நான் பணிபுரிந்த பள்ளியில் 2006 வாக்கில் நபார்ட் வங்கிக் கடன் மூலம் முப்பத்திரண்டு வகுப்பறைகளுடன் இரண்டு ஆய்வகங்கள் என்று கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டடங்கள் கட்டப்பட்டன. எல்லா வகுப்புகளுக்கும் போதுமான அளவுக்கு மின்விசிறிகளும் (fans) குழல் விளக்குகளும் (tube lights) போடப்பட்டு இருக்கும்.
இந்த மின்விசிறிகளின் இறக்கைகளை தாமரைப் பூவைப் போல வளைப்பதும் குழல் விளக்குகளை உடைப்பதும் அவ்வப்போது நடக்கும். உடைக்கும் மாணவர்கள் யார்யாரெனக் கண்டுபிடித்தால் அரசியல் தலையீடுகள் வரும். அதனாலேயே ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் நமக்கேன் வம்பு என்ற எண்ணத்தில் கண்டும் காணாமல் இருந்து விடுவார்கள். சும்மா பேருக்கு இது போலப் பள்ளியில் சேதப்படுத்தும் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காலையில் பிரார்த்தனைக் கூட்டத்தில் எச்சரிக்கை செய்வதும் எழுத்துப் பூர்வமாக எல்லா வகுப்புகளுக்கும் சுற்றறிக்கை விடுவதும் மட்டுமே இது சார்ந்து எடுக்கப்படும் கடும் நடவடிக்கையாக இருக்கும்.
2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏதாவது வகையில் பள்ளியில் மாணவர்கள் இடையில் அமைதியின்மையும் ஒழுக்கமின்மையும் அதிகரித்து வருவதாகவே என் அனுபவத்தைக் கொண்டு பார்க்கும் போது தெரிகிறது. அதிலும் 2007 ஆம் ஆண்டுக்குப் பின் கிட்டத்தட்ட ஏதாவது ஒரு பிரச்சினை தொடர்பாக காவல் நிலையம் சென்ற நாட்கள் அதிகம்.
பொதுவாக அரசாங்கக் கட்டடங்களில் திறந்த மின்னிணைப்புகள் (open wiring) தான் செய்யப்படும். அதாவது சுவர்களில் வெளிப்புறமாக பிளாஸ்டிக் குழாய் வழியாக மின்கம்பிகள் எடுத்துச் செல்லப்படும். பள்ளியில் அடிக்கடி யாரோ இந்த மின்கம்பிகளை வெட்டி குழாய்களிலிருந்து உருவித் திருடிச் சென்று விடுவார்கள். மறுபடியும் இந்த மின் இணைப்புகளைப் பெற்றோர் ஆசிரியர் கழகம் தங்களின் நிதியிலிருந்தோ அல்லது எதாவது உள்ளுர்ப் புரவலர் மூலமோ சரி செய்து தரும். இது குறித்து காவல் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது. ஆனாலும் கம்பிகளை திருடுவது யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் காவல் நிலையத்திலிருந்து ஆய்வாளர் தொலைபேசியில் அழைத்தார். மின்கம்பிகளைத் திருடியவர்கள் காவல் நிலையத்தில் உள்ளனர். நீங்கள் உடனே வரவேண்டும் என்றார்.
காவல் நிலையத்தில் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு காவல்துறையினரால் பிடித்து வைக்கப்பட்டவர்கள் சுமார் ஆறேழு பேர்கள். அனைவரும் பனிரெண்டு முதல் பதினாறு வயது வரையுள்ள ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் படிக்கும் எங்கள் பள்ளி மாணவர்கள். காவல் நிலையத்தில் மரத்தடியில் அவர்களின் பெற்றோர் நின்று கொண்டிருந்தனர்.
