அண்ணா நகர் அனுபவங்கள்
அண்ணாநகர் இரண்டாவது நிழற் சாலை சென்னையின் மிக அழகான சாலைகளில் ஒன்று . சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் முன்பு இச்சாலையில் தபால் அலுவலகத்திற்கு எதிரில் இருந்த ஒரு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தேன்.
குடியிருப்பில் மொத்தம் ஐந்து அடுக்குகள். ஒவ்வொரு அடுக்கிலும் மூன்று தளங்கள். ஒவ்வொரு தளத்திலும் எதிரெதிராக இரண்டு வீடுகள். நான் 1988 முதல் 1994 வரையில் முதல் தளத்தில் கதவு எண் 342/4 வசித்தது வந்தேன்.
இரு படுக்கை அறை அடுக்ககம். இரண்டு பத்துக்குப் பத்து படுக்கை அறைகள் அதே அளவில் ஒரு வரவேற்பறை, சிறிய ஆனால் வசதியான சமையலறை என்று காற்றும் வெளிச்சமும் எல்லா அறைகளிலும் போதிய அளவில் கிடைக்கக் கூடிய வகையில் நேர்த்தியான கட்டமைப்பை உடையது.
கட்டுமானம் மிகத் தரமானது என்று சொல்ல இயலாத போதும் அடுக்ககத்தின் வளாகத்தில் முன்புறம் பாதுகாப்பாகக் குழந்தைகள் விளையாட நிறையத் திறந்த வெளி, சாலையை ஒட்டி இருப்பதும் கடைகள் வங்கிகள் என பல வசதிகள் இருநூறு மீட்டர் தொலைவில் சரவண பவன் நடைப்பயிற்சிக்கு விஸ்வேஸ்வரய்யா பூங்காவும் பக்திக்கு ஐயப்பன் கோவிலும் இருந்ததால் அந்த இடம் ஒரு மிகச்சிறந்த வசிப்பிடம் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமிருந்ததே இல்லை.
அப்புறம் வேறு சில காரணங்களால் அதே வரிசையில் மேற்கில் திருமணி அம்மன் கோயில் எதிரில் உள்ள வீட்டு வசதி வாரிய அடுக்கத்தில் ஒராண்டு இருந்தேன். அந்த வீடு இருக்கும் இடத்தின் முன்புதான் இப்போது திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது.
பின்னர் 1996 ஆம் ஆண்டு கோயம்பேட்டில் சிறிய இடம் வாங்கி வீடு கட்டிக் குடியேறினேன்.
இடையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக போக்குவரத்து தடைப்பட்டது. அண்ணா நகர் இரண்டாம் நிழற் சாலை தனது கம்பீரத்தை இழந்து இருந்தது. இக்காலகட்டத்தில் சாந்தி காலனியும், 18 ஆவது பிரதான சாலையும் பலவகை வணிக நிறுவனங்களால் நிரம்பி விட்டன. இரண்டாம் நிழற் சாலை சரவண பவன் மூடப்பட்டு விட்டது.
நான்கான்டுகளுக்குப் முன் 2017 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் பணிகள் முடிந்து இரண்டாவது நிழற் சாலை மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. ஒரே நேர் கோட்டில் திருமங்கலம், அண்ணா நகர் கோபுரம், அண்ணா நகர் கிழக்கு என்று வரிசையாக மூன்று மெட்ரோ ரயில் நிலையங்கள். புதியதாக தி. நகர் LKS , GRT, Lalitha என்று நகைக்கடைகள் வந்து விட்டன.
நான் முதலில் குடியிருந்த அடுக்ககம் பெரிய வணிக வளாகம் கட்டுவதற்காக இடிக்கப்பட்டு விட்டது. ஆனால் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. ஆனாலும் அண்ணாநகர் இரண்டாவது நிழற்சாலை கிருஸ்மஸ் காலத்தில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும்.சந்தோஷ் சூப்பர் மார்க்கெட் கிருஸ்மஸ் காலத்தில் களை கட்டும்.
இந்தக் கொண்டாட்டமான சாலையை ரசிக்க எல்லா ஆண்டிலும் கிருஸ்துமஸ் நேரத்தில் வருவது எங்களின் வழக்கம்.
