டிரை கிளிசரைடுகள் (Triglycerides)
மனித உடலின் இன்றியமையாத உறுப்புகளைப் பட்டியலிட்டால் அதில் மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் போன்ற பல உறுப்புகள் இடம் பெறும். மனிதன் உயிர் வாழ இந்த உறுப்புகள் அனைத்துமே ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிக அவசியம். இந்தக் கட்டுரையில் முக்கியமான உறுப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ள இதயத்தின் ஆரோக்கியத்தை டிரைகிளிசரைடுகள் (Triglycerides) என்னும் ஒரு வகையான கொழுப்புப் பொருள் (lipid) எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் குறித்துக் காணலாம்.
இதய ஆரோக்கியத்திற்கான காரணிகளில் இரத்த அழுத்தமும் (Blood pressure) லிப்பிட் கொழுப்பும் (lipid fat) இடம் பெறுகின்றன. ஆகவே இரத்த அழுத்தத்தின் அளவும் லிப்பிட் கொழுப்புகளின் அளவுகளும் சரியான வீச்செல்லைக்குள் (range) இருத்தல் வேண்டும். தவிரவும் இரத்தத்தில் உள்ள டிரைகிளிசரைடுகளின் அளவும் கண்காணிக்கப்படுதல் மிகவும் அவசியம். ஏனெனில் அதிக அளவில் இரத்தத்தில் டிரைகிளிசரைடுகள் காணப்பட்டால், இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இரத்தத்தில் டிரைகிளிசரைடுகளின் அளவு கண்காணிக்கப்பட்டு இயல்பான அளவுக்குள் (normal range) வைக்கப்பட வேண்டும். இதய நலத்தில் அக்கறை கொண்ட அனைவருமே இதயத்தின் செயல்பாட்டில் டிரைகிளிசரைடுகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த கீழ்க்கண்ட கட்டுரையைப் படிப்பது பயனுள்ளதாக அமையும்.
அடுத்து ட்ரைகிளிசரைடுகள் குறித்த எளிய விளக்கத்தைக் காண்போம்.
ட்ரைகிளிசரைடுகள் என்பது நம் இரத்தத்தில் காணப்படும் ஒரு வகையான லிப்பிட் (கொழுப்பு) என்று குறிப்பிட்டிருந்தோம்.
லிப்பிட்களில் (Lipids) கொழுப்பு அமில (fatty acids) அலகுகள் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக அடுக்கப்பட்டுள்ளன. கொழுப்பு அமிலங்கள் CH3 (CH2)n COOH என்ற பொதுவான வாய்ப்பாடு கொண்ட கரிமச் சேர்மங்கள்(organic compounds) ஆகும், வாய்ப்பாட்டில் உள்ள 'n' பொதுவாக 2 முதல் 28 வரையான இரட்டைப்படை (even values) மதிப்புகளைக் கொண்டிருக்கும். கொழுப்பு அமிலங்களில் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் (saturated fatty acids), நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் (unsaturated fatty acids) என்று இரண்டு வகைகள் உள்ளன.
நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் (saturated fatty acids)
நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களில், கார்பன் அணுக்கள் முடிந்தவரை ஹைட்ரஜன் அணுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன. மூலக்கூறுகள் நேரான சங்கிலிகளை உருவாக்குகின்றன. நேரான சங்கிலிகளை மிகவும் இறுக்கமாக ஒன்றாகக் கட்டி, ஆற்றலை ஒரு சிறிய வடிவத்தில் சேமிக்க அனுமதிக்கிறது. நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் அறை வெப்பநிலையில் திடப்பொருளாக இருக்கின்றன. விலங்குகள் ஆற்றலைச் சேமிக்க நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களைப் பயன்படுத்துகின்றன.
நிறைவுறாக் கொழுப்பு அமிலங்கள் (unsaturated fatty acids)
நிறைவுறாக் கொழுப்பு அமிலங்களில், கார்பன் சங்கிலியில் ஒன்று அல்லது அதற்கு அதிகமான இரட்டைப் பிணைப்புகள் (double bonds) இருப்பதால் இணைக்கப்பட வாய்ப்புள்ள அனைத்து ஹைட்ரஜன் அணுக்களுடனும் சில கார்பன் அணுக்கள் பிணைக்கப்படாமல் இருக்கும். ஆனாலும் அவை அணுக்களின் பிற குழுக்களுடன் பிணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு மற்ற அணுக்களின் குழுக்களுடன் கார்பன் எங்கு பிணைந்தாலும், அது சங்கிலிகளை வளையச் செய்கிறது. வளைந்த சங்கிலிகளை மிகவும் இறுக்கமாக ஒன்றாக இணைக்க முடியாது. நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் இதனாலேயே அறை வெப்பநிலையில் திரவங்களாகவே இருக்கின்றன. தாவரங்கள் ஆற்றலைச் சேமிக்க நிறைவுறாக் கொழுப்பு அமிலங்களைப் பயன்படுத்துகின்றன.
