கண்ணோட்டம்


 

கடந்த 2016 ஆம் ஆண்டில் எனக்குப் பார்வை சற்றே மங்கலாக இருப்பதாகத் தோன்றியது. 

சென்னையில் எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனை மிகவும் பழமையான பாரம்பரியம் மிக்க மருத்துவமனை. அடுத்து மிகப் புகழ் பெற்ற பெற்ற நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கரநேத்ராலயா கண் மருத்துவமனை. இவை தவிர அகர்வால், வாசன் கண் மருத்துவமனைகளும் பல சிறிய தனியார் மருத்துவமனைகளும் உள்ளன. 

உடனே அருகிலுள்ள பிரபலமான சென்னையில் பல கிளைகளைக் கொண்ட  தனியார் கண் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ளச் சென்றேன். அங்கு பரிசோதனைகள் செய்து உங்களுக்குக் கண்புரை அறுவைச் சிகிச்சை (Cataract operation) உடனே செய்ய வேண்டும். மருத்துவக் காப்பீடு ( Medical insurance) உள்ளதா? என்று கேட்டார்கள். 

அவர்கள் நிறுவனம் வழங்கும் மூன்று நான்கு வகையான புரை நீக்க அறுவைச் சிகிச்சைக்குரிய கட்டணத்தையும் கூறிய பின் எப்போது சிகிச்சையை வைத்துக் கொள்ளலாம்? என்றும் விரைவில் செய்து கொள்ளுங்கள், நீங்கள் சர்க்கரை நோயாளி என்பதால் பார்வையை இழக்கும் அபாயமும் உள்ளதென பயமுறுத்தினர். 

நான் எதற்கும் வேறொரு மருத்துவமனையில் இரண்டாவதாக கருத்துக் கேட்டு பின் முடிவெடுக்கலாம் என்று எண்ணியதால் ஒரிரு நாட்களில் சொல்கிறேன் என்று பதிலளித்து விட்டு வந்து விட்டேன். அதிலிருந்து தினம் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற எப்போது சேரப் போகிறீர்கள் என்று கண்டகண்ட நேரத்திலெல்லாம்  தொலைபேசியில் அழைத்து ஒரே தொல்லை. பொறுமை இழந்து போய் இப்போதைக்கு இல்லை  இனி தொலேபேசியில் அழைக்க வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.


இது நடந்த  இரண்டு மாதங்களுக்குப் பின்னர் என் இருசக்கர வாகன ஒட்டும் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டியிருந்தது. அதற்காகப் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு நீங்கள் அறுபது வயதைக் கடந்த விட்டபடியால் கண் பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழைக் கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று சொல்லி விட்டனர்.

அந்த அலுவலகத்திலிருந்து சற்றுத் தொலைவில் தமிழகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்ட  ஒரு தனியார் கண் மருத்துவமனை இருந்தது. அந்த மருத்துவமனை குறித்து எனக்கு எந்த அபிப்பிராயமும் இல்லை. சரி இம்முறை இங்கே முயன்று பார்க்கலாமே என்று கருதி அங்கே சென்றேன். ரூபாய் 300 கட்டணம் செலுத்தினேன். வழக்கமான பரிசோதனைகள் வரிசையாகச் செய்யப்பட்டு கடைசியில் கண் மருத்துவரிடம் ஆலோசனை. அந்த மருத்துவர் என்னை  கண்புரைப் பரிசோதனை செய்து பார்த்து, இன்னும்  ஐந்தாண்டுகள் வரை கண்புரை அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளத் தேவையில்லை. 

தற்போதைக்கு கண்ணாடியின் திறன் (power) சற்று மாறி உள்ளதால் கண்ணாடியை மட்டும் மாற்றிக் கொண்டால் போதும் என்று சொல்லி விட்டார். நானும் கண்ணாடி மாற்றிக் கொண்டு எந்தப் பிரச்சினையும் இன்றி வெற்றிகரமாக நான்காண்டுகளைக் கடந்து விட்டேன். 

இதற்கிடையில் 2018 ஆம் ஆண்டு சர்க்கரை நோய் மருத்துவர் கண் பார்வையை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதித்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று அறிவுரை வழங்கினார். 