இந்த ஆண்டு கடந்த வியாழக்கிழமை (23.12.2021) என் மனைவி, மகள், பேரன், மருமகன் ஆகியோர் காரில் மாலை ஆறரை மணி அளவில் அண்ணா நகர் வந்தனர். உடல் நிலை கருதி நான் அவர்களுடன் செல்லவில்லை. மருமகன் காரை LKS கடைக்கு முன் நிறுத்தினார். அப்போது கடையின் பணியாளர் அந்த இடம் கட்டண வாகன நிறுத்தம். ஆகவே கடைக்கு வருபவர்களுக்கு வாலட் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. நீங்கள் காரின் சாவியைத் தந்து விட்டு நிம்மதியாக ஷாப்பிங் செய்யலாம் என்றார்.
இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும் போது எங்கிருந்தோ வந்த மூன்று திருநங்கைகளில் ஒருவர் சிறிதளவே கீழிறக்கப்பட்ட காரின் கண்ணாடிக் கதவின் வழியாகத் தனது கையை உள்ளே நுழைத்து காசு தருமாறு கேட்டிருக்கிறார். என் மருமகன் பரிதாபப்பட்டு பத்து ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் அந்தத் திருநங்கை இது போதாது எங்களில் ஒருவர் சாப்பிடவாவது பணம் கொடு என்று பிரச்சினை செய்திருக்கிறார். பின்னிருக்கையில் இருந்த என் மனைவி மேலும் இருபது ரூபாய் கொடுத்திருக்கிறார்.
இதன் பின்னர் அந்தத் திருநங்கை ஏதோ உச்சரித்தபடி இருந்தாராம். சிறிது நேரத்திற்குப் பிறகு உன் பர்ஸிலிருந்து ஒரே ஒரு ரூபாய் நாணயம் கொடு என்று கேட்டிருக்கிறார். என் மருமகன் அதெல்லாம் முடியாது இந்தா பிடி ஒரு ரூபாய் நாணயம் என்று கொடுத்திருக்கிறார். அதை வாங்கிக் கொண்டு ஏதோ மந்திரம் போல ஏதோ சொல்லித் தன் வாயால் ஊதி பின் அந்தக் காசை வைத்து அவர் தலையைத் தொட்டு ஆசீர்வாதம் செய்வது மாதிரி பாவனை செய்திருக்கிறார்.
இவ்வளவும் சிறிதளவே திறந்திருந்த காரின் ஓட்டுபவர் இருக்கைக் கண்ணாடிக் கதவின் வழியாகவே நடந்திருக்கிறது.
உன் பர்ஸைத் திற. காசை அதில் என் கையால் போடுவேன் என்றதும் என் மருமகன் அதெல்லாம் முடியாது என்று மறுத்து கையில் கொடு என்றிருக்கிறார். உடனே அந்தத் திருநங்கை நான் பர்ஸைப் பிடுங்கிக் கொண்டு ஓட மாட்டேன் பர்ஸைக் காட்டு என்று அடம் பிடித்திருக்கிறார். அவர் பர்ஸில் காசுகள் போட்ட பகுதியைக் காட்ட, ரூபாய் நோட்டுகள் பகுதியைக் காட்டு என்று மிரட்டி இருக்கிறார். என் மருமகன் முடியாது என்றதும் கேவலமான வார்த்தைகளால் மூன்று திருநங்கைகளும் ஒன்றாக வசை பாட ஆரம்பித்துள்ளனர்.
என் மருமகன் கண்ணாடிக் கதவை மூட ஆரம்பிக்கவும் கை மாட்டிக் கொண்டதில் திருநங்கை காசை காரின் உள்ளே வீசி விட்டு சாபமிட்டவாறு கையை வெளியே எடுத்துக் கொண்டு கேவலமான வார்த்தைகளால் வைதவாறு அடுத்த காருக்குச் சென்று விட்டாராம்.
சாலையிலும் கடையைச் சுற்றிலும் மக்கள் நடமாட்டம் இருந்தாலும் LKS காவலாளி உட்பட அனைவருமே வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருந்திருக்கின்றனர் திருநங்கைகளுக்குப் பயந்து யாருமே அருகேயே வரவில்லையாம்.
வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்குள் நுழையும் முன் வேறொரு பெண்ணிடம் பணம் பறிக்கப்பட்டிருந்த தகவல் தெரிய வந்ததாம்.
ஆகவே அண்ணா நகரில் முன்பிருந்த அழகு பத்து மடங்காக மீண்டு வந்திருந்தாலும் ஆபத்தும் அதிகரித்து உள்ளது. கவனமாக இருங்கள். அதிகம் ரொக்கமாகப் பணம் எடுத்துச் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை.
**** ****** ****** *****
எச்சரிக்கை தேவை என்பதை உணர்த்தியுள்ளீர்கள்.
ReplyDelete