பொதுவாக நிறைவுறாக் கொழுப்பே ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது, சமமான அளவில் எடுத்துக் கொண்டால் நிறைவுறாக் கொழுப்பானது நிறைவுற்ற கொழுப்பைக் காட்டிலும் குறைவான கலோரி ஆற்றலைக் (calories of energy) கொண்டுள்ளது. இதன் காரணமாகவே விலங்கு இறைச்சி உணவை விட மரக்கறி உணவு சிறந்ததாகக் கருதப்படுகிறது. தவிரவும் நிறைவுற்ற கொழுப்புகளை அதிக அளவில் உட்கொள்ளுதல் இதய நோய் அபாயத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறது.
கொழுப்பு அமிலங்களில் மூன்று வகைகள் உள்ளன. அவை
(1) முழுவதும் நிறைவுற்ற கொழுப்பு அமிலம் (Saturated fatty acid),
(2) ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் (Mano unsaturated fatty acid) மற்றும்
(3) பல் நிறைவுறாக் கொழுப்பு அமிலம் (Poly unsaturated fatty acid).
மூன்று வகையான கொழுப்பு அமிலங்களுடன் கிளிசரால் (CH2)2 (CH) (OH)3 அல்லது C3H8O3 சேர்ந்து மூவகையான டிரைகிளிசரைடுகள் கிடைக்கின்றன.
பொதுவாக ஒரு கொழுப்பு அமிலம் 12 முதல் 24 கார்பன்கள் வரை நீளம் கொண்ட நீண்டதோர் கார்பன் சங்கிலி. இதனுடன் கார்பாக்சைல் குழுவொன்று (carboxyl group - COOH) இணைக்கப்பட்டிருக்கும்.
மூன்று கொழுப்பு அமில மூலக்கூறுகள் ஒவ்வொன்றும் கிளிசரால் மூலக்கூறின் ஹைட்ராக்சைல் (hydroxyl group - OH) குழுக்களில் ஒன்றைக் கொண்டு மணமியமாக்கல் (esterification) வினைபுரிகின்றன .
இதன் விளைவாக ட்ரைகிளிசரைடு (triglyceride) என்று குறிப்பிடப்படும் பெரிய டிரையெஸ்டர் (triester) மூலக்கூறு உருவாகும்.
மூன்று கொழுப்பு அமிலங்களும் வெவ்வேறு ( 12 முதல் 24) எண்ணிக்கையிலான CH2 கண்ணிகளைக் கொண்டவையாக இருக்கலாம். அதுபோலவே நிறைவுற்ற, ஒற்றை அல்லது பல் நிறைவுறாக் கொழுப்பு அமிலமாகவும் இருக்கலாம்.
ஆகவே அவை கிளிசராலுடன் இணைந்தால்
(1) நிறைவுற்ற டிரைகிளிசரைடு (saturated triglyceride)
(2) ஒற்றை நிறைவுறாக் டிரைகிளிசரைடு (Mano unsaturated triglyceride)
(3) பல் நிறைவுறாக் டிரைகிளிசரைடு (Poly unsaturated triglyceride) ஆக உருவாகும்.
நிறைவுற்ற கொழுப்புகள் (saturated fats) அதிகம் செறிந்துள்ள உணவுகளின் சில எடுத்துக்காட்டுகளாக வெண்ணெய் (butter), பாலாடைக்கட்டி (cheese), பன்றிக்கொழுப்பு (lard) மற்றும் சில கொழுப்பு மிக்க இறைச்சிகள் ( fatty meats) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
நிறைவுறாக் கொழுப்புகள் (unsaturated fats) அதிகம் செறிந்துள்ள உணவுப் பொருட்களில் பாதாம் மற்றும் அக்ரூட் கொட்டைகள் (almond and walnuts), ஆனைக் கொய்யா என்னும் வெண்ணெய்ப் பழம் (avocado), மற்றும் கடுகு எண்ணெய் (canola oil) மற்றும் ஆலிவ் எண்ணெய் (olive oil) போன்ற தாவர எண்ணெய்கள் (vegetable oils) ஆகியன அடங்கும்.