சுமார் முப்பத்தைந்தாண்டு ஆண்டுகளுக்கு முன்னர் என் தாயாருக்கு மதுரையில் அரவிந்த் கண் மருத்துவமனையில் கண் புரை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அங்கே குறைவான கட்டணம் நிறைவான, தரமான சேவை என்பது ஊரறிந்த ஒன்று.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் மிகப் பெரிய அளவில் கட்டப்பட்ட அரவிந்த் மருத்துவமனை பூந்தமல்லிக்கு அருகிலுள்ள  நூம்பலில்  உள்ளது. 2018 ஆம் ஆண்டு அங்கே சென்று பதிவு செய்து கொண்டு வெறும் 100 ரூபாய் கட்டணம் செலுத்திக்  கண் பரிசோதனை செய்து கொண்டேன். அங்கும் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளத் தேவையில்லை. கண்ணாடியின் திறனும் (power) பெரிய அளவில் மாறவில்லை என்று சொல்லி விட்டனர். 

பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பத்து நகரங்களில் கிளைகளைக் கொண்டு தென் தமிழகத்தில் மிகப் பிரபலமான கண் மருத்துவமனையாக அரவிந்த் கண் மருத்துவமனை விளங்குகிறது. மதுரையைச் சுற்றியுள்ள தென் மாவட்டங்களில் பல கிராமங்களிலும் இந்த நிறுவனம் சிறப்பாகச் சேவை புரிந்து வருகிறது. என்னுடைய ஊரான நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் கூட இந்தக் கண் மருத்துவமனையின் சிறிய சிகிச்சைையகம் (Clinic)  உள்ளது. 

இப்போது மூன்றாண்டுகளுக்குப் பின் கடந்த சனிக்கிழமை (11.09.2021) அன்று மீண்டும் கண் பரிசோதனைக்காகச் சென்றிருந்தேன். 

ஏகப்பட்ட கூட்டம். ஆனாலும் சீரான முறையில் நிர்வகித்து அதைத் திறமையாகச் சமாளிக்கிறார்கள். முதல் மாடியில் பொது ஆலோசனைக்காக உள்ள மூன்று பெரிய கூடங்களும் நிரம்பி வழிந்தன. கடைசி வரையில் உட்கார இடமே கிடைக்கவில்லை.‌ ஒவ்வொரு கூடத்திலும் நான்கைந்து பரிசோதனை அறைகள்.  புதிது புதிதாக மக்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

பதிவு செய்யும் இடத்தில் சனிக்கிழமைகளில் காலையில்  கூட்டம் அதிகமாக இருக்கும். மதியம் இரண்டு மணிக்குப் பின் குறைந்து விடும் என்று சொன்னார்கள். 

 பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம் பொதுவாக ராமசாமி, கிருஷ்ணன், சுப்ரமணியன் போன்ற பெயர்களில் ஏகப்பட்ட பேர் இருப்பார்கள். படிக்கிற காலத்தில் என்னுடைய வகுப்பில்  வருகைப் பதிவேட்டில் எப்படியும் நாலைந்து சுப்ரமணியன்கள் இருப்பார்கள். பொது இடங்களில் பெயர் சொல்லி  அழைக்கும் போது நிறையக் குழப்பங்கள் வரும். இப்போது பலருக்கும் நவீனமான வாயில் நுழையாத புதுமையான பெயர்களே வைக்கப்படுவதால் நான் மட்டும்தான் அந்தக் கூட்டத்திலிருந்த ஒரே ஒரு சுப்ரமணியன். காலம் மாறுவதில் சுப்ரமணியன் என்பது தனித்துவம் (unique) பெற்ற பேராகிப் போனதில்  பெருமையாக இருந்தது. 

"முருகன் வாங்க, முருகன் வாங்க" என்று பல முறை அழைத்தும் அந்த முருகன் வரவில்லை.‌ அப்புறம் செந்தில்நாதனை மீண்டும் மீண்டும் அழைக்க அப்போதும் அவர் வரவில்லை.  முருகன், செந்தில்நாதன், சுப்ரமணியன் எல்லாரும் ஒன்றுதானே  முருகனும் செந்தில்நாதனும் வராவிட்டால் என்ன? சுப்ரமணியன் வாங்க என்று வாய் நிறையக் கூப்பிட்டால் உடனே போய் விடுவோமே என் நினைக்கவும் அடுத்தது சுப்ரமணியன் வாங்க சுப்ரமணியன் வாங்க என்ற குரல் காதில் தேனாகப் பாய்ந்தது.

