் கொள்ளலாம். தவிரவும் அதிக உடல் பருமனானவர்கள் உறங்கும் போது சுவாசம் தடைப்படக் கூடும். . தவிரவும் இடைஞ்சலான உறக்கம் (troubled sleeping), விரிசுருள் சிரை நோய் (varicose veins), பித்தப்பை கற்கள் (stones in gall bladder), மூட்டுகளில் வலி( joint pains) மற்றும் சருமப் பிரச்சினைகள் ( skin problems) ஆகியவற்றை அனுபவிக்க நேரிடலாம்.


அதிக உடல் பருமனுடன் தொடர்புடைய சிக்கல்களும் அபாயங்களும்


(1) இரண்டாம் வகை நீரிழிவு நோய் (Type 2 diabetes): அதிக உடல் பருமன் உடலின் இன்சுலின் பயன்பாட்டைப் பாதிப்பதால் இரத்தச் சர்க்கரையின் அளவுகளின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் நீரிழிவு நோய் அபாயம் அதிகரிக்கும். 


(2) இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் (cardiac diseases and stroke) : அதிக உடல் பருமன் இரத்த அழுத்தத்தையும் கொலஸ்டிராலையும் அதிகரிக்கும். இவை இரண்டும் இதய நோய்க்கும் பக்கவாதத்திற்கும் மிக முக்கியமான காரணிகளாகும். 


(3) பலவகையான புற்றுநோய்கள் (Cancers): அதிக உடல் பருமன் கருப்பை, மார்பக, பிராஸ்டேட், கல்லீரல், கணைய மற்றும் சிறுநீரகப் புற்று நோய்கள் தாக்கும் அபாயத்தை அதிகரிக்கக் கூடும். (4) உறக்கத்தில் சுவாசம் தடைப்படுதல் (sleep apnea) : அதிக உடல் பருமனானவர்களுக்கு சுவாசம் சிறு கால அளவுக்கு, அதாவது குறைந்தபட்சமாக 10 வினாடிகள் முதல் அதிகபட்சமாக 30 வினாடிகளுக்கு சுவாசம் தடைப்பட்டு நின்று போய் மீண்டும் துவங்கும். இதனை உறக்க மருத்துவத்திற்கான அமெரிக்கக் கல்விக் கழகம் (American Academy of Sleep Medicine - AASM) (sleep apnea) என்று குறிப்பிடுகிறது.  


(5) மகளிர் நோய்கள் (gynaecological problems) : அதிக உடல் பருமனான பெண்களுக்குச் சீரற்ற மாதவிடாயை ஏற்படுத்தி மலட்டுத்தன்மைக்கு வழி வகுக்கும்.


(6) கீல்வாதம் (osteoarthritis) : அதிக உடல் நிறை மூட்டுக்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதால் கீல்வாதம் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்.


இவை தவிர (7) பித்தப்பை கற்கள் (gall bladder stones),


(8) இரைப்பை சார்ந்த பிரச்சனைகள் (gastric problems), 


(9) கல்லீரல் பிரச்சனைகள் (liver problems) போன்ற பல சிக்கல்களும் அபாயங்களும் அதிக உடல் பருமனானவர்களுக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். 

அதிக உடல் பருமனைச் சில உடல் சார்ந்த அதாவது நோயாளியின் உடல் நிறைக் குறியீட்டெண்( BMI) மற்றும் இடுப்பளவு ஆகிய உடல் பரிசோதனைகள் மற்றும் அதிக உடல் பருமன் குறித்த அவரது குடும்ப வரலாறு மற்றும் உணவுப் பழக்கம் ஆகியவற்றின் மூலமும் அடுத்ததாகச் இரத்தச் சர்க்கரை அளவு (Blood glucose levels tests), கல்லீரல் சோதனைகள் (Liver panel tests), லிப்பிட் கொழுப்புச் சோதனை (Lipid profile) மற்றும் தைராயிட் சோதனைை (TSH test) ஆகிய இரத்தப் பரிசோதனகள் போன்ற சில இரத்தப் பரிசோதனைகள் மூலம் அறிந்து கொள்ளலாம். 