ஆய்வாளரிடம் இவர்களை எப்படிப் பிடித்தீர்கள் என்றால் அவர் ஒரு சம்பவத்தை விவரித்தார். முந்தைய நாள் இரவில் பக்கத்து ஊரில் பெட்டிக்கடை வைத்திருக்கும் ஒரு மூதாட்டி ஒன்பது கடையைப் பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்று சென்றிருக்கிறார். அப்போது இந்தச் சிறுவர்களில் மூவர் அவரை வழிமறித்துப் பணத்தைத் தரும்படி கத்தியைக் காட்டி மிரட்டியிருக்கின்றனர். மூதாட்டி போட்ட கூச்சலைக் கேட்டு ரோந்து வந்த போலீஸார் மூன்று சிறுவர்களையும் மடக்கிப் பிடித்துக் காவல் நிலையத்தில் உரியமுறையில் விசாரித்த போது அவர்கள் பள்ளியில் மின்கம்பி திருடியதையும் சொல்லியிருக்கின்றனர்.
இதில் வருத்தத்துக்குரிய விஷயம் அந்த சிறுவர்களின் பெற்றோர் அவர்களைக் கண்டிக்காமல், திருடி வரும் கம்பிகளை எரித்து தாமிரத்தை விலைக்கு விற்று இவர்களுக்கும் கொஞ்சம் கைச் செலவுக்குப் பணம் தருவார்களாம். அது போதவில்லை என்பதால் மோட்டார் சைக்கிளிலில் பேட்டரி திருடுவது, துடைப்பக்குச்சியில் தார் உருண்டையை வைத்து பக்கத்து கோவில் உண்டியல்களில் உள்ள ரூபாய் நோட்டுகளைத் தாரில் ஒட்டச் செய்து எடுப்பது போன்ற குற்றங்களையும் செய்வது வழக்கமாக இருந்திருக்கிறது.
ஒரு கட்டத்தில் பணத்தேவை அதிகரிக்க முதல் முறையாகப் பணத்துடன் மூதாட்டியை கண்டதும் வழிப்பறி செய்யும் யோசனை வந்திருக்கிறது. ஆனால் எதிர்பாராத விதமாக பிடிபட்டு விட்டனர். இவர்களுக்கு சிக்னல் தர மற்ற சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இறுதியில் பெற்றோர், ஆய்வாளர், ஊர் பொதுமக்கள் என்று பலதரப்பட்டவர்களும் வேண்டிக் கொண்டதால் வழக்கு எதுவும் இல்லாமல் மன்னித்து விடப்பட்டனர். பள்ளியில் சக மாணவர்களின் கேலிக்கு ஆளாகலாம் என்பதால் பெற்றோர்கள் மாற்றுச் சான்றிதழ் பெற்று அவர்களை வேறு பள்ளிகளில் சேர்த்து விட்டனர்.
இதை ஏன் எழுதுகிறேன் என்றால் காவல் ஆய்வாளர் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களில் இருவர் சிறுவர்கள் என்பது எனக்கு எந்த வகையிலும் வியப்பளிக்கவில்லை.
எல்லாவற்றுக்கும் அடிப்படைக்காரணம் போதைப் பொருள் பயன்பாடு, பெற்றோரின் பொறுப்பற்றதன்மை. 1979 முதல் 2000 வரையான என் பணிக்காலத்தில் மனம் நிறைவு இருந்தது. மாணவர்களும் அன்பாக இருப்பார்கள். இவ்வளவிற்கும் 1979 ஆம் ஆண்டு பணியில் சேரும்போது எனக்கு வயது இருபத்திரண்டுதான். மாணவர்களுக்கும் எனக்குமிடையே வெறும் ஆறாண்டுகள்தான் வேறுபாடு. அப்போது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் உணர்வுபூர்வமான பிணைப்பு (emotional bonding) இருந்தது.
என் மாணவர்களில் பலர் 50 வயதைக் கடந்தவர்கள். இன்றும் என்னுடன் முகநூலில் நட்பு பேணுகிறார்கள். ஆனால் இன்று அத்தகைய சூழ்நிலை இல்லை என்பது கவலை தருகிறது.
Comments
Post a Comment