அறுபதுக்கு மேல்...

 

அறுபதுக்கு மேல்

எங்களது கல்லூரி  நண்பர்களின் "வாட்ஸ்அப்" குழுவில் கீழ்க்கண்ட பதிவை ONGC நிறுவனத்தில் பண்யாற்றி ஓய்வு பெற்ற பால்ய நண்பர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிட்டிருந்தார். பதிவு ஆங்கிலத்தில் இருந்தது. "பேஸ்புக்" நண்பர்களில் திரு. தங்கவேல் ராஜேந்திரன் போல் சிலர் அத்தகைய பதிவுகளைத் தமிழாக்கம் செய்து பதிவிடச் சொல்லிக்  கேட்பதுண்டு. ஆகவே முடிந்தவரை பதிவின் பொருள் சிதையாமல் பதிவைத் தமிழில் தந்துள்ளேன்.

அறுபது வயதைக் கடந்த நண்பர் ஒருவரிடம் தற்போது உங்களிடம் என்ன மாதிரியான மாற்றங்களை உணர்கிறீர்கள் என்று வினவினேன்.

அதற்கு விடையளிக்கும் வகையில் கீழ்க்கண்ட வரிகளை எனக்கு அனுப்பியிருந்தார். அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

(1) முதலில் என் பெற்றோர் மீதும் அப்புறம் பின்னாட்களில் என் உடன் பிறந்தோர், மனைவி, குழந்தைகள் மற்றும் நண்பர்கள் மீதும் அன்பு செலுத்தி வந்தேன். இப்போதுதான் என்மீது நான் அன்பு செலுத்தத் துவங்கியுள்ளேன்.

(2) அட்லஸைப் போல இந்த உலகத்தை நான்னொன்றும் எனது தோளில் தூக்கிச் சுமக்கவில்லை என்ற பேருண்மையை இப்போது உணர்ந்து விட்டேன்.

(3) காய்கறிகள், பழங்கள் விற்பவர்களிடம் பேரம் பேசுவதை நிறுத்தி விட்டேன். இதனால் கூடுதலாகப் செலவாகும் ஓரிரு ரூபாய்கள்  பெரிய அளவில் என்  கையைக் கடிக்கப் போவதில்லை. மாறாக அச்சிறு தொகை அந்த எளியவர்களின் குழந்தையின் பள்ளிக் கல்விக் கட்டணத்திற்கான சேமிப்புக்கு உதவக் கூடும்.

 (4) வாடகை வாகன ஓட்டிகளிடம் மீதமுள்ள பணத்திற்காகக் காத்திருந்து மல்லுக்கு நிற்பதில்லை. அந்தச் சிறு தொகையை அவருக்கே விட்டுத்தந்து வைத்துக் கொள்ளச் சொல்வதால்  வாழ்க்கைப் போராட்டத்தில் என்னை விட அதிகம் சிரமப்பட்டு உழைக்கும்  அவருடைய முகத்தில் அச் செயல் நிச்சயமாகச் சிறு புன்னகையை ஏற்படுத்துமல்லவா.


(5) இப்போதெல்லாம் வயதானவர்கள் என்னிடம் ஏற்கனவே சொன்ன செய்தியையே பலமுறை திரும்பத்திரும்பச் சொன்னாலும் அவர்களை இடைவெட்டி இதை முன்னரே பலமுறை கூறியுள்ளீர்கள் என்று சொல்வதில்லை. காரணம் இதனால் அவர்கள் தங்களது கடந்த கால வாழ்வின் நினைவுகளில் ஊடாகச் சென்று பழைய சம்பவங்களை அசை போட  வாய்ப்பாகிறது.

(6) சிலர் ஏதாவது ஒன்றைக் குறித்துச் சொல்லும் போது அது தவறானது என நிச்சயமாகத் தெரிந்தாலும் அதனைத் திருத்தக் கூடாது என உணர்ந்து கொண்டு விட்டேன். ஒவ்வொருவரின் தவறையும் திருத்திச் செம்மைப்படுத்துவதற்காக ஒன்றும்  நான் பிறவி எடுக்கவில்லையே.