அதிக உடல் பருமனுக்கான சிகிச்சை அழகுக்காக மேற் கொள்ளப்படும் சிகிச்சை இல்லை. அதிக உடல் பருமனுக்கான சிகிச்சை ஆரோக்கியமான உடல் நிறையை அடைவதையும் அதன் பின்னர் அதனைத் தொடர்ந்து பராமரித்து வருவதையும் நோக்கமாகக் கொண்டது. சிகிச்சைக் காலத்தில் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்வதும், உடல் செயல்பாடுகளை அதிகரித்தலையும் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. உடல் பருமனுக்கான உண்மையான சிகிச்சை நோயாளியின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும், நோயின் தீவிரத்தையும் சார்ந்து அமையும். ஊட்டச்சத்து நிபுணரும், செயல்படுத்தும் பயிற்சியாளரும் இணைந்து தனிநபருக்குரிய உடல் நிறை குறைப்பிற்கேற்ற திட்டத்தை வடிவமைத்துக் தர இயலும்.


மாற்றியமைக்கப்பட்ட உணவுமுறை: இலக்கு நிறையை அடைய முதலில் தினந்தோறும் உண்ணும் உணவின் கலோரிகளைக் (ஆற்றலை) குறைத்துக் கொள்ள வேண்டும். இதற்காக உட்கொள்ளும் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைத்துக் கொண்டு அதிகம் நார்ச்சத்து (fibre) மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு கொண்ட உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.




உடற்பயிற்சி: தீவிரமான உடற்பயிற்சியைத் தக்க பயிற்சியாளரின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்வது சிறப்பு. குறைந்தது ஒரு மணி நேர அளவில் வாரம் ஐந்து அல்லது ஆறு நாட்கள் செய்வது மிக முக்கியம். தவிர மினதூக்கிகளைப் பயன்படுத்தாமல் படிகளில் ஏறுவது மற்றும் தொடர்ந்து ஓரிடமாக அமர்ந்திராமல் அவ்வப்போது சிறிது நடப்பதும் உடல் நிறைக் குறைப்பிற்கு உதவும். ஆனால் மிக அதிக நிறை உடைய எடுத்துக்காட்டாக 120 - 150 கிலோகிராம் நிறையுடைய ஒருவரால் இதனால் அதிக அளவில் நிறையைக் குறைக்க இயலாது.


அடுத்தது கொழுப்புறுஞ்சல் சிகிச்சை (Lipo suction) இதில் கைகள் (hands) அடிவயிறு (lower stomach), brests(மார்புகள்), இடுப்பு (hip), தொடைகள் (thighs), பிட்டம் (buttocks) போன்ற குறிப்பிட்ட உடல் பகுதிகளிலிருந்து கொழுப்பு செல்கள் உறிஞ்சி வெளியே எடுப்பதன் மூலம் உடல் பிறையைக் குறைக்க முடியும். ஆனால் இதிலும் பெருமளவில் நிறையைக் குறைக்க இயலாது.


எனவே மேற்சொன்ன எதுவும் பயனளிக்காத நிலையில், நோயாளிக்கு உடல் நிறைக் குறியீட்டெண் 35 முதல் 40 வரையில் இருந்து அவருக்குக் கூடுதலாக வேறு ஒரு மருத்துவப் பிரச்சினை உடையவராக இருக்கும் நேர்வில் மருத்துவர்கள் பருத்த அல்லது கொழுத்த உடலுக்கான அறுவைச் சிகிச்சைக்கு (Bariatric surgery) பரிந்துரை செய்யக் கூடும். 


அதிக உடல் பருமனால் (obesity) அவதிப்படும் நபர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் பருத்த உடலுக்கான அறுவைச்சிகிச்சை பல வகையான மருத்துவச் செயல்பாடுகளை (procedure) உள்ளடக்கியது. அவற்றில் அதிகம் புழக்கத்தில் இருக்கும் சில செயல்முறைகளைைக் காண்போம். இவை அனைத்திலுமே நிறைக்குறைப்பை அடைவது இரைப்பையின் அளவைக் குறைப்பதன் மூலம்தான் எட்டப்படுகிறது.  

முதல் முறையில் இரைப்பையின் மேற் பகுதியில் தகுந்தவாறு அமைத்துக் கொள்ளக் கூடியதோர் பட்டை (Gastric band) இணைக்கப்படுகிறது. சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் நாம் கொண்டு செல்லும் கைப்பைகளின் வாயைக் கட்ட தேவையான அளவில் பூட்டிக் கொள்ளும் பிளாஸ்டிக் பட்டையைப் (Zip tie) பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறோம்.  இந்த இரைப்பைப் பட்டையும் கிட்டத்தட்ட இதைப் போன்றதே.