ஊடு கொழுப்புகள் (trans fats) அல்லது ஊடு கொழுப்பு அமிலங்கள் ( trans fatty acids) என்பவை நிறைவுறா (unsaturated fatty acids) கொழுப்பின் மற்றொரு வகையான வடிவம். அவை இயற்கை மற்றும் செயற்கை வடிவங்களில் வருகின்றன. விலை அதிகமான நெய்க்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் வனஸ்பதி போன்ற விலை குறைந்த ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட தாவர எண்ணெய்கள் ஊடு கொழுப்புகளே.
லிப்பிட்கள் (Lipids) கொழுப்பு அமிலங்களை( fatty acids) மட்டுமேகொண்டிருக்கலாம் அல்லது அவற்றுடன் கூடவே ஆல்கஹால் (OH) அல்லது பாஸ்பேட் (PO4) குழுக்களையும் (functional groups) கொண்ட மூலக்கூறுகளும் இருக்கலாம்.
ட்ரைகிளிசரைடுகள் விலங்குகளில் சேமிக்கப்பட்ட ஆற்றலின் முக்கிய வடிவம்.
பாஸ்போலிபிட்கள் உயிரணு சவ்வுகளின் (cell membrane) முக்கிய கூறுகள்.
ஸ்டெராய்டுகள் வேதியியல் தூதர்களாக மட்டுமின்றி (chemical messenger) வேறு பிற பாத்திரங்களையும் வகிக்கின்றன.
நம்முடைய இப்போதைய கட்டுரையில் டிரைகிளிசரைடுகளைக் குறித்து மட்டுமே காண இருப்பதால் பாஸ்போலிப்பிட் மற்றும் ஸ்டீராய்டு குறித்து பின்னர் காண்போம்.
நாம் உண்ணும் உணவு செரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது. இந்த ஆற்றலைக் கலோரிகள் ( calories) அளவில் குறிப்பிடுகிறோம். உணவின் வாயிலாக நம் உடலுக்குக் கிடைத்த ஆற்றல் உடலுழைப்போ (Physical work), உடற் செயற்பாடோ (Physical activity) இல்லாமல் அதே சமயம் உடற்பயிற்சிகளையும் ( Physical exercises) மேற் கொள்ளாத நேர்வில் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. இத்தகைய நிலையில் உடலால் பயன்படுத்தப்படாத கூடுதலாக இருக்கும் கலோரிகளை (ஆற்றலை) ட்ரைகிளிசரைடுகளாக உடல் மாற்றிக் கொள்கிறது. இந்த ட்ரைகிளிசரைடுகள் கொழுப்பு செல்களில் சேமிக்கப்படுகின்றன. பின்னர், ஹார்மோன்கள் உணவுக்கு இடையில் ஆற்றலுக்காக சேமித்த ட்ரைகிளிசரைட்களை இரத்தத்தில் வெளியிடுகின்றன.
நம் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் தேவையான ஆற்றலுக்காக உண்ணும் உணவு எரிக்கப்படுகிறது. தேவைக்கு அதிகமான அளவுக்கு உணவு உட் கொள்ளும்போது தேவைக்கு மிகுதியான கலோரிகள் அதாவது ஆற்றல் டிரைகிளிசரைடுகளாக உடலில் சேமிக்கப்படுகிறது. இது இரத்தத்தில் உயர் டிரைகிளிசரைடு அளவே உயர்த்தி ஹைப்பர் டிரைகிளைசெர்டீமியாவை (Hypertriglycerdemia) ஏற்படுத்தும். இதைத்தான் தமிழில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி வலியுறுத்துகிறது.
இரத்தப் பரிசோதனை வாயிலாக டிரைகிளிசரைடுகளின் அளவை அறிந்து கொள்ள இயலும்.
அதிக டிரைகிளிசரைடு உடலில் சேர்வதற்குப் பல காரணிகள் உள்ளன.