(7) பணியாளர்களுடன் வாக்குவாதம் செய்வதை முறிலுமாகத் தவிர்த்து விட்டேன். அவர்களை அவர்களின் போக்கில் பணியாற்ற விட்டு விடுகிறேன். செயல் முற்றிலும் சரியாக இருப்பதை விட நம் மன அமைதி முக்கியமல்லவா.

 (7) கட்டுப்பாடின்றிப் பலருக்கும் பரிசுகளை வழங்குகிறேன்.  இச் செயலால் பரிசு பெறுபவரின் மனமகிழ்ச்சி அதிகரிப்பது மட்டுமல்லாமல் எனக்குமே மனமகிழ்ச்சியைத் தருகிறது.

(8) தோற்றத்தை விட ஆளுமையே உரத்தொலிக்கும் என்பதை உணர்ந்து விட்டதால் இப்போதெல்லாம் உடைகளில் உள்ள கசங்கல்களை எல்லாம்  பொருட்படுத்துவதே இல்லை.

(9) என்னைச் சரியாக எடைபோடத் தெரியாதவர்களிடமிருந்து விலகிச் சென்று விடுகிறேன். அவர்களுக்கு என் மதிப்புத் தெரியாமல் இருந்தாலும் எனக்கு அவர்களின் மதிப்பு தெரிந்து விடுகிறதல்லவா.

(10) யாராவது என்னிடம் மோசமான அரசியலை பயன்படுத்தி சுய தோல்வியை ஏற்படுத்த முயலும் போது அமைதியாக இருந்து விடுகிறேன். காரணம் நான் பந்தய எலியும் இல்லை. எந்தப் பந்தயத்திலும் பங்கு பெறவில்லை.

(11) என்னுடைய உணர்ச்சிகளால் எனக்குச் சங்கடமோ அல்லது தடுமாற்றமோ ஏற்படுத்துவதில்லை. என் உணர்வுகளே என்னை மனிதனாக வைத்துள்ளன.

(12) நான் என்ற அகங்காரத்தை விட்டு விடக் கற்றுக் கொண்டு விட்டேன். அகங்காரம் உறவுகளை உடைத்துத் தனிமைப்படுத்தி விடுகிறது. ஆனால் உறவுகள் என்றும்  தனிமையில் விடுவதில்லை.

(13) ஒவ்வொரு நாளையும் அதுவே எனது வாழ்க்கையின் கடைசி நாள் என்பது போல்  எண்ணி வாழக் கற்றுக் கொண்டுள்ளேன். யார் கண்டது அதுவே உண்மையாகவும் இருந்துவிடலாம் இல்லையா.

(14) நான் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதையே  செய்கிறேன். நான்தானே என்னுடைய மகிழ்ச்சிக்கு முழுப்பொறுப்பு. என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க நான் நிச்சயமாகக் கடமைப்பட்டிருக்கிறேன். 

எத்தகைய சந்தர்ப்பத்திலும் மகிழ்ச்சியாக இருக்கவும், மற்றவர்களைப் புன்னகைக்க வைக்கவும் என்னாலான முயற்சிகளைச் செய்கிறேன்.

(15) இறுதியாக மாற்றுக் கருத்து கொண்ட நண்பர்களின் மனது புண்படக் கூடாது என்பதால்  நான் அரசியல் மற்றும் மதம் சார்ந்த பதிவுகளை அல்லது விவாதங்களை எல்லோருக்கும் முன்னிடுவதை  நிறுத்தி விட்டேன். இருந்தபோதிலும் ஒத்த மனவோட்டமும், சிந்தனையும் கொண்ட மிக நெருங்கிய நண்பர்களுடன் மட்டுமே அத்தகைய பதிவுகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

அறுபது வயதைக் கடந்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.

Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)