 

பெரும்பாலான பதின்ம வயதினருக்குப் (teen age) இரைப்பைப் பட்டை பொருத்துவதன் மூலமாக  உணவு உண்பதைக் கட்டுப்படுத்துதல் சரியானதோர் தேர்வாக இருக்காது. மற்ற வகையான அறுவை சிகிச்சைகளைப் போலவே, இதுவும் இரைப்பையைச் சிறியதாக்கி உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இந்த அறுவைசிகிச்சையில் இரைப்பையின் மேல் பகுதியைச் சுற்றிச் சரி செய்யக்கூடிய சிலிகான் பட்டையொன்று ஒரு சிறிய பையை உருவாக்கும்படி லேப்ராஸ்கோப் (Laparoscope) முறையில் பொருத்தப்படுகிறது. பட்டை பொருத்தப்பட்டவர்கள் குறைந்த அளவில் உணவு உண்டாலும் விரைவில்  வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுவதால், குறைவாகவே உணவு உட்கொள்வார்கள்.

தோலின் கீழ்ப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள துறையின் (Port) வழியே  மருத்துவர்கள் பட்டையை அணுகிப் பட்டைக்குள் சேமக்கலத்தில் இருக்கும் உப்பு நீரைச் செலுத்துவதன் மூலம் பட்டையை உப்பச் செய்தோ அல்லது சுருங்கச் செய்தோ சரிசெய்யலாம்  அல்லது  பட்டையை முழுவதுமாக நீக்குவதன் மூலம் இரைப்பையை அதன் இயல்பான அளவிற்குத் திரும்பச் செய்யலாம். இம் முறையின் மூலம் இரண்டாண்டுகளில் கிட்டத்தட்ட 45 விழுக்காடு அளவுக்கு உடல் நிறையைக் குறைக்க முடியும்.


இரைப்பைப் பட்டை ( Gastric band Surgery) அறுவை சிகிச்சை புறவழி ஒட்டு மற்றும் காப்புறை இரைப்பை நீக்குதல்  போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பதை விடக் குறைவான சிக்கல்களையே  கொண்டுள்ளது என்றாலும் பட்டையைப் பொருத்திக் கொள்ளும் நபர்களின் எடை அதிகம் குறைவது இல்லை.  மேலும் 18 வயதிற்கு குறைவானவர்களுக்கு இரைப்பைப் பட்டை சாதனங்கள் பயன்படுத்துவதை எஃப்.டி.ஏ (FDA) அங்கீகரிக்கவில்லை.

அடுத்தது இரைப்பையின் ஒருபகுதியை வெட்டி எடுத்து விடுதல் 




Picture courtesy: 

இது காப்புறை அல்லது குழாய் இரைப்பை நீக்குதல் (Sleeve Gastrectomy) என்றும் மருத்துவர்களால் அழைக்கப்படுகிறது. இச் செயல்முறை (surgical Procedure) அதிகமாக மேற் கொள்ளப்படும் பொதுவான எடை இழப்பு செயல்முறை ஆகும். இந்த அறுவை சிகிச்சையின் மூலம், இரைப்பையின் ஒரு பகுதியை அகற்றப்படுகிறது, இரைப்பையின் மீதமுள்ள பகுதியிலிருந்து ஒரு குழாய் அல்லது சிறிய காப்புறை  உருவாக்கப்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்பட்ட  புதிய வாழைப்பழத்தின் வடிவிலான இரைப்பை அசல் இரைப்பையை விட வடிவத்தில் மிகவும் சிறியது. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, சிகிச்சை எடுத்துக் கொண்டவர் மிகக் குறைவான அளவே சாப்பிடுவார். ஆனாலும் சிறிய அளவிலான இரைப்பையின் காரணமாக விரைவிலேயே வயிறு நிறைந்து விட்டதாக உணர்வார். அவருக்குப் பசியும் குறைவாகவே இருக்கும். இரைப்பைக் காப்புறை அறுவை சிகிச்சை இரைப்பையின் அளவை மட்டுமே மாற்றுகிறது. இரைப்பைக் குழாய் அல்லது காப்புறை இரைப்பை நீக்கச் செயல்முறை ( Sleeve Gastrectomy) ஒரு மீளாச் செயல்முறை (irreversible procedure) . அதாவது இரைப்பை வெட்டி எடுக்கப்பட்டு விடுவதால் மீீண்டும் பழைய நிலைமையை அடைய முடியாது.