(1) அதீத உடல் பருமன் (obesity)
(2) மிதமிஞ்சிய மதுப் பழக்கம் (alcoholism)
(3) புகைப்பிடித்தல் (smoking)
(4) தைராயிட் சுரப்பியின் குறைச் செயல்பாடு ( hypothyroidism)
(5) மோசமான நீரிழிவு நோய்க் கட்டுப்பாடு (Poor control of diabetes)
(6) சிறுநீரக மற்றும் கல்லீரல் நோய்கள். (kidney and liver ailments)
(7) மிக அரிதான மரபியல் நோய்கள் (Rare genetic disease)
(8) சில மருந்துகளை எடுத்துக்காட்டாக ஸ்டிராய்ட்கள், ஈஸ்ட்ரோஜன், ரெட்டினாய்டுகள் மற்றும் எச்.ஐ.வி க்கான மருந்துகளைப் பயன்படுத்தும் போது ஏற்படும் பக்க விளைவு (side effects of steroids, estrogen, retinoids and HIV medicines) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இரத்தத்தில் டிரைகிளிசரைடின் இயல்பு நிலை (normal level) அளவு 150 மில்லிகிராம் / டெசிலிட்டர் (mg/dl) என்பதை விடக் குறைவாக அல்லது 1.7 மில்லியன்மோல்கள் லிட்டருக்கு (million mol / litre) என்பதை விடக் குறைவாக இருக்க வேண்டும்.
இதுவே எல்லைக் கோட்டு நிலை (Borderline) டிரைகிளிசரைடின் அளவு 150 முதல் 199 மில்லிகிராம் / டெசிலிட்டர் (mg/dl) அல்லது 1.8 முதல் 2.2 மில்லியன்மோல்கள் லிட்டருக்கு (million mol / litre) என்ற வீச்சளவில் (range) இருக்கும்.
உயர் ட்ரைகிளிசரைடு அளவானது 200 முதல் 499 (mg/dl) மில்லிகிராம் டெசிலிட்டருக்கு அல்லது 2.3 முதல் 5.6 million mole/ litre) மில்லியன்மோல் லிட்டருக்கு என்ற வீச்சளவில் (range) இருக்கும்.
மிக உயர் ட்ரைகிளிசரைடு அளவானது 500 (mg/dl) மில்லிகிராம் டெசிலிட்டருக்கு அல்லது 5.7 million mole/ litre) மில்லியன் மோல் லிட்டருக்கு என்ற அளவைக் காட்டிலும் அதிகமாக இருக்கும்.
குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் இரத்தத்தில் டிரைகிளிசரைடுகளின் அளவைச் சரிபார்த்துக் கொண்டு அதனைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். மிக அதிக இரத்தக் டிரைகிளிசரைடானது இதயம், கல்லீரல், கணையம் ஆகிய உறுப்புக்களைப் பாதிக்கும்.
இரத்த டிரைகிளசரைடுகளின் அளவு அதிகமாகும் போது நாளடைவில் தமனி இரத்தக் குழாய்களில் சேகரமாவதால் ஏடுகளாகப் படியத் துவங்கும். இதனால் இரத்தக் குழாய் தடித்துக் கெட்டிப்பட்டு இறுகிப்போய் குறுகலாகி விடும். இந்த நிலையைத் தமனிக் குழாய் கடினமாதல் (arteriosclerosis) என்று அழைப்பது வழக்கம். இதன் காரணமாக உடலில் இரத்த ஓட்டம் தடைப்படுவதால் மாரடைப்பு (Heart attack), பக்கவாதம் (Stroke) இதயப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
டிரைகிளிசரைடுகள் மிக உயர்ந்த அளவான 500 மிகி டெசிலிட்டருக்கு (mg/dl) என்ற நிலையில் கணையத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் நோயாளிக்கு கணைய அழற்சி நோய் (Pancreatitis) ஏற்படும். செரிமான நொதிகள் (digestive enzymes) கணையத்திற்குள்ளாகவே செயல்படுத்தப்பட்டு உட்புற செல்களை (internal cells) அளிக்கத் துவங்கும். நோயாளிக்குக் கடும் வயிற்றுவலி ஏற்பட்டு அது முதுகு வரை பரவி இருக்கும். நோயாளிக்கு இதன் விளைவாகக் குமட்டல், வாந்தி, காய்ச்சல் மற்றும் வயிறு மென்மையாகக் இருத்தல் போன்றவை ஏற்படும்.