 

இப்போது பரிசோதனை செய்த மருத்துவர் கண்புரை இன்னும் முற்றவில்லை. ஆனால் கண்ணாடியின் பவர் மாற்றமடைந்துள்ளது. ஆறு மாதம் கழித்து புரை நீக்க அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளலாம். அதுவரை தற்காலிகமாக அணிந்து கொள்ள  குறைந்த விலையுள்ள கண்ணாடி வாங்கிக் கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கினார். 

சோதனைகளை முடித்துக் கொண்டு சாப்பிட நல்ல சைவ உணவகம் உள்ளது.‌ சுவையான அளவு சாப்பாடு ரூபாய் அறுபதுக்குக் கிடைக்கிறது. 

அடுத்து அங்குள்ள கண்ணாடிக் கடைக்கு வந்தேன்.‌ பொதுவாக பல இடங்களில் மொத்தமாக கண்ணாடி, ஃபிரேம் இரண்டையும் சேர்த்து மாற்றச்  சொல்வார்கள். வாழ்க்கையில் இங்குதான் முதன்முறையாக, " மூணு முதல் ஆறு மாசம் தான் பயன்படுத்தப் போறீங்க அதனால டாக்டர் மலிவான லென்ஸ் தரச் சொல்லியிருக்காங்க சார்.‌ ஃபிரேம் நல்லா இருக்கு சார். அதில் புதிய லென்ஸ்களைப் பொருத்திக் கொள்ளலாம்.‌ கிட்டப் பார்வை, எட்டப் பார்வை, படிக்க எல்லாத்துக்கும் சேர்த்து ஒரே கண்ணாடியாக (progressive lens) வரும் ரூ 1800 ஆகும்" என்று விற்பனைப் பகுதியில் இருந்த பெண் பணியாளர் சொன்ன போது மயக்கமே வந்து விட்டது.

காரணம் இதற்கு முன்பெல்லாம் புரோகிரசிவ் லென்ஸ், ஃபிரேமுக்காக ரூபாய் 5000 முதல் 10000 வரை செலவழித்து உண்டு.

"இரண்டு நாட்கள் கண்ணாடி இல்லாமல் சமாளிக்க முடியுமா சார்"?

"முடியவே முடியாது மா"

"அப்போ செவ்வாய்க்கிழமை வாங்க. இங்கே இரண்டு மணிநேரம் இருங்க ஃபிரேமில் லென்ஸைப் பொருத்தித் தந்து விடுகிறோம்" என்றார் அந்தப் பெண் பணியாளர்.


வாடிக்கையாளரை மொட்டையடிக்க நினைக்காத அந்த நிறுவனத்தின் தொழில் தர்மம் (professional ethics) பிடித்திருந்தது.

இன்று வரை மனதில் நிற்கும் கேள்வி முதலில் ஆலோசனை சொன்ன அந்த மருத்துவமனை ஏன் உடனே புரை நீக்கம் செய்ய  என்னை அவசரப்படுத்தியது என்பதுதான்.



 






Comments

  1. I also had a similar experience. three years back I went a corporate hospital for eye checking. After so many checking they told me my both eyes have cataract which are to be operated upon immediately and they gave an estimate which came into 2.5 lakhs. I came back to my home and consulted with my daughter who was also agreed for. Fortunately one of my friend came to my house and while discussing, he suggested for an hospital . In the mean time I used to get telephone calls from the hospital. I visited the hospital which my friend suggested after doing all routine checks, the chief doctor whom I met 5 years back told me I need not require any operation the cataract is in initial state and also told the retina is in very good condition even being the diabetic for the past 20 years. I decided. to have a second opinion before going for a medical treatment/operation

    ReplyDelete
    Replies
    1. Yes sir. You did the right thing. When we seek second opinion from reputed hospitals, most of the time we get correct guidance.

      Delete

Post a Comment

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)