மூன்றாவதாக இரைப்பைப் புறவழி அல்லது ரூ - அன் - ஒய் இரைப்பைப் புறவழி (Gastric Bypass or Roux-en-Y Gastric Bypass) அறுவைச் சிகிச்சை என்பது இரைப்பையில் ஒரு சிறிய பையை ஏற்படுத்தி அதனைச் நேரடியாக இரைப்பைக்குப் புறவழியாகச் சிறுகுடலுடன் இணைத்து விடும் அறுவைச் சிகிச்சையாகும். ரூ -என்- ஒய் இரைப்பைப் புறவழி அறுவைச்சிகிச்சை (R Y G B) என்பது ஒரு வகை எடை இழப்பு அறுவை சிகிச்சை ஆகும். எடை இழப்பு அறுவை சிகிச்சை பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை (Bariatric surgery) என்றும் அழைக்கப்படுகிறது. இதுவும் பெரும்பாலும் லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சையாக செய்யப்படுகிறது, 

இந்த அறுவை சிகிச்சை உங்கள் மேல் இரைப்பையின் அளவை  ஒரு முட்டையின் அளவுக்குச் சிறியதோர் பையாக  குறைக்கிறது. அறுவைசிகிச்சையின் மூலமாக வயிற்றின் மேல் பகுதியை முடக்குவதன் மூலம் உண்ணக்கூடிய உணவின் அளவைக் குறைக்கப்படுகிறது.  அறுவைசிகிச்சைக்குப் பின்னர் இந்தச் சிறு பை நேரடியாக ரூவின் லிம்ப் எனப்படும் சிறு குடலின் ஒரு பகுதியுடன் இணைக்கிறது. இது ஒரு "Y" வடிவத்தை உருவாக்குகிறது. நீங்கள் உண்ணும் உணவு வயிற்றின் எஞ்சிய பகுதியையும் உங்கள் சிறுகுடலின் மேல் பகுதியையும் புறக்கணிக்கிறது. இது நீங்கள் உண்ணும் உணவுகளிலிருந்து உறிஞ்சும் கொழுப்பு மற்றும் கலோரிகளின் அளவைக் குறைக்கிறது. இது உணவில் இருந்து நீங்கள் உறிஞ்சும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் அளவையும் குறைக்கிறது.


புழக்கத்தில் உள்ள எல்லா உடல் பருமனியல் அறுவை சிகிச்சை முறைகளில் இதுவே மிக சிறப்பானது (Gold Standard) என்று கூறப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையை மேற்கொண்டால், இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய உங்கள் எடையில் 65-80% வரை குறைக்க முடியும்.

கடைசியாக வளர்சிதை அறுவை சிகிச்சை முறை (Metabolic Surgery) 

வரும் முன் காத்தல்: குணப்படுத்துதலைக் காட்டிலும் வரும் முன் காத்தல் சிறப்பானது. அதிக உடல் பருமனைக் தவிர்க்க ஒருவர் என்ன உண்கிறார் எவ்வளவு உடற்பயிற்சி செய்கிறார் என்பது முக்கியமானது. உடல் நிறை அதிகரிப்பதைத் தவிர்க்க ஆரோக்கியமான உணவும் தினசரி உடற்பயிற்சியும் பரிந்துரைக்கப்படுகிறது. தவிரவும் அதிகம் உணவு உட்கொள்வதும், மது அருந்துவதும் கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட வேண்டும்.


இறுதியாக உங்கள் உடல்நலம்‌உங்கள் கையிலதான் உள்ளது. ஆரோக்கியமான உடல் நிறையைப் பராமரித்து வருவதால் அதிக உடல் நிறை காரணமாக உருவாகும் பிற ஆரோக்கியச் சிக்கல்களைத் தவிர்க்கலாம். அதிகம் உண்ணும் முன்பு சற்றே சிந்தியுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்ய மறக்க வேண்டாம். ஒவ்வொரு ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை சிறு நடை அல்லது உடலியக்கத்தை மேற்கொள்ள மறக்கக்கூடாது. உங்கள் வாழ்வுக்கு ஒரே ஒரு உடல்தான் உள்ளது. ஆகவே அதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் மூலம் நன்றி கூறுங்கள்.



Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)