கொழுத்த கல்லீரல் நோயானது (Fatty Liver disease) அதிக டிரைகிளிசரைடு காரணமாக ஏற்படும் அபாயம் உள்ளது. கல்லீரல் உட்பட உடலின் அநேக உறுப்புகளிலும் லிப்பிட்கள் அதிகப்படியாகச் சேகரமாவதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளே முக்கியமான காரணமாகும். கொழுத்த கல்லீரல் நோயின் தொடக்கக் கட்டத்தில் நோய் குறித்த அறிகுறிகள் எதுவும் வெளியே தெரிவதில்லை. ஆனால் பின்னாளில் நிரந்தரமான கல்லீரல் பாதிப்பு மற்றும் சிரோசிஸ் (cirrhosis) எனப்படும் கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோய் போன்ற கடும் சிக்கல்களுக்கு வழி வகுக்கும்.
இரத்தத்தில் டிரைகிளிசரைடுகளின் அளவு அதிகரிக்கும் போது இரண்டாம் வகை நீரிழிவு நோயால் (Type II diabetes) பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் உடலில் இன்சுலின் எதிர்ப்பு உருவாகும். நாளாவட்டத்தில் கணையம் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்வதை நிறுத்தி விடுவதால் செல்கள் குளுக்கோஸைப் பயன்படுத்த இயலாமல் போய்விடும்.
இறுதியாக அதிக அளவில் இரத்தத்தில் டிரைகிளிசரைட்டுகள் இருப்பது சோதனைகள் மூலம் தெரிய வந்தால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உயர் இரத்த டிரைகிளிசரைடுகளின் அளவை இயல்பான அளவுக்குக் கொண்டுவருதல் சாத்தியமானதே. காலதாமதம் இன்றி மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற்று உடனடியாக சிகிச்சையைத் தொடங்குதல் நலம் பயக்கும். கட்டுரையில் முன்பு குறிப்பிட்ட மூன்று நிலைகளில் எந்த நிலையில் இரத்தத்தில் டிரைகிளிசரைடின் அளவு உள்ளது என்பதைப் பொருத்து மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொண்டு வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக (healthy lifestyle) மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து டிரைகிளிசரைடுகளை இயல்பான நிலையில் எவ்வாறு வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்று காண்போம்.
(1) புகைப்பிடிப்பவராக இருந்தால் உடனடியாக நிறுத்திவிட வேண்டும். மது அருந்தும் பழக்கம் உடையவராக இருந்தால் குறைவான அளவில் மதுபானங்களைப் பயன்படுத்துதல் வேண்டும். மதுபானங்களில் இருக்கும் அதிக அளவிலான சர்க்கரை மற்றும் ஆற்றல் காரணமாக மது அருந்துதல் டிரைகிளிசரைடின் அளவைப் பாதித்து அதிகரிக்கச் செய்யும்.
(2) உடல் நிறைக் குறியீட்டெண் (Body Mass lndex) அளவில் உடல் நிறையை வைத்துக் கொள்ளவும் அதிகப்படியான உடல் நிறையைக் குறைக்கவும் முயற்சி மேற் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவும் அடிக்கடி உண்பது மற்றும் தேவையற்ற நொறுக்குத் தீவனங்களை (snacks) உட்கொள்வதைத் தவிர்ப்பதன் மூலமாகவும் கூடுதல் கலோரிகள் உடலில் சேர்வதைத் தடுக்க முடியும். உணவு எடுத்துக் கொள்ளும் அளவைக் குறைத்தாலே உடல் நிறை தானாகக் குறைந்து விடும்.
(3) அடுமனைத் (bakery) தயாரிப்புகளான கேக்குகள் (cakes), பேஸ்டரீஸ் (pastries) டோனட் (donut) மற்றும் குக்கீகள்(cookies) முதலியவை அதிக அளவில் சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் ஆகவே இவற்றை உண்பதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.
(4) நாள்தோறும் குறைந்தது அரை மணி நேரத்தை ஒதுக்கித் தவறாமல் யோகா அல்லது எளிய உடற்பயிற்சிகளை மேற் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி என்றால் அதற்காக உடற்பயிற்சிக் கூடத்திற்குச் (gymnasium) செல்லத் தேவையில்லை. கூடுமானவரை ஒரே இடத்தில் நீண்ட நேரமாக இயக்கமின்றி அமர்ந்திருத்தலைத் (sedentary) தவிர்த்து சுறுசுறுப்பாக இயங்கி வர வேண்டும். அருகில் இருக்கும் இடங்களுக்கு முடிந்தவரையில் வாகனங்களில் பயணிக்கலாமல் நடந்து செல்லலாம். அதிக உயரம் இல்லாத கட்டிடங்களில் மின்தூக்கியைப் (lift) பயன்படுத்தாமல் படிகள் வழியாக ஏறிச் போகலாம். மெதுவான நடையோட்டத்தை (jogging) மேற் கொள்ளலாம். அன்றாடச் செயல்பாடுகளில் உடற் செயற்பாடுகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.
(5) டிரைகிளிசரைடைக் கட்டுப்படுத்தச் சரியான உணவைத் தேர்வு செய்து உண்ண வேண்டும். ஆரோக்கியமான கொழுப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சமையல் ஊடகமாக (cooking medium) கடுகு எண்ணெய் (Canola oil), ஆலிவ் எண்ணெய் (olive oil) ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
(6) பதப்படுத்தப்பட்ட உணவுகள் (Processed foods) மற்றும் ஊடு கொழுப்புகள் அதிகமுள்ள உணவுப் பொருட்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
(7) அசைவ உணவு உட் கொள்பவர்கள் சிவப்பு இறைச்சிப் (red meat) பொருட்களுக்கு மாற்றாக ஒமேகா 3 (omega 3) கொழுப்பு அமிலங்களைக் கொண்ட மீன்களை உணவாகக் கொள்ளலாம்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றியும் ஒருகால் டிரைகிளிசரைடின் அளவு கட்டுக்குள் வராவிட்டால் மருத்துவர்கள் கூடுதலாக சில மருந்துகளை உட்கொள்ள பரிந்துரை செய்யலாம்.
அட்டோர்வாஸ்டாட்டின் கால்சியம் (Atorvastatin calcium) மற்றும் ரோசுவாஸ்டாட்டின் கால்சியம் (Rosuvastatin calcium) ஆகிய இருவகையான ஸ்டாட்டின் (Statin) கொலஸ்டிரால் ( Cholesterol) குறைக்கும் மருந்துகள் நீரிழிவு (Diabetes) நோயுடன் அதிக கொலஸ்டிராலும் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
அடுத்து நியாசின் (Niacin) அல்லது (nicotinic acid) நிகோடினிக் அமிலம் என்பது உயிர்ச்சத்து - பி3 (Vitamin - B3). இது ட்ரைகிளிசரைடுகள் மற்றும் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் எல்.டி.எல் கொழுப்புக்கு ( LDL cholesterol) எதிராகச் செயல்படுவதில் பயனுள்ளதாக இருக்கும்.
சரியான உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ள பெனோஃபைபரேட் (fenofibrate) சில மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இது ட்ரைகிளிசரைடுகள் மற்றும் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் எல்.டி.எல் கொழுப்பைக் ( LDL cholesterol) குறைத்து எச்.டி.எல் கொழுப்பை (HDL cholesterol) அதிகரிக்கும். இரத்தக் கொலஸ்டிராலை உடைக்கும் நொதியை (enzyme) அதிகரிப்பதன் மூலம் ஆம் மருந்து செயல்படுகிறது.
C22H15O3 என்ற வாய்ப்பாடு கொண்ட ஜெம்ஃபைப்ரோஸில் (Gemfibrozil) மருந்தும் இரத்த ஊனீரில் உள்ள கொலஸ்டிரால் (blood serum cholesterol) அளவை ஒழுங்குபடுத்துகிறது. இருந்த போதிலும் இம் மருந்துகளின் பயன்பாட்டில் சிறுநீரகம் மற்றும் கல்லீரலைப் பாதிக்கும் பக்கவிளைவுகளும் இருப்பதாகத் தெரிகிறது.
மீன்களில் இருக்கும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் ட்ரைகிளிசரைட்களைக் குறைக்கும் என்பதால், மீன் எண்ணெய் தயாரிப்புகளை மருத்துவரின் ஆலோசனைக்குப் பின்னர் முயற்சி செய்து பார்க்கலாம் . ஆனால், இந்தத் தயாரிப்புகளை அதிக அளவுகளில் உட்கொள்ளும் பட்சத்தில் இரத்த உறைவு (Clotting of blood) ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
ஆகவே டிரைகிளிசரைடுக்காக மட்டுமல்லாமல் எந்த ஒரு சிகிச்சையையும் சுயமாகச் செய்து கொள்வது ஆபத்தானது. மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment